Election bannerElection banner
Published:Updated:

தோனி, ஏன் ஜோகிந்தர் ஷர்மாவை நம்பினார்?! எல்லோரும் இன்புற்றிருக்க! #MorningMotivation

தோனி, ஜோகிந்தர் ஷர்மா
தோனி, ஜோகிந்தர் ஷர்மா

“நம் மீது நமக்கிருக்கும் தன்னம்பிக்கை மாத்திரம்தான் நம்மை இயங்க வைக்குமா?”

கிரிக்கெட்டை கொண்டாடும் இந்தியர்களால் மறக்க முடியாத நாள் 24-9-2007. முழுமையான 50 ஓவர் மேட்ச் என்பது மாறி 20 ஓவர் என்ற புதிய ஃபார்மேட்டுக்கான முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அது. அந்த பரபரநாளின் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டனவர்கள் இந்தியாவும், பாகிஸ்தானும். இந்தியா வெர்சஸ் பாகிஸ்தான் என்றால் சாதாரண மேட்சில்கூட அணியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். அதுவும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி, புத்தம் புதிய 20 ஓவர் உலக கோப்பை எனும் போது எதிர்பார்ப்புகளும் பன்மடங்காகயிருந்தன.

மேட்சின் பாதியில் வெற்றி வாய்ப்பு பாகிஸ்தானின் பக்கம் சரிந்திருந்தது. எஞ்சியிருந்த கடைசி ஒரு ஓவர் கேம் சேஞ்சராக மாறலாம் என்கிற நிலை. கடைசி ஓவரை யாரைப் போடச் சொல்வார் தோனி? அனேகமாக பந்து அனுபவம் மிக்க ஹர்பஜன் கைக்குத்தான் போகும் எனப் பலரும் நினைத்தபோது ஹர்பஜனுக்குப் பதிலாக அவரைவிட அனுபவம் குறைந்த ஜோகிந்தர் ஷர்மாவின் வசம் போனது வாய்ப்பு.

ஜோகிந்தர் ஷர்மா
ஜோகிந்தர் ஷர்மா

ஜோகிந்தரின் கைகளுக்குள் போன பந்து என்ன செய்தது, அவரது பந்து வீச்சு எப்படி இருந்தது, மற்றும் அந்த ஓவரில் நடந்தது என The rest is history என்பதைப் போல அவை அனைத்தும் வரலாறு! இதெல்லாம் என்ன புதுசா எங்களுக்கு? எங்களுக்கும் இதைப்பற்றி எல்லாம் நன்றாகத் தெரியுமே என நினைக்கலாம்.

இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது பற்றி பலரும் சொன்னது போக ஜோகிந்தர் சொன்னதுதான் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கான பதில்.

“எனக்குப் பதிலாக பந்து போடும் இடத்தில் அன்று ஹர்பஜனுமிருந்தார். அவரிடம்தான் கடைசி ஓவர் ஒப்படைக்கப்படும் என நானும் நினைத்தேன். ஆனால் மஹி என் கையில் பந்தைக் கொடுத்தவுடன் கடைசி ஓவரை வீசப் போகிறோம் என்ற அழுத்தம் கூடியதை விட அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வுதான் அதிகரித்தது.

தோனி
தோனி

சொல்லப்போனால் உலகக் கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் என் மீது மஹி வைத்திருந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற உத்வேகம்தான் அதிகப் பொறுப்புணர்வுடன் பந்துகளை வீச வைத்தது. உலகக் கோப்பையை ஜெயித்ததுடன், என் மீது அவர் வைத்த நம்பிக்கையை காப்பாற்றியதுமாக இரட்டிப்பு மகிழ்ச்சி” என இந்த அனுபவத்தைப் பின்னர் தனது பேட்டியில் சொல்லியிருந்தார் ஜோகிந்தர்.

நண்பர்களே நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை மாத்திரமல்ல நம்மை சுற்றி இருப்பவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் வெற்றி இலக்கை நோக்கி நம்மை முன்நகர்த்தும்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு