Published:Updated:

Motivation Story: அன்று... வங்கிக் கொள்ளையன்; இன்று... பிரபல வழக்கறிஞர் - ஷான் ஹோப்வுட் ரியல் ஸ்டோரி

ஷான் ஹோப்வுட்

அந்த இளைஞனுக்குக் கொடுத்தது, 12 வருடங்கள் 3 மாதங்கள் அனுபவிக்கவேண்டிய சிறைத் தண்டனை. அவன் ஏதோ சொல்ல வருவதற்கு முன்பு இடைமறித்த அவர், இன்னொன்றையும் ஏளன தொனியில் சொன்னார்... ``இன்னும் பதிமூணு வருஷத்துக்கு அப்புறம் நாம திரும்பவும் சந்திப்போம்னு நினைக்கிறேன்.’’

Motivation Story: அன்று... வங்கிக் கொள்ளையன்; இன்று... பிரபல வழக்கறிஞர் - ஷான் ஹோப்வுட் ரியல் ஸ்டோரி

அந்த இளைஞனுக்குக் கொடுத்தது, 12 வருடங்கள் 3 மாதங்கள் அனுபவிக்கவேண்டிய சிறைத் தண்டனை. அவன் ஏதோ சொல்ல வருவதற்கு முன்பு இடைமறித்த அவர், இன்னொன்றையும் ஏளன தொனியில் சொன்னார்... ``இன்னும் பதிமூணு வருஷத்துக்கு அப்புறம் நாம திரும்பவும் சந்திப்போம்னு நினைக்கிறேன்.’’

Published:Updated:
ஷான் ஹோப்வுட்
`சில நேரங்களில், தடைகள் உண்மையில் தடைகளாக இருப்பதில்லை. அவை, சவால்களையும் சோதனைகளையும் `நல்வரவு’ கூறி வரவேற்பவையாக இருக்கின்றன.’ - அமெரிக்க நடிகர் பால் வாக்கர் (Paul Walker)

குற்றவாளிக்கூண்டு. அதில் நின்றுகொண்டிருந்தவனுக்கு வெறும் 23 வயது. பெயர் ஷான் ஹோப்வுட் (Shon Hopwood). செய்த குற்றம், ஐந்து வங்கிகளில் கொள்ளையடித்தது. அன்றைக்கு தீர்ப்பு வழங்கும் நாள். இளைஞனுக்குப் பின்னால் 30-க்கும் மேற்பட்ட அவனுடைய குடும்ப உறுப்பினர்கள், என்ன தீர்ப்பு வரப்போகிறதோ என்ற பதைபதைப்போடு காத்திருந்தார்கள். நீதிபதி வந்து அமர்ந்தார். ஹோப்வுட்டை தீர்க்கமாகப் பார்த்தார். அவனுடைய உறவினர்களுக்கு முன்னால், அவர் அவனைப் பார்த்து சொன்ன வார்த்தை... ``உதவாக்கரை... ரௌடிப் பயல்...’’

அன்று நீதிபதி ரிச்சர்டு ஜி. காப் (Richard G. Kopf), அந்த இளைஞனுக்குக் கொடுத்தது, 12 வருடங்கள் 3 மாதங்கள் அனுபவிக்கவேண்டிய சிறைத் தண்டனை. அவன் ஏதோ சொல்ல வருவதற்கு முன்பு இடைமறித்த அவர், இன்னொன்றையும் ஏளன தொனியில் சொன்னார்... ``இன்னும் பதிமூணு வருஷத்துக்கு அப்புறம் நாம திரும்பவும் சந்திப்போம்னு நினைக்கிறேன்.’’

அந்த ஒரு கணத்தில் ஹோப்வுட் முடிவெடுத்தார்... `இனி ஒருபோதும் இந்தக் கூண்டில் நிற்க மாட்டேன்.’

