Published:Updated:

``லாக் டௌன் நாள்களும், ஓஷோவின் வாழ்வில் ஒரு நாளும்!"- வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் #KuttiStory

வெ.இறையன்பு
வெ.இறையன்பு

நெருக்கடியான இந்தக் காலகட்டத்தை மனத்தொய்வு இல்லாமல் கடக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கின்றது.

வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்... அரசு அதிகாரி என்பதைத் தாண்டி புகழ்பெற்ற நூல்கள் பலவற்றை எழுதி, படித்தவர்கள் முதல் பாமரர் வரை உள்ள மக்களுக்கு நம்பிக்கை விதைகளை விதைப்பவர். குறிப்பாக இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் மனதில் பதியம்போடும் இவரின் கருத்துகள் பலரின் வாழ்க்கையை நெறிப்படுத்தும் வலிமை வாய்ந்தவை. இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சிபெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர். வீட்டுச் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் லாக் டௌன் நாள்களில் பாசிட்டிவிட்டி தரும் விதமாக, இரண்டு குட்டிக்கதைகளையும், ஓஷோ வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றையும் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Ve.Iraiyanbu
Ve.Iraiyanbu

``ஒரு விவசாயி தன் குருவைப் பார்ப்பதற்காக காலையிலேயே புறப்பட்டுப் போனான். ஊருக்கு வெளியே இருந்த ஆலமரத்தின் அடியில் குரு அமர்ந்து, சீடர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். விவசாயியின் முறை வந்ததும் குருவைப் பார்த்து வணங்கினான். பிறகு தன் மனதிலிருந்த குறையை அவரிடம் சொல்லி வருந்தினான். `நான் இருக்கும் வீடு மிகவும் சிறியதாக இருக்கிறது. எனக்கு அதில் நிம்மதியே இல்லை. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அது போதுமானதாக இல்லை, நான் என்ன செய்வது?' என்று ஏக்கத்துடன் கேட்டான்.

குரு சற்று நேரம் யோசித்துவிட்டு, `உன் வீட்டில் மாடுகள் இருக்கின்றனவா?' என்று கேட்டார். `ஆம் சுவாமி, இரண்டு மாடுகள் இருக்கின்றன' என பதிலுரைத்தான். `அப்படியா? அவற்றை அவிழ்த்து வந்து உன் வீட்டின் ஓர் ஓரத்தில் கட்டிப்போடு' என்றார். சீடனும் அவ்வாறே செய்தான்.

மறுபடியும் இரண்டு நாள்கள் கழித்து அந்த விவசாயி வரவே, குரு கேட்டார்...

`உன்னிடம் ஆடுகள் இருக்கின்றனவா?'

`இருக்கின்றன குருவே.'

`அப்படியா! அவற்றையும் அவிழ்த்து வந்து வீட்டின் ஓரத்தில் கட்டிப் போடு' என்றார்.

Representational Image
Representational Image

மாட்டையும் கட்டி ஆட்டையும் கட்டிப்போட்டதில் அவனும் அவன் பிள்ளைகளும் வீட்டின் திண்ணையிலும் வாசலிலும் தூங்கினர். காலையில் வீட்டைச் சுத்தம் செய்வதே பெரிய வேலையாகிவிட்டது.

அந்த விவசாயி குருவிடம் ஓடி வந்து, `முன்பு இருந்ததைவிட, இப்போது சுத்தமாக இடம் போதவில்லை. மிகவும் சிரமப்படுகிறோம். வேறு வீடாவது பார்த்து நாங்கள் போகலாம் என்றால் வாடகையோ அதிகம் கேட்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை குருவே' என்று கண்ணீர் மல்கக் கூறினான். `அப்படியா... சரி மாட்டையும் ஆட்டையும் அவிழ்த்து வெளியில் கட்டு' என்றார் குரு. சீடனும் அவ்வாறே செய்தான். சீடனுக்கும் அவன் மனைவி, பிள்ளைகளுக்கும் இப்போது இப்படித் தோன்றியது... `வீடு இப்போது எவ்வளவு பெரியதாக இருக்கிறது!'

அப்படித்தான் நண்பர்களே! நாம் அநேக விஷயங்களை மனதில்போட்டுக் குழம்பிப்போய்விடுகிறோம். ஒன்று இல்லாமல் போகும்போதுதான் அது ஒரு காலத்தில் நம்மிடம் இருந்ததை உணர்வோம். நலமாக இருக்கும்வரை ஆரோக்கியத்தின் மதிப்பென்ன என்பதை நாம் உணர்வதில்லை. உடம்புக்கு நோவு வரும்போதுதான் உடல்நலம் எவ்வளவு முக்கியம் என்கிற விஷயம் புரிகிறது. நாம் நம் வாழ்க்கையில் நம் உடல்நலனை கடைசி பிரதியில் வைத்திருப்பதை, இப்படி நாம் வீட்டுக்குள் அடைந்திருக்கும் வேளையில் உணர்ந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்வதற்கான அவகாச நாள்களாக இவற்றை ஆக்கிக்கொள்வோம்.

