Published:Updated:

கி.பி 300-ல் வாழ்ந்த முரட்டு சிங்கிள் பசங்கதான், காதலர் தினம் உருவாகக் காரணம்?! எப்படி?

Valentines Day
Valentines Day

முரட்டு சிங்கிள் பசங்கதான் காதலர் தினம் உருவாகக் காரணம்..! ஏன் எனத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

காதல்!

வாழ்க்கைத் துணையாக இணைந்து வாழ வேண்டும் என்று நினைக்கும் ஜோடிகளுக்கானது மட்டுமல்ல.

மேற்கண்ட வாக்கியத்தை உணர்த்தும் சில தகவல்களை அடுத்த பத்தியில் காண்போம்.

உலக அளவில், காதலர் தினத்தன்று அதிக காதல் வாழ்த்து அட்டைகளைப் பெற்றுக்கொள்பவர்கள் ஆசிரியர்கள்தாம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலுள்ள பள்ளிகளில், காதலர் தினத்தன்று தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு காதல் வாழ்த்து அட்டைகளைக் கொடுத்து குஷிப்படுத்துவது அந்நாட்டு மாணவர்களின் பழக்கம். ஆசிரியர்களுக்கு அடுத்து, அதிக வாழ்த்து அட்டைகளைப் பெறுவது காதலன்/காதலி, கணவன்/மனைவி என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இரண்டாம் இடத்தைக்கூட அவர்களுக்கு விட்டுக்கொடுக்காமல் பிடித்துக்கொண்டவர்கள் குழந்தைகள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அன்பை காதலர் தினத்தன்று வாழ்த்து அட்டை வடிவில் குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள்.

Little Boy With His Valentine greeting gift
Little Boy With His Valentine greeting gift
Photo : Pinterest

மேலை நாடுகளில், எல்லா விதமான உறவுகளிடையேயும் காதலர் தின வாழ்த்துகள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. ஆனால் இந்தியாவில், காதலர்கள் மட்டுமே கொண்டாடும் தினமாக அமைந்துள்ளது, காதலர் தினம். இன்னும் சில ஆண்டுகளில், எல்லா உறவுகளிடையேயும் அன்பை வெளிப்படுத்தும் நாளாக இந்தியாவிலும் காதலர் தினம் மாறும்.

இது டிஜிட்டல் யுகம் என்றபோதிலும், காதலர் தினத்தன்று மட்டும் 100 கோடிக்கும் மேல் வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது ஹார்ட் பிரேக்கிங் தகவல்தான்!

வாலன்டைன்ஸ் டே வரலாறு தெரியாமலே அதைக் கொண்டாடித் தீர்ப்பவர்கள் நம்மில் பல பேர். அந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ள கி.பி 300-ம் நூற்றாண்டு வரையிலாவது பின்னோக்கி செல்ல வேண்டும். வாலன்டைன் வரலாறு பற்றிய ஃபிளாஷ் பேக்கிற்குள் செல்வதற்கு முன், காதலர் தினம் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களைக் கீழுள்ள இன்ஃபோகிராஃபிக்ஸில் படித்துவிடுங்கள்....

Valentine's Day
Valentine's Day
Vikatan Infographics

இப்போது, ஃபிளாஷ் பேக்கிற்குள் செல்லலாம்.

கி.பி 270-களில், ரோம் நகரை ஆண்ட பேரரசர் இரண்டாம் கிளாடியஸ், `ஆண்கள் திருமணம் செய்துகொண்டால் வீரம் குறைந்துவிடும். அப்படி வீரம் குறைந்துவிட்டால் போர் செய்ய முடியாது' என்று பயங்கரமான காரணத்தைக் கூறி திருமணத்திற்குத் தடை விதித்திருந்தார்.

முரட்டு சிங்கிள்!
சிங்கிளாக இருந்தால்தான் முரடனாக இருக்க முடியும் என்பது ரோமப் பேரரசரின் லாஜிக். அந்த லாஜிக்கின் அடிப்படையில்தான், இன்று இருக்கும் சிங்கிள் பாய்ஸை `முரட்டு சிங்கிள்' என்று அழைக்கிறார்களோ என்னவோ?!

ரோமப் பேரரசரின் ஆட்சியில், பல மாதங்களாக முரட்டு சிங்கிள்களாகவே இருந்த ஆண்கள் பலரும் காதலில் விழத் தொடங்கினர். திருமணம் செய்துகொள்ளவும் ஆசைப்பட்டனர். திருமணம் செய்ய ஆசைப்பட்ட இளம் காதல் ஜோடிகளுக்கு, அரச கட்டளையை மீறி திருமணம் செய்துவைத்தார், பாதிரியார் வாலன்டைன். காதலர்களுக்கு பாதிரியார் செய்த உதவிக்குப் பரிசாக மரண தண்டனையை வழங்கினார், பேரரசர் கிளாடியஸ். தண்டனையை ஏற்றுக்கொண்ட பாதிரியார் வாலன்டைன், பிப்ரவரி 14-ம் நாள் தூக்கிலிடப்பட்டார். காதலர்களைச் சேர்த்து வைத்ததால் உயிர் பிரிந்த உடலானார் பாதிரியார் வாலன்டைன். அவர் நினைவாகத்தான் இன்று வரை வாலன்டைன் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. காதலர் தினம் உருவான கதை என்று வெவ்வேறு கதைகள் கூறப்பட்டாலும், பெரும்பாலானவர்களால் சொல்லப்படும் கதை இதுதான்.

இந்தக் கதையின் அடிப்படையை வைத்துப் பார்த்தால், காதலர் தினம் உருவாக, அந்தக் காலகட்டத்தில் முரட்டு சிங்கிளாக வாழ்ந்த ஆண்களும் ஒரு வகையில் காரணம் என்பது நகை முரண்!
Lovers Day
Lovers Day
Vikatan Infographics

`ரெமோ' படம் பார்த்ததிலிருந்து `நம்மீது குப்பிட் அம்பு விட மாட்டார்களா' என்ற ஏக்கத்துடன் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள், நமது ஊரின் முரட்டு சிங்கிள்ஸ். சிங்கிள்ஸை ஏங்கவைக்கும் குப்பிட், ரோமன் நாட்டில் காதல் மற்றும் அழகின் தெய்வமாக வழிபடப்படும் வீனஸின் மகன் என்கிறது வரலாறு. காதல் கடவுள் வீனஸுக்கு `ரோஜா' பூ என்றால் அவ்வளவு பிடிக்குமாம். அதன் காரணமாகத்தான் காதலின் சின்னமாக ரோஜா பூ முன்னிலைப்படுத்தப்படுகிறது.

காதலர் தினம் பற்றி மேலும் சில சுவாரஸ்யங்களைக் கீழுள்ள ஸ்க்ராலிங் கார்டுகளைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்...

1537-ம் ஆண்டு, இங்கிலாந்தை ஆண்ட மன்னர் 7-ம் ஹென்றி, பிப்ரவரி 14-ம் தேதியை வாலன்டைன்'ஸ் தினமாகக் கொண்டாட வேண்டுமென்று அரசாணை வெளியிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை காதலர் தினத்தன்று, புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் நம்மவர்கள். அதிலொரு விஷயம்தான், சட்டைகளின் நிறத்தை வைத்து காதலில் நம் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்வது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள டேபிளில் உங்கள் காதல் நிலைப்பாடு என்னவென்பதை க்ளிக் செய்து உங்களுக்கான சட்டை நிறத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்!

உலக அளவில் மிகப் பெரிய கொண்டாட்டமாக இருக்கும் காதலர் தினத்திற்கு, சவுதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் சில பகுதிகளில் காதலர் தினத்தை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள். உண்மையான அன்பு வைத்திருப்பவர்களுக்கு, காதலைக் கொண்டாட தனியொரு தினம் தேவையில்லையே என்று பலரின் மனதிலும் தோன்றலாம். ஆனால், மனிதர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், தங்களைக் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொண்டு, காதலைக் கொண்டாடுவதற்கு நிச்சயம் ஒரு நாள் தேவைப்படுகிறது. அந்த நாளாக காதலர் தினம் இருக்கட்டும்.

காதலைக் கொண்டாடுவோம்! எல்லா உறவுகளிடமும் காதல் செய்வோம்!
அடுத்த கட்டுரைக்கு