Published:Updated:

``உன் சேட்டைக்கு இல்லையாம்மா ஒரு எண்டு..!" - அம்மா எழுதும் மகள் புராணம் #MyVikatan

Representational Image
Representational Image

மற்றொருமுறை அவளுக்கு எழுதப் பழக்கிய போது, Straight line என்று வரைந்து காட்டினேன், `அச்சச்சோ அம்மா, lion இப்படி இருக்காது’ என்று தன் கதை புத்தகத்திலிருந்து சிங்கத்தைக் காட்டினாள்.

நம் எல்லோருக்கும் நம் குழந்தைகள் என்றால் பொன் குஞ்சுகள் தான். அதுவும் பெண் குழந்தை என்றால் கூடுதல் மகிழ்ச்சி, கொண்டாட்டம். எங்களுக்கு பிறந்தது தங்க மீன்தான். அவள் பிறந்தது முதல் இப்போது வரை எத்தனை எத்தனை மகிழ்ச்சியான தருணங்கள்! அதில் சிலவற்றை உங்களுக்கும் சொல்கிறேன். வாருங்கள்.

என் மகள் மழலையாக இருந்தபோதே, ரொம்ப அமைதியானவள்... தூங்கும்போது மட்டும். அவளின் குரலும் கீச்'ன்னுதான் இருக்கும். பெரியவளாகி கீச்சுலக பிரபலம் ஆகிவிடுவாள் போல! நான் எவ்வளவு பக்கத்தில் இருந்தாலும் "அம்மாஆஆ ஆ" - என்று குரல் உயர்த்தித்தான் கூப்பிடுவாள்.

Representational Image
Representational Image

ரெண்டு வயதாக இருக்கும்போதே, அடிக்கடி எனக்கு `பல்பு’ கொடுப்பாள். ஒருமுறை வெறும் கையைக் கொடுத்து சாக்லேட் சாப்பிடு என்றாள். சரி என்று நானும் சாப்பிடுவது போல் நடித்தேன். உடனே அதிர்ச்சி குரலில், "அய்யய்யே, பேப்பர் பிரிக்காமே சாப்பிட்றியே மா" என்றாள். மற்றொருமுறை அவளுக்கு எழுதப் பழக்கியபோது, Straight line என்று வரைந்து காட்டினேன், `அச்சச்சோ அம்மா, lion இப்படி இருக்காது’ என்று தன் கதை புத்தகத்திலிருந்து சிங்கத்தைக் காட்டினாள்.

சளி பிடித்தால் சாப்பிடும்போது உணவைத் துப்பிவிடுவாள். ``ஏன் பாப்பா இப்படி சாப்டதெல்லாம் வாமிட் பண்ற’’ என நான் செல்லமாகக் கடிந்துகொள்வேன். ஒருமுறை அவளுக்கு குளிப்பாட்டி விடும்போது, திடீரென கோபமாக, ``குழாய் வாமிட் பண்ணுது, அந்தத் தண்ணிய ஏம்மா எம்மேல ஊத்தரே" என்றாள் கண்கள் சிவக்க. இன்னொரு சமயம், "என் கையில தடவிய ஓடோமாஸ் கிரீமை, கொசு சாப்பிட்டு, என் கையிலயே வாமிட் பண்ணிடுச்சுன்னா? உவ்வே" என்றாள் சீரியசாக.

Representational Image
Representational Image

எந்தக் கதையைச் சொன்னாலும், அவள் கண்களை அகல விரித்து விதவிதமான பாவங்களோடு கேட்கும் அழகே சொல்லிவிடும், அவள் இதையெல்லாம் மனதில் கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று. கதை சொல்லும்போது "அம்மா, என்னை அங்கே அழைச்சிட்டு போம்மா"- என்று சொல்வாள். "அது வெறும் கதை மா" என்றால், "அந்தக் கதைக்குதான் என்னை அழைச்சிட்டுப் போ மா" என்பாள். `கதை சொல்லலாம், கதைன்னா என்னன்னு எப்படி சொல்றது’’ என்று செய்வதறியாது நான் விழித்த நாள்கள் அதிகம்.

மகளுக்கு ஒரு வயதிலிருந்தே புராண இதிகாச கதைகளைச் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். அதன் விளைவு மிக ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. ஒருமுறை சுழல் நாற்காலியில் விளையாடிக்கொண்டிருந்த மகளிடம் "சாப்பிட்டுட்டு விளையாடிக்கோம்மா" என்றால், "இரும்மா, பிள்ளையார் மாதிரி மூணுதடவ சுத்திட்டு அப்புறம் வரேன்" என்று சொன்னாள் க்யூட்டாக.

