Published:Updated:

விபத்தால் முடங்கியவர், 1400 மாற்றுத்திறனாளிகளை இயங்கவைத்த கதை!

தொரப்பா முஸ்தஃபா
தொரப்பா முஸ்தஃபா

விபத்தால் இடுப்புக்குக்கீழே உறுப்புகள் செயல் இழந்தன. முடங்கிப்போகவில்லை முஸ்தஃபா. இந்தியாவின் நம்பிக்கை மனிதராக உயர்ந்திருக்கிறார் இந்த மாற்றுத்திறனாளி. அவரது வெற்றிக்கதை!

``அந்த விபத்து நடந்து 26 வருஷமாச்சு. அதுக்கப்புறம், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்திருந்தா எனக்கான புது உலகம் பிறந்திருக்காது. ‘அடுத்து என்ன?’னு முடிவெடுத்தேன். இத்தனை வருஷத்துல யாருக்கும் பாரமா இல்லாம, பெரிசா பிறர் உதவியை எதிர்பார்க்காம எனக்கான தேவைகளைப் பூர்த்தி செஞ்சுக்கிறேன். எல்லாத்துக்கும் பின்னணியா இருந்து நம்பிக்கை கொடுத்தது என் மனைவிதான். விபத்துக்குப் பிறகு, ஒருநாளும் என்முன் மனைவி கண்கலங்கினதில்லை. ‘உங்களால முடியும். நான் பக்கபலமா இருக்கேன்’னுதான் சொல்வாங்க. இதைவிடப் பெரிய ஊக்கம் வேணுமா?” - கேரளாவின் நம்பிக்கை மனிதர்களில் ஒருவரான தொரப்பா முஸ்தஃபாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மாற்றத்துக்கான விதைகள்.

கார் ஓட்டும் முஸ்தஃபா
கார் ஓட்டும் முஸ்தஃபா
பெரிதாகப் படிக்காதவர்தான். ஆனால், உழைக்க எப்போதுமே தயங்காதவர். சாலை விபத்தில் முதுகுத் தண்டுவட பாதிப்பு ஏற்பட்டு, வீல்சேரில்தான் வாழ்க்கை என்றானது. அதன்பிறகு, தனக்குப் பிடித்த மெக்கானிக் தொழிலைக் கையில் எடுத்தவர், மாற்றுத்திறனாளிகள் ஓட்டுவதற்கு ஏற்ப கார்களை மறுவடிவமைப்பு செய்துகொடுக்கிறார். தவிர, மூலிகை பண்ணை, இயற்கை விவசாயம், மீன் வளர்ப்பு என இவரின் பன்முகங்கள் விரிகின்றன.

``மலப்புரம் மாவட்டம், கோடூர் பஞ்சாயத்துதான் என் பூர்வீகம். விவசாய குடும்பம். கூடப்பிறந்தவங்க நாலு பேர். வீட்டில் யாருமே பெரிய அளவில் படிக்கலை. நானும் ஒன்பதாவதுவரைதான் படிச்சேன். எனக்கு பைக், கார், ஜீப் ஓட்டுறதில் அதிக ஆர்வம். அதனால மெக்கானிக் வேலையிலும் ஈடுபாடு அதிகமாச்சு. படிப்பை நிறுத்தினதும் ஒரு மெக்கானிக்கல் வொர்க் ஷாப்ல கொஞ்சகாலம் வேலை செஞ்சேன். குடும்பத்துல பொருளாதார சிரமங்கள் அதிகம் இருந்துச்சு. எனவே, சவுதி அரேபியாவுல அஞ்சு வருஷம் வேலை செஞ்சேன்.

மூலிகைப் பண்ணையில் முஸ்தஃபா
மூலிகைப் பண்ணையில் முஸ்தஃபா

பிறகு, கேரளாவுக்குத் திரும்பினேன். 25 வயசுல எனக்குக் கல்யாணமாச்சு. சொந்தமா தொழில் செய்யலாம்னு, எங்க ஊர்லயே சின்னதா பேக்கரி ஒண்ணு ஆரம்பிச்சேன். கூடவே ரெண்டு ஜீப் வாங்கினேன். ஒரு ஜீப் நான் ஓட்ட, மற்றொன்றுக்கு டிரைவரைப் பயன்படுத்தினேன். தினமும் என் பேக்கரிக்கான மூலப்பொருள்களை வாங்கறது தவிர, மற்ற விவசாயிகளுக்கான பொருள்களையும் ஜீப்ல கொண்டுபோய் கொடுப்பேன். விடியற்காலையில இருந்து இரவு 11 மணிவரைக்கும் ஓயாம உழைச்சேன். நல்லா சம்பாதிக்கவும் ஆரம்பிச்சேன். அந்த நேரத்துலதான் அந்த விபத்து நடந்துச்சு” - முஸ்தஃபாவின் குரல் தளர்கிறது.

ஒருநாள் இரண்டு ஜீப்களும் வெளிவேலைக்குப் போக, பேக்கரிக்கான பொருள்களை வாங்க ஒரு ஆட்டோவில் பயணம் செய்தார் முஸ்தஃபா. அந்த ஆட்டோவின்மீது எதிரே வேகமாக வந்த மற்றொரு ஆட்டோ மோதியதில், தூக்கிவிசப்பட்ட முஸ்தாஃபாவுக்கு பலத்த காயம். உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும், முதுகுத் தண்டுவட பாதிப்பு ஏற்பட்டது. இனி, வாழ்நாள் முழுக்க நடக்க முடியாது. வீல்சேரில்தான் இருக்க வேண்டும். அந்த 28 வயதில் முஸ்தஃபாவுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருந்தார். மார்புக்குக் கீழுள்ள உடல் உறுப்புகளில் எந்த உணர்வுகளும் இல்லாமல் இருந்தாலும், முஸ்தஃபா மனம் தளரவில்லை. தனது வாழ்வின் இரண்டாவது இன்னிங்ஸை முன்பைவிடவும் அதிக உத்வேகத்துடன் தொடங்கினார்.

மூலிகைப் பண்ணையில் முஸ்தஃபா
மூலிகைப் பண்ணையில் முஸ்தஃபா
எதுவும் தானாவே மாறிடாது. மாற்றம் நம்மகிட்ட இருந்துதான் தொடங்கணும். உழைப்பு மட்டும்தான் எப்போதும் உயர்வு தரும்னு உறுதியா நம்பினேன்.
முஸ்தஃபா

``1994-ல் நடந்துச்சு அந்த விபத்து. சிகிச்சைக்குப் பல லட்சம் ரூபாய் செலவாச்சு. ஆசையா நடத்தின பேக்கரி, எனக்குனு இருந்த சிறிய விவசாய நிலம்னு எல்லாச் சொத்துகளையும் வித்துட்டோம். சொல்லப்போனா, ‘ஜீரோ’ நிலையில் இருந்து வாழ்க்கையை மறுபடியும் தொடங்கினேன். கொஞ்சகாலம் வீட்டுக்குள்தான் முடங்கியிருந்தேன். யாரையுமே பார்க்கவோ, பேசவோ விருப்பமில்லை. கொடுமையான காலகட்டம் அது.

அப்போ நிறைய பத்திரிகைகள், செய்திகள் பார்த்தேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு போராடி வெற்றி பெற்றவங்களோட கதைகளையும் தெரிஞ்சுக்கிட்டேன். அதன் மூலம் பெரிய நம்பிக்கை கிடைச்சுது. இனி வீட்டுக்குள் முடங்கியிருந்தா, எதுவும் தானாவே மாறிடாது. மாற்றம் நம்மகிட்ட இருந்துதான் தொடங்கணும். உழைப்பு மட்டும்தான் எப்போதும் உயர்வு தரும்னு உறுதியா நம்பினேன். என் நண்பர்கள்கிட்ட கடன் வாங்கி மறுபடியும் புது பேக்கரி தொடங்கினேன்.

தோட்டத்தில் முஸ்தஃபா
தோட்டத்தில் முஸ்தஃபா

பழைய ஸ்கூட்டர் ஒண்ணு வாங்கி, ரெண்டு சைடுலயும் எக்ஸ்ட்ரா சக்கரங்கள் வெச்சு ஓட்ட ஆரம்பிச்சேன். மறுபடியும் பழைய காட்சிகள்தான். தினமும் பேக்கரிக்குத் தேவையான மூலப்பொருள்களை நானே வாங்கிட்டு வருவேன். பேக்கரிக்குள் என் வீல்சேர் நுழையாது. அதனால, பேக்கரிக்கு வெளியே உட்கார்ந்தவாறு, எல்லா வேலைகளையும் கவனிச்சுகிட்டேன். ஒருநாள் கடைக்குப் போயிட்டு திரும்ப நீண்ட நேரமாச்சு. ரொம்பதூரம் ஸ்கூட்டர் ஓட்டியதில் ரெண்டு கால்லயும் ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. எனக்குத்தான் மார்புக்குக் கீழே எந்த உணர்வும் தெரியாதே! வீட்டுக்கு வந்ததும் என் கால்ல ரத்தம் கொட்டுவதைப் பார்த்து மனைவி பயந்துட்டாங்க.

அதுக்கப்புறம் மெக்கானிக் ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தினேன். பழைய மாருதி 800 மாடல் கார் ஒண்ணு வாங்கினேன். அதை நான் ஓட்டுற மாதிரி ரீ-டிசைன் பண்ணினேன். ஸ்டியரிங், கிளட்ச், கியர், ஆக்ஸிலேட்டர் பிரேக் எல்லாத்தையும் கைகள் மூலமாகவே இயக்குவதற்கு ஏற்ப மறுவடிவமைப்பு செஞ்சேன். டிரைவர் சீட் இருக்கும் இடத்துல வீல்சேர்ல உட்கார்ந்தபடி கார் ஓட்டினேன். எனக்குக் கூடுதல் நம்பிக்கை கிடைச்சுது” என்று புன்னகைக்கும் முஸ்தஃபா, அடுத்த சில ஆண்டுகளில் கூடுதலாக மூன்று பேக்கரி தொடங்கும் அளவுக்கு வேகமான வளர்ச்சிப் பாதையில் சென்றிருக்கிறார்.

கார் ஓட்டும் முஸ்தஃபா
கார் ஓட்டும் முஸ்தஃபா

``என்கிட்ட நிறைய மாற்றுத்திறனாளிகள் வந்து, அவங்க ஓட்டுற மாதிரி கார் டிசைன் பண்ணிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டாங்க. பேக்கரி வேலையுடன், கார் டிசைன் பண்ற வேலையையும் செய்தேன். 2001-ல் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சி என் வாழ்நாளில் பெரிய திரும்புமுனையா அமைஞ்சது. அங்க நடந்த தேசிய அளவிலான வாகனத் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்துக்க வாய்ப்பு கிடைச்சுது. என் திறமையை நிரூபிக்க, நான் வடிவமைச்ச ஒரு கார்லயே கேரளாவில் இருந்து டெல்லி வரைக்கும் போனேன். அதுவும் நான் மட்டுமேதான் காரை ஓட்டினேன். என் கார்ல மூணு அதிகாரிகளை உட்காரவெச்சு, டெல்லியைச் சுற்றி 1,020 கிலோமீட்டர் தூரம் ஓட்டிக்காட்டினேன். அந்தக் கருத்தரங்கில் எனக்கு முதல் பரிசு கிடைச்சுது. அங்கிருந்து கார்லயே கேரளா திரும்பினேன். போக வரப் பயண நேரம் மட்டுமே ஏழு நாள்கள் ஆச்சு.

1,400!
இதுவரை 1,400-க்கும் மேற்பட்டோருக்கு கார்களை மறுவடிவமைப்புச் செய்துகொடுத்திருக்கிறார் முஸ்தஃபா.

பிறகு, டாடா நானோ கார்ல இருந்து பி.எம்.டபிள்யூவரை எல்லாவித கார்களையும் மாற்றுத்திறனாளிகளின் உடல் பிரச்னைகளுக்கு ஏற்ப ரீ-டிசைன் செய்துகொடுக்க ஆரம்பிச்சேன். அதிகபட்சமா ஒரு கோடி மதிப்பிலான காரையும் ரீ-டிசைன் பண்ணிக்கொடுத்திருக்கேன். உடல்நலப் பிரச்னைக்கு ஏற்ப எப்படியான ரீ-டிசைன் கேட்டாலும் செய்துகொடுப்பேன். கால்கள் இயங்காட்டியும், குறைந்தபட்சம் ஒரு கையாவது செயல்பட்டால்தான் மாற்றுத்திறனாளிகளால் கார் ஓட்ட முடியும்.

தோட்ட விளைபொருள்களுடன் முஸ்தஃபா
தோட்ட விளைபொருள்களுடன் முஸ்தஃபா

டிரைவர் சீட்ல வீல்சேர்ல இருந்தபடியே அவங்களே கார் ஓட்டலாம். என்னோட ஊர்லயே கார் டிசைனிங் சென்டர் வெச்சிருக்கேன். அதில் என்னைத் தவிர ரெண்டு பேர் வேலை செய்றாங்க” என்பவர் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டோருக்கு கார்களை மறுவடிவமைப்புச் செய்துகொடுத்திருக்கிறார். இந்தப் பணித் திறமைக்காக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

அந்த விபத்துக்குப் பிறகு, தனது கனவுகளை குறுகிய வட்டத்துக்குள் முஸ்தஃபா சுருக்கிக்கொள்ளவில்லை. எனவேதான், மூலிகைப் பண்ணை, காய்கறித் தோட்டம், மீன் வளர்ப்பு என 12 ஏக்கரில் பரந்துவிரிந்த விவசாயப் பணிகளுடன் விவசாயியாகவும் நடைபோடுகிறார்.
மூலிகைப் பண்ணையில் முஸ்தஃபா
மூலிகைப் பண்ணையில் முஸ்தஃபா

விவசாய அனுபவங்களைப் பற்றிப் பேசும்போது, முஸ்தஃபாவின் முகத்தில் கூடுதல் உற்சாகம் துளிர்க்கிறது.

``விபத்துக்குப் பிறகு எனக்கு பிசியோதெரபி, ஆயுர்வேத சிகிச்சைகள் அதிகளவில் தேவைப்பட்டுச்சு. அதுக்காகத் தேடியபோது சில மூலிகைத் தாவரங்கள் எங்கயும் கிடைக்கவேயில்லை. என்னை மாதிரி மற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட யாருமே சிரமப்படக் கூடாதுனு, நானே மூலிகைத் தாவரங்களை விளைவிக்க முடிவெடுத்தேன். அந்த நேரத்துல விபத்துக்கான இழப்பீடாக 18 லட்சம் ரூபாய் கிடைச்சுது. அதில் 2005-ல் ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கி, 360 வகையான அரிய வகை மூலிகைகளை வளர்க்கிறேன். சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கான மூலிகைகள் இங்கு சிறப்பா விளையுது. மக்கள் மட்டுமல்லாம மருந்துவத் தயாரிப்பு நிறுவனங்களும் வந்து என்கிட்ட மூலிகைகளை வாங்கிட்டுப் போறாங்க.

தவிர, பக்கத்துலயே குத்தகைக்கு வாங்கியுள்ள 10 ஏக்கர் நிலம் இருக்கு. அதில், நாலு ரகத்தில் கப்பக்கிழங்கு, மூணு ரகத்தில் வாழை, சேனைக்கிழங்கு பயிர் செய்யுறேன். இதுதவிர வீட்டுக்கான காய்கறிகள், கீரைகளைப் பயிரிட்டிருக்கேன். இயற்கை உரங்களைத் தவிர, துளிகூட ரசாயன உரங்களைப் பயன்படுத்துறதில்லை.

குடும்பத்தினருடன் முஸ்தஃபா
குடும்பத்தினருடன் முஸ்தஃபா

விவசாய வேலைகளைக் கவனிச்சுக்க ஆறு பணியாளர்கள் இருக்காங்க. தினமும் நானும் இந்த வேலைகளைக் கவனிச்சுக்குவேன். மேலும், தலா ஒரு சென்ட் நிலத்துல ரெண்டு மீன்குட்டை வெச்சிருக்கேன். அதில் 900 மீன்கள் இருக்கு. மக்களுக்கு விற்பனை செய்றது தவிர, வாரத்துல மூணு நாள் வீட்டில் மீன் குழம்புதான். என் பையனுக்கு கல்யாணமாகிடுச்சு. கூட்டுக் குடும்பமா மகிழ்ச்சியாக இருக்கோம். அந்த விபத்து நடக்காம இருந்திருந்தா, இந்த அழகான மாற்றங்கள் சாத்தியமில்லைனு பாசிட்டிவா எடுத்துக்கறேன்” என்பவர் நிறைவாக...

"70% காய்கறி, பழங்கள் என் தோட்டத்துலயே கிடைக்குது"-Dr.கமலா செல்வராஜின் இயற்கை விவசாயம்!

“வாழ்க்கையில் யாருக்கும் எதுவும் எப்போதும் நடக்கலாம். எது நடந்தாலும், ‘இப்படி ஆகிடுச்சே’ன்னு உட்கார்ந்திருந்தா வாழ்க்கையே இருண்டுபோயிடும். ‘இனி புதிய வாழ்க்கை; புதிய பயணம்’னு முடிவெடுத்து, எது நடந்தாலும், நம்பிக்கையுடன் சோர்வடையாம உழைக்கும் குணம் இருந்தால் போதும். பலருக்கும் முன்னுதாரணமான மனிதராக நாமும் மாற முடியும். நம்ம முயற்சிகளுக்குத் தோல்வி கிடைச்சாலும், அதை அனுபவமா எடுத்துகிட்டா புதிய பாதை நிச்சயம் தென்படும். அப்படித்தான் என் வாழ்க்கையும் மாறியிருக்கு” - நம்பிக்கையுடன் சிரிப்பவரின் முகத்தில் பூக்கிறது அர்த்தமுள்ள புன்னகை!

அடுத்த கட்டுரைக்கு