Published:Updated:

விகடனோடுதான் எங்கள் பயணம்!

ஆனந்த விகடன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்த விகடன்

ஆனந்த விகடன் வெளியான பிறகுதான் எனக்கும் வாசகர்களுக்கும் நிம்மதி.

சூரியனுக்கு முன்பாக உதயமாகி விடுகிறது பத்திரிகை முகவர்களின் அன்றாடம். வர்தா புயல், தெருக்களெங்கும் மழை நீர் சூழ்ந்த மழை வெள்ளம், தற்போது கொரோனா என அனைத்து இடர்களின்போதும் புத்தக வாசனையுடன்தான் பொழுதைத் தொடங்குகிறார்கள். அவர்களின் வாழ்க்கையை அவர்களின் வார்த்தைகளில் கேட்போம்.
பத்திரிகை
பத்திரிகை

அப்துல் மஜீத், ஆலந்தூர்ப் பகுதி முகவர், சென்னை: 40 வருடங்களாக அதிகாலை 3.30 மணிக்கு எழுந்துவிடுவேன். ‘பாயின்ட்டுக்கு’ வந்துசேர்ந்து இதழ்களையும், தினசரிகளையும் கடைக்காரர் களுக்கும், ஆக்கர்களுக்கும் தேவைக்கேற்ப பிரிச்சுக் கொடுப்பேன். கணக்கெல்லாம் பாத்துட்டு வேலையெல்லாம் முடிக்கறதுக்கு 1 மணி ஆகிடும். விகடனோட எல்லா இதழ்களையும் ஆரம்பத்துல இருந்தே பார்த்துட்டு வர்ற ஆள் நான். இப்போ திரும்பவும் விகடன் வந்தது ரொம்ப சந்தோஷம். இந்த வேலை செஞ்சுதான் என் மகனை MBA வரை படிக்க வச்சேன். பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக்குடுத்தேன்.

அப்துல் மஜீத், கந்தன், பாலகுமாரன்
அப்துல் மஜீத், கந்தன், பாலகுமாரன்

கந்தன், வளசரவாக்கம் பகுதி முகவர், சென்னை : 25 வருசமா விகடனுக்கும் எனக்குமான பந்தம் இருக்கு. லாக் டௌன் தொடங்கிய சில வாரங்கள் தொழில் சரியா போகல. கொஞ்சம் வருத்தமாதான் இருந்தது.ஆனா சிறிய இடைவேளைக்குப் பிறகு வந்த ஆனந்த விகடன், ஜீனியர் விகடன் இரண்டுமே நல்லா விற்பனையாகியிருக்கு.

விகடனோடுதான் எங்கள் பயணம்!

பாலகுமாரன், ஜங்சன் பகுதி முகவர், திருச்சி : எனக்கும் விகடனுக்குமான பந்தம் 30 ஆண்டுகளைக் கடந்து விட்டது. வாசகர்களின் மனம் அறிவதில் விகடன் கில்லாடி என்பதால்தான், எத்தனை சவால்கள் வந்தாலும் நிலைத்து நிற்கிறது. ஆனந்த விகடன் வெளியான பிறகுதான் எனக்கும் வாசகர்களுக்கும் நிம்மதி.

சிங்காரவேலு
சிங்காரவேலு

சிங்காரவேலு, லைன்மேன், தில்லை நகர், திருச்சி: பல வாசகர்கள் என்னிடம் ‘வீட்டில் முடங்கியிருப்பதில் கூட ஒன்றும் தெரியவில்லை. படிக்க விகடன் இல்லாமல் இருப்பது வெறுமையாக இருக்கிறது’ என்று சொன்னார்கள். இணை யதளத்தில் படித்தாலும் புத்தகத்தைக் கைகளால் புரட்டிப் படிப்பதுபோல் இல்லை என்றுதான் பலரும் சொன்னார்கள். 10 ஆண்டுகளாக விகடனுடன் பயணித்துவருகிறேன். ஒரு மாத இடைவெளி விட்டு மீண்டும் உற்சாகமாக எனது பயணத்தைத் தொடங்கி விட்டேன்.

கோவிந்தராஜு, மத்தியப்பகுதி முகவர், மதுரை : மூன்று தலைமுறையாகப் பத்திரிகை முகவர் தொழிலில் இருக்கிறோம். ஆரம்பக் காலத்திலிருந்து விகடன் குழும இதழ்களை விநியோகம் செய்து வருகிறோம். என் அனுபவத்தில் இந்தத் தொழிலில் இப்படியொரு நெருக்கடியான சூழலைச் சந்தித்ததில்லை. கலவரம், கடையடைப்பு, புயல், மழை என்று எந்த இடர் வந்தாலும் பத்திரிகை விநியோகத்தில் பிரச்னை இருந்ததே இல்லை. பொதுமக்கள், அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பத்திரிகைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். பொதுவாகவே எங்களைப் போன்ற பத்திரிகை முகவர்கள் இரவு பகல் பாராமல் உழைத்துப் பழகியவர்கள்தான். ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் நிறையவே பிரயத்தனப்பட வேண்டியிருக் கிறது. மதுரையில் பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதால், ஒவ்வோர் இடத்திலும் காவல்துறையினரிடம் விளக்கம் சொல்லிச் செல்ல வேண்டியிருக்கிறது. காலை 6 மணி முதல் 10 மணி வரைதான் பேப்பர் கடைகள், பெட்டிக் கடைகள் திறக்க அனுமதி அளித்திருக்கிறார்கள். அந்த நேரத்துக்குள் விநியோகத்தை முடிக்க வேண்டும். கடைகளில் வாசகர்கள் காத்திருந்து புத்தகங்களை வாங்கிச் செல்லும்போது, எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.

மணிகண்டன், கண்ணன்
மணிகண்டன், கண்ணன்

கோபி கிருஷ்ணன், அருண்குமார், லைன்மேன்கள், மதுரை: மாஸ்க் அணிந்துகொண்டு, சானிட்டைசரால் அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்து கொண்டுதான் செல்கிறோம். ஆனால், பல இடங்களில் காவல்துறையினரிடம் வசவு வாங்குகிறோம். நாங்கள் வீம்புக்கு வெளியில் செல்லவில்லை என்பதை காவல்துறையினர் புரிந்து கொண்டால் எங்களுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும்.

செல்வம், ஆர்.எஸ்.புரம் பகுதி முகவர், கோயம்புத்தூர்: கடந்த 33 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். இந்த ஊரடங்கு காலத்தில் எல்லோரும் வீட்டில் இருக்கும்போது, நாங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறோம். என் மகள் ‘இந்த நேரத்தில் வெளியே போக வேண்டாம்’ என்று சொல்லியும் என்னால், பத்திரிகைகள் சப்ளை செய்வதைச் சட்டென விட முடியவில்லை. என்னிடம் பணியாற்றுபவர்கள் யாரையும் வேலையை விட்டு அனுப்பவும் மனமில்லை. என் மனைவி, மகள், தம்பி, தம்பி மனைவி என அனைவரும் இந்த வேலையைச் செய்துகொண்டு இருக்கிறோம்.

கோவிந்தராஜூ,  கோபி கிருஷ்ணன்
கோவிந்தராஜூ, கோபி கிருஷ்ணன்

மணிகண்டன், லைன்மேன், கோயம்புத்தூர்: நான் 30 ஆண்டுகளாக லைன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மனம் தளராமல் இரவு 2 மணிக்கே எங்கள் பணிகளை ஆரம்பித்து விடுகிறோம்.

கண்ணன், லைன்மேன், கோயம்புத்தூர்: நான் 40 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். கோவை குண்டு வெடிப்பு சமயத்தில்கூட இப்படியொரு நெருக்கடியை நான் பார்த்ததில்லை. நெருக்கடி களைத் தாண்டி விகடன் குழும இதழ்கள் வெளிவருவது மகிழ்ச்சி!

செல்வி, அழகர்
செல்வி, அழகர்

செல்வி, முகவர், கரூர்: இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் பலர் தேடி வந்து புத்தகங்களை வாங்கும்போது எங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது.

அழகர், லைன்மேன், கரூர்: காவல்துறையினரின் கெடுபிடிகளைக் கடந்துதான் நாங்கள் புத்தகம் சப்ளை செய்ய வேண்டியிருக்கிறது.

அருண்குமார்,
அருண்குமார்,

ஸ்ரீராம், லைன்மேன், கரூர்: கரூர் ரெட் அலர்ட் மாவட்டமாக இருப்பதால், போலீஸ் நெருக்கடி அதிகமாக இருக்கிறது என்றாலும், விகடன் இதழ்களைச் சரியான நேரத்துக்கு விநியோகித்து வருகிறோம்.

ஸ்ரீராம், தினேஷ் சக்கரவர்த்தி
ஸ்ரீராம், தினேஷ் சக்கரவர்த்தி

தினேஷ் சக்கரவர்த்தி, முகவர், நாகர்கோவில்: என் தாத்தா ஆனந்த விகடன் ஏஜென்ட். அடுத்து என் அப்பா. இப்போது மூன்றாவது தலைமுறையான நான் விகடன் ஏஜென்டாக இருக்கிறேன். சுமார் 80 ஆண்டுகளாக நாங்கள் ஆனந்தவிகடனோடு இணைந்து பயணிக்கிறோம். புயல் வந்தாலும், வெள்ளம் வந்தாலும் இதுவரை ஆனந்தவிகடன் வராமல் இருந்ததில்லை. இப்போதுதான் முதன்முறையாக ஆனந்தவிகடன் இதழ்கள் அச்சாகாத நிலையை நான் பார்க்கிறேன். கடைகளுக்குச் செல்லும்போது, முன்னெச்சரிக்கையுடன் மாஸ்க், கிளவுஸ் அணிந்துதான் செல்கிறோம். விரைவில் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.