Published:Updated:

பள்ளி, கல்லூரி நட்பைவிட அலுவலக நட்பு முக்கியம்... ஏன் தெரியுமா? #FriendshipDay

Friends
Friends ( Freepik )

பள்ளி, கல்லூரிகளிலிருந்ததைப் போல அலுவலகத்திலும் புதிதாக முளைக்கும் உயிர்த் தோழமைகள் நம் வாழ்வில் இன்றியமையாதது. அதுதான் நம்மை பணியில் உயிர்ப்புடன் செயல்பட வைக்கும்.

நாம் சிறகடித்துப் பறந்த பள்ளி, கல்லூரி நாள்களை நினைத்துப் பார்த்தால் நம் நண்பர்களுடன் கழித்த இனிய தருணங்களே முதலில் நம் மனதில் சிறகடிக்கும். 'என் பிரண்ட போல யாரு மச்சான்' என்று கவலையின்றி பாடித்திரிந்த காலங்கள், 'நண்பேன்டா' என்று வசனம் பேச வைத்த சம்பவங்கள் என்று பல நினைவுகள் பூத்துக்குலுங்கும். இந்த இலையுதிர் காலத்துக்கு பிறகான நம் வாழ்வில், பெரும் பகுதி நாம் பணிபுரியும் இடத்தில்தான் செலவிடுகிறோம். ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் பணியிடங்களில்தான் உள்ளோம். (வொர்க் ஃப்ரம் ஹோமுக்கு முன்) அவ்வாறு நம் வாழ்வில் இன்றியமையாத நேரத்தைப் பிடித்திருக்கும் அலுவலகங்கள் நட்பு வட்டம் அனைவருக்கும் உண்டு. பள்ளி, கல்லூரிகளிலிருந்ததைப் போல இங்கும் புதிதாக முளைக்கும் உயிர்த் தோழமைகள் நம் வாழ்வில் இன்றியமையாதது. அதுதான் நம்மை பணியில் உயிர்ப்புடன் செயல்பட வைக்கும்.

ஏன் நமக்கு அலுவலகத்தில் ஒரு உயிர்த்தோழன் தேவைப்படுகிறான்?

வேலையில் இருக்கும் சவால்களை புரிந்துகொள்ளும் நண்பன்!

அலுவலக நண்பர் என்றால் நீங்கள் பணியாற்றும் அதே சூழலில் இருப்பார், உங்களின் பிரச்னைகளை எளிதாகப் புரிந்துகொள்வார். பிரச்னையிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்க சரியான நபராக இருப்பார். பாஸூடன் சண்டையோ, அலுவலக அரசியலோ, வேலைப்பளுவால் மனச்சோர்வோ, எதுவாக இருந்தாலும் நமக்கு உறுதுணையாக இருக்கப்போவது 'ஆபீஸ் பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ்தான்.'

எனர்ஜி பூஸ்ட் அவன்!

'ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுகையில் இன்று அலுவலகம் போக வேண்டுமா?' என்ற அலுப்பு பலருக்கும் தோன்றும். அதைப் போக்குவதே நம் நண்பர்களின் நினைப்புதான். ஒவ்வொரு நாளும் நம் வேலையை அழகாக்குவது அவர்கள்தான். நமக்கு அவர்கள் செய்யும் சிறு மோட்டிவேஷனும் சிறந்த உந்து சக்தியாக நம்மைச் செயல்பட வைக்கும். அதனால் ஒரு உயிர் நண்பன் நம்முடன் பணியில் இருப்பது நம்மை நாள் முழுவதும் உற்சாகத்துடன் வேலை செய்ய வைக்கும்.

உதவிக்கரம்

எந்த ஒரு சிறு விஷயமாக இருந்தாலும் உங்களுக்கு முதல் உதவி நண்பர்களிடமிருந்துதான் கிடைக்கும். மனநலம், உடல்நலம் என அனைத்திலும் நம்மீது அக்கறையோடு உடன் இருப்பவர்கள் அவர்கள்தான். நண்பர்கள் நம் நலனைப் பாதுகாத்து வேலைப்பளுவால் ஏற்படும் மனச் சோர்வை விரட்டி வேலையின் மேல் நமக்கு ஒரு காதல் ஏற்பட உதவும் அருமருந்தாக இருப்பார்கள்.

லஞ்ச் டைம்!

