Published:Updated:

கிராமத்துல இருந்து வந்த பொண்ணுக்கு சென்னை என்னவெல்லாம் கொடுத்துச்சு தெரியுமா? #MadrasDay2022

சென்னை

``அங்க ஏன் போற... தண்ணீர் பிரச்னை இருக்கும். கூவம், குப்பை இதுதான் சென்னை. உனக்கு செட் ஆகாது"னு சொன்னவங்கதான் அதிகம். ஆமா, இங்க குப்பை, கூவம் எல்லாம் இருக்குதான். அதனால என்ன? இது எல்லாத்தையும் சேர்த்துதான் நான் சென்னையை நேசிக்கிறேன்...”

கிராமத்துல இருந்து வந்த பொண்ணுக்கு சென்னை என்னவெல்லாம் கொடுத்துச்சு தெரியுமா? #MadrasDay2022

``அங்க ஏன் போற... தண்ணீர் பிரச்னை இருக்கும். கூவம், குப்பை இதுதான் சென்னை. உனக்கு செட் ஆகாது"னு சொன்னவங்கதான் அதிகம். ஆமா, இங்க குப்பை, கூவம் எல்லாம் இருக்குதான். அதனால என்ன? இது எல்லாத்தையும் சேர்த்துதான் நான் சென்னையை நேசிக்கிறேன்...”

Published:Updated:
சென்னை

மூணு வருஷத்துக்கு முன்னாடி சென்னை வந்து இறங்குனப்போ ரெண்டு செட்டு சுடிதாரையும், கடனா வாங்கி வந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் தவிர கையில வேற எதுவும் இல்ல. மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாத நிலை; குடும்பச் சூழல்; வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம்... எல்லாம் சேர்ந்து என்னை 20 வயசுல சென்னையை நோக்கித் துரத்துச்சு.

நான் காலேஜ் படிக்கும்போது மாணவப் பத்திரிகையாளரா இருந்த நிறுவனத்துலதான் வேலை. ஆபீஸ், வேலை இதெல்லாம் ஏற்கெனவே பழகுனதுதான். ஆனா, நான் பழகாத சென்னையும், அதோட வாழ்க்கை முறையும் என்னை ரொம்பவே மிரண்டு போக வச்சது.

Girl
Girl

அண்ணாசாலையில, ஸ்பென்சருக்கு பக்கத்துல ஆபீஸ். சத்யம் தியேட்டருக்கு பக்கத்துல ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருந்தேன். அமைதியான கடற்கரை கிராமத்துல இருந்து வந்த எனக்கு, சென்னையோட பரபரப்பு ஒருவித வெறுப்பை ஏற்படுத்துச்சு. ஆபீஸ், ஹாஸ்டல் இது ரெண்டையும் தாண்டி வெளியில எங்கேயும் போகல. விடுமுறை நாள்கள்லகூட ஹாஸ்டல் ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தேன்.

திரும்ப ஊருக்குப் போயிடலாமானு பல முறை யோசிச்சிருக்கேன். வேற வழியே இல்ல. இங்கதான் இருந்தாகணுங்குற நிலைமை. சென்னை வந்து சரியா ஒரு மாசம் இருக்கும். அந்த வருஷத்துக்கான தீபாவளி வந்தது. அப்பா இறந்த வருஷம். எங்களுக்கு தீபாவளி கிடையாது. என்னைத் தவிர ஹாஸ்டல்ல மத்த எல்லாரும் ஊருக்குப் போயிட்டாங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அன்னைக்கி தீபாவளி. யாரும் இல்லாததால ஹாஸ்டல்ல சாப்பாடு செய்யல. மாடியை விட்டு கீழ இறங்கி கடையில சாப்பாடு வாங்கப் போனேன். நான் இருக்குறது மெயின் ஏரியா. எப்போதும் ரோடு டிராஃபிக்காதான் இருக்கும். ஆனா, அன்னைக்கி அப்படியே தலைகீழா இருந்துச்சு. ரோட்ல ஒரு வண்டியைக்கூட காணோம். எப்போதும் கேக்குற சத்தத்தையும் காணோம். என்னை மாதிரியே சென்னையும் தனியா இருக்குற மாதிரி ஓர் உணர்வு. என்னனு தெரியல... அந்த நேரத்துல இருந்து சென்னை மேல ஓர் இனம்புரியாத பாசம் தொத்திக்கிச்சு.

அதுக்கு அப்புறம் வந்த நாள்கள்ல, தோழிகளோட சேர்ந்தும், தனியாவும் சென்னையை சுத்த ஆரம்பிச்சேன். சென்னையே பிடிக்காம இருந்த எனக்கு சென்னையைவிட்டு போகவே பிடிக்காம போச்சு. ஊருக்குப் போகும்போதெல்லாம் சென்னையை விட்டுட்டுப் போறோமேன்னு மனசுக்கு கஷ்டமா இருக்கும். ஊர்ல இருந்து திரும்பி வரும்போதெல்லாம் இந்த முறை சென்னை நமக்கு என்ன சர்ப்ரைஸ் வச்சிருக்குன்னு ஆர்வமா இருக்கும்.

சென்னை
சென்னை

நாள்கள் இப்படியே ஓடிக்கிட்டு இருந்துச்சு. நான் ராயப்பேட்டையில வேற ஒரு புது லேடீஸ் ஹாஸ்டலுக்கு ஷிஃப்ட் ஆனேன். அந்த ஏரியா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஹாஸ்டல்ல இருந்து ஆபீஸுக்கு பஸ்ல போயிட்டு வந்துட்டு இருந்தேன். அந்த நேரத்துலதான் சென்னையில கொரோனா பரவத் தொடங்குச்சு. எல்லாருக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்தாங்க. ஹாஸ்டல்ல இருந்து வேலை செஞ்சிட்டு இருந்தேன். அப்போதான் அந்தச் செய்தி வந்து சேர்ந்துச்சு. நாளைக்கு மறுநாள்ல இருந்து முழு லாக்டௌன் போடப் போறாங்கன்னு கேள்விப்பட்டதும் பதறி அடிச்சிக்கிட்டு சென்னையை விட்டு சொந்த ஊருக்கு ஓடுன அந்த பல்லாயிரக்கணக்கான பேர்ல நானும் ஒருத்தி.

ஊருல இருந்து வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணிட்டு இருந்தேன். ஆரம்பத்துல எதுவும் தெரியல. அதுக்கு அப்புறம் சென்னையை ரொம்ப மிஸ் பண்ணத் தொடங்கினேன். சென்னையோட பரபரப்பான வாழ்க்கை வேணும்போல இருந்தது. டிவி நியூஸ்ல சென்னையைப் பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். கூடவே ஒருவித குற்றவுணர்வும் வந்துடும்.

`எதுக்கு சென்னையை விட்டுட்டு வந்தோம்... சென்னையிலேயே இருந்துருக்கலாமே'னு பலமுறை என்னை நானே நொந்துகிட்டேன். கொரோனா முதல் அலை லேசா குறைய ஆரம்பிச்சது. முதல் ஆளா சென்னைக்கு ஓடி வந்தேன். ஆனா, சென்னை ரொம்ப மாறி இருந்துது. பழைய சென்னைக்கு மனசு கிடந்து அடிச்சிக்கிச்சு.

சென்னை
சென்னை

லாக்டௌன்லயும், கொரோனா வந்துடுமோ'ங்குற பயத்துலயும்தான் நாள்கள் வேகமா ஓடிக்கிட்டு இருந்தது. நிலைமை கொஞ்சம் சரி ஆன நேரம். நிம்மதியா இருந்தது. ஆனா... அது ரொம்ப நாளைக்கு நிலைக்கல. திரும்பவும் முதல்ல இருந்தான்னு யோசிக்கிற மாதிரி வந்து நின்னுச்சு இரண்டாவது அலை! திரும்பவும் லாக்டௌன். சென்னையிலேயே இருக்கலாம்னுதான் நினைச்சேன். ஹாஸ்டல் இயங்காதுன்னு சொன்னதால ஊருக்குப் போனேன். பாதிப்பு குறைய ஆரம்பிச்சதும் சென்னை வந்தேன். இனிமேல் இந்த நிலைமை வராதுன்னு மனசுல ஒரு நம்பிக்கை. எல்லாம் சரியாக ஆரம்பிச்சது. ஊர்ல இருந்து என் ஸ்கூட்டியை பார்சல் பண்ணி சென்னைக்குக் கொண்டு வந்தேன். ஸ்கூட்டியில சென்னையை சுத்துனேன்.

மூணு மாசத்துக்கு ஒரு முறைதான் ஊருக்கே போனேன். என்னோட ஊரு சென்னையாவே மாறிடுச்சு. நடுவுல கொரோனா மூணாவது அலை வந்துட்டு போச்சு. அதைச் சென்னையும், நாங்களும் பெருசா கண்டுக்கவே இல்ல. நாங்கதான் ஸ்ட்ராங் ஆகிட்டோம்ல.

ஊர்ல தனியா இருக்குற அம்மாவை சென்னைக்கு கூட்டிட்டு வரணும்னு ரொம்ப நாள் ஆசை. அந்த ஆசை கொஞ்ச நாளைக்கு முன்னாடி நிறைவேறிடுச்சு. என் ஹாஸ்டலுக்கு பக்கத்துலேயே சின்னதா ஒரு வாடகை வீடு. அம்மாவைக் கூட்டிட்டு வந்துட்டேன்!

சென்னை
சென்னை

கண்ணீரோட கடந்த எத்தனையோ இரவுகள்ல எனக்கான ஆறுதல் இந்த சென்னை மட்டும்தான். மூணு வருஷத்துக்கு முன்னாடி கண்ணுல மிரட்சியோட வந்து இறங்குன இந்த கிராமத்து பொண்ணோட கையைப் புடிச்சு இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்துருக்கு சென்னை. இனிமேலும் கூட்டிட்டுப் போகும்.

சென்னைக்குப் போறேன்னு சொன்னப்போ, ``அங்க ஏன் போற... தண்ணீர் பிரச்னை இருக்கும். கூவம், குப்பை இதுதான் சென்னை. உனக்கு செட் ஆகாது"னு சொன்னவங்கதான் அதிகம். ஆமா, இங்க குப்பை, கூவம் எல்லாம் இருக்குதான். அதனால என்ன? இது எல்லாத்தையும் சேர்த்துதான் நான் சென்னையை நேசிக்கிறேன்.

இப்போ என்னைப் பாக்குறவங்க எல்லாருக்கும், ``பக்கா சென்னை பொண்ணாவே மாறிட்டியே"னு கேக்குறாங்க. ஆமா, நான் சென்னை பொண்ணுதான். சென்னையோட பொண்ணு!

லவ் யூ சென்னை!

மெட்ராஸ் குறித்து உங்களுக்கு எந்தளவு தெரியும்? சுவாரஸ்யமான ஒரு க்விஸ் உங்களுக்காக... இங்கே க்ளிக் செய்யவும்!