சரி, `இந்த லாக் டௌன் மூச்சுமுட்டுகிறது' என்பவர்களுக்குச் சொல்ல, ஓஷோவின் வாழ்வில் நடந்த நிகழ்வொன்று இருக்கிறது. அறிந்துகொள்வோமா..?

Osho
Osho

பதின் பருவத்தில் இருந்த ஓஷோ ஒருமுறை ஏதோ குறும்புத்தனம் செய்துவிட்டார் என்று அவரின் தந்தை, அவரை ஓர் அறையில் தள்ளி கதவைச் சாத்திவிட்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. ஓஷோவும், `கதவைத் திறந்துவிடுங்கள்' எனக் கதவை தட்டியோ சத்தம் போட்டோ எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. அங்கே ஓர் அமைதி நிலவியது. அந்த அமைதி நீண்ட நேரம் நீடித்தது. அவரின் அப்பாவுக்கு இது மிகுந்த ஆச்சர்யத்தையும், இன்னொரு பக்கம் கோபத்தையும் தந்தது. திடீரெனக் கதவைத் திறந்து உள்ளே பார்த்தார். ஓஷோ தனியே தியானத்தில் அமர்ந்திருந்தார்.

``என்னப்பா நீ வெளியில் வரவில்லையா?''

``இல்லை இந்தத் தனிமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் தியானம் செய்துகொண்டிருக்கிறேன். தொந்தரவு செய்யாதீர்கள்'' என்றார் ஓஷோ.

Osho
Osho

இந்த வீட்டுச் சிறை நாள்களில் பதற்றப்படாமல், அதைக் குற்றம் சொல்லாமல், ஓஷோவைப் போல அதை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். நம்மை நாம் மறுபரிசீலனை செய்வதற்கும், நம் பலம், பலவீனங்களை அறிவதற்குமான நேரம் இது என்று நினைத்து விழித்திருங்கள், தனித்திருங்கள், வீட்டோடு இருங்கள்.

இப்போது இன்னொரு குட்டிக் கதை.

ஜென் துறவிகள் தங்கியிருக்கும் ஆசிரமங்களில் பொதுவாக தலைமை குருவும் சீடர்களும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் அவரவர்களுக்கு இட்ட பணியை மிகுந்த இயல்புடனும் ஆர்வத்துடனும் செய்வார்கள். செய்யவேண்டும்.

Ve.Iraiyanbu
Ve.Iraiyanbu

ஜென் ஆசிரமத்துக்குப் புதிதாக ஒரு துறவி வந்து சேர்ந்தார். சீடர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பணிகள் தரப்படும். ஒருவருக்குத் தோட்டத்தைச் சுத்தம் செய்வது, ஒருவருக்குத் தண்ணீர் கொண்டு வந்து வைப்பது, ஒருவருக்கு சூப் தயாரிப்பது, ஒருவர் சமையல் பணிகளில் ஈடுபடுவது என்று ஆளுக்கொரு வேலையாகச் செய்வது வழக்கம்.

புதிய துறவிக்குக் காட்டில் சிதறிக் கிடக்கும் மரப்பட்டைகளையும் சுள்ளிகளையும் பொறுக்கி வரும் வேலையும், குடிப்பதற்கான நீரைக் குளத்திலிருந்து எடுத்து வர வேண்டிய வேலையும் தரப்பட்டிருந்தன. இரண்டு வேலைகளையும் கொஞ்சம் எரிச்சலுடன் செய்துகொண்டிருந்தார். ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள், தலைமை குருவின் உரைகள் அவரின் போக்கில் மெல்ல மெல்ல மாற்றத்தைக் கொண்டுவந்தன. அவர் மெய்ஞானம் அடைந்த நிலையிலும் அவர் மறுபடியும் அதே வேலைகளையே செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவரைப் பார்க்க, அவரின் நண்பர் வந்திருந்தார்.

ஆசிரமவாசிகள், `அதோ அங்கே தெரியும் காட்டுக்கு மரப்பட்டைகள் சேகரிக்கச் சென்றிருக்கிறார் போய் பாருங்கள்' என அனுப்பி வைத்தனர்.

அவரைப் பார்க்க வந்த நண்பர் கேட்டார், `முன்பு நான் பார்க்க வந்த போதும் இதைத்தான் செய்துகொண்டிருந்தீர்கள். இப்போதும் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அடுத்த நிலைக்கே செல்லவில்லையா?' என்று. அதற்கு அவர் சொன்னார், `முன்பு கடமையேயென்று இதை நான் செய்தேன். இப்போது நான் விழிப்புணர்வோடும் ஆர்வத்தோடும் செய்கிறேன். இதுதான் வேறுபாடு.'

தனித்திருக்கக்கூடிய இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் மிகவும் பயனுள்ளதாகவும் அரசு அறிவுறுத்தும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். வெளியில் போய்வந்தால் கைகால்களைச் சுத்தம் செய்ய வேண்டும் அநாவசியமாகக் கையை முகத்தில் வைக்காமலும், கண்களில் தொடாமலும் எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள். நெருக்கடியான இந்தக் காலகட்டத்தைக் மனத்தொய்வு இல்லாமல் கடக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கின்றது'' என்றார் இறையன்பு ஐ.ஏ.எஸ்.

அடுத்த கட்டுரைக்கு