Published:Updated:

``எல்லோருக்கும் உதவி கிடைத்தால் முன்னேறுவார்கள்!”- தூத்துக்குடி ஆட்சியரால் நெகிழும் திருநங்கை அபர்ணா

திருநங்கை அபர்ணா
திருநங்கை அபர்ணா

மத்திய, மாநில அரசுப் பணியிடங்களில் திருநங்கைகளுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். எல்லா திருநங்கைகளுக்கும் உதவி கிடைத்தால் முன்னேறுவார்கள் என்கிறார், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பேட்ரி கார் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்துள்ள திருநங்கை அபர்ணா.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இருந்து ஆட்சியர் அலுவலக வாசல் வரை அழைத்துச் செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்ரி கார் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில், நூற்றுக்கணக்கான முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்து வருகின்றனர்.

பேட்ரி கார் ஓட்டும் அபர்ணா
பேட்ரி கார் ஓட்டும் அபர்ணா

இந்த நிலையில், இந்த வாகன ஓட்டுநர் பணியிடம் காலியானது. தூத்துக்குடியிலுள்ள திருநங்கைகள் பலர், மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் காலிப் பணியிடங்களில் எங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்தி மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.

``தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்” என ஆட்சியரும் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, திருநங்கைகள் சுயவிண்ணப்பம் அளித்து வந்தனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த திருநங்கை அபர்ணா என்பவருக்கு, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் பணியை வழங்கி உத்தரவிட்டார்.

திருநங்கை அபர்ணா
திருநங்கை அபர்ணா

இதைத்தொடர்ந்து திருநங்கை அபர்ணா இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனத்தை இயக்கும் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்து கொண்டார். இதுகுறித்து அபர்ணாவிடம் பேசினோம், ``நான் பத்தாம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 10-ம் வகுப்பு தகுதிக்கான தேர்வுகளை எழுதி வருகிறேன்.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மூலம் அமர்த்தப்படும் பணியிடங்களில் எங்களுக்கும் வாய்ப்பு தரும்படி ஏற்கெனவே திருநங்கைகள் அனைவரும் ஆட்சியரிடம் விண்ணப்பம் அளித்திருந்தோம். டிரைவிங் பயின்று சான்றிதழ் பெற்றுள்ளதால் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்திருந்தேன். அதன் அடிப்படையில் பேட்ரி கார் இயக்கும் ஓட்டுநர் பணியை ஆட்சியர் எனக்கு வழங்கியுள்ளார். திருநங்கைகளின் நலனில் அக்கறை கொண்டு இப்பணியை வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆட்சியர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலகம்

என்னைப் போன்ற படித்த, திறமையுள்ள திருநங்கைகள் பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். எனவே, அரசுத்துறையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்துள்ளதைப்போல், திருநங்கைகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன்கள் வழங்குவதைப் போல எங்களுக்கும் வழங்கிட வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு