Published:Updated:

`ரூ.30தான் வருமானம்; ஆனாலும் தன்மானத்துடன் வாழ்க்கை'- 80 வயதிலும் உழைத்துச் சாப்பிடும் குப்பம்மாள் பாட்டி

‘வேர்க்கடல... வேர்க்கடல!’ வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துசெல்லும் அனைவரின் முகமும் இந்த சத்தம் கேட்டு, குப்பம்மாள் பாட்டியின் பக்கம் ஒரு நொடியாவது திரும்பிப் பார்க்கும்.

குப்பம்மாள் பாட்டி
குப்பம்மாள் பாட்டி

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தனி நபரோ தனியாரோ தின்பண்டங்கள் உட்பட எந்தப் பொருளையும் கடை விரித்து விற்க யாருக்குமே அனுமதியில்லை. ஆவின் பாலகம் மட்டுமே செயல்பட்டுவருகிறது. ஆனாலும், 80 வயதான குப்பம்மாள் பாட்டிக்கு மட்டும் தின்பண்டங்களை விற்க அனுமதி வழங்கியுள்ளனர். ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்து வேர்க்கடலை, முருக்கு போன்ற தின்பண்டங்களை விற்றுவருகிறார், குப்பம்மாள் பாட்டி. 

வேலூர் கலெக்டர் அலுவலகம்
வேலூர் கலெக்டர் அலுவலகம்

இவர், இன்றோ நேற்றோ கடை விரித்தவர் இல்லை. 33 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகத்துக்குள் வேர்க்கடலை விற்கிறார். கலெக்டர் அலுவலகத்துக்குள்ளும் வளாகத்திலும் அவரின் கால்தடம் படாத இடமே இல்லை. முதுமையிலும் யாரிடமும் கையேந்த விரும்பாத குப்பம்மாள் பாட்டி, ஒரு ரூபாயாக இருந்தாலும் உழைத்துத்தான் சாப்பிடுவேன் என்ற மன உறுதியோடு வாழ்ந்துவருகிறார். அவரிடம் பேச்சுக்கொடுத்தோம். 

‘‘இத்தனை வருஷத்தில், 10 கலெக்டர்களைப் பார்த்துட்டேன். தினமும் என்னைக் கடந்துதான் அவர்கள் போகணும். கலெக்டர் ஆபீஸ்லயே நான்தான் சீனியர். வேர்க்கடலை, முருக்கு, சீத்தாப் பழம், வாழைப்பழம், கொய்யாப் பழத்தை மார்க்கெட்டுல இருந்து வாங்கிட்டுவர்றேன். இரண்டு ரூபா லாபம் வச்சி விற்கிறேன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே, வேலூர் சைதாப்பேட்டை பகுதியில்தான். கணவர் மூர்த்தி, பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துட்டாரு. 

கடை
கடை

இரண்டு மகள்கள் இருக்கிறாங்க. திருமணமாகி பேரன், பேத்தி எடுத்துட்டாங்க. கலெக்டர் ஆபீஸ் பக்கத்துல இருக்கிற ஆஞ்சநேயர் கோயில் பின்புறம் உள்ள மலைமேட்டுல சொந்தமா வீடு இருக்கு. வீட்டுக்கு நடந்துபோக முடியல. அதனால, ஆஞ்சநேயர் கோயில் பக்கத்துலேயே தாழ்வான இடத்துல 1,500 ரூபாய் கொடுத்து சின்ன வீட்ல வாடகைக்கு இருக்கிறேன். காலையில மார்க்கெட் போய் வேர்க்கடலை, முருக்கு வாங்கிட்டு வந்து வியாபாரம் செய்றேன்.

தினமும் 20 ரூபாய் இல்லைனா 30 ரூபாய் கிடைக்கும். திங்கள்கிழமைனா மக்கள் குறைதீர்வு கூட்டம் நடக்கும். அப்போ நிறைய பேர் மனு கொடுக்க வர்றாங்க. அன்னைக்கு மட்டும் 60 ரூபா கிடைக்கும். அதைத் தவிர, முதியோர் உதவித்தொகை 1000 ரூபாய் கிடைக்குது. நான் யார் கிட்டேயும் கையேந்தி நிக்க வேண்டிய அவசியம் இல்லை. உழைச்சு சாப்பிடுறேன். நடக்கத்தான் முடியல. முட்டி வலி அதிகமா இருக்கு.

குப்பம்மாள் பாட்டி
குப்பம்மாள் பாட்டி

பல கலெக்டர்களும் அதிகாரிகளும் என்கிட்ட ஏதாவது உதவி வேணுமா அம்மானு கேட்டாங்க. நான், உதவி வேண்டாம்னு மறுத்துட்டேன். உதவி செய்யுற குணம் அவர்களுக்கு இருந்தாலும், நான் கேட்கப் போய் ஏதாவது தப்பா நெனச்சிடுவாங்களோனு ஒரு அச்சமும் இருக்கத்தான் செய்யிது. இப்போ, நிம்மதியா தான் இருக்கேன். உயிரோடு இருக்கிற வரைக்கும் கலெக்டர் அலுவலகத்துக்குள்ளேயே வேர்க்கடலை, முருக்கு விற்று வயித்தை கழுவிக்கிறேன்’’ என்றார் உருக்கமாக.