Representational Image
Representational Image

இன்னொரு சமயம் "டேபுள் மேல ஏறி விழுந்து மண்டைய ஒடெச்சுக்காதடி" என்று சொன்னதற்கு, அவள் "அப்ப, பிள்ளையார் மாதிரி யானைத் தலைய எனக்கு வெச்சிடு" என்றாள். மற்றொருமுறை வீட்டுச் சுவரில் இருக்கும் air crackஐப் பார்த்து, "நம்ம வீட்டுக்கு நரசிம்மர் வந்துட்டு போய்ட்டாரா?" என்றாள் ஏமாற்றமான முகத்தை வைத்துக்கொண்டு. அடுத்த நாள் டி.வியில் இரண்யகசிபு கடவுளைப் பார்த்து இரண்டுகையையும் மேலே நீட்டி அந்தப் பெரிய வரத்தைக் கேட்கிறான். இவள் "இவ்ளோ பெரியவரா இருக்கார்... ஆனா சாமி கிட்ட போய், தன்னை தூக்கிகோன்னு சொல்றாரேம்மா" என்று கூறினாள் பாவமாக.

இன்னொரு முறை கதை சொல்லும்போது "பார்வதி நல்ல புத்தி வரட்டும்னு பழத்தை பிள்ளையாருக்குக் கொடுத்தார்" என்று நான் சொல்ல "அப்போ அவருக்கு புத்தி இருக்கலையா" என்றாள். (அவ்வ்). மற்றொரு சமயம் "ராவணனுக்குப் பத்துத் தலை"ன்னு கதை சொன்னால், "ஒண்ணு ரியல், மத்தது மாஸ்க் தானேம்மா" என்றாள். நானெல்லாம் என்ன கதை எனக்கு சொன்னார்களோ, அப்படியே கேட்டுக் கொள்வேன். இந்தக் காலக் குழந்தைகள், எப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். தலை சுற்றுகிறது!

Representational Image
Representational Image

பள்ளியில் சேர்ந்திருந்த சமயம்...அதாவது மூன்று வயதில்... பள்ளியின் சுவாரஸ்யமான நிகழ்வுகள் இவை. கலரிங் செய்யும்போது, கையோடு சேர்ந்து தலையும் அசையும் மகளுக்கு. ஒருமுறை பள்ளியில் சொல்லிக்கொடுத்த மெடிட்டேஷனை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தாள். நன்றாகக் கண்ணை மூடி நான் இருந்தால், "அப்படி இல்லைம்மா, லைட்டா ஒரு கண்ணைத் திறந்து பார்க்கலாம், நாங்கெல்லாம் அப்படிதான் செய்வோம்" என்கிறாள்.

அப்படியே அவளை அள்ளி அணைத்திடணும்போல சில சமயம் பேசுவாள். "அம்மா, என்னோட கனவுல பூதம் வந்தா, கண்ணை மூடிக்கிட்டே உன்னை எழுப்பறேன். நீ என் கனவுல வந்து அதை அடிச்சிடறீயா" என்று சொன்னால்.

சில சமயம் மிகவும் லாஜிக்காகப் பேசுவாள். "ஃபோன் பேசி முடித்து வைக்கும்போது ஏம்மா பை சொல்றே? அவங்க என்ன வெளிய போகப் போறாங்களா? வெச்சிடறேன்னு சொல்லு" என்றால். எப்படியெல்லாம் யோசிக்கிறாள் பாருங்கள்.

Representational Image
Representational Image

ஒருமுறை ரொம்பச் சிக்கனமாக இருக்கவேண்டும் என்பது மாதிரி பேசினாள். அவளுக்கு பல் தேய்த்து விட்ட பின், அவள் பேஸ்ட்டை விழுங்குவதற்குள், ஒரு விரலால் அவள் வாயை வழித்து பேஸ்ட்டைக் கீழே போட்டால், "அம்மா பேஸ்ட்டை ஏன் வேஸ்ட் செய்யுறே"ன்னு கேட்டாள்.

பெரும்பாலும் அதட்டல்தான் எல்லாருக்கும், கடவுளைக் கூட விட்டு வைக்க மாட்டா. ஒருமுறை என்னை விளையாட கூப்பிட்டுட்டே இருந்தாள். நான் "சாமி ரூம் குப்பையாக இருக்குதும்மா, நான் சுத்தம் செய்திட்டு வரேன்" என்றேன். உடனே அவள் அங்கு சென்று "சாமி, ஏன் குப்பை போட்ட? உன் ரூம சுத்தமா வச்சிக்க தெரியாதா" என்றாள்.

சிலசமயம் ரொம்ப சாமர்த்தியமா பேசுவாள். ஒருமுறை நான் அவளிடம் "ஏம்மா உனக்கு மிஸ் கைல 'ஸ்டார்' போட மாட்டேங்கறாங்க? நீ ஸ்கூல்ல குட் கேர்ள் ஆ இல்லையா" என்று கேட்டால், அவள், "என் கைலதான் மருதாணி இருக்கே. ஸ்டார் போட இடமில்ல" ன்னு சொல்லிட்டா. ஒருமுறை மகள் "அம்மா, ரன்னிங் ரேஸ் விளையாடலாம் வா" என்றாள். நான் "எனக்கு ஓட வராதும்மா" என்றதற்கு, "நீ ஆமை மாதிரி மெல்ல நட, நான் முயல் மாதிரி ஓடுவேன்" என்றாள். எவ்ளோ சாமர்த்தியம் பாருங்க.

Representational Image
Representational Image

பத்து வயதானாலும் இப்போதும் அவளை ரசிப்பதை நான் நிறுத்த வில்லை, அவளும் அவளுடைய லீலைகளை நிறுத்தவில்லை. ஒருமுறை நான் "உங்கிட்ட ஒண்ணு சொல்லுவேன். ஆனா நீ அத யாருகிட்டயும் சொல்லக்கூடாது. சரியா?" என்றேன். அதற்கு மகள் "ஏன் நீ சொல்லப் போறது பொய்யா?".. என்றாள்.

சில வருடம் முன்பு "நீதான் காயத்ரி, நான் தான் ஓவியா"ன்னு பேசிய மகள், அதற்கு அடுத்த வருடம் "நான் தான் ஹாரி, நீதான் பெட்டுனியா"ன்னு சொன்னா. என்னோட இடம் பெருசா மாறலைன்னாலும், அவ புத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டாங்குறது மகிழ்ச்சியா இருந்தது.

எந்தப் புத்தகம் படிச்சாலும், அப்படியே அதில மூழ்கிடுவா...அதுவாவே மாறிடுவா. "Stupify, Lumos, Expellerimus, Ridikkulus" இதெல்லாம் முடிஞ்சு இப்போ "என் மீது ஆணை", "இதுவே தர்மம்" னு ஆரம்பிச்சிட்டா. எனக்கென்னமோ சந்திரமுகிதான் ஞாபகம் வந்து பயமுறுத்தும். இதிகாசம் கத்துக்கட்டும்னு மஹாபாரதம் படிச்சி முடிச்சோம். எதைக் கத்துக்கிட்டாளே இல்லையோ, "என் மீது ஆணை. நீ தான் எழுந்து போய் எனக்குக் குடிக்க தண்ணி எடுத்துட்டு வரணும்"ங்குறா. இப்போ சமீபத்துல சாக்ரடீஸ் பத்தி ஒரு புத்தகத்துலேர்ந்து படித்து காமிச்சிட்டு இருந்தேன். ரெண்டாம் நாள் கேக்குறா "சாக்ரடீஸ்ன்னா ஒருத்தரா இல்ல நிறைய பேரா?"ன்னு. இப்படி ஒரு குழப்பம் எப்படி வரும்னு அன்னிலேர்ந்து நான் குழம்பிட்டு இருக்கேன்.

Representational Image
Representational Image

தெளிவாத்தான் வளர்றாங்க இந்தக் காலக் குழந்தைங்க. "குலாப் ன்னா ரோஸ், ஜாமூன் ன்னா என்ன" அப்படின்னு ஒருநாள் கேட்டா. பேர் பத்தியெல்லாம் கவலைப்படாம, ஸ்டைலா க்ளோப் ஜான் ன்னு சொல்லிட்டு திரிஞ்ச என்னோட சிறுவயது நாள்களை நினைச்சிக்கிட்டேன்.

எவ்வளவுதான் துடுக்குத்தனமும் கோபமும் இருந்தாலும், இந்தக் காலத்து குழந்தைங்க ரொம்ப matured ஆ யோசிக்கிறாங்க. ஏதோ ஒரு காரணத்துக்காக, மகளை திட்டிட்டு, பின் ஒரு சில நிமிடங்கள் கழித்து ``திட்டிட்டேன்னு கோபப்படாத செல்லம், உன் நல்லதுக்குதான் சொன்னேன்" என்றேன். அவ பொறுமையா "தெரியும் மா" ன்னு வந்து என்னை கட்டிக்குறா. எப்படி இவ்வளவு முதிர்ச்சின்னு ஆச்சர்யப்பட்டு போய்ட்டேன்.

யாருக்கு பிறந்தநாள்ன்னாலும் வாழ்த்து அட்டை செய்து கொடுத்திடுவா. வாழ்த்து அட்டை முழுதும் இதயக் குறியீட்டாலும், I love you க்களாலும் நிரப்பி விடுவாள். " வேற ஒண்ணும் தெரியாதா உனக்கு?" எனக் கேட்கணும்னு தோணுச்சு. பிறகுதான் " வாழ்க்கைக்கு வேறொன்றும் தேவையில்லையே" என்று உறைத்தது.

-சுதா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு