Published:Updated:

Motivation Story: `உதவும் உள்ளம் உன்னதம்!’ - உரக்கச் சொல்லும் மரியா டி’ஏஞ்சலோ

மரியா டி’ ஏஞ்சலோ

அடுத்த வீட்டுச் சிறுவன் என்ன செய்கிறான், என்ன படிக்கிறான், அவனுடைய நண்பர்கள் யார், அம்மாவும் அப்பாவும் அவனை அக்கறையோடுதான் கவனித்துக்கொள்கிறார்களா... இப்படியெல்லாம் நாம் யோசித்திருக்கிறோமா? நிச்சயமாக இருக்க முடியாது.

Motivation Story: `உதவும் உள்ளம் உன்னதம்!’ - உரக்கச் சொல்லும் மரியா டி’ஏஞ்சலோ

அடுத்த வீட்டுச் சிறுவன் என்ன செய்கிறான், என்ன படிக்கிறான், அவனுடைய நண்பர்கள் யார், அம்மாவும் அப்பாவும் அவனை அக்கறையோடுதான் கவனித்துக்கொள்கிறார்களா... இப்படியெல்லாம் நாம் யோசித்திருக்கிறோமா? நிச்சயமாக இருக்க முடியாது.

Published:Updated:
மரியா டி’ ஏஞ்சலோ
`குழந்தைகளுக்கு எப்படிச் சிந்திக்க வேண்டும் என்று கற்றுத் தர வேண்டுமே தவிர, எதைச் சிந்திக்க வேண்டும் என்று கற்றுத் தரக் கூடாது.’ - அமெரிக்க மானுடவியலாளர் மார்கரெட் மீடு (Margaret Mead).

குழந்தைகளைப் பற்றி நம்மில் எத்தனை பேர் யோசிக்கிறோம்? மற்ற குழந்தைகளை விடுங்கள். நம் வீட்டுக் குழந்தைகளைப் பற்றி யோசிக்கவே நம்மில் பலருக்கும் நேரம் இருப்பதில்லை. ஆளை அமுக்கும் வேலைப்பளுவிலும், அன்றாடக் கவலைகளிலும், எதிர்கால பயத்திலும் கரைந்துபோகிறது வாழ்க்கை. குடும்பத்தோடு கிளம்பி பீச்சுக்குப் போய் சுண்டல் கொறித்து, அலைதொடும் கரையில் நின்று பரவசமாகி, வழியில் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு கழிந்துபோகின்றன வார விடுமுறை தினங்கள். நம் வீட்டுப் பாடே இப்படி இருக்கும்போது, பிற குழந்தைகளைப் பற்றி சிந்திக்க நமக்கு ஏது நேரம்?

சில்ரன்’ஸ் லைஃப் சேவிங் ஃபௌண்டேஷன்
சில்ரன்’ஸ் லைஃப் சேவிங் ஃபௌண்டேஷன்

அடுத்த வீட்டுச் சிறுவன் என்ன செய்கிறான், என்ன படிக்கிறான், அவனுடைய நண்பர்கள் யார், அம்மாவும் அப்பாவும் அவனை அக்கறையோடுதான் கவனித்துக்கொள்கிறார்களா... இப்படியெல்லாம் நாம் யோசித்திருக்கிறோமா? நிச்சயமாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலில், தெருவோரச் சிறார்களை, உணவுக்கே பரிதவிக்கும் சின்னஞ் சிறார்களை, எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கும் குழந்தைகளைப் பார்த்து இரங்கி, அவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று களத்தில் நிற்கும் போராளிகளும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மரியா டி’ ஏஞ்சலோ (Maria D’Angelo). `அப்படி என்னதான் சாதித்துவிட்டார் மரியா?’ இந்தக் கேள்விக்கு அவர் வாழ்க்கைதான் பதில்.

மரியாவும், அவருடைய பெற்றோரும், உடன்பிறந்தவர்களும் இத்தாலியிலிருக்கும் நேப்பிள்ஸிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க்குக்கு இடம்பெயர்ந்தபோது அவருக்கு வயது 13. வறுமை, வாழ்க்கையைப் புரட்டியெடுக்க பஞ்சம் பிழக்கை இடம்பெயர்ந்த குடும்பம். அப்பா ஓர் ஓவியர், சமையற்கலைஞர். 30 டாலர் வாடகைக்கு ஓர் அப்பார்ட்மென்ட்டில் குடிபுகுந்தார்கள். இத்தாலியிலிருந்து வந்துவிட்டார்களே தவிர, அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கும் சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாது.

சில்ரன்’ஸ் லைஃப் சேவிங் ஃபௌண்டேஷன்
சில்ரன்’ஸ் லைஃப் சேவிங் ஃபௌண்டேஷன்

குடும்பத்தில் பெரிய வருமானமில்லை. பள்ளிப் படிப்பு முடிந்ததுமே ஏதாவது வேலை செய்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம். ஒரு பேக்கரியில் வேலைக்குச் சேர்ந்தார் மரியா. ஒவ்வொரு சனிக்கிழமையன்றும், அந்த வாரத்தில் பேக்கரியில் மீந்துபோன ரொட்டிகளையும், பிஸ்கெட்டுகளையும், கேக்குகளையும் மரியாவிடம் கொடுத்து அனுப்புவார் பேக்கரி உரிமையாளர். அவற்றையெல்லாம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கொண்டுபோய்க் கொடுப்பார். கண்கள் விரிய, ஆசையோடு அந்த எளிய உணவுகளை அவர்கள் வாங்குவதைப் பார்க்கும்போது அவருக்கு மனம் வலிக்கும். தான் வறுமையான குடும்பம் என்றாலும், ஒருநாளும் அதை மரியா பொருட்படுத்தியதில்லை. `நாங்கள் ஒருபோதும் எங்கள் வறுமையை உணர்ந்ததில்லை; ஏனென்றால், நாங்கள் வறுமைச் சூழலில் வாழ்ந்தோம்... அவ்வளவுதான்’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் மரியா.

கல்லூரிப் படிப்பு முடிந்தது. ஒரு பள்ளியில் ஸ்பானிஷ், இத்தாலி மொழிகளைக் கற்றுக்கொடுக்கும் வேலை கிடைத்தது. நியூயார்க்கில் இருக்கும் புகழ்பெற்ற ராக்ஃபெல்லர் சென்டரில் சுற்றுலா வழிகாட்டியாகவும் சில காலம் வேலை பார்த்தார். அந்தச் சமயத்தில் அவர் மேற்கொண்ட ஒரு பயணம் அவர் வாழ்க்கையையே மாற்றியமைத்தது. வேலை காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸுக்கு இடம்பெயர்ந்தார் மரியா. இயல்பாகவே சமூக சேவையில் அவருக்கு ஆர்வம் இருந்தது. ஒரு தொண்டு நிறுவனத்தில் வாலன்ட்டியராகச் சேர முடியுமா என்று கேட்டார்கள். உடனே சேர்ந்துவிட்டார். வீடில்லாத, ஆதரவில்லாத, ரோட்டோரம் வசிக்கும் சிறார்களை இனம் கண்டு, அவர்களுக்கு வசிப்பிடமும் உணவும் கொடுத்து உதவும் பணி. ஆர்வத்தோடு அந்த வேலையைச் செய்தார் மரியா.

ஒருநாள் முகாமில் ஒரு 8 வயது சிறுவன் அவரிடம் வந்தான். ``இது என்னன்னு படிச்சுக் காமிக்க முடியுமா?’’ என்று ஒரு நோட்டீஸை நீட்டினான். அது டிஸ்னிலேண்ட் நோட்டீஸ். அங்கே என்னவெல்லாம் இருக்கின்றன, சிறுவர்கள் எதையெல்லாம் அங்கே கண்டு களித்து குதூகலிக்கலாம் என்பதெல்லாம் அதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. `இந்தக் குழந்தைக்கு டிஸ்னிலேண்ட் தெரியாதா?’ ஆச்சர்யப்பட்டுப்போனார் மரியா.

``செல்லம்... ஏண்டா உன்னால இதைப் படிக்க முடியலை?’’

``நான் படிக்கறதுக்குக் கத்துக்கலை மேடம். அதாவது, நான் ஸ்கூலுக்கே போனதில்லை.’’

அதிர்ந்துபோனார் மரியா. அந்தப் பையன் சொன்னதிலும் ஓர் அர்த்தம் இருந்தது. அப்போதெல்லாம் அமெரிக்கப் பள்ளிகளில் சேர வேண்டுமென்றால், குழந்தைகளின் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தடுப்பூசிகளை முறையாகச் செலுத்தியிருக்க வேண்டும்... இப்படி ஏகப்பட்ட விதிமுறைகள். மூன்று வேளை உணவுக்கே கஷ்டப்படும் குழந்தைகளுக்கு இவையெல்லாம் எப்படிச் சாத்தியப்படும்... அந்தச் சிறுவன் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காததற்கு அதுதான் காரணம். அடுத்த வாரமே அந்தச் சிறுவனுடைய பெற்றோரின் அனுமதியோடு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துப்போனார் மரியா. அவனுக்கு பல் தொடங்கி தேவையான அத்தனை மருத்துவப் பரிசோதனைகளையும் செய்ய வைத்தார். ஒரு பள்ளிக்கூடத்திலும் அவனைச் சேர்த்துவிட்டார்.

மரியா டி’ ஏஞ்சலோ
மரியா டி’ ஏஞ்சலோ

அப்போது அவருக்கு ஓர் உண்மை புரிந்தது. அந்தச் சிறுவனைப்போல் பல குழந்தைகள் இருந்தார்கள். அவர்கள் கடற்கரைக்குப் போய் விளையாடியதில்லை. நல்ல ரெஸ்டாரன்ட்டில் உணவு சாப்பிட்டதில்லை. சினிமாவையோ, சர்க்கஸையோ பார்த்திருக்கவில்லை. ஆனால், அவர்களுடைய குழந்தைப் பருவம் பல கும்பல்களால் கொள்ளையடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பணத்துக்காக குற்றச் செயல்களில் ஈடுபடவைக்கப்பட்டார்கள். ஏதோ கொஞ்சம் காசு கிடைத்து, அன்றாடப்பாடு கழிந்தால் போதும் என்கிற நிலையில் இருந்தார்கள் அந்தச் சிறுவர்கள். அவர்களை மீட்பது ஒன்றே அவருடைய உடனடி லட்சியமாக இருந்தது. அதோடு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும்... அது மிக முக்கியம்.

1993. `சில்ரன்'ஸ் லைஃப்சேவிங் ஃபவுண்டேஷன்’ (Children's Lifesaving Foundation) என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார் மரியா. ஆதரவற்ற குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்; அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும். அவர்களை உற்சாகமாக வைத்திருக்க வேண்டும். அதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்தான் `CLF.' அந்தக் குழந்தைகளைக் கடற்கரைக்கும் மலையேற்றத்துக்கும் அழைத்துப்போனார். கல்வி, பொது அறிவு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்ததோடு, அவர்களே பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளையும் நடத்தினார்.

லாப நோக்கமில்லாத அவரின் நிறுவனம் போதைப் பிடியில் சிக்கியிருந்த, வன்முறையில் ஈடுபட்டுவந்த பல சிறார்களை மீட்க உதவியது. தன் தொண்டு நிறுவனத்தை நடத்துவதற்காக நன்கொடைகள் வசூலித்தார். ஒவ்வொரு பைசாவையும் ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காகவே செலவழித்தார். ஒரு கட்டத்தில் அவருடைய சேவையைப் பார்த்து தன்னார்வத் தொண்டர்கள் அவருடன் பணியாற்ற கைகோத்தார்கள். அந்த எண்ணிக்கை 250 வரை உயர்ந்தது. மரியாவின் கொள்கை இதுதான்... `வாழ வேண்டும், கற்க வேண்டும், வளமாக இருக்க வேண்டும்.’

அவருடைய சில்ரன்’ஸ் லைஃப்சேவிங் ஃபவுண்டேஷன் நிறுவனத்தால் பயனடைந்த குடும்பங்கள் ஏராளம். பல குழந்தைகளுக்குக் கல்வியும் மருத்துவ உதவியும் கிடைத்தன. பலருக்கு நல்ல சாப்பாடும், துணிமணியும், வேலையும் கிடைத்தன. சிலருக்குச் சொந்தமாக வீடுகூட கிடைத்தது. அதற்கு அவர் வைத்த கண்டிஷனெல்லாம் ஒன்றுதான்... `குழந்தைகளின் பெற்றோர் போதைப் பழக்கத்துக்கோ, மதுப்பழக்கத்துக்கோ அடிமையாக இருக்கக் கூடாது.’ அப்படிப்பட்டவர்களுக்கு, வசிக்க இடமில்லாமல் கூரை வீட்டில் வசித்தவர்களுக்கு வசதியான வீடு கிடைக்க உதவினார் மரியா. தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த சில வருடங்களிலேயே கிட்டத்தட்ட 60 குடும்பங்களுக்கு வீடு கிடைக்க உதவினார் மரியா.

பள்ளிப் படிப்புக்கு மட்டுமல்ல, மேற்படிப்புக்கும் உதவியது மரியாவின் தொண்டு நிறுவனம். கல்லூரியில் படிக்க நான்கு வருட முழு ஸ்காலர்ஷிப்பெல்லாம் கொடுத்தது. அவருடைய உதவியால் படித்து நல்ல வேலையில், பெரிய புரொஃபஷனலாக அமெரிக்காவில் வலம் வருபவர்கள் ஏராளம் பேர். இதைச் சொன்னால், ``அவர்களுக்குத் தகுதி இருக்கிறது, அதனால் ஜெயித்துவிட்டார்கள்’’ என்று தன்னடக்கத்தோடு சொல்வார் மரியா. 20 ஆண்டுகளுக்கும் மேலான அவருடைய சேவையில் 75,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்றிருக்கின்றன என்பதுதான் ஆச்சர்யமான செய்தி. அவருடைய சேவைக்காக ஏகப்பட்ட விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார் மரியா.

மரியா சொல்வதெல்லாம் ஒன்றுதான்... ``உங்கள் இதயம் திறந்திருந்தால் நீங்கள் அன்பானவர். உங்களால் பிறர் மேலும் அன்பு செலுத்த முடியுமென்றால், அவர்களின் இதயத்தையும் உங்களால் திறக்க முடியும்.’’