இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும். உயிர் காக்கும் கவசம் ஹெல்மெட். மேலும் இப்போது, இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமல்ல, அதில் உடன் பயணிப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்துகிறது அரசு. எனவே, ஹெல்மெட் பயன்படுத்துபவர் களின் எண்ணிகை அதிகமாகிக்கொண்டே வருகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஹெல்மெட்டை பயன்படுத்துவது மட்டுமல்ல, அதைத் தூய்மையுடன் பராமரிப்பதும் முக்கியம். எளிதான முறையில் ஹெல்மெட்டை எப்படி சுத்தம் செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.
ஹெல்மெட்டை சுத்தம் செய்ய தேவையான பொருள்கள்
* வெதுவெதுப்பான தண்ணீர்.
* மைக்ரோஃபைபர் துணி.
* மென்மையான பிரஷ் அல்லது காது சுத்தம் செய்யும் பட்ஸ்
* மைல்டு சோப்பு/குழந்தை ஷாம்பு.

சுத்தம் செய்யும் முறை
ஸ்டெப் 1
ஹெல்மெட்டில் இணைக்கப்பட்டுள்ள ஆக்ஷன் கேமரா, புளூடூத் கம்யூனிகேட்டர் போன்ற அனைத்து உபகரணங்களையும் அகற்றவும். ஆஃப்-ரோடு அல்லது டூயல் ஸ்போர்ட் ஹெல்மெட்டாக இருந்தால், ஹெல்மெட்டின் மேற்பகுதியை அகற்றவும்.
ஸ்டெப் 2
தற்போது பயன்படுத்தப்படும் ஹெல்மெட்களில் பெரும்பாலானவை உள்ளே உள்ள லைனர்கள், பாகங்கள் தனியாகப் பிரிக்கக் கூடியவையாகவே உள்ளன. அவற்றை பிரித்து எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டெப் 3
மைல்டு சோப்பு அல்லது ஷாம்பூவை வெதுவெதுப்பான நீரில் கலந்து அதை ஹெல்மெட்டின் வெளிப்புறத்தில் தெளிக்கவும். மைக்ரோஃபைபர் துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, ஹெல்மெட்டின் மேல் துடைத்து எடுக்கவும். ஆஃப்-ரோடு டூயல் ஸ்போர்ட்ஸ் ஹெல்மெட்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதன் நீக்கக்கூடிய மேற்பகுதியை நீக்கிய பின் அந்த இடத்தில் இந்த முறையைப் பயன்படுத்தி சுத்தம் செய்யவும். இதேபோன்று ஹெல்மெட்டின் வெளிப்பகுதி முழுவதும் துடைத்து சுத்தம் செய்து கொள்ளவும்.
ஸ்டெப் 4
ஹெல்மெட் வைசர் மிகவும் அழுக்காக இருந்தால், அதை தனியாகக் கழற்றி ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்த மைக்ரோஃபைபர் துணியைக் கொண்டு அழுத்தமாக, சீராகத் துடைக்கவும். தூசு அல்லது ஒட்டிக்கொண்ட பொருள்கள் ஏதேனும் இருந்தால், பட்ஸ் கொண்டு மெதுவாகத் துடைக்கவும். வேகமாகத் தேய்த்தால் வைசரில் கீறல் (scratch) விழ வாய்ப்புள்ளது கவனம்.

ஸ்டெப் 5
ஹெல்மெட்டில் மிக முக்கியமாக சுத்தம் செய்ய வேண்டிய பகுதி ஹெல்மெட் லைனர்தான். நம் தலையில் உள்ள அழுக்கு, எண்ணெய்ப் பசை என அதிக மாசு ஏற்படக்கூடிய பகுதி அதுதான். இதைத் தனியாக எடுக்கவும். ஒரு டப் அல்லது வாளியில் வெதுவெதுப்பான நீர் எடுத்து அதில் மைல்டு சோப்/பேபி ஷாம்பூ கலக்கவும். லைனரை இந்த நீரில் நனைக்கவும். கைகளால் தேய்த்து ஸ்கிரப் செய்யவும். மீண்டும் இதை செய்யவும். லைனர்களில் உள்ள அனைத்து அழுக்குகளும் போகும்வரை தண்ணீரை மாற்றிக்கொண்டே இருக்கவும். பின் தண்ணீரை பிழிந்து எடுக்கவும். நிழலில் உலர விடவும்; டிரையர் பயன்படுத்த வேண்டாம்.
ஸ்டெப் 6
ஹெல்மெட்டின் மேல்பகுதி, உள்பகுதி மற்றும் லைனர், வைசர் என அனைத்தையும் சுத்தம் செய்த பின் தொடர்ந்து அவற்றை சரியாகப் பொருத்தவும்.
இந்த முறையில் வாரத்துக்கு ஒருமுறை, குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையேனும் ஹெல்மெட்டை சுத்தம் செய்து பயன்படுத்துவது நல்லது.