Published:Updated:

Motivation Story: 32 நாள்கள் மட்டுமே அமெரிக்க அதிபராக இருந்தவர்... அலட்சியம் தந்த பரிசு!

Motivation Story

அலட்சியம், அஜாக்கிரதை, கண்மூடித்தனமாகச் செயல்படுவது, அசட்டையாக இருப்பது... இப்படிப் பலவற்றுக்கு ஆங்கிலமொழி ஒரேயொரு சொல்லைத்தான் வைத்திருக்கிறது. அதற்குப் பெயர் `Negligence.' `அட... எது வந்தாலும் பார்த்துப்போம்’ என்கிற மனநிலை எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது

Motivation Story: 32 நாள்கள் மட்டுமே அமெரிக்க அதிபராக இருந்தவர்... அலட்சியம் தந்த பரிசு!

அலட்சியம், அஜாக்கிரதை, கண்மூடித்தனமாகச் செயல்படுவது, அசட்டையாக இருப்பது... இப்படிப் பலவற்றுக்கு ஆங்கிலமொழி ஒரேயொரு சொல்லைத்தான் வைத்திருக்கிறது. அதற்குப் பெயர் `Negligence.' `அட... எது வந்தாலும் பார்த்துப்போம்’ என்கிற மனநிலை எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது

Published:Updated:
Motivation Story
`அலட்சியம், அறியாமை இவற்றின் காரணமாகத்தான் மிகவும் விலையுயர்ந்த, மதிப்புமிக்க வாழ்க்கையை நாம் இழந்தோம்.’ - சன்டே அடேலஜா (Sunday Adelaja), உக்ரைன் மத போதகர்.

அலட்சியம், அஜாக்கிரதை, கண்மூடித்தனமாகச் செயல்படுவது, அசட்டையாக இருப்பது... இப்படிப் பலவற்றுக்கு ஆங்கிலமொழி ஒரேயொரு சொல்லைத்தான் வைத்திருக்கிறது. அதற்குப் பெயர் `Negligence.' `அட... எது வந்தாலும் பார்த்துப்போம்’ என்கிற மனநிலை எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது நண்பர்களே... சில நேரங்களில் அது ஆளையே அடித்து, காணாமல் செய்துவிடும். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருப்பவர், அமெரிக்காவின் ஒன்பதாவது ஜனாதிபதியாக இருந்த வில்லியம் ஹென்றி ஹாரிசன் (William Henry Harrison). `மிகச் சிறந்த’ என்பதே தவறு... அது ஒரு துயரம்!

வில்லியம் ஹென்றி ஹாரிசன்
வில்லியம் ஹென்றி ஹாரிசன்

அமெரிக்க வரலாற்றில் மிக மிகக் குறுகியகாலம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்; அதே நேரத்தில் மிக நீண்ட பதவீயேற்பு உரையை (இரண்டு மணி நேரத்துக்கும் மேல்) நிகழ்த்தியவர், வில்லியம் ஹென்றி ஹாரிசன். ராணுவ ஜெனரல், இண்டியானா பிரதேசத்தின் கவர்னர், ஓஹியோ மாகாணத்திலிருந்து அமெரிக்க செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்... எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஹாரிசன். அவர் அமெரிக்க ஜனாதிபதியாக 1841, மார்ச் 4-ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அடுத்த மாதம், அதே 4-ம் தேதி அந்தப் பதவி காலியானது. அதற்குக் காரணம் விதியல்ல, முழுக்க முழுக்க அவரேதான்.

1841, மார்ச் 4. வாஷிங்டன் டி.சி... அதிகப் பனிப்பொழிவும் அதனால் நிலவிய குளிரும், அவ்வப்போது மழையும் பொழிந்துகொண்டிருந்த நேரம். மொத்தத்தில் அது ஓர் ஈரமான தினம். அன்றைக்கு மேல் கோட்டையும், தலையில் தொப்பியையும்கூட அணியாமல் குதிரையில் ஊர்வலமாக அரங்கத்துக்கு வந்தார் ஹாரிசன். அன்றைக்கு அமெரிக்க வரலாற்றிலேயே எந்த ஜனாதிபதியும் உரை நிகழ்த்தியிருக்காத அளவுக்கு இரண்டு மணி நேரத்துக்கும் மேல் தன் பதவியேற்பு உரையை நிகழ்த்தினார். இத்தனைக்கும் அவருடைய நண்பர் டேனியல் வெப்ஸ்டர் என்பவர், அந்த உரையை எடிட் செய்து கொடுத்திருந்தபோதும், அதை வாசிக்க இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஹாரிசனுக்குத் தேவைப்பட்டது. அந்த இரண்டு மணி நேரமும் அவர் கோட் அணிந்திருக்கவில்லை; தலைக்குப் பாதுகாப்பாக தொப்பியும் இல்லை.

Motivation Story: 32 நாள்கள் மட்டுமே அமெரிக்க அதிபராக இருந்தவர்... அலட்சியம் தந்த பரிசு!

