Published:Updated:

பாண்டிச்சேரியில் ஒரு ஆன்ட்டிக் கலெக்‌ஷன்... என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?!

’ஆன்ட்டிக்’ பொருள்கள்
’ஆன்ட்டிக்’ பொருள்கள்

"நம் முன்னோர்கள் பயன்படுத்திய அனைத்து வீட்டு உபயோகப் பொருள்களையும் அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்."

நம் முன்னோர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி, தற்போது வழக்கொழிந்துவிட்ட அரிய பொருள்களைத் தேடித் தேடி சேகரித்து பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் புதுச்சேரி சுகாதாரத்துறை ஊழியரான ஐயனார்.

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்கள் கடைப்பிடித்த வாழ்வியலையும், உணவு முறைகளையும் ஒதுக்கிவிட்டு புதுப்புது நோய்களுடன் நாகரிகச் சமூகமாக வளர்ந்து நிற்கிறோம். வழி வழியாக அவர்கள் கையாண்டு வந்த தமிழ் மருத்துவ முறைகளை அரைகுறையாக கேள்விப்பட்ட சிலர், பரம்பரை சித்த வைத்தியர்களாக மாறி லாட்ஜ் அறைகளில் லட்சங்களைக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் நமது வீடுகளில் இருந்து பழைய இரும்புக் கடைகளுக்கு தூக்கி வீசப்பட்ட உழக்கு, படி, மாகானி, மரக்கால், செப்புக் குடங்கள், வெண்கல தூக்குகள், உணவருந்தும் தட்டுகள், விளக்குகள் உள்ளிட்டவை ’ஆன்ட்டிக்’ பொருள்கள் என்ற பெயரில் நம்மிடமே விற்கப்படுகின்றன.

’ஆன்ட்டிக்’ பொருள்கள்
’ஆன்ட்டிக்’ பொருள்கள்

இப்படியான சூழலில்தான் தமிழகம் முழுக்க அலைந்து திரிந்து, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்களை சேகரித்து பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த 25 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார் புதுச்சேரி சுகாதாரத்துறை ஊழியரான ஐயனார். சுமார் 100 வருடங்களைக் கடந்த 1,000-க்கும் மேற்பட்ட பழைமையான கலைப் பொருள்களை லட்சக்கணக்கில் செலவு செய்து வாங்கி பாதுகாத்து வருகிறார். முன்னோர்களின் வாழ்வியல் முறையை தற்போதைய தலைமுறையினர் தெரிந்துகொள்வதற்காக சமீபத்தில் அனைத்து கலைப் பொருள்களையும் அடுக்கி வைத்திருந்தார் ஐயனார்.

ஐயனாரை அவரது இல்லத்தில் சந்தித்தோம். செப்பால் செய்யப்பட்ட டம்ளர்கள், கூஜாக்கள், பித்தளைத் தட்டுகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பாக்கு வெட்டிகள், தண்ணீர் குடிக்கும் சொம்புகள், குடுவைகள், தூக்குகள், வாலிகள், உணவருந்தும் கரண்டிகள், டீ பாய்லர்கள், வெத்தலை இடிக்கும் உரல், வெண்கலப் பேழைகள், பித்தளை தேங்காய் துருவம் கருவி, ராமர் விளக்கு, பித்தளை நாடா விளக்கு, குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள், தூபக்கால் என வரிசையாக அணிவகுத்து ஆச்சர்யமளிக்கின்றன. அவரிடம் பேசினோம்.

“நான் புதுச்சேரி சுகாதாரத்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுகிறேன். புராதன கலைப் பொருள்களை சேகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு சிறு வயதிலிருந்தே இருந்தது. இந்தக் கலைப் பொருள்கள் அனைத்தும் கடந்த 25 வருடங்களாக நான் சேகரித்தது.

’ஆன்ட்டிக்’ பொருள்கள்
’ஆன்ட்டிக்’ பொருள்கள்

நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தும் வெண்கலம், செப்பு மற்றும் பித்தளை உலோகங்களால் செய்யப்பட்டது. இன்றைய நவீன உலகத்தில் எவர்சில்வர் பாத்திரங்கள் வந்ததும், பழைய பொருள்களை நம் பரனைக்கு ஏறிவிட்டன. அதற்கடுத்து வந்த தலைமுறையினர் அவற்றை பழைய பொருள்கள் விற்கும் கடைகளுக்கு போட்டுவிட்டனர். தற்போது அந்தப் பொருள்களை பழைய கடைகளில் இருந்து விலைக்கு வாங்கி பாதுகாத்து வருகிறேன். தமிழகத்தில் இருக்கும் பழைய கடைகளை தேடிச்சென்று மீட்டு வருகிறேன். கிடைக்கும் விடுமுறை நாள்களில் பெரும்பகுதி இதற்காகவே செலவிடுகிறேன். நம் முன்னோர்கள் பயன்படுத்திய அனைத்து வீட்டு உபயோகப் பொருள்களையும் அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.

அந்த காலத்தில் இந்தப் பொருள்கள் அனைத்தையும் நம் வீட்டில் இருந்த பெண்கள் இயற்கை முறையில் மண், புளி, உப்பு போன்றவற்றை பயன்படுத்தி விலக்குவார்கள். நம் முன்னோர்கள் பித்தளை பாத்திரங்களில் ஈயம் பூசி பயன்படுத்தி நோய்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அதேபோல சாப்பாடு, பொறியல் உள்ளிட்டவற்றை செய்து வெண்கல உருளியில் வைத்து சுமார் 8 மணி நேரம் கழித்தும் சூடு குறையாமல் சாப்பிட்டிருக்கிறார்கள். காரைக்குடி கலைப்பொருள்கள், அளவீட்டுக்குப் பயன்படுத்திய படி, மாகானி, உழக்கு, மரக்கால் உள்ளிட்டவையும் சேகரித்து வைத்திருக்கிறேன். சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பயன்படுத்திய பொருள்கள் தற்போது என்னிடம் இருக்கின்றன. இந்த வீட்டில் என் குடும்பம் மட்டுமல்ல, 1,000 குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களின் ஆசியோடுதான் நான் வாழ்ந்து வருகிறேன்.

’ஆன்ட்டிக்’ பொருள்கள்
’ஆன்ட்டிக்’ பொருள்கள்

இளைய தலைமுறையினருக்கு நான் வைக்கும் ஒரே வேண்டுகோள் உங்கள் வீட்டில் தாத்தா, பாட்டி பயன்படுத்திய பொருள்களை பழைய கடைகளில் போட்டு விடாதீர்கள். அவர்கள் நம்முடன் வாழ்வார்கள் என்ற உணர்வுடன் அதனை பாதுகாத்து வையுங்கள். அவர்கள் கொடுத்த சொத்துகள், நகைகள், நிலங்கள் என அனைத்தையும் பாதுகாத்து வருகிறீர்கள். அதைப்போல அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் வைத்திருங்கள். நம் பாரம்பர்யத்தை மீட்டெடுப்போம். நமது தமிழ்ப் பாரம்பர்யத்தையும், நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் மீட்டெடுக்க முயல்கிறேன். என்னுடைய இந்த உழைப்பை பள்ளி மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்தும் விதமாக இவற்றை ஒரு கேலரியாக உருவாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு