Published:Updated:

``நான் செய்தால் மக்களும் செய்ய முன்வருவார்கள்!’’ - காய்கறி வாங்க 10 கி.மீ நடக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி

பிளாஸ்டிக் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட மூங்கில் கூடை கொண்டுசெல்ல அவர்களுக்குப் பரிந்துரைத்தேன். ஆனால், அவர்கள் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.

Ram Singh IAS
Ram Singh IAS

மேகாலயாவில் பணிபுரியும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வாரத்துக்கு ஒருமுறை தன் மனைவியுடன் 10.கி.மீ. நடந்துசென்று காய்கறி வாங்கிவருகிறார். இயற்கையான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கிய பாதையில் தனது பயணத்தைத் திருப்பியிருக்கிறார், அந்த அதிகாரி. அவரது பெயர் ராம்சிங். பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பதற்கும், வாகன மாசுபாட்டைக் குறைப்பதற்கும், உடலை வலிமையாக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சியானது மற்ற அதிகாரிகளுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

"போக்குவரத்து நெரிசல்கள், சுற்றுப்புற மாசுபடுதல் இவற்றால் மக்களிடம் பெரும் விரக்தியைக் காணமுடிந்தது"
- ராம் சிங் ஐ.ஏ.எஸ்

ராம்சிங் வாரம் ஒருமுறை 10 கி.மீ தூரம் மூங்கில் கூடையைத் தோள்களில் தொங்கவிட்டபடி நடந்தே சென்று உள்ளூர் சந்தைகளில் இயற்கையாக விளையும் காய்கறிகளை வாங்கிவருவதைப் பற்றி, கடந்த சனிக்கிழமை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்தப் புகைப்படம் வைரலானது.

பிளாஸ்டிக் பயன்பாட்டு விகிதத்தைக் குறைப்பது குறித்தும், இயற்கை உணவுகளின் மகத்துவத்தைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது, அவரது இன்ஸ்டாகிராம் பதிவு. இதன் மூலமாக மக்களைக் கவர்ந்துள்ளார் ராம் சிங்.

இம்முயற்சி குறித்துப் பேசும் ராம்சிங், ``அதிகளவில் காய்கறிகளை வாங்கிச் செல்வதன் சிரமங்களையும், போக்குவரத்து நெரிசல்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு எனப் பல்வேறு செயல்பாடுகளால் மக்களிடம் விரக்தியைக் காணமுடிந்தது. பலரும் இதுகுறித்து புகார் அளித்த நிலையில் அதற்கான மாற்றுவழியை அவர்கள் யோசிப்பதாகவோ, இதற்கான தீர்வு தங்களிடமே இருக்கிறது என்பதையும் அவர்கள் உணர்ந்ததாகத் தோன்றவில்லை. இதற்குச் சரியான தீர்வு, நான் நம்புவதை நான் செய்தால்தான் மக்களும் பின்பற்ற முன்வருவார்கள் என்பதுதான். அதனால் நானும் என் மனைவியும் வாரம் ஒருமுறை 10 கி.மீ. தூரம் நடந்தே சென்று காய்கறிகள் வாங்கி வருகிறோம். ஆறுமாதங்களாகத் தொடர்ந்து சென்றதால் தற்போது அது, பழக்கமாகிவிட்டது. தற்போது நான் மனதளவில் மிகத் திருப்தி அடைந்துள்ளேன்" என்றவர்,

Ram Singh IAS
Ram Singh IAS

``ஏராளமான காய்கறிகளைச் சுமந்துகொண்டு நடப்பது கடினம் என்று பலரும் சொன்னார்கள். பிளாஸ்டிக் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட மூங்கில் கூடை கொண்டுசெல்ல அவர்களுக்குப் பரிந்துரைத்தேன். ஆனால், அவர்கள் அதைக் கேட்டுச் சிரித்தார்கள். எனவே, நானும் என் மனைவியும் மூங்கில் கூடையைச் சுமந்து சந்தைக்குச் சென்றோம். அது பல வழிகளில் மிகவும் உதவியாக இருக்கும் என்று அப்போதுதான் நானே தெரிந்துகொண்டேன். இந்த நாள்களில் பல இளைஞர்கள் ஆரோக்கியமான உடல்நலத்துடன் இல்லை. அவர்கள் நடக்கத் தொடங்கி தங்கள் உணவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

நவீனமயமாக்கப்பட்ட உலகில் ஏற்படும் புதுப்புது சவால்களுக்குப் பாரம்பர்ய முறைதான் சிறந்த தீர்வுகளை அளிக்க முடியும் என்பதை ஆழமாக நம்புபவன் நான். ஒருவர் பாரம்பர்ய வழிமுறைகளைக் கையாளும் பட்சத்தில் முழு ஆரோக்கியத்துடன் திகழ முடியும்" என உற்சாகம் பொங்கக் கூறுகிறார் ராம் சிங் ஐ.ஏ.எஸ்