Published:Updated:

Motivation Story: கிறிஸ்துமஸ் தாத்தாவிடமிருந்து கடிதம் - கோடிக்கணக்கில் அள்ளித்தந்த குட்டி ஐடியா!

கிறிஸ்துமஸ் தாத்தா
News
கிறிஸ்துமஸ் தாத்தா

நவம்பர் மாதத்திலேயே பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் `இந்த கிறிஸ்துமஸுக்கு உனக்கு என்ன வேணும்டா செல்லம்?’ எனக் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அதை ஒரு கடிதமாக கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதிவைக்கச் சொல்வார்கள்.

Motivation Story: கிறிஸ்துமஸ் தாத்தாவிடமிருந்து கடிதம் - கோடிக்கணக்கில் அள்ளித்தந்த குட்டி ஐடியா!

நவம்பர் மாதத்திலேயே பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் `இந்த கிறிஸ்துமஸுக்கு உனக்கு என்ன வேணும்டா செல்லம்?’ எனக் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அதை ஒரு கடிதமாக கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதிவைக்கச் சொல்வார்கள்.

Published:Updated:
கிறிஸ்துமஸ் தாத்தா
News
கிறிஸ்துமஸ் தாத்தா
`எதிலிருந்து வேண்டுமானாலும் பிரமாதமான ஐடியா ஒன்று தோன்றலாம். அதாவது, ஒன்றிலிருந்து என்றில்லை, எல்லாவற்றிலுமிருந்தும்...’ - இயக்குநர் ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக்

உலகம் முழுக்க இருக்கும் கிறிஸ்தவ மக்களின் முக்கியப் பண்டிகை `கிறிஸ்துமஸ்.’ இதை, ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் கோலாகலமாகக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். பாரம்பர்யமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கென்று சில வழக்கங்கள் உண்டு. நம் ஊரில் கிறிஸ்தவ மக்கள், பண்டிகை நெருங்கும் ஆரம்ப அறிகுறியாக வீட்டு வாசலில் ஒரு நட்சத்திர மின்விளக்கைக் கட்டித் தொங்கவிடுவார்கள். ஆடல், பாடலோடு ஒவ்வொரு வீடாக கிறிஸ்துமஸ் தாத்தா வலம் வருவார். சிலநேரங்களில் குழந்தைகளுக்குப் பரிசுகள் கொடுப்பார்... இதையெல்லாம் நாம் பார்த்திருப்போம். கிறிஸ்துமஸ் தினத்தன்று எல்லா சர்ச்சுகளிலும் கூட்டம் அலைமோதும். பாதிரிமார்களின் அருளுரையைக் கேட்டுவிட்டு வெளிவரும் மக்கள் பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வார்கள்.

கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்

மேலை நாடுகளிலோ, இந்தப் பண்டிகை வேற லெவல். பண்டிகைக்குப் பல நாள்களுக்கு முன்பே கிறிஸ்துமஸ் மரத்தை அழகுபடுத்தி வீட்டில் காட்சிப்படுத்துவது; வீட்டைச் சுத்தப்படுத்தி, அலங்கார விளக்குகளால் ஒளியூட்டுவது; உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், பரிசுப்பொருள்களையும் வாழ்த்து அட்டைகளையும் அனுப்புவது; `கிறிஸ்துமஸ் ஈவ்’ என யேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில் கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் மாலையே கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிடும் ஒரு நிகழ்வு... எனத் தொடர்கிற இந்தப் பண்டிகையில் மிக முக்கியமான ஓர் அம்சம் உண்டு. அது கிறிஸ்துமஸ் தாத்தாவுக்குக் குழந்தைகள் அனுப்பும் வேண்டுகோள் அல்லது கோரிக்கைக் கடிதம்.

