Published:Updated:

"திரும்பி வரமுடியாது... பயணிக்கும்போதே அனுபவித்துவிடுங்கள் வாழ்க்கையை!"- கலியமூர்த்தி #Motivation

கலியமூர்த்தி
கலியமூர்த்தி

"ஊரடங்கை, நம்முடைய ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதற்கும், ஒரு நல்ல பயிற்சிக்கு நம்மை உட்படுத்திக்கொள்வதற்கும் மிகச்சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்."

கலியமூர்த்தி, முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர். 35 ஆண்டு காலம் காவல் துறையில் பணியாற்றிவிட்டு, தமிழ்கூறும் நல்லுலகின் தன்னம்பிக்கை மேடைகளில் நன்னம்பிக்கை விதைத்துவருபவர். 100 நாள்களில் பல்வேறு தலைப்புகளில் 80 கூட்டங்களுக்கு மேல் பேசி, உலக அளவில் கின்னஸ் சாதனை புரிந்தவர். இந்த லாக்டௌன் நாள்களிலும், ஜே.சி.ஐ போன்ற அமைப்புகளுடன் கைகோத்து ஜூம் செயலி வாயிலாகத் தன்னம்பிக்கை விதைகளை மக்களின் மனத்தில் விதைத்துக்கொண்டிருக்கிறார்.

கலியமூர்த்தி
கலியமூர்த்தி

தன் ஃபிட்னெஸ், குடும்பம், லாக்டௌன் நாள்கள் அனுபவங்கள் என நம்மிடம் பகிர்கிறார் கலியமூர்த்தி.

''இந்த லாக்டௌனில், என் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலிருக்கும் பூதலூரில் இருக்கிறேன். நான் வழக்கமாக காலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். இந்தப் பழக்கம் இன்று நேற்று வந்ததல்ல. கிட்டதட்ட 50 ஆண்டுகளாக எனக்கிருக்கும் பழக்கம்.

கல்லூரியில் படிக்கும் நாள்களில், நான் என்.சி.சி-யில் அண்டர் ஆபீஸராக இருந்ததால், அதிகாலை 5 மணிக்கெல்லாம் கிளம்பி, என்.சி.சி கிரவுண்டுக்குச் சென்றுவிடுவேன். அப்போது தொடங்கிய இந்த விழித்தெழும் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. குறிப்பாக, காவல்துறைக்கு வந்த பிறகு, ஒருநாள் விடாமல் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கு எழுவது வழக்கமாகிவிட்டது.

இரவு 12 மணிக்கு தூங்கச் சென்றால்கூட விடியற்காலை 5 மணிக்கு எழுந்துவிடும் வழக்கம் உள்ளவன் நான். காவல்துறையைப் பொறுத்த அளவில், அப்படி இருந்தால்தான் நம்மால் சிறப்பாகப் பணியாற்ற முடியும். இப்போது நான் பணி ஓய்வுபெற்றுவிட்டேன். ஆனால், அந்த வழக்கம் இன்றளவும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 'அதிகாலை எழும் பறவை இரையோடுதான் திரும்பும்' என்று சொல்வார்கள். அந்த வார்த்தைகள் என் உள்ளத்திலேயே தங்கிப்போய்விட்டன.

Kaliyamoorthy receiving award from Jayalalithaa
Kaliyamoorthy receiving award from Jayalalithaa
``லாக் டௌன் நாள்களும், ஓஷோவின் வாழ்வில் ஒரு நாளும்!"- வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் #KuttiStory

என் வீட்டிலேயே நவீனமான உடற்பயிற்சிக் கூடம் ஒன்றை அமைத்திருக்கிறேன். 'கம்ப்ளீட் ஜிம்' என்று சொல்லக்கூடிய அளவில், ஓர் உடற்பயிற்சிக் கூடத்தில் என்னென்ன பயிற்சிகள் இருக்குமோ, அத்தனை சாதனங்களையும் நான் வாங்கி வைத்திருக்கிறேன். காலை 6 மணிக்கு அந்த உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்றால், காலை 8 மணி வரை அதில் எல்லா பயிற்சிகளையும் மேற்கொள்வேன். இந்த உடற்பயிற்சி, என் உடம்பையும் மனத்தையும் தெம்போடு வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது. அதனால் உற்சாகத்தோடு செயல்பட முடிகிறது.

நான் காவல்துறை பணியில் சேர்ந்த நாளில், எந்த அளவு என்னுடைய 'பிஸிக்கல் ஃபிட்னஸ்' இருந்ததோ அதே அளவே 35 ஆண்டுகள் பணியாற்றி, விடைபெறும்போதும் இருந்தது என்பதுதான் இந்தப் பயிற்சி எனக்கு அளித்த பரிசு.

Kaliyamoorthy honoured by Karunanidhi
Kaliyamoorthy honoured by Karunanidhi

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெறும்போதும், 25 வயதில் பணியில் சேர்ந்த நாளில் இருந்த அதே ஃபிட்னஸுடன் இருந்தேன். இதை, அப்போது நாளிதழ்கள் பாராட்டி எழுதியிருந்தன.