கோர்ட்
கோர்ட்

முழுப் பெயர் ஷான் ராபர்ட் ஹோப்வுட். 1975, ஜூன் 11-ல் அமெரிக்கா, நெப்ராஸ்காவிலிருக்கும் டேவிட் சிட்டியில் பிறந்தவர். அப்பா, ஒரு கால்நடைப் பண்ணை வைத்திருந்தார். உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர். அவர்தான் மூத்தவர். பேஸ்கட்பால் மேல் அலாதி ஈடுபாடு. அதனாலேயே படிப்பில் ஆர்வம் குறைந்துபோனது. வகுப்புகளைப் புறக்கணித்தார். விளையாட்டு வீரர் என்கிற முறையில் அவருக்குக் கல்வி உதவித்தொகை கிடைத்துவந்தாலும், ஒழுங்காக வகுப்புகளுக்கு வராததால் அவர் கல்லூரியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார். அடுத்து அவர் சேர்ந்த இடம் அமெரிக்க கடற்படை. பெர்சிய வளைகுடாவில் வேலை. கடல்... கடல்... கடல். அதில் அலைந்து திரிவது அத்தனை சாதாரண காரியமல்ல. அந்த வேலை அவரைக் கொல்லாமல் கொன்றது. தோள்களில் ஏவுகணைகளையும், துப்பாக்கிகளையும் சுமந்து சுமந்து, கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பஹ்ரைனில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதை உறுதிசெய்தார்கள். இரண்டே வருடங்கள்தான் வேலை... `நீங்க தாங்க மாட்டீங்க... கெளம்பலாம்’ என்று அமெரிக்க கடற்படை அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தது.

ஹோப்வுட் வீட்டுக்கு வந்துவிட்டாரே தவிர, அவருக்கு மன அழுத்தமும், உடல் சோர்வும் கொஞ்சமும் குறையவில்லை. ஒருபக்கம், கால்நடைப் பண்ணையில், 12 மணி நேர வேலை. அதுவே அவருக்குப் பெரும் துயரமாக இருந்தது. மன உளைச்சல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போக, வடிகாலுக்காக போதையைத் தேடிப்போனவர், அதிலேயே மூழ்கிப்போனார்.

ஓர் இரவு தன் நண்பருடன் அமர்ந்து ஒரு பாரில் குடித்துக்கொண்டிருந்தார் ஹோப்வுட். நண்பர்தான் அந்த யோசனையைச் சொன்னார். ``குடிக்கிறதுக்கும், சந்தோஷமா இருக்கறதுக்கும் நமக்கு காசு பத்த மாட்டேங்குது ஹோப்வுட்... நாம ஒரு பேங்க்கைக் கொள்ளையடிச்சா என்ன?’’ அந்த நண்பர் விளையாட்டுக்காகச் சொன்னாரோ என்னவோ தெரியாது. ஹோப்வுட் அதைச் செய்து பார்த்துவிடுவது என்று தீர்மானித்தார். அடுத்த நாள் காலையிலேயே நெப்ரெஸ்காவிலுள்ள ஒரு பேங்குக்குப் போனார். அது 1997, ஆகஸ்ட் மாதம். தான் கொண்டு வந்திருந்த டூல் பாக்ஸை பேங்க்குக்கு நடுவே சத்தம் வர கீழே போட்டார். தன் சட்டைப்பைக்குள் இருந்து ஒரு ரிவால்வரை எடுத்தார். பேங்க்கில் இருந்தவர்கள் வெலவெலத்துப்போனார்கள். வெகு சுலபமாக அன்றைக்குக் கொள்ளை நடந்தேறியதுஇ. அன்றைக்கு அவர் கொள்ளையடித்த பணம் 50,000 டாலர்.

Shon Hopwood
Shon Hopwood

யோசனையைச் சொன்ன நண்பர் இதையறிந்து பதறிப்போனார்... ``ஹோப்வுட்... வேணாம்ப்பா... கொள்ளையடிச்ச பணத்தை திருப்பிக் கொடுத்துடேன். `மன்னிச்சுக்கோங்க... தெரியாம பண்ணிட்டேன்னு’ ஒரு வார்த்தை எழுதிப்போட்டுடேன்’’ என்று சொல்லிப் பார்த்தார். அதைக் கேட்கவில்லை ஹோப்வுட். நெப்ரெஸ்காவிலிருந்த மேலும் நான்கு வங்கிகளில் கொள்ளையடித்தார். மாட்டிக்கொண்டார்.

சிறைக்கு வந்த முதல் நாள் காலையிலேயே சக கைதிகளிடம் அடி வாங்கினார். அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர அவருக்கு ஒரு வார காலம் பிடித்தது. பிறகு யோசித்தார். எல்லாக் கைதிகளையும்போல `வெறுக்... வெறுக்’கென கம்பிகளை எண்ணிக்கொண்டு சிறைக்குள்ளேயே கிடக்க வேண்டுமா, வெட்டிப் பொழுதுபோக்க எதையாவது விளையாடித் தொலைக்க வேண்டுமா, உணவு நேரம் போக ஓர் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டுமா, இப்படியே நம் வாழ்நாள் முழுக்கச் சிறைக்குள் கழிந்துவிடுமா... என்றெல்லாம் யோசனை வந்தது. அப்போது அவருக்கு பளிச்சென நினைவுக்கு வந்தது சிறையிலிருந்த நூலகம். `சரி... இதுதான் நமக்குச் சரியான இடம்’ என்று அவருக்குத் தோன்றியது. அங்கேயே பழியாகக் கிடக்க ஆரம்பித்தார். படிக்க ஆரம்பித்தார். குறிப்பாக அவர் படித்தது, சட்டப் புத்தகங்களை. அந்தப் புத்தகங்கள் அவருக்கு ஒரு புதிய ஜன்னலைத் திறந்துவிட்டன.

Shon Hopwood
Shon Hopwood

சட்டத்தைப் படிக்கப் படிக்க அவருக்கு ஒரு விஷயம் புரிந்தது... அவருடைய சக கைதிகள் பலர், தேவையில்லாமல் அதிக காலம் சிறைத் தண்டனையை அனுபவிக்கிறார்கள் என்கிற உண்மை. அதனாலேயே சக கைதிகளின் விடுதலைக்காக, அவர்களின் வழக்கறிஞர்களுக்கு ஒரு சுருக்கத்தை (Brief) எழுதி அனுப்ப ஆரம்பித்தார். `இந்த மாதிரி... இந்த சட்டப் பிரகாரம், இவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் தண்டனை ரொம்ப அதிகம். அதைக் குறைக்கலாமே...’ என்பதுபோல் நீண்டது அவருடைய சுருக்கமான விளக்கவுரை. அதற்கு அட்டகாசமான பலனும் கிடைத்தது. கோகைன் வைத்திருந்ததாக ஒருவருக்கு 16 வருட சிறைத் தண்டனை. உண்மையில், அவர் தவறுதலாக ஒரு பாக்கெட்டைக் கையில் வைத்திருந்ததால் அவருக்கு தண்டனை. அவருக்குத் தன் கையில் இருந்தது போதைப்பொருள் என்றே தெரியாது. அவர் தொழில்முறை போதைப்பொருள் விற்பனையாளரும் இல்லை என்பதை, தன் பிரீஃபில் குறிப்பிட்டிருந்தார் ஹோப்வுட். அந்தக் கைதிக்கு 10 வருட சிறைத் தண்டனை குறைக்கப்பட்டு, அவர் சீக்கிரமே விடுதலையானார். இப்படிப் பல பேருக்கு விரைவிலேயே விடுதலை கிடைக்க, அவருடைய பிரீஃப் உதவியது. அப்படி விடுதலையாகி வெளியே போகிறவர்களைப் பார்க்கப் பார்க்க அவருக்குள் சந்தோஷம் கொப்பளிக்க ஆரம்பித்தது. ஆக, சிறைக்குள்ளேயே ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தை நடத்த ஆரம்பித்தார் ஹோப்வுட்.

ஒரு பக்கம் சட்டப் புத்தகத்தைத் தொடர்ந்து படிக்கவும் அவர் தவறவில்லை. 1,650 பக்கங்கள்கொண்ட குற்ற நடவடிக்கைகள் தொடர்பான புத்தகத்தை முழுவதுமாகப் படித்தார். ஒரு முறையல்ல, இருமுறை. 2009, ஏப்ரல் 9 அன்று விடுதலையானார். அந்த நேரத்தில் அவர் மனதில் இருந்த எண்ணமெல்லாம் ஒன்றுதான்... `நம் வாழ்க்கையை மறுபடியும் புதிதாக, புத்தம் புதிதாகக் கட்டமைக்க வேண்டும்.’ 2010-ல், நெப்ரெஸ்காவிலுள்ள ஒரு பிரின்டர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அது வழக்கறிஞர்களுக்கு பிரீஃப்களை அச்சடித்துத் தரும் நிறுவனம். அதில் வேலை பார்த்துக்கொண்டே படிக்க ஆரம்பித்தார். அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிறகு, வாஷிங்டன் சட்டப் பல்கலைக்கழகத்தில் `ஜூரிஸ் டாக்டர்’ என்கிற சிறப்புப் பட்டம் வாங்கினார். இடையில் ஜேனிஸ் ரோஜர்ஸ் பிரவுன் என்கிற ஒரு ஜூரியிடம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். சட்டக் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். அப்படி அந்தப் படிப்புகளை அவர் வெகு சாதாரணமாக முடித்துவிடவில்லை. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் படித்தார்.

Shon Hopwood
Shon Hopwood

2014. ஒருவழியாக அவர் கனவு நிஜமானது. வாஷிங்டன் ஸ்டேட் பார் அசோசியேஷன், அவர் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்கான தேர்வை எழுத அவருக்கு அனுமதி வழங்கியது. எழுதினார். அதில் தேர்வுபெற்றார். அதே வாஷிங்டன் ஸ்டேட் பார் அசோசியேஷனில் உறுப்பினராகவும் ஆனார். பிரபல வழக்கறிஞராக இன்று கொடிகட்டிப் பறக்கிறார்.

கற்பனைக்கு எட்டாத சில நிகழ்வுகள் நிஜ வாழ்க்கையில் நடப்பதும் உண்டு. ஹோப்வுட்டுக்கும் அது நடந்தது. எந்த நீதிபதி ரிச்சர்டு ஜி. காப் அவருக்குச் சிறைத் தண்டனை வழங்கினாரோ, அவருக்கு முன்பாகவே உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. இருவருமே மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிகழ்வு அது. அன்றைக்கு ஹோப்வுட்டின் வாதத் திறமையைப்பார்த்து காப் அசந்துபோனார். வழக்கு முடிந்ததும், ஒரு தோல் பையை ஹோப்வுட்டுக்குப் பரிசளித்தார். பிறகு, ``நானும் ஹோப்வுட்டும் நீதிக்காகத்தான் போட்டி போடுகிறோம். அவருக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்’’ என்று சொன்னா காப்.

அதற்குப் பிறகு பல வழக்கறிஞர் நிறுவனங்கள் ஹோப்வுட்டைப் பணிக்கு அழைத்தன. உச்சபட்சமாக ஒரு நிறுவனம் அவருக்குக் கொடுத்த ஆஃபர், `வருடத்துக்கு 4 லட்சம் டாலர்.’ பணத்துக்கு செவி சாய்க்கவில்லை ஹோப்வுட். தன் பாணியில், தனக்கான பாதையில் போய்க்கொண்டே இருக்கிறார். பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுகிறார். அதோடு அவர் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட `Law Man: My Story of Robbing Banks, Winning Supreme Court Cases, and Finding Redemption’ என்கிற நூலும் 2012-ல் வெளிவந்தது. இன்றும் தன் வழக்கறிஞர் தொழிலில் ரொம்ப பிசியாக இருக்கிறார் ஹோப்வுட்.

ஹோப்வுட்டின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றுதான். `ஒரு தடவை குற்றவாளியாகிட்டான்னா, அவன் வாழ்க்கை முழுக்கக் குற்றவாளியாகத்தான் இருப்பான்’ என்கிற வழக்கமான சிந்தனையை உடைத்துப்போட்டிருக்கும் பாடம்!