Published:Updated:

கொஞ்சம் புத்தகங்கள், கொஞ்சம் சித்த மருத்துவம் - பயணத்தோடு படிப்பினையும் தரும் நாகராஜ் ஆட்டோ..!

ஆட்டோ நாகராஜ்
News
ஆட்டோ நாகராஜ்

ஆசிரியர் பணியில் இருந்து, ஆட்டோ டிரைவராக மாறியுள்ள கோவை ஆட்டோ டிரைவர் நாகராஜ் என்பவரின் பேட்டி.

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு கனவு இருக்கும். ஒரு சிலருக்கு அந்தக் கனவு நிறைவேறிவிடும். ஒரு சிலருக்கு அது நிறைவேறாது. கஷ்டமோ, நஷ்டமோ கனவு நிறைவேறியவர்களுக்குப் பிடித்த விஷயத்தைச் செய்து கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி இருக்கும். ஆனால், கனவு நிறைவேறாதவர்கள், வாழ்வாதாரத்துக்காக வேறு ஒரு விஷயத்தை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ்.

ஆட்டோ நாகராஜ்
ஆட்டோ நாகராஜ்

எளிய குடும்பத்தில் பிறந்தாலும், பெரிய அதிகாரியாகி சாதிக்க வேண்டும் என்பதுதான் நாகராஜின் கனவு. சிவில் சர்வீஸ் தேர்வு, ஆசிரியர் பணி என்று அந்தக் கனவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தவர், வாழ்வில் அடுத்தடுத்து ஏற்பட்ட இழப்புகளாலும் பிரச்னைகளாலும் இப்போது கோவையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பரபரப்பான ஓர் காலை நேரத்தில் நாகராஜை சந்தித்தோம். ஆட்டோவில் ஆங்காங்கே சில புத்தகங்கள், பின்பகுதியில் சித்த மருத்துவ டிப்ஸ் என்று வித்தியாசம் காண்பித்தார். தொடர்ந்து நாகராஜிடம் பேசினோம், “ஒரு பெரிய அதிகாரியாகி, அடுத்தவங்களுக்கு வழிகாட்டியா இருக்கணும்னு நினைச்சேன். எனக்கு 13 வயசா இருக்கறப்ப அம்மா இறந்துட்டாங்க. அம்மா போன கொஞ்ச நாள்லயே, அப்பாவும் என்ன விட்டுட்டு போய்ட்டாரு.

ஆட்டோ நாகராஜ்
ஆட்டோ நாகராஜ்

அதனால, 9-ம் வகுப்பு வரைதான் படிக்க முடிஞ்சுது. அத்தை வீட்ல வளர்ந்தேன். என்னோட செலவுகளுக்காக வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். காலைல வேலை. சாயங்காலம் டியூசன். 10-ம் வகுப்பு, ப்ளஸ் 2, கல்லூரி எல்லாமே கரஸ்பாண்டன்ட்லதான் படிச்சேன். பி.காம் முடிச்சுருக்கேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதனும்னு நினைச்சேன். அதுக்காக சென்னை போனேன். அடுத்தவங்க சொல்லிக் கொடுக்கறதவிட, நானா புரிஞ்சுகிட்டு படிப்பேன். அதனால, எப்படியும் பாஸ் பண்ணிடுவேன்னு நினைச்சேன். என்னோட கேட்டகிரிப்படி, நாலு தடவைதான் எழுத முடியும். அந்த நாலு தடவையும் தோல்வி. சென்னைலயே ஒரு டுட்டோரியல் சென்டர்ல டீச்சரா இருந்தேன். ஹோட்டல் சாப்பாடு செட் ஆகல. உடம்பு சரியில்லாம, மீண்டும் கோவைக்கே வந்துட்டேன். இங்க வந்தப்பறமும் டீச்சிங்லயே தொடரலாம்னு முயற்சி பண்ணேன். எல்லா இடத்துலயும் சம்பளம் ரொம்ப கம்மியா சொன்னாங்க.

சித்த மருத்துவ குறிப்பு
சித்த மருத்துவ குறிப்பு

கொஞ்ச நாள் டியூசனும் எடுத்துப் பார்த்தேன். ஆனா, அதுல பெருசா சம்பாதிக்கல. அதுக்கப்பறம்தான் ஆட்டோ ஓட்டலாம்னு முடிவு செஞ்சேன்” என்று அவர் பேசிக்கொண்டிருந்தபோது, சாலையில் நடந்து வந்த ஒருவர் ஆட்டோவில் இருந்த சித்த மருத்துவ குறிப்புகள் குறித்து கேட்டார். அவருக்கு பதிலளித்துவிட்டு நாகராஜ் மீண்டும் தொடர்ந்தார்.

“கோவை வந்த கொஞ்ச காலத்துலயே திருமணம் ஆகிடுச்சு. வேற வழி இல்லாமாதான் ஆட்டோல கை வெச்சேன். ஆரம்பத்துல இந்தத் தொழில்பத்தி எனக்கு எதுமே தெரியாது. வாடகை பேசத் தெரியாது. பெட்ரோல், டீசல் விலை தினசரி ஏறிக்கிட்டே இருக்கு. ஆட்டோ மீட்டர் கொண்டு வந்து 8 வருஷம் ஆகுது. அதுல இருக்கற விலை, இப்ப இருக்கற விலையில பாதிகூட இல்ல. இப்ப இருக்கற டீசல் விலைக்கு, மீட்டர் கட்டணத்தை ரெண்டு மடங்கா உயர்த்தினாதான் கட்டுப்படியாகும்.

ஆட்டோ நாகராஜ்
ஆட்டோ நாகராஜ்

ஆனா, நான் ரொம்ப நாள் கம்மியான வாடகைக்குதான் ஓட்டிட்டு இருந்தேன். சின்ன வயசுல இருந்தே விவேகானந்தர் பத்தி படிப்பேன். அப்படியே சித்த மருத்துவம் பத்தியும் தேடித் தேடி படிச்சேன். இப்பவும் படிச்சுட்டு இருக்கேன். சித்த மருத்துவத்துல நிறைய விஷயங்கள் இருக்கு. நுணுக்கமா கவனிச்சா, நமக்கு அதுல எல்லாத்துக்குமே தீர்வும் இருக்கு.

அதனால, என் ஆட்டோவுக்குப் பின்னாடி எனக்கு தெரிஞ்ச சித்த மருத்துவ குறிப்புகளை எழுதி வைப்பேன். ஒரு தடவை, என்னை ஃபாலோ செஞ்சு வந்த ஒரு கார்காரங்க, சித்த மருத்துவம் பத்தி பெருமையா பேசி எனக்கு கைகொடுத்து பாராட்டினாங்க. இன்னொரு நாள், சித்த மருத்துவர் ஒருத்தங்க ரொம்ப தூரத்துக்கு என்ன ஃபாலோ செஞ்சு பாராட்டிட்டு போனாங்க.

ஆட்டோ நாகராஜ்
ஆட்டோ நாகராஜ்

நம்ம கனவு நிறைவேறலைங்கற ஒரு விஷயத்துக்காகவே நம்ம தோத்துட்டோம்னு அர்த்தம் இல்ல. கடைசிவரை நம்ம எந்த முயற்சியும் பண்ணாம இருந்தாதான் தோத்துட்டோம்னு அர்த்தம். உங்க கனவுகளுக்கு புது வடிவம் கொடுத்து, அத வேற மாதிரி செயல்படுத்துங்க. அதுல கிடைக்கற வெற்றியும் சந்தோஷத்த கொடுக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.