என்னுடைய ஒழுக்கத்துக்கும் பணி நேர்மைக்கும் கிடைத்த வெற்றியாகவே அதைக் கருதுகிறேன். நான் காவல்துறை பணியில் சேரும்போது, எந்தத் தையல் அளவுகளில் யூனிஃபார்ம் தைத்தேனோ, அதே அளவுகளில்தான் விடைபெறும் நாளிலும் யூனிஃபார்ம் அணிந்திருந்தேன். 35 ஆண்டுகளாக ஒரே டெய்லர்தான் என் உடைகளை தைத்துத்தருகிறார். அளவுகள் ஓர் அங்குலம்கூட கூடவோ, குறையவோ இல்லை.

இந்த ஊரடங்கை, நம்முடைய ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதற்கும், ஒரு நல்ல பயிற்சிக்கு நம்மை உட்படுத்திக்கொள்வதற்கும் மிகச்சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனென்றால், 21 நாள்கள் ஒரு காரியத்தை நீங்கள் தவறாமல் தொடர்ந்து செய்துவந்தீர்களானால், அந்தக் காரியம் உங்களுக்கு வழக்கமாகி, பின்னர் பழக்கமாக மாறிவிடும் என்பது ஓர் உளவியல் கோட்பாடு.

Kaliyamoorthy
Kaliyamoorthy

காவல் துறைப் பணியில் இருந்தபோது, திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் ஒரு மணி நேரம் ஓடிவிட்டு, அதன் பிறகு உடற்பயிற்சிகளைச் செய்வேன். இப்போது, அதே ஓட்டத்தை என் வீட்டு டிரெட் மில்லில் ஓடிவிட்டு, உடற்பயிற்சிகளைச் செய்கிறேன்.

வீட்டில் உடற்பயிற்சிக் கூடம் வைத்திருப்பதற்கு இன்னொரு முக்கியக் காரணம், என்னுடைய மகன், மகள், மருமகள், மருமகன் ஆகிய நான்கு பேருமே டாக்டர் தொழிலில் இருப்பதால், அவர்களுக்கும் இந்த உடற்பயிற்சிக் கூடம் தேவைப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. என் மனைவி சூர்யகலா, 6 மணியிலிருந்து 7 மணிவரை ஒரு மணி நேரம் யோகாசனப் பயிற்சியை மேற்கொள்வார். அவர் என் மாமா மகள்தான். அவருக்கு, கவிதைகள் எழுதுவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

காலை 8.00 மணியிலிருந்து 8.30 வரை அன்றைய நாளில், நான் செய்யவிருக்கும் பணிகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிடுவேன். அதற்கேற்றவாறு அந்த நாளை திட்டமிட்டுக்கொள்வேன். அதன் பிறகு காலை உணவு முடித்ததும், என் வீட்டிலேயே நான் வைத்திருக்கும் நூலகத்துக்குச் சென்றுவிடுவேன். கிட்டத்தட்ட 3 மணி நேரம் நூல்களை வாசிப்பேன்.

Kaliyamoorthy
Kaliyamoorthy

நான் கலந்துகொள்ளப்போகும் மேடைப்பேச்சுகளுக்கான குறிப்புகளைத் தயாரிப்பேன். புதிய நூல்களை வாசிப்பேன். வாசிக்கும் பழக்கத்தை ஒருபோதும் நான் நிறுத்தியதில்லை.

லாக்டௌன் நாள்களில், 'ஆத்திச்சூடி', 'மூதுரை' 'கொன்றைவேந்தன்', 'திருக்குறள்' பற்றியெல்லாம் எடுத்துக் கூறி பேரக் குழந்தைகளுக்குப் புரியவைக்கிறேன். பேரக்குழந்தைகள் முன்பு இருந்ததைவிட இந்த நாள்களில் தமிழை நன்றாக வாசிக்கக் கூடியவர்களாக மாறிவருகிறார்கள்.

பகல் 1.30 மணிக்கு சாப்பாட்டு மேஜையில் வீட்டில் உள்ள அனைவரும் கூடிவிடுவோம். டைனிங் டேபிளில் என் தாயார் காமு அம்மாள் தொடங்கி, என் மகன், மகள், பேரப் பிள்ளைகள் என நான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்.

காவல் துறையில் இருந்தபோதும், சொற்பொழிவாளராக மாறியபோதும், வீட்டில் அதிகம் இருந்த நாள்கள் மிகவும் குறைவு. இப்போதுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதால், சில வேளைகளில் மூன்று மணிவரைகூட அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிடுவோம்.

Kaliyamoorthy
Kaliyamoorthy
பொறுப்பில்லாத மக்கள்... 3-ம் நிலையில் கொரோனா: மே 3-க்குப் பிறகும் தொடருமா 144..!?

பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணி வரை ஒரு தூக்கம். காபி, டீ குடிக்கும் பழக்கம் கிடையாது. புகைப்பழக்கம், மதுப் பழக்கம் எதுவும் கிடையாது. ஐ யம் எ டீடோட்டலர். 'எப்படி வேண்டுமானாலும் வாழலாம்' என்று இருக்கும் உலகில் இப்படித்தான் வாழவேண்டும் என்று என் தாயும் தந்தையும் வலியுறுத்தி சொல்லித் தந்ததை இன்றுவரை கடைப்பிடித்துக் கொண்டு வாழ்வதுதான் என் உடல் ஆரோக்கியத்தின் மற்றொரு ரகசியம்."

அடுத்த கட்டுரைக்கு