Published:Updated:

`தாத்தாவின் சவக்குழி; அப்பாவின் கடைசி வார்த்தை!'- மரணத்தைப் புன்னகையோடு வரவேற்ற மனிதர்கள் #MyVikatan

என் தாத்தா பழனி சாமியார் இறப்பதற்கு 48 மணிநேரம் முன்பு…

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நான், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பியூசி (PUC) படித்துக்கொண்டிருந்தபோது, முதல் மதிப்பெண் எடுத்ததற்காக, மரியோ பூசோ எழுதிய 'The God Father' நூல் பரிசாக வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் நாவல் படிக்கும் அளவுக்கு அப்போது எனக்குப் புலமை கிடையாது.

Book
Book

12 ஆண்டுகள் கழித்து, எம்.எஸ் படிக்கும்போதுதான் அதைப் படித்தேன். அந்த நாவலின் கதாநாயகன், டான் விடோ கர்லோன். அவர், தன் பேரனோடு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுவான். எரிக்கும் மஞ்சள் நிற வெயில் கண்ணைச் சுட, கடுமையான நெஞ்சு வலியோடு, தோட்டத்து மலர்களின் சுகந்தத்தை நுகர்ந்து கொண்டு, `வாழ்க்கை மிக அழகானது' என்று முணுமுணுத்துக் கொண்டே இறப்பான்.

'தி காட் ஃபாதர்' கதையின் கதாநாயகன், ‘டான்’ விடோ கர்லோன் நிழல் உலக தாதா. கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டிருந்த அவன், சாவை மனநிறைவோடு எதிர்கொள்வது புதிர் முரண். தான் செய்வது அனைத்தும் சரி என்ற அசைக்க முடியாத உறுதியும், அந்த அடிப்படையில் தன் வாழ்க்கைப் பயணத்தை சரிவர செய்துமுடித்துவிட்டதாக இருந்த மன நிறைவும், வாழ்க்கை என்பது முடியக்கூடியது என்ற புரிதலும், அவன் சாவைப் புன்னகையோடு எதிர்கொள்ளச்செய்தன.

Representational Image
Representational Image

என்னுடைய தாத்தா பழனி சாமியார் இறப்பதற்கு 48 மணிநேரம் முன்பு, தான் சாகப்போவதாகக் கூறி, குழி வெட்டச் சொல்லி விட்டார். குழி வெட்டுவதை அவரே மேற்பார்வையிட்டார். கடைசி சில மணி நேரங்கள், வீட்டில் அமைதியாக படுத்துக்கொண்டு "சமாதி செய்யும் வேலை முடிந்துவிட்டதா" என்று கேட்டுக்கொண்டிருந்தார். `சமாதி கட்டி முடிக்கப்பட்டுவிட்டது' என்ற தகவல் தெரிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில், இறந்து போனார். என் தாத்தா இறந்தபோது எனக்கு இரண்டு வயது. இந்தச் செய்தி என்னுடைய சித்தப்பாக்களும் மற்றவர்களும் சொன்னது.

என் தாத்தா பழனி சாமியார், தெய்வ நம்பிக்கை கொண்டவர். தான் வாழ்ந்த வாழ்க்கை, ஆன்மிக நெறிகளுக்கு உட்பட்ட வாழ்க்கை என்ற எண்ணமும் சாவுக்குப் பின்னர் இறைவனோடு கலந்துவிடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் அவரை புன்னகையோடு சாவை எதிர்கொள்ளச்செய்தன.

Representational Image
Representational Image

என் அப்பா, திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். பிற்காலத்தில் தினமும் கடவுளை வணங்குபவராக மாறினார். இருந்தாலும் மூடநம்பிக்கைகள் இல்லாதவர். ஒருமுறை சில உறவினர் பெண்கள், எங்கள் வீட்டில் ஆவிகளோடு பேசுவதாகக் கட்டம்போட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது, அதைக் காலால் எட்டி உதைத்தார்.

இறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்பாக, என்னை எங்கள் கழனி இருக்கும் மாக்கனூருக்கு அழைத்துச்சென்றார். எங்கள் வேளாண் நிலங்களின் எல்லைகளை விளக்கிச்சொன்னார். அந்த நிலங்களின் எல்லைகள் குறித்து இருந்த பிரச்னைகளையும், அந்தப் பிரச்னைகளை எப்படித் தீர்த்திருக்கிறார் என்பதையும் விளக்கினார். நான் தருமபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, வீட்டிலிருந்த என் அப்பாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

Representational Image
Representational Image

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ,தருமபுரி அரசு மருத்துவமனை சிறிய மாவட்ட மருத்துவமனை. உடனடியாக அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்து வரச் சொன்னேன். அப்பா வருவதற்குள்ளாக, என் நண்பர்களாக இருந்த மருத்துவர்கள் எல்லோருமே அங்கே திரண்டிருந்தார்கள். அப்பாவுக்கு ஈ.சி.ஜி எடுக்கப்பட்டது.

ஈ.சி.ஜி-யில், பெரிய மாரடைப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தன. உடனே, மருத்துவர் இளங்கோவன் அவரருகில் சென்று, `கவலைப்படாதீங்க சார். எதுவும் பிராப்ளம் இல்ல' என்று சொன்னார்.

ஒரு சிறிய புன்னகையோடு என் அப்பா, `எனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லைங்க சார். I have done all my jobs in this world. I am ready to go!' (இந்த உலகத்தில் நான் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றிவிட்டேன். நான் போவதற்குத் தயாராக இருக்கிறேன்)' என்று சொன்னார். அவர் உயிர் பிரிந்த போது, எங்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றது போன்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது.

Representational Image
Representational Image

மருத்துவர் ரகுநாதன், தருமபுரியின் மூத்த மருத்துவர்களில் ஒருவர். அவருடைய தந்தையார் சி.கே.சீனிவாச ராவ் தருமபுரியில் வழக்கறிஞராக இருந்தவர். ரகுநாதன், இனிமையான நண்பர். எப்போதும் புன்னகை தவழ்ந்த முகத்தோடு இருப்பார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தியைத் தன் நண்பர் என்றும் சொல்வார், சுனில் கவாஸ்கருடனும் பழக்கம் உண்டு என்றும் சொல்வார்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சிறுநீர் கழிப்பதில் தொல்லைகள் இருப்பதாகக் கூறி என்னிடம் வந்தார். அவருடைய புராஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடித்தேன். உடனடியாக மேல் பரிசோதனைகள் செய்யப்பட்டு, புற்றுநோய் உடலில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய், விரைவாகப் பரவக் கூடியது அல்ல. சில குறிப்பிட்ட வகை புராஸ்டேட் புற்றுநோய்கள் மட்டுமே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மற்றபடி, சாதாரண சிகிச்சையிலேயே அந்தப் புற்றுநோயைக் கட்டுப்படுத்தி விடலாம். ஆனால், இவருக்கு அந்த நோய் வேகமாக பரவத் தொடங்கியது. அறுவைசிகிச்சை, மருந்துகள் என்று அடுத்த அடுத்த கட்டங்களாக சிகிச்சைகள் தரப்பட்டன. மருந்துகள் உட்கொண்டபோதிலும் நோயின் தாக்குதல் கொஞ்சம் அதிகரிக்கத் தொடங்கியது.

Representational Image
Representational Image

இந்தச் சூழலில், ஒரு மாலைப்பொழுதில் என் மருத்துவமனைக்கு ரகுநாதன் வந்தார். " செந்தில், இந்தக் கடினமான மருந்துகளை உட்கொண்டு, அதன் பக்கவிளைவுகளைத் தாங்கிக்கொண்டு, நீண்ட நாள் வாழ விரும்பவில்லை. என் வாழ்க்கையை மனநிறைவோடு வாழ்ந்துவிட்டேன். என் குழந்தைகள் நல்ல நிலைக்கு ஆளாகிவிட்டார்கள். புற்றுநோய்க்கான சிகிச்சைகள் அனைத்தையும் இன்றோடு நிறுத்திவிடப்போகிறேன்" என்று தீர்மானமாகச் சொன்னார்.

புற்றுநோயாளிகள் இப்படித் திடீரென்று மருத்துவத்தை நிறுத்துவதையும், பிறகு வேறு ஒரு சிகிச்சை முறையை, சித்த மருத்துவம் அல்லது ஆயுர்வேத மருத்துவம் போன்ற மாற்று சிகிச்சைகளை நோக்கி முயல்வதையும், மீண்டும் நவீன மருத்துவ சிகிச்சைக்குத் திரும்பிவருவதையும் பலமுறை பார்த்திருக்கிறேன்.

Representational Image
Representational Image

ஆனால், ரகுநாதன் அன்றிலிருந்து தன் முடிவை மாற்றிக் கொள்ளவே இல்லை. வலிக்கான அவசிய மருந்துகளை மட்டும் பயன்படுத்தினார். கடந்த சில வாரங்களாக அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. உணவு உட்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டது. தன் மனைவியையும் மகனையும் அழைத்து, ஒருவேளை தான் நினைவிழந்தால் எந்தவித நவீன மருத்துவ சிகிச்சையும் அளிக்கக் கூடாது என்ற உறுதியையும், தான் உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டால், குழாய் மூலமாகவோ அல்லது ஊசி மூலமாகவோ உணவோ அல்லது குளுக்கோஸோ ஏற்றக் கூடாது என்கிற உறுதியையும் பெற்றுக்கொண்டார்.

அவருடைய மனைவியிடம், "உங்கள் கணவரின் மன உறுதி வியக்கவைக்கிறது" என்று சொன்னபோது, அவர் ஒரு சிறிய புன்னகையோடு "எங்களுடைய மன உறுதி புரியவில்லையா டாக்டர்?" என்று சொன்னார்.

Representational Image
Representational Image

31.12.2019 அன்று அவரைப் பார்த்தபோது, மிகுந்த உடல் சோர்வோடு இருந்தார். உணவை விழுங்கக்கூட முடியவில்லை. அரை மயக்கநிலையில் இருந்த அவரை அவர் மனைவி எழுப்பி, "டாக்டர் செந்தில் வந்திருக்கிறார். புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லுங்கள்" என்று சொன்னபோது, 'ஹேப்பி நியூ இயர்' என்று அவர் உதடுகள் அசைந்தன. 1.1.2020 இங்கிலாந்தில் வாழும் அவருடைய மகள் புத்தாண்டு வாழ்த்துகள் கூறியபோது, "இது நான் உன்னோடு பேசும் கடைசிப் பேச்சு" என்று சொன்னார். 2.1.2020 அன்று, அவருடைய பாசமிகு மனைவியும் மகனும் உடன் இருக்க, அமைதியாக உயிர் பிரிந்தது.

வாழ்க்கை குறித்த தத்துவப் பார்வை ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். மனித விலங்கின் ஆறாவது அறிவு, வாழ்க்கையைப் பற்றிய தேடலை அவன் மனத்தில் உருவாக்குகிறது. அந்தத் தேடலின் அடிப்படையில், ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கைக்கான சில கோட்பாடுகளையும் கொள்கைகளையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

Representational Image
Representational Image

பணம், புகழ், மது, மாது என்ற போதைகளைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கும் மனிதன், சாவைக் கண்டு அஞ்சுபவனாக இருக்கிறான். பணத்தின் மூலம் பாசமுள்ள உறவுகள் கிடைக்கும், பணத்தின் மூலம் கிடைக்கும் வசதிகள் கவலைகளை மறக்கடிக்கச் செய்யும் என்று நினைத்து, அபரிதமான வசதிகளோடு வாழ்கிற மனிதனைவிட, எளிமையான வாழ்க்கையில், தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் உள்ளார்ந்த அன்போடு நேசிக்கும் மனிதனின் வாழ்க்கை இனிக்கிறது.

சாவு என்பது இயற்கையின் நியதி என்பதை ஏற்றுக்கொண்டு, சாவை புன்னகையோடு வரவேற்க முடிகிறது. பணத்துக்காக அனைத்தையும் இழக்கும் மனிதர்கள், வாழ்க்கையையும் இழக்கிறார்கள். இறப்பே கிடையாது என்பதுபோல பொருளைத் தேடும் மனிதர்கள், பொருளே இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து, சாவைக் கண்டு அஞ்சி, வாழ்க்கையிலும் சாவிலும் தோல்வி காணுகிறார்கள்.

Representational Image
Representational Image

என் தந்தையின் கல்லறையில், என் தந்தை பலமுறை என்னிடம் சொன்ன, சுவாமி விவேகானந்தரின் பின்வரும் வாசகத்தைப் பொறித்திருக்கிறேன்:

"They only live who live for others

The rest are more dead than alive"

`மற்றவர்களுக்காக வாழ்பவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள். மற்றவர்கள், வாழும்போதே இறந்தவர்கள் போலத்தான்.'

-மருத்துவர். இரா. செந்தில்

(தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மேனாள் உறுப்பினர்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/