Published:Updated:

முதலில் கதை சொல்லி... இப்போ பொம்மலாட்டம்.. கவனம் ஈர்க்கும் தலைமை ஆசிரியர்!

பொம்மலாட்ட கலை மூலம் வகுப்பறை பாடத்தையும் சமூக கருத்துகளையும் மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார் தலைமை ஆசிரியர் சரவணன்.

பொம்மலாட்டம்
பொம்மலாட்டம் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

மதுரை கீழசந்தப்பேட்டையில் உள்ள டாக்டர் டி.திருஞானம் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர்தான் சரவணன். விடுமுறை நாள்களில் மதுரை முழுதும் பல இடங்களில் குழந்தைகளுக்கு இவர் கதை சொல்வது வழக்கம். தான் பணியாற்றும் பள்ளியிலும் கதைகள் சொல்வது நாடகம் அரங்கேற்றுவது, பாடங்களைப் பாட்டுக், கதை, நாடகம் என வேறு வடிவத்துக்கு மாற்றி எளிமையாகக் கற்பித்துவருகிறார்.

தலைமை ஆசிரியர் சரவணன் உடன் மாணவர்கள்
தலைமை ஆசிரியர் சரவணன் உடன் மாணவர்கள்

இந்நிலையில் தற்போது பொம்மலாட்டம் மூலம் மாணவர்களுக்குப் பாடத்தையும், சமூக கருத்தைக் கொண்டு சேர்க்கிறார். இது குறித்து சரவணன் கூறுகையில், "கதைகள், நாடகம் நடித்துக் காண்பிப்பது என்பதிலிருந்து மாணவர்களுக்குப் பொம்மலாட்டத்தை அறிமுகம் செய்துவருகிறேன். எனது பள்ளி மாணவர்களே பொம்மலாட்டத்துக்குத் தேவையான பொம்மைகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.

பொம்மலாட்ட நிகழ்ச்சியில் அவர்களும் பங்கெடுத்துச் செயல்படுகின்றனர். பொம்மைகள் தயாரிப்பது எப்படி, இயக்குவது எப்படி எனவும் சொல்லிக்கொடுக்கிறேன். பொம்மலாட்டம் அரங்கேற்றம் செய்யும்போது குரல் கொடுப்பது, பொம்மைகளை அசைய வைப்பது, இசை அளிப்பது, திரைக்கதை தயார் செய்வது, பலகுரல் செய்வது என மாணவர்களே ஒருங்கிணைக்கின்றனர்.

பள்ளியில் பொம்மலாட்டம் மூலம் பாடம்
பள்ளியில் பொம்மலாட்டம் மூலம் பாடம்

இதில் பாடத்தையும் இணைத்து பொம்மலாட்டம் நிகழ்த்துகிறோம். மாணவர்கள் பாடங்களுடன் இணைத்தும் பொம்மலாட்டம் நிகழ்த்துகின்றனர். இதனால் வாழ்க்கை திறன் மேம்படுத்திக் கொள்ள முடியும். ஒருங்கிணைந்து செயல்படுவதால் அவர்களுக்குள் சமுதாய ஒற்றுமை நிகழ்கிறது. அதேபோல் கம்யூனிகேஷன் ஸ்கில், மொழி, கற்பனைத் திறன், பாடங்களின் மீது ஆர்வம் போன்றவை பெறமுடியும்" என்றார்.

பள்ளியின் வகுப்பறை முழுவதுமே மாணவ-மாணவியர்கள் தயார் செய்த பொம்மைகளும் விளக்கவுரைகளும் செய்முறையாக அவர்கள் ஒவ்வொரு நாளும் செய்யக்கூடிய பொருள்களளைக் காணமுடிந்தது.

பொம்மலாட்ட பயிற்சி வகுப்பின்போது சரவணன்
பொம்மலாட்ட பயிற்சி வகுப்பின்போது சரவணன்

பழைய செய்தித்தாள் துண்டுகளையும் ஒன்றிணைத்து பசையை எடுத்து அதில் பொம்மையாகத் தயார் செய்து அதற்கு ஒரு துணியையும் கொடுத்து கைகளில் மாட்டிக்கொண்டு மாணவர்கள் விளக்கம் கொடுக்கும் காட்சி அளப்பரியது.