நவம்பர் மாதத்திலேயே பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் `இந்த கிறிஸ்துமஸுக்கு உனக்கு என்ன வேணும்டா செல்லம்?’ எனக் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அதை ஒரு கடிதமாக கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதிவைக்கச் சொல்வார்கள். அதை, அவர்களுக்குத் தெரியாமலேயே படித்து, கிறிஸ்துமஸ் தாத்தா கொண்டு வந்து அந்தப் பரிசுப்பொருளைத் தருவதுபோல, அவர்களே ஏற்பாடு செய்துவிடுவார்கள். பல குழந்தைகளுக்கு இதில் மன திருப்தியும், சந்தோஷமும் கிடைத்துவிடும். சில குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா (Santa Claus) நேரடியாக எதுவும் சொல்லவில்லையே என்கிற வருத்தமும் இருந்தது. `குழந்தைகளின் இந்த வருத்தத்தைப் போக்கினால் என்ன?’ என்று ஒருவருக்குத் தோன்றியது. அவர் பெயர் பைரன் ரீஸ் (Byron Reese). ஏற்கெனவே மிகச்சிறந்த பிசினஸ்மேன். ஆனால், இந்த வேலையைக் காசாகப் பார்க்காமல் ஒரு சேவையாக, உள்ளார்ந்த அன்போடு, ஒவ்வொரு குழந்தையும் மகிழும் வகையில் செய்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியது.

Motivation Story: கிறிஸ்துமஸ் தாத்தாவிடமிருந்து கடிதம் - கோடிக்கணக்கில் அள்ளித்தந்த குட்டி ஐடியா!

ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு கடிதம் எழுதுகிறார்கள்... `கிறிஸ்துமஸ் தாத்தா... நல்லா இருக்கீங்களா, நீங்க எனக்கு எந்தப் பரிசுப்பொருளும் அனுப்ப வேணாம். அம்மாவுக்கு கேன்ஸர். படுத்த படுக்கையா கெடக்குறாங்க. அவங்க சரியாயிடுவாங்களா... பதில் சொல்லுங்க தாத்தா...’

`அம்மாவும் அப்பாவும் செத்துப்போயிட்டாங்க. அப்பாவுக்கு கார்ல போறப்போ ஆகிஸிடென்ட்... அதுல செத்துப்போயிட்டாரு. அம்மாவுக்கு அதைக் கேட்டதுலயே ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு... அவங்களும் செத்துப்போயிட்டாங்க. இதோ... நான் இந்த அரசாங்க விடுதியில ஆதரவில்லாம இருக்கேன். கிறிஸ்துமஸ் வரப்போகுது. பெருசா என்ன கிறிஸ்துமஸ்... என்னத்தைத்தான் நான் கொண்டாடித் தீர்க்கப்போறேன்... நான் என்னதான் செய்யட்டும் தாத்தா, நான் எதுக்காக உசுரோட இருக்கணும்?’

`ஹாய் சான்டா கிளாஸ்... எனக்கு ஒண்ணும் வேணாம். என் அப்பா நான் கேட்குற எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்துடுறார். எனக்கு நீங்க இந்த கிறிஸ்துமஸுக்கு ஒரு விஷ் பண்ணினா போதும்.’

`எனக்கு அவெஞ்சர்ஸ் பொம்மை அனுப்பித் தருவீங்களா கிறிஸ்துமஸ் தாத்தா?’

`ஸ்கூல்ல விக்டோரியா டீச்சர் என்னை மட்டும் டார்கெட் பண்ணி, கிளாஸ்ல கேள்வியா கேட்குறாங்க. நான் அவங்களுக்கு என்னதான் பண்ணினேன்... அவங்ககிட்ட கொஞ்சம் பேசி என்கிட்ட கொஞ்சம் கனிவா நடந்துக்கச் சொல்ல முடியுமா கிறிஸ்துமஸ் தாத்தா?’... இப்படி நீள்கிற குழந்தைகளின் ஒவ்வொரு கேள்விக்கும், கிறிஸ்துமஸ் தாத்தா பதிலளிப்பதுபோல பதிலளிக்க முடிவு செய்தார் பைரன் ரீஸ். ஆனால், அது அசாத்தியமான வேலை, கடுமையான வேலை. பல பேரின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. இந்தப் பணியைச் செய்தே தீர்வது என்கிற எண்ணம் அவருக்குள் அழுத்தமாகப் பதிந்துபோயிருந்தது.

Motivation Story: கிறிஸ்துமஸ் தாத்தாவிடமிருந்து கடிதம் - கோடிக்கணக்கில் அள்ளித்தந்த குட்டி ஐடியா!

