Published:Updated:

லாக்டௌன்: நினைப்பதும் Vs நடப்பதும் #MyVikatan

அவ்வப்போது விளையாட்டில் குழந்தைகளுடன் நாமும் சேர்ந்து கொண்டால் நமக்கு நேரம் போவதே தெரியாது. சுலபமாக நாள்களைக் கடத்தி விடலாம்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஊரடங்கு காரணமாய் இன்று மனிதர்கள் வீடுகளுக்குள் சிறைபட்டுக் கிடக்கின்றனர். பொழுதைப்போக்குவது பலருக்குக் கடினமாகவும் சிலருக்கு மிக எளிதாகவும் மாறியுள்ளது. நம்முடைய அன்றாட நடவடிக்கைகளுள் பலவும் தலைகீழாக மாறிவிட்டன. ஆனால் இன்றைய சூழலிலும் நமக்குப் பல எதிர்பார்ப்புகள் உள்ளன. மனிதன் நினைப்பவை அனைத்தும் நடப்பதில்லை என்றாலும்,எதிர்பார்ப்புகள் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. ஆனால் அவை எப்போதுமே முழுதும் நிறைவேறுவது கிடையாது. எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறாமல் போகும் போதுதான் மனிதனின் வாழ்க்கை ரசிக்கக் கூடியதாய் மாறுகிறது.

லாக்டௌன்: நினைப்பதும் Vs நடப்பதும் #MyVikatan

லாக்டெளன் காரணமாக நாம் வீட்டில் இருக்கும் போது நமக்கு என்னவெல்லாம் நடக்கும் என நாம் நினைப்பதும், உண்மையில் நடப்பதும் வாழ்வை சுவையூட்டவே செய்கின்றன.

#இது ஒரு லாக்டௌன் - நினைப்பதும் Vs நடப்பதும் (Expectations Vs Reality) புனைவு!

1) உணவு:

நினைப்பது: அனைவரும் ஓய்வாக வீட்டில்தானே இருக்கிறோம். புதுமையான, சுவையான உணவுகள் அவ்வப்போது நமக்குக் கிடைக்கும்.

நடப்பது: ``வீட்டில் சும்மாதானே இருக்கீங்க? இருப்பதை சாப்பிட முடியாதா? கஞ்சியோ, கூழோ குடிச்சா பத்தாதா? தினமும் வெரைட்டி கேட்குதா? வேள வேளைக்கெல்லாம் சமைக்க முடியாது. இனி காலையில செய்யறதுதான் நைட் வரைக்கும்! பத்தலைனா உப்புமா செஞ்சுக்கலாம்!" என்ற மனைவியின் வாய்ஸை மதித்தால் அடுத்தவேளை உணவிற்கு உத்தரவாதம் உண்டு. கோபப்பட்டால் சோலி முடிந்தது. ஹோட்டல்கள் இல்லை என்பதை மறந்துடாதீங்க மக்கா.

2) குழந்தைகள்:

நினைப்பது: அவ்வப்போது விளையாட்டில் குழந்தைகளுடன் நாமும் சேர்ந்து கொண்டால் நமக்கு நேரம் போவதே தெரியாது. சுலபமாக நாள்களைக் கடத்தி விடலாம்.

நடப்பது: விளையாட்டில் கவனமாகத் தோற்றுக் கொண்டே இருக்கும்போது, "அய்யே! அப்பாவுக்கு வெளையாடவே தெரிலடா!" என்ற குழந்தைகளின் வெடிச்சிரிப்பு கிளம்பும். அந்த அவமானத்தைச் சகித்துக்கொண்டு தொடர்ந்து கவனமாக விளையாட வேண்டும். ஒருவேளை உணர்ச்சிவசப்பட்டு நாம் வெற்றி பெற்றுவிட்டால், அதன் பிறகு பாகிஸ்தான் தீவிரவாதி போலதான் நடத்தப்படுவோம். குட்டீஸ்களிடமிருந்து அடிகளும் உதைகளும் ஹெவியாய்க் கிடைக்கும். இனி விளையாடப் போவியா? என்று வடிவேல் மாடுலேஷனில் மைண்ட் வாய்ஸ் அலறும்!

