Published:Updated:

`இது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்!'- வைகோ, தனியரசுவை நெகிழவைத்த தஞ்சைத் திருமணம்

`இந்த நட்பும் உறவும்தான் இத்திருமணத்தின் மூலம் இந்தியாவிற்கு நாம் சொல்லும் செய்தி. இந்தியாவிற்கே இது முன்மாதிரி திருமணம்'

திருமணம்
திருமணம்

தஞ்சாவூரில் நடைபெற்ற இஸ்லாமியர் வீட்டுத் திருமண ஒப்பந்தப் படிவத்தில் இந்து ஒருவர் சாட்சி கையொப்பமிட்டிருக்கிறார். இதைச் சம்பந்தப்பட்ட ஜமாத் மனபூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் விளங்குவதாகவும், இது இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது என்றும் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் நெகிழ்ந்து வாழ்த்திப் பேசியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருமணம்
திருமணம்

தஞ்சாவூர் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவர் ம.தி.மு.கவில் வளைகுடா நாடுகளின் அமைப்பாளராக உள்ளார். இவரது சகோதரர் ரியாஸ் மற்றும் ரிஸ்வான். இவர்களின் தந்தை ஷேக் தாவூத், இவர்கள் சிறுவயதில் இருக்கும் போதே இறந்து விட்டார். இந்த நிலையில் ஷேக் தாவூத் மற்றும் வடுவூர் ரவி என்பரும் நெருங்கிய நண்பர்கள். திடீரென ஷேக் தாவுத் இறந்து விட அவருடைய குடும்பத்தை அன்பால் அரவணைத்து பாசம் காட்டி அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறார் ரவி.

ஆண்டுகள் பல கடந்த நிலையிலும், பஷீரின் குடும்பம் நல்ல நிலைக்கு வந்த நிலையிலும் அவர்கள் குடும்பத்தின் மீது வைத்த பாசம் சிறிதளவும் குறையவில்லை. கிட்டத்தட்ட ஒரு குருவாக இருந்து வாழ்கையில் ஷேக் தாவூத்தின் மகன்கள் வாழ்க்கையில் முன்னேற பல உதவிகளைச் செய்திருக்கிறார். இதனால், பஷீர் மற்றும் சகோதரர்கள் ரவி மீது அளவு கடந்த மாரியாதை வைத்துள்ளனர். அத்துடன், தானே முன்னின்று பஷீரின் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.

திருமணம்
திருமணம்

அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற பஷீர் சகோதர்களின் சகோதரி திருமணம் விமரிசையாக நடைபெற்றது. இதில் முத்தாய்ப்பாக ரவிக்கு மரியாதை செய்யும்விதமாக அமைந்தது பஷீர் சகோதரர்களின் செயல். அதாவது திருமணத்தில் உறவினர்கள் இரண்டு சாட்சி கையொப்பமிடுவது இஸ்லாமிய திருமணத்தின் வழக்கம். இதில் இந்து மதத்தைச் சேர்ந்தவரான ரவியை சாட்சி கையொப்பமிட வைத்து மரியாதை செய்திருக்கிறார் பஷீர். விழாவிற்கு வந்திருந்த வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் இதை நெகிழ்ந்து பேசினர்.

இது குறித்து பஷீரிடம் பேசினோம், ``எங்களுடைய சகோதரி நசீபா-சம்சுதீன் திருமணம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தனது குடும்பத்தினருடனும், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிமுன் அன்சாரி, தனியரசு எம்.எல்.ஏக்கள், திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருமணம்
திருமணம்

எங்களது வழக்கப்படி நிக்காஹிற்கு இருவர் அதன் ஒப்பந்தப் படிவத்தில் ஜமாத்தார் முன்னிலையில் கையொப்பமிட வேண்டும். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் எங்களது தந்தையின் நண்பரான, எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த ரவி என்பவரை நிக்காஹ் ஒப்பந்தத்தில் நாங்கள் கையொப்பமிட வைத்து பெருமைப்படுத்தினோம். வல்லம் ஜமாத் 100 வருடங்கள் பாரம்பர்யம் மிக்கது. ஜமாத்தில் உள்ளவர்கள் பெருந்தன்மையோடு இதற்கு ஒப்புக்கொண்டனர்.

இஸ்லாமிய மதத்தில் நிக்காஹிற்கு சாட்சி கையொப்பம் இடுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் என்றால் பின்னர் எதாவது பிரச்னை என்றால் சாட்சி கையொப்பமிட்டவர்களை அழைத்து ஜமாத்தில் விசாரிப்பார்கள். இதனால் சாட்சிக் கையொப்பமிடவே பலர் யோசிப்பார்கள். ஆனால் நாங்கள் இந்து மதத்தைச் சேர்ந்த ரவியை கையொப்பம் போட வைத்தோம்.

திருமணம்
திருமணம்

விழாவில், `இந்த நட்பும் உறவும்தான் இத்திருமணத்தின் மூலம் இந்தியாவிற்கு நாம் சொல்லும் செய்தி. இந்தியாவிற்கே இது முன்மாதிரி திருமணம். நாடு இன்னைக்கு இருக்கிற சூழலில் தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது' என வைகோ பேசினார். `இந்து சமுதாயத்தை முழுமையாக ஏற்றுக்கொண்ட ஒருவர் இஸ்லாமிய திருமணத்திற்குச் சாட்சி கையொப்பமிடுகிறார். இது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்' எனத் தனியரசு பேசினார். இதைத் தொடர்ந்து தமிமுன் அன்சாரி, இதுதான் நம் தமிழ் மண்ணின் மதச்சார்பின்மை என்றார். இந்த உறவு காலம் கடந்தும் நிலைத்து நிற்கும். எல்லோரும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக எங்க வீட்டுத் திருமணத்தைப் பேசி வருவது பூரிப்பை தருகிறது" என்றார்.