அது 2002-ம் ஆண்டு. `சான்ட்டா மெயில்’ (Santa Mail - SantaMail.org) என்ற ஒன்றை ஆரம்பித்தார் ரீஸ். வட துருவத்தில் (North Pole) கிறிஸ்துமஸ் தாத்தா இருக்கிறார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. அந்த அட்ரஸ் ஒன்றை இணையதளத்தில் பதிந்தார். `குழந்தைகளின் ஒவ்வொரு கடிதத்துக்கும், இந்த முகவரியிலிருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவிடமிருந்து தனிப்பட்ட முறையில் பதில் வரும்’ என்கிற உத்தரவாதத்தைப் பெற்றோர்களுக்குக் கொடுத்தார். இப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் அவருடைய `SantaMail.org.' அது லேசுப்பட்ட வேலையல்ல. ஒரு குழந்தையின் பெயரிலிருக்கும் ஸ்பெல்லிங்கில் தவறு நேர்ந்தால்கூட குழந்தையின் முகம் வாடிப்போய்விடும். இந்த விஷயத்தில் வெகு கவனமாக இருந்தார், பைரைன் ரீஸ். `ஒவ்வொரு பதில் கடிதத்தையும் குறைந்தது இருமுறை படித்துவிட்டுத்தான் குழந்தைகளுக்கு அனுப்ப வேண்டும்’ என உத்தரவே போட்டார்.

அமெரிக்காவின் ஆஸ்டின் பகுதியைச் சேர்ந்த தொழில்முனைவோர் பைரன் ரீஸ். சிறு வயதிலிருந்தே வரலாறையும் தொழில்நுட்பத்தையும் படிப்பதில் பேரார்வம் அவருக்கு. அறிவியல் புனைகதைகளைப் படிப்பதுதான் அவருடைய பொழுதுபோக்காக இருந்தது. சிறு வயதில் அவருடைய அம்மாவும் அப்பாவும், ஒவ்வொரு கிறிஸ்துமஸின்போதும், கிறிஸ்துமஸ் தாத்தாவிடமிருந்து வந்ததாக ஒரு கடிதத்தைக் கொடுப்பார்கள். மிக உருக்கமாகவும், ரீஸோடு நேரடியாக கிறிஸ்துமஸ் தாத்தாவே பேசுவதுபோலவும் இருக்கும். அந்தக் கடிதங்கள் ஏற்படுத்திய தாக்கம்தான் `SantaMail.org.’ உருவாகப் பின்னாளில் காரணமாக அமைந்தது எனக் குறிப்பிடுகிறார் ரீஸ்.

டிசம்பரில்தான் கிறிஸ்துமஸ் என்றாலும் பிப்ரவரி மாதத்திலேயே `குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா கடிதம் எழுதும்’ வேலையை ஆரம்பித்துவிடுகிறார் ரீஸ். குழந்தைகள் வட துருவத்திலிருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்குக் கடிதம் எழுதலாம். அதற்கு கிறிஸ்துமஸ் தாத்தா பர்சனலாக, அந்தக் குழந்தைகளுக்கே பதில் கடிதம் போடுகிறார். ஒவ்வொரு குழந்தையின் தேவைக்கேற்ப, அவர்களின் மனமறிந்து, அல்லல்படும் குழந்தைகளை ஆற்றுப்படுத்தும் வகையில், ஆதரவு தேடும் குழந்தைக்கு கைகொடுத்து உதவுவதுபோல, பரிசுப்பொருள் வேண்டும் குழந்தைக்கு பெற்றோரிடம் சொல்லி பரிசை ஏற்பாடு செய்வது என நீள்கிறது அவரின் சேவை. இதற்காக குழந்தைகளன் பெற்றோரிடமிருந்து ரீஸ் வசூலிக்கும் கட்டணம் ஒரு கடிதத்துக்கு 9.95 டாலர்... தபால் செலவு தனி. அதாவது, ஒரு கடிதத்துக்கு 10 டாலர் என வைத்துக்கொள்வோமே... 2009-ம் ஆண்டு மட்டும் கிறிஸ்துமஸ் தாத்தா 3 லட்சம் குழந்தைகளுக்கு பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார். ஒரு கடிதத்துக்கு 10 டாலர். மொத்தம், 30 லட்சம் டாலர். இது மிகப்பெரிய வருமானம். இன்றைக்கு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்குக் கடிதம் எழுதும் குழந்தைகளின் எண்ணிக்கை 5 லட்சத்தையும் தாண்டிவிட்டது.

ஆக, ஒரு ஐடியா ரீஸுக்குக் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்கிறது!