3) மரியாதை:

நினைப்பது: நாம் வேலைக்குச் சென்று சம்பாதித்துக் கொண்டுதானே இருந்தோம். இப்போது ஊரடங்கில் வீட்டில் இருந்தாலும் நமக்கு உரிய மரியாதை கிடைக்கும்.

நடப்பது: வீட்டில் சும்மா தானே இருக்கற. இந்த வடகத்தை மொட்டை மாடியில் காயவைச்சுடு. காக்காய் ஏதும் வடகத்தைத் தூக்கிட்டும் போயிடும். அதனால வடகம் காயற வரைக்கும் அங்கேயே உட்கார். கீழ வந்து மட்டும் என்ன செய்யப்போற? எனக் குடும்பத்தார் மானாவாரியாக மரியாதை கொடுத்து நம்மை மண்டைகாய வைப்பார்கள்!

குழந்தைகள்
குழந்தைகள்

4) கடை:

நினைப்பது: நாம் இப்போது கடைக்குச் சென்றாலும் வழக்கம் போலவே கடைக்காரர் நமக்கு நல்ல மரியாதை கொடுத்து, நமக்கு வேண்டிய பொருள்களைத் தருவார்.

நடப்பது: யோவ்! உனக்கு முன்னாடி நிக்கிற ஆளுகளைக் கண்ணுக்கு தெரியலையா? அத்தனை பேரையும் தாண்டிட்டு முன்னால வர்ற! போய் வட்டத்துக்குள்ள நில்லு! எனக் கடைக்காரர் நம்மை விரட்டுவார்! வட்டத்திற்குள் நிற்பவர்கள் எல்லாம் எல்லை தாண்டிய தீவிரவாதியைப் பார்ப்பது போல நம்மை உக்கிரமாய் முறைப்பார்கள். கடைக்குப் போவதாய் ஒத்துக்கொண்டு சனியனைத் தூக்கி பனியனுக்குள் போட்டுக்கொண்டோமோ எனக் கடைக்குமுன் அமர்ந்து கதறியழத் தோன்றும்!

5) புத்தகம்:

நினைப்பது: வீட்டில் ஓய்வாகத்தானே இருக்கிறோம். தினமும் ஒரு புத்தகத்தையாவது படித்துவிடலாம்!

நடப்பது: இரண்டு பக்கங்களுக்கு மேல் வாசிப்பு நொண்டி அடிக்கும். அவ்வப்போது கைகள் செல்போனைத் தேடும். விரல்கள் டிவி ரிமோட்டைத் தடவிக்கொண்டே இருக்கும் "எப்பப்பாரு போனை நோண்டிக்கிட்டு" என்ற மனைவியின் புலம்பலைத் தவிர்க்க வேண்டி, மனைவி வரும்போது மட்டும் பரீட்சைக்குப் படிக்கும் மாணவன் போல டக்கென்று போனை வீசிவிட்டு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொள்வோம்! காப்பி அடித்ததை கண்டுபிடிக்கும் சூப்பர்வைசர் போல, அதையும் குழந்தைகள் கண்டுபிடித்து கிண்டலடிப்பார்கள். ஒரு அசட்டுச் சிரிப்புடன் அதைச் சகித்துக்கொள்வதே சிறந்தது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

6) உறக்கம்:

நினைப்பது: அப்பாடா இன்னைக்குப் பகலில் தூங்கவில்லை. அதனால் நைட் நல்லா தூக்கம் வரும்.

நடப்பது: அதிக துக்கமும் அதிக மகிழ்வும் மனிதனை உறங்க விடாது என்பதுடன், அதிக ஓய்வும் ஒருவனை உறங்கவிடாது என்ற புதிய தத்துவத்தைக் கண்டறிந்த உவகையுடன் படுக்கையில் படுத்து நொடிகளையும் நிமிடங்களையும் எண்ணிக்கொண்டே இருப்போம். ஒருநாள் என்றால் பரவாயில்லை, தினமுமே நைட் வாட்ச்மேனின் கசினாக மாறினால் எப்படி? என்ற மனசாட்சியின் கதறலுக்குப் பதிலளிக்கவே முடியாது. புதிதாக போன் வாங்கியவன் மனநிலையில் இரவு முழுக்க செல்போனை நோண்டிக்கொண்டே இருப்பது தொடரும். உறங்கும் குடும்பத்தினரைப் பார்த்து பகலிலும் தூங்கறாங்க, இரவிலும் தூங்கறாங்க இவங்களுக்கு மட்டும் எப்படித்தான் தூக்கம் வருதோ எனப் பொறாமையில் பொங்குவது தவிர வேறு வழியில்லை!

7) சினிமா:

நினைப்பது: OTT-யில் இந்தப் படத்துக்கு நல்ல ரேட்டிங்ஸ் இருக்கு. படம் ரொம்ப நல்லா இருக்கும் போல. இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

நடப்பது: மொக்கையான படத்துக்குச் சக்கையான ரேட்டிங்ஸ் எப்படி கிடைச்சுது? படத்துக்கு ரேட்டிங்ஸ் கொடுத்தவன் ரசனையில பெட்ரோலை ஊத்த! காசு கொடுத்து ரேட்டிங்ஸ் வாங்கிட்டான் போல இருக்கு! தலைவலி வந்ததுதான் மிச்சம் என்று புலம்புவதைத் தவிர வேறு வழியேயில்லை!

கனவு
கனவு

8) கனவு:

நினைப்பது: நனவுதான் நன்றாக இல்லை. கனவாவது நன்றாக வரும். கூட்டத்துடன் சேர்ந்து இருப்பது போல கனவாவது காண வேண்டும்.

நடப்பது: போலீசிடம் அடி வாங்குவது போன்றே கனவும் வரும். இனி வெளிய வரமாட்டேன், வரவே மாட்டேன் எனக் கனவில் கதறுவது நனவிலும் கேட்கும். தெரிந்தவர்கள் எல்லாம் நம்மைப் பார்த்து கிண்டலாய்ச் சிரிப்பது போன்ற கனவுகள் அனைத்தும் மறுநாள் காலை வரை மறக்காமல் இருக்கும். கனவிலும் கர்ச்சீப்பை முகத்தில் கவிழ்த்தியவாறு போலீசின் உக்கிரமான போட்டோவிற்கும் வீடியோவிற்கும் போஸ் கொடுக்கும் பெருமையும் கிடைக்கும்!

9) சலூன்:

நினைப்பது: நாம் கடைக்குப் போனால் எந்த ஸ்டைலில் முடி வெட்டுவது என சலூன்காரர் வழக்கம்போல பாசமாக விசாரித்து முடிவெட்டி விடுவார்.

நடப்பது: "சார்! அவ்வளவுதான் வெட்ட முடியும். கிருதா மேல கீழனு அப்படி இப்படித்தான் இருக்கும். இப்ப என்ன பொண்ணு பார்க்கவா போறீங்க? வீட்லதான இருக்கப் போறீங்க! நாலு நாள்ல எல்லாம் சரியாகிடும். உங்களுக்கு பின்னாடி எத்தனை பேர் வெயிட் பண்றாங்க பாருங்க! நடைய கட்டுங்க" என்ற சலூன்காரரின் விரட்டலுக்கு வேறுவழியின்றித் தலையாட்ட வேண்டிவரும்!

10) காலை விழிப்பு:

நினைப்பது: இன்றாவது எப்போதும் போல சுறுசுறுப்பாக காலை ஆறு மணிக்கு எழுந்துவிட வேண்டும்.

நடப்பது: "குட் ஆப்டர்நூன் சொல்ற நேரத்தில் பல்லு விளக்கறார் பார்" என்ற பக்கத்து வீட்டுக்காரர்களின் கேலி கிண்டலைச் சகித்துக்கொள்ள வேண்டும். "நைட் பூரா முழிச்சிட்டு படம் பார்க்குறது, பகல்பூரா தூங்குறது! ஊரடங்கு முடிஞ்சு இருக்கற வேலை போயிட்டா கால் சென்டர் வேலைக்குப் போயாவது நம்மள காப்பாத்திருவார் போல" என்ற குடும்பத்தின் கலாய்ப்பிற்கு ஜென் மனநிலையில் தலையாட்ட வேண்டி வரும்!

11) உடற்பயிற்சி:

நினைப்பது: இந்த ஊரடங்கு முழுக்க ஒருநாள் விடாமல் உடற்பயிற்சி செய்து உடம்பை ஃபிட்டாக மாற்றிவிட வேண்டும்.

நடப்பது: கடவுளே ஒரு நாளாவது உடற்பயிற்சி செய்வதற்கு நேரத்தில் எழுந்திருக்கச் செய்ய மாட்டாயா? என்ற வேண்டுதலும் வாயக்கட்டவும் முடியலை, வயிற்றைக் குறைக்கவும் முடியலை, வாழ்க்கை இப்படியே போய்ருமா என்ற புலம்பலும் தினந்தினம் தொடரும்!

12) பட்டம் விடுதல்:

நினைப்பது: நாமெல்லாம் அந்தக் காலத்திலேயே எவ்வளவு பெரிய பட்டம் செஞ்சு இருக்கோம். குழந்தைகளுக்கு அழகா ஒரு பட்டம் செஞ்சு கொடுத்திடலாம்.

நடப்பது: அம்மா, அப்பாவுக்குப் பட்டம் கூட செய்யத் தெரியல! மூஞ்சுறு மாதிரி செய்திருக்கார்! என்ற குழந்தைகளின் கூச்சலைச் சகித்துக்கொள்ள நேரிடும். நாம் செய்த பட்டத்தையும், நம்மையும் மாறிமாறிப் பார்த்து நம் வீட்டு நாயே நம்மைப் பார்த்து குரைக்கும். பயந்து பதுங்கும்!

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

13) சமையல்:

நினைப்பது: பேச்சிலராக இருந்தபோது எத்தனை நாள் சமைத்து இருக்கிறோம். ஒரு குழம்பு வைக்க மாட்டோமா?

நடப்பது: சாப்பிட்ட அனைவரும் பக்கவாதம் வந்தது போல முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொள்வதைப் பார்த்து துக்கத்தில் நெஞ்சு விம்மும். குழம்பு தாளிக்க விளக்கெண்ணையா ஊத்திருக்கீங்க! குழம்பு ஒரே கசப்பா இருக்கு! சாப்பாட்டை டம்ளரிலயா ஊத்திக் குடிக்கறது? உங்களுக்கு என்னதான் சரியா செய்யத் தெரியுமோ என்ற மனைவியின் புலம்பல் சமையலறையை விட்டு உசேன் போல்ட்டின் உறவினர் போல நம்மை ஓடச்செய்யும்!

14) நெட்வொர்க்:

நினைப்பது: இரவு நேரத்தில் டவுன்லோடு செய்யக் கொடுத்தால் ரொம்ப சுலபமாக டவுன்லோடு ஆகிவிடும். இரவில் யாருமே நெட் யூஸ் பண்ண மாட்டார்கள்.

நடப்பது: எல்லோரும் இதுபோலவே நினைப்பதால் நெட்வொர்க் இரவிலும் நொண்டியடிக்கும். சுற்றி முடிப்பதற்குள் உலகைச் சுற்றி வந்துவிடலாம் போல வழக்கமான வேகத்தைவிட மிக மிகக் குறைவாகவே இரவில் டவுன்லோடு ஆகும்! நெட்வொர்க் வேகமா செயல்படும் நேரம் எதுவென்று யாராவது ஆராய்ச்சி செய்ய மாட்டார்களா என மனது ஏங்கும்!

15) போன்:

நினைப்பது: நம்ம போன் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் ரிப்பேர் ஆகாது. எவ்வளவு நல்ல குவாலிட்டியான கம்பெனி போன் வாங்கிருக்கோம்.

நடப்பது: தொடர்ந்து செல்போன் உபயோகிப்பதால் போன் அடிக்கடி ஹேங்க் ஆகித் தலைதொங்கிப் போகும். அடுப்பில் வைத்தது போல பேட்டரி சூடாகிக்கொதிக்கும். 'ஏந்திரு அஞ்சலி ஏந்திரு அஞ்சலி' ரேஞ்சுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறையாவது போனை ரீ ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கும்!

16) நண்பர்கள்:

நினைப்பது: நம்மைப் போலவே நண்பர்களும் ஊரடங்கில் நேரத்தைப் போக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

நடப்பது: நம்மிடம் பேசும்போது மட்டும் நேரம் போவதே தெரியவில்லை,அது பண்றேன் இது பண்றேன் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று நண்பர்கள் சும்மானாச்சும் அடிச்சு விடுவார்கள்! இதனைப் பின்பற்றி நாம் யாரிடமாவது அடித்துவிட்டால் அவர்கள் 'பொய்தான சொல்ற' என கரெக்டாகக் கண்டுபிடித்து கலாய்ப்பார்கள். வழிந்தும் குழைந்தும் அவர்களைச் சமாளிக்க வேண்டி வரும்.

லாக்டௌன்: நினைப்பதும் Vs நடப்பதும் #MyVikatan

17) போலீஸ்:

நினைப்பது: நாம் மளிகை சாமான் வாங்க காரணத்தோடுதானே வெளியே போறோம். போலீஸ் எல்லாம் பிடிக்கமாட்டார்கள். பிடிச்சாலும் காரணத்தைச் சொல்லிடலாம். கையில் கட்டப்பை இருக்கு.

நடப்பது: எதற்காக வந்தோம் என்று கேட்காமலே போலீஸ் வண்டியை சீஸ் செய்வார்கள். பெயின்டர் போல நமக்கு பட்டி பார்த்து விட்டு வண்டிக்கு பெயின்ட் அடிப்பார்கள். பார்ப்பவர்கள் சிரிக்கும்படியான மானாவாரி தண்டனைகள் கிடைக்கும். கட்டப்பை எனும் கவசகுண்டலம் கடைசியில் நம்மைக் காக்காமல் கைவிட்டுவிடும்.

18) குழந்தைகளின் ஆடை:

நினைப்பது: எத்தனையோ டெக்னாலஜி கத்துக்கிட்டோம் குழந்தைக்கு ஒரு டிரஸ் போட்டுவிட மாட்டோமா?

நடப்பது: "அம்மா கீழே போடற டிரஸ்ஸை மேலேயும், மேலே போடற டிரஸ்ஸை கீழேயும் போட்டுவிட்டு அப்பா முழிக்கிறார்" என்ற குழந்தைகளின் அழுகுரலைச் சமாளிக்க விக்கிரமாதித்யன் வேதாளம் டெக்னிக்கை எல்லாம் பயன்படுத்த நேரிடும்!

19) டிவி ரிமோட்:

நினைப்பது: நாம் விரும்பிய சேனலைப் போட்டுவிட்டு ரிமோட்டை எங்காவது ஒளித்து வைத்துவிட்டால் யாராலும் சேனல் மாற்ற முடியாது!

நடப்பது: நமக்கு முன்பே இந்த டெக்னிக்கை நம்முடைய குழந்தையோ, மனைவியோ செய்து முடித்து திருடனுக்கு தேள்கொட்டியது போல கமுக்கமாய் அமர்ந்திருப்பர்!

ரிமோட்
ரிமோட்

20) உடை:

நினைப்பது: லுங்கி பனியனிலேயே காலம் போகிறது, என்றாவதுதான் வெளியே செல்கிறோம். இன்று வெளியே கடைக்குச் செல்லும் போது டீசன்டான உடை அணிந்து செல்லலாம்.

நடப்பது: "வெளிய போய்ட்டு வந்தவுடனே குளிக்கணும். அதனால இந்த ட்ரஸ் உங்களுக்குப் போதும்" என்ற கேப்சனுடன் பிச்சைக்காரன்கூட அணியத் தயங்கும் ஒரு லுங்கியும் டி ஷர்ட்டும் மட்டுமே நமக்கு அணிந்து கொள்ளக் கிடைக்கும்! ஆனால் நாம் முகக்கவசம் அணிந்திருப்பதால் அது நாம்தான் என பக்கத்துவீட்டு ஆன்ட்டிகள் அறியாமல் இருப்பது, `சம்திங் ஈஸ் பெட்டர் தென் நத்திங்'.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு