Published:Updated:

Morning Motivation: ஒரு சிகரத்தை அடைபவர் என்ன செய்வார்? நடிகர் மம்முட்டியின் வாழ்வனுபவம்!

மம்முட்டி

மலை ஏறி உச்சியைத் தொட நினைக்கும் ஒருவன், எப்படி ஒவ்வொரு சிகரத்தை அடையும்போதும் `அடுத்த சிகரத்துக்குப் போகக்கூடிய மன, உடல் தைரியத்தை எனக்குக் கொடு’ என்று பிரார்த்தனை செய்வான்.

Morning Motivation: ஒரு சிகரத்தை அடைபவர் என்ன செய்வார்? நடிகர் மம்முட்டியின் வாழ்வனுபவம்!

மலை ஏறி உச்சியைத் தொட நினைக்கும் ஒருவன், எப்படி ஒவ்வொரு சிகரத்தை அடையும்போதும் `அடுத்த சிகரத்துக்குப் போகக்கூடிய மன, உடல் தைரியத்தை எனக்குக் கொடு’ என்று பிரார்த்தனை செய்வான்.

Published:Updated:
மம்முட்டி

`எல்லா வெற்றிகளுக்கும் பின்னாலிருக்கும் ரகசியம் ஒன்றே ஒன்றுதான், விடாமுயற்சி.’ - பிரெஞ்ச் எழுத்தாளர் விக்டர் ஹியூகோ.

படப்பிடிப்புக்காக ஒரு ஃபேக்டரிக்குப் போயிருந்தார் நடிகர் மம்முட்டி. ஷெட்டில் இரண்டு புத்தம் புதிய கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதைப் பார்த்ததுமே மம்முட்டியின் மனதில் லேசான பொறாமை கலந்த எரிச்சல் பொங்கி எழுந்தது. `யார்றா அவன்... ரெண்டு ஃபாரின் காரோட அலையறவன்?’ என்ற தலைக்கனம் எட்டிப் பார்த்தது. அவர் தன் காரிலிருந்து இறங்கியதும், புரொடக்‌ஷன் ஆட்களும், நிறுவனப் பணியாளர்களும் அவரருகே வந்தார்கள்.

``வாங்க சார்... எம்.டி-யோட ரூம்ல போய் உட்காரலாம்.’’ பணியாட்களில் ஒருவர் சொன்னார்.

``வேணாம். நான் இங்கேயே உட்கார்ந்துக்கறேன்.’’

``இல்லை சார். எம்.டி-யும் உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்.’’

சட்டெனப் பொங்கி வந்த எரிச்சலை மறைத்தபடி மம்முட்டி சொன்னார்... ``பார்க்கலாமே.’’

நடிகர் மம்முட்டி சந்திப்பு
நடிகர் மம்முட்டி சந்திப்பு

`எம்.டி-யிடம் காசிருந்தா அது அவனுக்கு. எனக்கென்ன...’ சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட மம்முட்டி பொறாமைப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. `எவ்வளவு பெரிய ஃபேக்டரி முதலாளியாவும் இருக்கட்டுமே... அவரோட இடத்துக்குக் கூப்பிடாம, இறங்கி வந்தா என்னவாம்... கோடிக்கணக்கான ரசிகர்களைக்கொண்டிருக்கும் மம்முட்டியைத்தான் தன் இடத்துக்குக் கூப்பிடுறார்ங்கிறது அவருக்குப் புரியலையா?’ என்றும் அவருக்குத் தோன்றியது.

அவர் போன சிறிது நேரத்துக்குப் பிறகு ஃபேக்டரி எம்.டி மாடியிலிருந்து இறங்கி வந்தார். கதரில் வெள்ளையுடை அணிந்த மிகவும் குண்டான மனிதர்.

``என்னடா... நான் கூப்பிட்டா வர மாட்டியா?’’

அப்படி அவர் சொன்னதும் மம்முட்டிக்குக் கோபம் உடல் முழுக்கப் பரவி, தலைக்கேறி, கண்கள் சிவந்தன. `இவன் யார் என்னை வாடா போடான்னு பேச...’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``நீ பெரிய சினிமா நடிகன்தான். எனக்கும் தெரியும், ரொம்ப யோசிக்காம இங்கே வாடா.’’

மம்முட்டி எழுந்துகொண்டார். ``அப்புறம் வர்றேன்.’’ உரத்த குரலில் சொன்னார்.

``இவ்ளோ கௌரவத்தோட இருக்காத. நான் யார்னு உனக்குத் தெரியலைதானே?’’

அந்தக் கேள்வியில் இழையோடிய அடக்கத்தையும் பிரியத்தையும் மம்முட்டி ஒருசேரக் கண்டுபிடித்துவிட்டார்.

``நான் பழைய குஞ்ஞுப்புடா.’’

நடிகர் மம்முட்டி!
நடிகர் மம்முட்டி!