அவர் ஆற்றிய உரையில் அன்றைக்குப் பல முக்கியமான அம்சங்கள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர் தன் உடல்நிலையை அலட்சியம் செய்தார் என்பதுதான் வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். தன் உரையை நிகழ்த்தி முடித்த பிறகு அவர் நேரே தன் மாளிகைக்குச் செல்லவில்லை. ஜனாதிபதியை வரவேற்பதன் நிகழ்வின் தொடர்ச்சியாக நடந்த மூன்று மணி நேர பரேடில் கலந்துகொண்டார்... தொப்பியோ, மேல் கோட்டோ அணியாமல். அதன் பிறகு 1,000 விருந்தினர்கள் கலந்துகொண்ட ஒரு விருந்தில் பங்கேற்றார்.

ஹாரிசன் பதவியேற்று இருபது நாள்கள் கடந்திருந்தன. அவர் தன் காலை நடைப்பயிற்சிக்குப் போனார். வழக்கம்போல அதே அலட்சியம்... குளிர் மழையைப் பற்றி அவர் கவலைப்படவில்லை... மேல் கோட், தொப்பி எதுவும் இல்லாமல் நடைப்பயிற்சி. நடந்துகொண்டிருந்தபோதே மழை பிடித்துக்கொண்டது. நன்றாக நனைந்திருந்தாலும் அதைப் பற்றி அவர் கொஞ்சம்கூடக் கவலைப்படவில்லை. நனைந்த உடைகளுடனேயே வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார். 1841, மார்ச் 26. ஹாரிசனுக்கு உடல்நிலை கொஞ்சம் சரியில்லாமல்போனது. அவருக்குக் கடுமையான சளி பிடித்துக்கொண்டது என்றார்கள். டாக்டருக்கு ஆள் அனுப்பிவைக்கப்பட்டது. டாக்டர் தாமஸ் மில்லர் வந்து பார்த்தபோது, ஹாரிசன் சொன்னார்... ``டாக்டர், சோர்வுக்கும் மனக்கவலைக்கும் ஒரு மாத்திரை தருவீங்கள்ல... அதைப் போட்டதும் கொஞ்சம் பரவாயில்லை.’’

ஆனால், பிரச்னை அன்றோடு தீர்ந்துவிடவில்லை. அடுத்த நாளும் டாக்டர் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டார். டாக்டர் வந்து பார்த்தபோது ஹாரிசனின் உடம்பு குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. ஒன்றுமில்லை... அன்றைக்குக் காலையிலும்கூட பனியில் ஒரு `வாக்’ போய்விட்டு வந்திருந்தார் ஹாரிசன். அதற்காக டாக்டர் தாமஸ் மில்லர் அவரைக் கடிந்துகொள்ள முடியுமா... அவர் ஜனாதிபதியாயிற்றே! மில்லர் தன்னால் முடிந்த சிகிச்சையையெல்லாம் ஹாரிசனுக்குக் கொடுத்தார். அன்றைக்கு 4 மணிக்குப் பிறகு கொஞ்சம் பரவாயில்லை என்கிற நிலைக்குத் தேறியிருந்தார் ஹாரிசன். ஆனாலும் முழுக்க அவர் சரியாகியிருக்கவில்லை. அதற்கு அடுத்த நாள் ஹாரிசனின் உடலில் மறுபடியும் தொய்வு. ரத்தக்கசிவு, கூடவே அவருடைய இதயத் துடிப்புக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. மில்லர் வேறு பல மருத்துவர்களை அழைத்துப் பரிசோதித்துப் பார்த்தபோது, ஹாரிசனுக்கு நிமோனியா (Pneumonia) என்பது தெரிந்தது. அதற்குக் காரணம் ஓபியம், பிராந்தி உட்பட பல போதைப்பொருள்களை அவர் தொடர்ந்து உட்கொண்டு வந்ததுதான் என்பதும் தெரிந்தது.

ஆரோக்கியமே செல்வம்
ஆரோக்கியமே செல்வம்

இவ்வளவு இக்கட்டான நிலையிலும் அதிபர் குறித்து பொதுமக்களுக்கு யாரும், எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. வாஷிங்டன்னில் இயங்கிவரும் ஒரு பத்திரிகை 1841, ஏப்ரல் 1-ம் தேதி, `அவர் நன்றாக இருக்கிறார்’ என்று செய்தி வெளியிட்டிருந்த அதே நேரத்தில், ஹாரிசன் கவலைக்கிடமாக இருந்தார். ஏப்ரல் 3-ம் தேதி அவருக்கு தொடர்ச்சியாக பேதி... அதன் தொடர்ச்சியாக மயக்கம் ஏற்பட்டது. அன்றைக்கு தன் அருகிலிருந்த மருத்துவரிடம் ஏதோ சொன்னார் ஹாரிசன். ``அரசின் உண்மையான கொள்கைகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது என் ஆசை. அவ்வளவுதான்... நான் வேறு எதுவும் கேட்கவில்லை’’ என்று ஹாரிசன் சொன்னதாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது வரலாறு. ஏப்ரல் 4, 1841, இரவு 12:30-க்கு ஹாரிசன் காலமானார்.

இந்த இடத்தில் உண்மையைத்தான் நாம் அசைபோட வேண்டும். வில்லியம் ஹென்றி ஹாரிசன் என்கிற மனிதரின் மரணத்துக்கு வேறு யாரும் காரணமில்லை... அவருக்கு இருந்த அலட்சிய மனோபாவம்; உடல் மேல் அக்கறையின்மை. கொஞ்சம் நம்மைப் பற்றியும் கவலைப்படுவோம் நண்பர்களே!