Published:Updated:

Motivation Story: திடீரெனப் பறிபோன பார்வை - மீண்டெழுந்து உலகையே மாற்றிவரும் லிண்டா குரூஸ்!

லிண்டா குரூஸ் ( linked.in )

'கடவுளே... எனக்குப் பார்வை திரும்பக் கிடைக்க வேண்டும். நான் வாழ்கிற இந்த வாழ்க்கைக்கான அர்த்தம் எனக்குப் புரிய வேண்டும். அதற்காக என் மீதி நாள்களை நான் கடத்த வேண்டும். பார்வை கிடைக்குமா?’ லிண்டா அப்படியே கண்களை மூடி அமர்ந்திருந்தார்.

Motivation Story: திடீரெனப் பறிபோன பார்வை - மீண்டெழுந்து உலகையே மாற்றிவரும் லிண்டா குரூஸ்!

'கடவுளே... எனக்குப் பார்வை திரும்பக் கிடைக்க வேண்டும். நான் வாழ்கிற இந்த வாழ்க்கைக்கான அர்த்தம் எனக்குப் புரிய வேண்டும். அதற்காக என் மீதி நாள்களை நான் கடத்த வேண்டும். பார்வை கிடைக்குமா?’ லிண்டா அப்படியே கண்களை மூடி அமர்ந்திருந்தார்.

Published:Updated:
லிண்டா குரூஸ் ( linked.in )
"உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையா... பரவாயில்லை. ஒரே ஒருவருக்கு உணவளியுங்கள்!"
அன்னை தெரசா
குளிர்காலம். கறுப்பு மைபோல இருட்டு அப்பிக்கிடந்த இரவு. மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. அந்த நெடுஞ்சாலையில் ஒற்றை மனுஷியாக காரைச் செலுத்திக்கொண்டிருந்தார் லிண்டா குரூஸ் (Linda Cruse). 'எவ்வளவு விரைவாக வீட்டுக்குப் போகிறோமோ அவ்வளவு நல்லது. பிள்ளைகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்களோ... சாப்பிட்டார்களா, இல்லையா என்பது தெரியவில்லை...’ இப்படி மனம் அசைபோட்டுக்கொண்டிருக்க, அவருக்கு அன்று நடந்தது துயரம்!

சாலையில் அவரின் காருக்கு முன்னாலோ பின்னாலோ எந்த வாகனமும் இல்லை. அச்சமூட்டும் அமைதி. சாலை, கார் 'விர்ர்...’ என்று வீட்டை நோக்கிப் பறந்துகொண்டிருக்க, திடீரென்று அது நிகழ்ந்தது. அவருக்கு முன்னால் எல்லாமே இருட்டாகிப் போன்றது போன்ற ஓர் உணர்வு. அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. அதாவது, அவருடைய கண் பார்வை பறிபோயிருந்தது. வெளியேயும், காருக்கு உள்ளேயும் எதுவும் தெரியவில்லை. ஒரே இருட்டு. ஒரு மனுஷிக்கு எப்படியிருக்கும்? லிண்டா கொஞ்சம் தைரியமான பெண்மணி. பதற்றத்தைக் குறைத்துக்கொண்டார். முதல் வேலையாக காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

லிண்டா குரூஸ்
லிண்டா குரூஸ்

'இப்போது என்ன செய்வது?’ அவருக்குப் புரியவில்லை. அது 1996-ம் ஆண்டு. செல்போன்கள் அதிகம் புழக்கத்துக்கு வராத காலம். 'பக்கத்தில் எங்கேயாவது போன் பூத் இருக்குமா. இருந்தாலும், எப்படிப்போவது... சாலையில் நின்று வரும் வாகன ஓட்டி யாரிடமாவது கை காட்டி உதவி கேட்கலாமா... கேட்கலாம்தான். வேகமாக வருகிற வாகனம், மோதி தூக்கியெறிந்துவிட்டுப் போனால் என்ன செய்வது?’ லிண்டா குரூஸ் அப்படியே காரில் கண்ணை மூடி அமர்ந்திருந்தார். 'கடவுளே... எனக்குப் பார்வை திரும்பக் கிடைக்க வேண்டும். நான் வாழ்கிற இந்த வாழ்க்கைக்கான அர்த்தம் எனக்குப் புரிய வேண்டும். அதற்காக என் மீதி நாள்களை நான் கடத்த வேண்டும். பார்வை கிடைக்குமா?’ லிண்டா அப்படியே கண்களை மூடி அமர்ந்திருந்தார். இரண்டு மணி நேரம் கழித்து மெல்லக் கண்களைத் திறந்தார். காரின் டாஷ்போர்டு தெரிந்தது. ஸ்டீயரிங் தெரிந்தது. காரின் முன்பக்கக் கண்ணாடிக்கு அருகில் தொங்கும் டெடிபியர் பொம்மை லேசாக ஆடுவது தெரிந்தது. சாலை தெரிந்தது. தூரத்தில் எங்கோ `மினுக் மினுக்’ என எரியும் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி காரை ஸ்டார்ட் செய்தார் லிண்டா.

பிறகு, மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்தபோது, அன்றைக்கு அவருக்கு நிகழ்ந்தது தற்காலிகப் பார்வை இழப்பு என்பது தெரிந்தது. மருத்துவர்கள், 'ஹிஸ்டீரிக்கல் பிளைண்ட்னெஸ்’ (Hysterical Blindness), 'ஸ்ட்ரெஸ் பிளைண்ட்னெஸ்’ (Stress Blindness) என்று என்னென்னவோ பெயர் சொன்னார்கள். சுருக்கமாக, மன அழுத்தத்தால் அவருக்குப் பார்வை பறிபோயிருந்தது.

பிரிட்டனைப் பூர்வீகமாகக்கொண்டவர் லிண்டா. இருபதுகளிலேயே திருமணம். இரண்டு குழந்தைகள். கணவருடன் பிணக்கு. திருமண வாழ்க்கை முடிவுக்கு வர, ஒற்றைத் தாயாக குழந்தைகளை வளர்த்துவந்தார். அவர் ஒரு நர்ஸ். நைட் டூட்டி, பகல் டூட்டி என்று வாழ்க்கை போரடித்துப் போக, வேறு வேலை ஏதாவது கிடைக்குமா என்று தேடத் தொடங்கினார். அப்போதுதான் ஒரு கம்பெனி அறிவித்த விளம்பரத்தைப் பார்த்தார். அந்த நிறுவனமும் நர்ஸுகளைத்தான் தேடிக்கொண்டிருந்தது.

லிண்டா குரூஸ்
லிண்டா குரூஸ்

அது ஒரு பார்மசூட்டிக்கல்ஸ் கம்பெனி. அதில் சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் வேலை. அந்த வேலையில் சேர்ந்தார் லிண்டா. கம்பெனி கொடுத்த கார், கைநிறைய சம்பளம், விடுமுறை நாள்கள்... முக்கியமாக நைட் டூட்டி இல்லை. ஆனாலும், மனதளவில் அவருக்கு அந்த வேலை பிடித்தமானதாக இல்லை. ஆனால், அந்த வேலையில் கிடைத்த வருமானம் அபரிமிதமாக இருந்தது. ஒரு வீட்டுக்கு, இரண்டு குழந்தைகளின் கல்வி, இதர செலவுகளுக்கு தாராளமாக இருந்தது அந்தச் சம்பளம். ஓர் இரவில் அவருடைய பார்வை பறிபோன சம்பவத்துக்குப் பிறகு அந்த வேலையை உதறித்தள்ளினார் லிண்டா. அதுவரை எந்த விஷயத்தையும் நெகட்டிவாகவே சிந்தித்துப் பழகியிருந்தவர், பாசிட்டிவ் பாதைக்கு மாறினார். உலகில் எத்தனையோ பேருக்கு உதவி தேவைப்படுகிறது. அவர்களுக்கு உதவி செய்தால் என்ன... அவ்வளவுதான். உடனே கிளம்பிவிட்டார். அவருடைய பணியை 'சமூக சேவகர்’, 'சமூகச் செயற்பாட்டாளர்’ என எப்படி வேண்டுமானலும் வரையறுத்துக்கொள்ளலாம். 'உதவி தேவைப்படும் மனிதர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’ இதுதான் அப்போது அவருடைய லட்சியமாக இருந்தது.

அவர் செய்ததெல்லாம் சிம்பிள். குடும்பத்தை விட்டார். தனக்கு உடைமை என்று இருந்த பொருள்களையெல்லாம் விற்றார். பிள்ளைகளிடம் சொல்லிக்கொண்டு வீட்டைவிட்டுக் கிளம்பினார். அப்போது அவருக்கு வயது 40. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரிட்டனில் இருக்கும் பிரிஸ்டோலில் (Bristol) வசிக்கும் தன் பிள்ளைகளைப் பார்க்க வருவார். உடனே கிளம்பிவிடுவார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள்... தேய்ந்துபோன ஒரு நீல நிற சூட்கேஸ்... அதில் உடைமையென்று சொல்லிக்கொள்ள சில ஆடைகளும், அத்தியாவசியப் பொருள்களும். 40 நாடுகளுக்கும் மேல் பயணம் செய்திருப்பார் லிண்டா.

நர்ஸாக வேலை பார்த்திருந்த அவருடைய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது. தெற்கு சீனாவில் தன்னார்வலராக, ஓர் ஆசிரியராக வேலை. பிறகு எங்கெல்லாம் உதவி தேவைப்படும் என்று தோன்றுகிறதோ அந்த நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்தார். இயற்கைப் பேரிடர் நிகழும் இடங்களிலெல்லாம் முதல் ஆளாக உதவிக்கு ஓடினார் லிண்டா. நேபாளத்தில் நிலநடுக்கம், சுனாமியின்போது தாய்லாந்து, பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த இரண்டு புயல்கள், பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பம்... எல்லாவற்றுக்கும் வரிந்துகட்டிக்கொண்டு ஓடினார். தன்னால் இயன்ற உதவிகளை அந்த மக்களுக்குச் செய்தார். திபெத்தில் அகதிகள் முகாமில் அவர் தங்கியிருந்து பணியாற்றிய அனுபவம் அலாதியானது. சில நிறுவனங்களோடு தொடர்புகொண்டு, பல திபெத்தியர்களுக்கு வேலை கிடைக்க வழி செய்திருக்கிறார் லிண்டா. இந்தியாவின் இமாலயப் பனியை நுகர்ந்தது முதல், சகாரா பாலைவனத்தில் தாகத்தோடு அலைந்த நாள்கள் வரை அவர் பட்ட இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நேபாளத்தில் ஆயுதம் தாங்கிய ஒரு கும்பலிடமிருந்து துப்பாக்கிமுனையில் தப்பித்த அனுபவம், இலங்கையில் ஒரு ரயிலில் பயணம் செய்தபோது, தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய வந்தவர்களிடமிருந்து மீண்டது என விரிகிறது அவருடைய போராட்ட வரலாறு. அந்த அனுபவங்களையெல்லாம் தன்னுடைய `Marmalade and Machine Guns’ என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். அந்த சேவைகளின்போது அவருக்கு அறிமுகமான தலாய் லாமா, பிரிட்டன் தொழிலதிபர் ரிச்சர்டு பிரான்சன், இளவரசர் சார்லஸ் ஆகியோருடன் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்களையும் நினைவுகூர்ந்திருக்கிறார்.

லிண்டா குரூஸ்
லிண்டா குரூஸ்
இன்றைக்கு உலகம் முழுக்கப் பல நாடுகளுக்குச் சென்று நேர்மறை எண்ணங்களை விதைக்கும் சொற்பொழிவுகளை நிகழ்த்திவருகிறார் லிண்டா குரூஸ். பிறருக்காக இரங்குவதும், வாழ்வதும் எளிதில் யாருக்குமே கிடைக்காத வரம். அந்த வரம், லிண்டா குரூஸுக்கு வாய்த்திருக்கிறது. வரம் வாய்த்தாலும், அதைச் செயல்படுத்த அவரைப் போன்ற உறுதியான மனம் வாய்க்க வேண்டும். லிண்டா சொல்வதெல்லாம் ஒன்றுதான்.
"நாளையே நான் கொல்லப்பட்டாலும், அதற்காக நான் ஒரு துளிகூட வருத்தப்பட மாட்டேன். நான் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன்!’’ மறுக்க முடியாத உண்மை.