ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம் நீரோ..!
பொதுவாக பேரிடர் காலங்களில், மக்களின் துயரங்களை மதிக்காமல், அவர்களது தேவையறிந்து உதவாமல் இருக்கும் விட்டேத்தியான குணம் கொண்ட தலைவர்களைக் குறிக்கும் வரி தான் இந்த நீரோ-ரோம் சொலவடை. உண்மையிலேயே ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்தானா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் ரோமானிய வரலாறைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்.
ஜூலியஸ் சீசரின் வழிவந்த லூசியஸ் டொமிஷியஸ் அஹினோபார்பஸ் என்ற மன்னன், தனது 17-ம் வயதில் மன்னர் பதவியை ஏற்றவுடன் தனது பெயரை நீரோ என மாற்றிக் கொண்டதோடு, பல்வேறு மாற்றங்களையும் ஏற்படுத்தினானாம்.

நீரோ என்ற சொல்லுக்கே, 'வெறுப்பைக காதலிப்பவன்' என்பதுதான் பொருளாம்.
தாயைக் கொன்றவன், தம்பியைக் கொன்றவன், கள்ளக்காதல் செய்தவன், மத சண்டைகளை ஏற்படுத்தியவன், பல்வேறு கலகங்களுக்கு காரணமாக இருந்தவன் என்ற அந்த சுயநலமிக்க, வெறுப்பு குணம் மிகுந்த நீரோ, கிபி 64-ம் ஆண்டில் தனது சாம்ராஜ்ஜியத்தை புதிதாக கட்டமைக்க எண்ணி, யார் சொல்லியும் கேட்காமல் பற்றவைத்த நெருப்பு, தொடர்ந்து ஆறு நாட்கள் விடாமல் எரிய, அந்த நெருப்பில் ரோம் நகரின் பத்து மாவட்டங்கள் எரிந்து சாம்பலானதை எந்த வருத்தமும் இல்லாமல் கோபுரத்தின் உச்சியில் நின்று ரசித்தானாம். அதன்பின் தான் நினைத்தபடி ஒரு தங்க மாளிகையை, ரோம் நகர சாம்பலின்மீது வடிவமைத்தான் நீரோ என்கிறது வரலாறு.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஉண்மையில் நீரோவின் காலத்தில் பிடில் என்ற இசைக்கருவியே கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், நீரோவின் கொடிய மனநிலையை உணர்த்தவே, 'ரோம் எரியும்போது பிடில் வாசித்த நீரோ' என்ற வரிகள் பயன்படுத்தப்பட்டு, இன்றளவும் சுயநலமிக்க உலகத் தலைவர்களை வசைபாடவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது..
இப்படி நீரோக்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த உலகை சமன்செய்ய வரலாறெங்கும் ஹீரோக்களும் பிறந்துகொண்டே தான் இருந்தனர் என்றபோதிலும், சமீபத்திய நிகழ்வு ஒன்று, இதுபோன்ற ஹீரோக்களை பெரிதும் கொண்டாவும் வைக்கிறது.

ஆம், ரஷ்யாவின் ப்ளாகவீஷ்சின்ஸ்க் (Blagoveshchensk) என்ற கிழக்கு நகரிலிருக்கும் மிகவும் பழமையான, ஆனால் இருதய, நரம்பியல் மற்றும் பலதுறை சிறப்பு மருத்துவமனையான சாரிஸ்ட் ஈரா (Tsarist Era) மருத்துவமனையில்
ஒரு வாரம் முன்பு ஒரு பெரும் தீவிபத்து ஏற்பட்டது. 110 வருடங்கள் பழமையான அந்த மருத்துவமனையின் உட்கூரைகள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதால், பற்றிய தீப்பிழம்பு பரவும் வேகத்தைக் கண்ட தீயணைப்புப் படையினர், அங்கு சிகிச்சை பெற்றுவந்த 128 உள்நோயாளிகளை உடனடியாக வெளியேற்றினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனால் சோதனையாக, தீப்பிடிக்க சற்று முன்னர் ஆரம்பித்த ஓர் இருதய அறுவைசிகிச்சையை இடையில் நிறுத்தினால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து என்பதால் டாக்டர் வேலன்டின் ஃபிலட்டோவ் தலைமையிலான எட்டுபேர் கொண்ட மருத்துவக்குழு தீயைக் கண்டு பயந்து ஓடாமல் , தங்கள் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்தனர்.
இதையறிந்து ஒத்துழைப்பு கொடுத்த தீயணைப்புப் படை, ஒருபக்கம் மருத்துவமனையில் பரவிய தீயை அணைக்கவும், மறுபக்கம் அறுவை அரங்கில் மின்சாரம் தடைபடாமல் இருக்கவும் பெருமுயற்சி எடுத்து போராடிக் கொண்டிருந்தது.
ஏறத்தாழ இரண்டு மணிநேரப் போராட்டத்தின் இறுதியில் பரவிய நெருப்பை தீயணைப்புப் படை அணைக்க, அதேவேளையில், தங்களது உயிர்களைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருந்த மருத்துவர் குழு அந்த நோயாளியைக் காப்பாற்றியிருந்தது.

பொதுவாக மருத்துவப் பயிற்சி காலத்தில், அறுவை அரங்குகளில் ஏற்படும் விபத்துகளை எதிர்கொள்ள கற்பிக்கப்படும், பேரிடர் மேலாண்மை வகுப்புகளில் "தன்னைத்தான் காப்பதே முதல்படி" என்ற நீரோயிஸம் தான் கற்பிக்கப்படுகிறது.
ஆனால், அதையெல்லாம் தாண்டி, "ஓர் உயிரைக் காப்பாற்ற, எங்களால் முடிந்ததை மனதார செய்தோம்" என்று ஒரே குரலில் கூறும் இந்த மருத்துவ ஹீரோக்கள் உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான்!
ஏனெனில், தங்களது உயிரைப் பணயம் வைத்து, பணிபுரியும் இவர்களைப் போன்ற ஹீரோக்கள் நம்முள் பற்றவைப்பது, அன்பு எனும் ஆன்ம நெருப்பை!