மம்முட்டியின் மனதில் ஃப்ளாஷ் பேக்போல இருபத்தைந்து வருடங்கள் பின்னால் ஓடின. அவருடைய சொந்தக்காரரின் வீட்டு வராந்தாவில் நோன்பு நாள்களில் கண்களில் பசியையும் ஆவலையும் தேக்கிவைத்து, கஞ்சி வாங்க பாத்திரத்தோடு காத்திருந்த பையனின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அந்தப் பையன்தான் அந்த எம்.டி என்பது புரிந்தது.நோன்பு நாள்களில் மம்முட்டி அவருடைய உறவினர் வீட்டுக்குப் போவார். ஆனால், மசூதியில் வைத்துத்தான் அந்தச் சிறுவனை அவர் முதன்முதலாகப் பார்த்திருந்தார். மசூதியில் கடைசித் தொழுகையின்போது அவன் எப்போதுமிருப்பான். மம்முட்டியிடம் அன்போடும் மரியாதையோடும் பேசுவான். அப்போதெல்லாம் மம்முட்டி, பெரிய வீட்டுப்பையன் என்கிற கர்வத்தோடு அலைந்துகொண்டிருந்தார். `வீட்டு வாசலில் நோன்புக் கஞ்சிக்காகப் பாத்திரத்துடன் காத்திருக்கிற அந்தக் கூட்டத்தை மிகுந்த அலட்சியத்தோடும், புறந்தள்ளின பார்வையோடும் பார்த்துவிட்டு உள்ளே போவேன்’ என்று மம்முட்டியே குறிப்பிடுகிறார்.

கண்களில் பசியையும் ஆவலையும் தேக்கிவைத்திருந்த அந்தச் சிறுவன் இப்போது, அவர் முன்னால் விஸ்வரூபமெடுத்து நிற்கிறான். மம்முட்டியும் அந்த எம்.டி-யும் அமர்ந்தார்கள். அந்த மனிதர், தான் பட்ட கஷ்டங்களையும், அவருடைய வளர்ச்சியையும், கடவுள் அவர்மீது காட்டிய கருணையையும் மம்முட்டியிடம் பகிர்ந்துகொண்டார். இப்போது அவரிடம் இதுபோல ஐந்து ஃபேக்டரிகள் இருக்கின்றன; அவருடைய தம்பிகளும் சில நிறுவனங்களைப் பார்த்துக்கொள்கிறார்கள்; சகோதரிகளைப் பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்; கற்பனைக்கும் எட்ட முடியாத அளவுக்குத் தன் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியிருக்கிறார்; பலமுறை உலக நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார்... என்பதையெல்லாம் சொன்னார்.

அவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், அல்சர் போன்ற வியாதிகள் இருப்பதால், அவரால் விரும்பியதைச் சாப்பிட முடியவில்லையாம். டாக்டர்கள் அறிவுறுத்தும் காய்களும், ஒருபிடிச் சோறுமாக வாழ்க்கை போகிறது. அன்று ஒரு வாய் கஞ்சிக்காகப் பல வீட்டு வாசல்களை ஏறி இறங்கிய சிறுவன், இன்று நினைத்ததெல்லாம் கிடைக்கிற வாழ்விலும் பட்டினி கிடக்கிறான். அந்தச் சிறுவன் இப்படி வளர்ந்து நிற்பதற்கு எடுத்துக்கொண்ட காலம் மிகக் குறைவானதே என்பது ஆச்சர்யம்.

மம்முட்டி
மம்முட்டி

`ஒவ்வொரு கஷ்டத்தையும் மன உறுதி கொண்டு மட்டுமே கடந்து சென்ற குஞ்ஞுப்பு, உண்மையில் வாழ்க்கையோடு மல்லுக்கட்டி நின்றிருக்கிறார். இளமையில் பட்ட கஷ்டங்களையும் நொம்பலங்களையும் சமாளித்து வாழ்வின் வளர்ச்சியால் அதை ஈடுகட்டியிருக்கிறார். அவருடைய லட்சிய தாகம், ஒருபோதும் மாத சம்பளக்காரனாகவோ, ஒரு சொந்த வீட்டைக் கட்டிப் பார்த்துவிட வேண்டும் என்பதிலோ அடங்குவதாய் இல்லை. நினைத்த ஒவ்வொரு விஷயத்தையும் சாதிக்கும்போதும் குஞ்ஞுப்பு தன் அடுத்த லட்சியத்தைக் கூடுதல் உயரத்துக்குத் தூக்கிவைத்தார். பிறகு பின்னாலேயே நூல் பிடித்துப்போய் அதைத் தன்வயப்படுத்தினார். மலை ஏறி உச்சியைத் தொட நினைக்கும் ஒருவன், எப்படி ஒவ்வொரு சிகரத்தை அடையும்போதும் `அடுத்த சிகரத்துக்குப் போகக்கூடிய மன, உடல் தைரியத்தை எனக்குக் கொடு’ என்று பிரார்த்தனை செய்வானோ, அந்த மனநிலையில் குஞ்ஞுப்பு இருந்ததாக எனக்குத் தோன்றியது’ என்று குறிப்பிடுகிறார் மம்முட்டி.

`மூன்றாம் பிறை - வாழ்வனுபவங்கள்’ என்ற நூலில் மம்முட்டி இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். வம்சி வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் கே.வி.ஷைலஜா. திருவள்ளுவர், `முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்கிறார். மம்முட்டியின் நண்பர் குஞ்ஞுப்பு உயரங்களைத் தொட்டதற்கு முக்கியக் காரணம் அந்த விடாமுயற்சிதான்!