அரைநாள் நன்கு உழைத்துக் களைத்த பின்பு கிடைக்கும் மதிய உணவு இடைவேளை என்பது நம் நினைப்பதை விடவும் வேலை சூழலில் மிக முக்கிய பங்காற்றுகிறது. அந்த நேரத்தை நண்பர்களுடன் செலவழிப்பதுதான் அந்த நாளின் சிறந்த பொழுதாக இருக்கும். அந்த சிறிய பொழுதில் கிடைக்கும் உற்சாகம் நம்மை மீதி நாள் வேலையில் உற்சாகமாகச் செயல்பட வைக்கும். ஆபீஸ் கதைகளைப் பேசுவதற்கு உணவு இடைவேளைதானே பெஸ்ட் டைம்!

டீம் வொர்க்!

நீங்களும் உங்கள் உயிர் நண்பரும் ஒருத்தரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாக இருப்பீர்கள், நிறைகள் குறைகள் தெரிந்தவர்களாக இருப்பீர்கள். ஆதலால் நீங்கள் இருவரும் கூட்டாகப் பணி செய்தால் சிறப்பாகச் செயல்பட முடியும். உயரதிகாரிகள் உங்களை ஒன்றாகப் பணியாற்ற அழைக்கும் வாய்ப்புகள் அதிகம். சேர்ந்து கலக்கலாம்! சரி நாங்களே அலுவலக நட்பின் அருமை பெருமைகளை எவ்வளவு நேரம்தான் சொல்வது, மக்களிடமே கேட்டோம்.

பிரபல ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பாலாஜி வரதராஜன் "வேலை நாள்களில் மிகவும் குறைவான நேரம்தான் வீட்டில் உள்ளவர்களுடன் செலவழிக்கிறேன். அதிகபட்சமாக 10 முதல் 12 மணி நேரம் வேலை பார்க்கும் இடத்தில்தான் நேரம் கழிகின்றது. ஒருவரின் வாழ்க்கையில் வேலை பார்க்கும் இடம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. நாம் வேலை பார்க்கும் இடம் நல்ல சூழ்நிலையில் அமைய வேண்டுமானால், நம் முன்னேற்றத்திற்குத் தூண்டுகோலாய் ஒரு நல்ல நண்பன் நம்முடன் பணிபுரிவது மிக அவசியம்.

பாலாஜி வரதராஜன்
பாலாஜி வரதராஜன்

சரியான முடிவு எடுப்பதற்கும், வேலையில் முன்னேறுவதற்கும் நம்பகத்தன்மை உடைய நண்பன் நம்முடன் இருப்பது அவசியம். ஒருவர் எல்லாத் துறையிலும் சிறப்பாகச் செயல்பட முடியாது. உதாரணத்துக்கு என்னால் நிர்வாகத் துறையில் சிறப்பாகச் செயல்பட முடியும். பெரிய குழுவைக் கையாள முடியும். ஆனால், தொழில்நுட்பம் சார்ந்து யாரும் எதுவும் கேள்வி கேட்டால் எனக்கு அவ்வளவு தெரியாது. ஆனால், அதில் உதவி செய்ய உறுதுணையாக ஒரு நண்பன் இருக்கின்றான். என்னால் தோழனுக்கோ, தோழிக்கோ நிர்வாகத்துறையில் உதவ முடியும். இப்படியான நல்ல சூழல் நல்ல தோழன் அல்லது தோழி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறார்கள். எந்த காரணத்திற்காகவும் வேலையை விட்டுப் போகாமல் நண்பர்கள் உடன் இருந்தால் சிறப்புதான்" என்றார்.

சினிமா, வெப்சீரிஸ் தயாரிப்புத்துறையில் பணிபுரியும் மஞ்சு மோகன் கூறுகையில் "பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ்க்கும் நமக்கும் ஒரே மாதிரியான வேவ்-லெங்த் இருப்பதால் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதே ஒரு சுகம்தான். அவங்களோட வேலை பார்ப்பது நம்மை ஒரு புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

மஞ்சு மோகன்
மஞ்சு மோகன்

ஃபிரெண்ட்ஷிப்க்கும் வேலைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை என்றால் அது நம்ம ஃபிரெண்ட்ஷிப்பை பாதிக்கக்கூடாது. நிறைய ஃபிரெண்ட்ஸ் கிடைச்சாலும் பெஸ்ட் ஃபிரெண்டு கூட வேலை செய்வது ஒரு வரம். பல ஃபிரெண்ட்ஸ் வருவாங்க, போவாங்க ஆனால், பெஸ்ட் ஃபிரெண்ட் என்னைக்குமே கூட நிப்பாங்க. கள்ளம் கபடமில்லாமல், ஈகோ இல்லாம ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சு வேலை பாக்குறப்ப, நம்ம வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும். நானும், என் உயிர்த் தோழியும் ஒருத்தர ஒருத்தர் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்கள் டீமை யாராலும் உடைக்க முடியாது. நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவதால் வேலையைச் சிறப்பாகச் செய்ய முடிகிறது " என்றார்.

"மருத்துவத் துறையில், ஒரு மருத்துவருக்கு வேலை பார்க்கும் இடத்தில் ஒரு உயிர் நண்பன் கிடைப்பது தவமிருந்து பெற்ற வரம். அதிக வேலை நேரம், நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளைப் பார்ப்பது என்று வேலைப்பளு அதிகமாக இருக்கும். உயிர் நண்பர்களுடன் வேலை செய்யும் பொழுது இந்தப் பளு நன்றாகவே குறைந்ததுபோல் இருக்கும்.

மருத்துவர் S. ஹரிஹரன்
மருத்துவர் S. ஹரிஹரன்

தீவிரப் பாதிப்பில் உள்ள ஒரு நோயாளிக்கு எந்த நோய், எந்த வகையான மருத்துவம் அளிக்கலாம் என்பதையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க முடியும். இதன் மூலம் நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க முடிகிறது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் போதும் நண்பர்களுடன் அதைச் செய்தால் மிகச் சிறப்பாக உற்சாகத்துடன் அதைச் செயல்படுத்த முடிகிறது" என்று கூறுகிறார் மருத்துவர் S. ஹரிஹரன்.

பெங்களூருவில் தனியார் ஐடி நிறுவன ஊழியராக இருக்கும் பழனி பாரதி, "நாம் சொந்த மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு வேலைக்குச் செல்கையில், ஒரு வேற்றுக் கிரகத்தில் இருப்பது போல் முதலில் தோன்றினாலும், அதை நம் சொந்த வீடு போல் உணர வைப்பது நண்பர்கள்தான். வேலைக்குச் சேர்ந்தவுடன் பல நண்பர்கள் கிடைத்தாலும் உயிர்த்தோழன் கிடைக்க சில நாள்களாகும்.

பழனி பாரதி
பழனி பாரதி

உயிர்த்தோழன் அமைந்துவிட்டால் அதைவிட வேறு என்ன வேண்டும். வேலையில் சிறு சிறு ஆலோசனைகள் முதல் முக்கிய முடிவுகள் எடுப்பது வரை நண்பனின் துணை அவசியத் தேவை. வார இறுதி நாட்களில் நண்பனின் வீட்டுக்குச் சென்று, அவன் பெற்றோர்களுடன் உரையாடுவது, அவனுடன் வெளியே செல்வது என்பது நாம் நம் வீட்டிலிருந்து தள்ளி பணிபுரிகிறோம் என்ற எண்ணத்தை மொத்தமாக போக்கிவிடுகிறது" என்று உற்சாகமாகக் கூறினார்.

பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் H.R ஆக பணிபுரியும் திவ்யா ராமமூர்த்தி, "வேலைபார்க்கும் இடத்தில் பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் இருப்பது ஒரு நல்ல உந்துசக்தி. நாம் ஒரு நாளில் 9 முதல் 10 மணி நேரம் ஆபீஸில்தான் செலவிடுகிறோம். அங்கு நாம் உற்சாகமாகச் செயல்பட பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் அவசியம். நமக்குத் தனிமை உணர்ச்சி இருந்தால், நம் வேலைத் திறன் குறையும்.

திவ்யா ராமமூர்த்தி
திவ்யா ராமமூர்த்தி

ஆனால், நண்பர்களுடன் இருந்தால் மிகச் சிறப்பாகச் செயல்படலாம். வேலை என்பது கல்லூரி வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம். இதிலும் நண்பர்கள் அவசியம். மேலதிகாரிகளிடம் எவ்வாறு பேச வேண்டும் என்பது முதல் பல முக்கிய விஷயங்கள் சார்ந்த அறிவைப்பகிர வேளையில் நண்பர்கள் அவசியம். அலுவலகம் போவதை இனிதாக்குவதே நண்பர்கள்தான்" என்று கூறினார்.

இந்த நண்பர்கள் தினத்தில், உங்கள் பணியிடத்தில் நட்பு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என கமென்ட்களில் பதிவிடுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு