Published:Updated:

`அவரின் தன்னலமற்ற சேவை மதிக்கத்தக்கது!' -முகமது கைஃப் பாராட்டிய ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாள்

கமலாத்தாள் பாட்டி
கமலாத்தாள் பாட்டி

85 வயதான இவர் கடந்த 30 வருடங்களாக, மிகக்குறைந்த விலைக்கு இட்லி விற்று மக்களின் பசியைத் தீர்த்து வருகிறார்.

கொரோனா மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெருமளவு பாதித்துள்ளது. பொருள்கள் விலையேற்றம், வேலையின்மை போன்ற பிரச்னைகளால் மக்கள் உணவுக்கே அல்லாடும் சூழல் உருவாகியுள்ளது. அரசு கொடுத்த பொருள்கள் போதுமானதாக இல்லாததால் கொரோனாவைவிட கொடிய நோயாகப் பசி உருவெடுத்துள்ளது. சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்களுக்கு உதவ தன்னார்வர்கள் முன்வந்தனர். ஆனால், அவர்களுக்கு அரசு விதித்த கெடுபிடிகளால் பலர் விலகிகொள்ள, சிரமம் என்னவோ ஏழை எளிய மக்களுக்கே.

கமலாத்தாள் பாட்டி
கமலாத்தாள் பாட்டி

இந்தச் சூழலிலும் தனது வழக்கமான பாணியில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார் கோவையைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டி.

85 வயதான இவர் கடந்த 30 வருடங்களாக, மிகக்குறைந்த விலைக்கு இட்லி விற்று மக்களின் பசியைத் தீர்த்து வருகிறார். இதன்மூலம் பலரின் மனதிலும் இடம் பிடித்த கமலாத்தாள் பாட்டி, கொரோனா நேரத்திலும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று, தனது சேவையைத் தொடர்ந்து வருகிறார்.

இது குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த கமலாத்தாள் பாட்டி ``ஊரடங்கு காரணமாகப் பேரனுக்கு வேலை இல்லை. சமையல் பொருள்கள் விலையும் ஏறிபோச்சு. இதனால, தொடர்ந்து ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பது சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் கஷ்டப்பட்டாலும் ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன். சிலருக்கு இலவசமாகவும் கொடுக்கிறேன். இன்னும் எத்தனை வருஷமானாலும் ஒரு ரூபாய்க்குத்தான் இட்லி விற்பேன்'' என்று கூறியுள்ளார். அதைப் பார்த்த பலரும், பாட்டிக்கு உதவ முன்வந்தனர்.

இந்தக் கடினமான சூழலிலும்கூட ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டியை பலரும் வாழ்த்தி வந்த சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியதால், சமூக ஊடகத்தில் பிரபலமாகி வருகிறார் கமலாத்தாள் பாட்டி.

முகமது கைஃப் பதிவில், `ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் 85 வயது கமாலாத்தாள் பாட்டி பாராட்டுக்குரியவர். இந்த முதுமையிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பதுடன், வெளிமாநிலத்தவர் பலருக்கும் உணவளித்து வருகிறார். அவரின் இந்தத் தன்னலமற்ற சேவை மதிக்கத்தக்கது. மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் கமலாத்தாள் பாட்டி போற்றுதலுக்கு உரியவர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு