Published:Updated:

`சம்ஸ்கிருதத்துக்கு `நோ'; தேவாரம், திருவாசகப் பாடலே மந்திரம்'- தமிழ் முறைப்படி திருமணம்செய்த இளைஞர்!

இருவீட்டாருக்கும் இவர்களது காதல் தெரியவர, எந்தவித எதிர்ப்பும் சொல்லாமல், இருவருக்கும் திருமணம் செய்ய முடிவுசெய்தார்கள்.

தமிழரசன் - ரம்யா திருமணம்
தமிழரசன் - ரம்யா திருமணம்

தன் தந்தையின் தமிழ் மீதான பற்றை மதிக்கும்விதமாக, சிவனடியாரை வைத்து, தேவாரப் பாடல்களை மந்திரத்துக்குப் பதிலாக பாட வைத்து திருமணம் செய்துகொண்ட கரூரைச் சேர்ந்த இளைஞரை, தமிழ் உணர்வாளர்கள் பாராட்டி வருகிறார்கள்.

தமிழரசன், ரம்யா திருமணம்
தமிழரசன், ரம்யா திருமணம்

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் திருமுக்கூடலூரைச் சேர்ந்தவர் முருகானந்தம். பால் வியாபாரம் செய்யும் இவர், தீவிர தமிழ் உணர்வாளர். இவருக்கு, தமிழரசன் என்ற மகன் உள்ளார். அவர், கரூரில் உள்ள பிரபல டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். அதே கம்பெனியில் வேலைபார்த்து வந்த சித்தலவாய் பகுதியைச் சேர்ந்த ரம்யாவை, தமிழரசன் காதலித்து வந்துள்ளார்.

Vikatan

இருவீட்டாருக்கும் இவர்களது காதல் தெரியவர, எந்தவித எதிர்ப்பும் சொல்லாமல், இருவருக்கும் திருமணம் செய்ய முடிவுசெய்தார்கள். வரதட்சணையாகப் பெண் வீட்டாரிடம் எதையும் எதிர்பார்க்காத முருகானந்தம், 'இந்தத் திருமணத்தை சம்ஸ்கிருத மந்திரங்கள் ஓதி செய்யாமல் தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடி தமிழ் ஆகம முறைப்படி செய்ய ஒப்புக்கணும்' என்ற கன்டிஷனை மட்டும் போட்டுள்ளார்.

தமிழரசன், ரம்யா திருமணம்
தமிழரசன், ரம்யா திருமணம்

அதோடு, தமிழரசனிடன், 'தமிழ் மீதான ஆர்வத்தில்தான், உனக்கு தமிழரசன்னு பேர் வைத்தேன். அதனால், என் பேச்சைக் கேட்டு, நீ தமிழ்முறைப்படிதான் திருமணம் பண்ணிக்கணும்'னு சொல்ல, தமிழரசனும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார். அதன்படி, தமிழரசன் ரம்யா திருமணத்தை உப்பிடமங்கலத்தில் உள்ள அடியார்க்கு எளியர் அர்ப்பணி மன்றத்தைச் சேர்ந்த சிவ.செந்தில் தேவார, திருவாசகப் பதிகங்களைப் பாடி, தமிழ்முறைப்படி நடத்தியுள்ளார். அங்கே சிவன் கோயிலில் எளிமையாக இந்தத் திருமணம் நடந்தது.

இதுபற்றி, மாப்பிள்ளையான தமிழரசனிடம் பேசினோம். "எங்கள் ஊரில் உள்ள பெரும்பாலானவர்கள், தமிழ் உணர்வு அதீதமாக உள்ளவர்கள். எங்கப்பாவும் தமிழ்மொழிப்பற்று உடையவர். எங்கள் ஊரில் தமிழ்முறைப்படி திருமணம், புதுமனை புதுவிழாக்கள், சாதி மறுப்புத் திருமணம் என்று பல நல்ல காரியங்கள் நடக்க எங்கப்பா உறுதுணையாக இருந்து வருகிறார். தமிழ்மொழி மீதுள்ள பற்றால்தான் எனக்கும் தமிழரசன் என்று பெயர் வைத்தார். சிறுவயதிலிருந்தே எனக்குள்ளும் தமிழ் உணர்வை ஊட்டினார்.

தமிழரசன், ரம்யா திருமணம்
தமிழரசன், ரம்யா திருமணம்

நான் ரம்யாவை காதலிக்கும் விஷயத்தைச் சொன்னதும், ரம்யா குடும்பத்தைப் பற்றி எதையும் கேட்காமல், 'பொண்ணு நல்ல பொண்ணாப்பா'னு மட்டும் கேட்டார். நான் அதுக்கு, 'ரொம்ப நல்ல பொண்ணுப்பா'னு மட்டும் சொன்னேன். அதனால், உடனே ஒப்புக்கொண்டார்.

'தமிழ்முறைப்படி திருமணம் பண்ணணும்'னு ஒரே ஒரு கன்டிஷனை மட்டும் போட்டார். நான் அதை நான் ஏத்துக்கிட்டேன். உப்பிடமங்கலத்தில் உள்ள சிவன் கோயிலில் தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி உள்ளிட்ட இலக்கியங்களில் உள்ள பதிகங்களைப் பாடி, சிவனடியார் சிவ.செந்தில் தமிழ் ஆகம முறைப்படி எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். அதைப் பார்த்த எங்கப்பாவுக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. 'அப்பாவின் ஆசையை நிறைவேத்திட்டோம்'னு எனக்கும் நெகிழ்ச்சியா இருந்துச்சு.

தமிழரசன், ரம்யா திருமணம்
தமிழரசன், ரம்யா திருமணம்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது மாதிரி, விரும்பிய பெண்ணையே திருமணம் பண்ணிக்கவும், அப்பாவின் ஆசையை நிறைவேற்றவும் என் திருமணம் ஒரு வாய்ப்பா அமைந்தது" என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு!