Published:Updated:

அதிதியின் அன்புமொழி! - நெகிழ் அனுபவம் #MyVikatan

Representational Image
Representational Image

திறந்தவெளி பிரமாண்டமான பேரண்டத்தில் பெண்களுக்கு இருப்பது என்னவோ இரண்டு கூடுதான். பிறந்த வீடும் புகுந்த வீடும்.

கதையின் நாயகி ஜானகி ரங்கராஜனை மணமுடித்து அழகர் இல்லமாகிய மாமியார் வீட்டுக்கு வருகிறாள். மறுவீடு விழாக்கள் அனைத்தும் அரங்கேறி முடிந்துவிட ஜானகியின் சொந்தங்கள் கைகுலுக்கி விடைபெற ஜானு பவனம் நினைவுகளும் அவளிடம் இருந்து விடைபெறுகிறது.

அன்றிரவு அலுப்பினாலும் கணவரின் ஸ்பரிசத்தாலும் கண் அயர்ந்து தூங்கிவிட்டாள். அடுத்த நாள் காலை அழகர் இல்லம் அவள் விழிக்க காத்திருந்தது. லேயர் கட் செய்திருந்த அவளது மூன்றடி கூந்தலை புதுத்துண்டால் கட்டியபடி மஞ்சள் நிறம் ததும்பிய மாங்கல்யத்தை நெஞ்சில் ஏந்தி தாழம்பூ குங்குமத்தை நெற்றியில் ஏந்தி புதிய தோற்றத்தில் அழகர் இல்லத்தை ஏற்றுக்கொள்ள தயக்கத்தோடு வருகிறாள்.

Representational Image
Representational Image

ரங்கராஜனின் அறைக்கு அருகே பூஜை அறை உள்ளது. ஜானகியின் கால்கள் ரங்கராஜனின் பாட்டி அமர்ந்திருந்த அந்த பூஜை அறை நோக்கிச் சென்றது. "பாட்டி நான் வேன்னா உங்களுக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணட்டுமா" என்கிறாள். "வேண்டாம் கண்ணு நீ போயி அத்தைகிட்ட காபி வாங்கி குடிமா நான் பாத்துக்கிறேன்" என்று வழி அனுப்பி வைக்கிறார் பாட்டி. பூஜை அறையைவிட்டு கிளம்புவதற்கு முன்பாகத் தனக்குத் தெரிந்த அபிராமி அந்தாதியின் இரண்டு பாடல்களைக் கூறியபடி திருநீறு இட்டுக்கொண்டு சமையலறை நகர்கிறாள் ஜானகி.

"அத்தை குட் மார்னிங். என்ன செஞ்சுட்டு இருக்கீங்க நானும் ஏதாச்சும் செய்யட்டுமா, தோசை வேணும்ன்னா சுடட்டுமா. இல்ல இந்தப் பாத்திரங்களை கழுவட்டுமா?" என்கிறாள். சமையல் அறையின் ராணி போன்று ஜானகி கேட்ட கேள்விகளின் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தோசை வார்ப்பதையும் சட்னியின் உப்பு சரிபார்ப்பதையும்விட அதிகபட்சமான வேலையை அவள் ஜானு இல்லத்தில் செய்திருக்கவில்லை. இருந்தாலும் அத்தையிடம் கேட்டு அழகாய் கற்றுக்கொள்ளலாம் என்ற ஆர்வத்தை மட்டுமே அவள் அழகர் இல்லத்துக்கு எடுத்து வந்திருந்தாள். மருமகள் மனம் அறிந்த கங்கா, "வேண்டாம்மா இந்தா நீ ஃபில்டர் காபி விரும்பி குடிப்பேன்னு சொன்னேல்ல, இத எடுத்துக்கோ சர்க்கரை வேணும்ன்னா கொஞ்சம் போட்டுக்கோ... நீ குடிச்சுட்டு அப்படியே ரங்கராஜனுக்கும் கொஞ்சம் குடுத்துடுனு" அனுப்பி வைக்கிறாள்.

Representational Image
Representational Image

ரங்கராஜனிடம் காபி குடுத்துவிட்டு அவனை குளிக்க அனுப்பி வைத்து வீட்டின் முன் அறை நோக்கி நகர்கிறாள் ஜானகி. அங்கே மாமனாரும் ரங்கராஜனின் தாத்தாவும் செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்க ஜானு இல்லத்தில் தன் தந்தை செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தபோது அதைப் பிடித்து இழுத்து, "பொழுதனைக்கும் இதையே படிச்சு கலெக்டர் ஆகவா போகுற" என்று தன் தந்தையிடம் வம்பிழுத்தது ஞாபகம் வர மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். பிறகு, என்ன மாமா பேப்பர் படிக்கிறீங்களா என்று கேட்டு அந்த இடத்தைக் கடக்கிறாள்.

முன்பக்க வாசலைக் கடந்து ரோஜா மலர்கள் படர்ந்திருந்த அழகர் இல்ல தோட்டத்தில் கால்பதிக்கிறாள். அங்கே தெத்துப்பல்லோடு பால்மேனியோடு மயிலின் நேர்த்தியை பெற்று, வானவில்லின் வண்ணக்கலவையைப் பூசி, பௌர்ணமி நிலவின் பிரகாச சிரிப்பைப் பெற்றதொரு குழந்தையாய் அதிதி விளையாடிக்கொண்டிருக்கிறாள். அதிதி ரங்கராஜனின் அக்கா மகள். 3 வயது முடிந்து வளர்ந்துகொண்டிருக்கும் தேவதை.

ஜானகியைப் பார்த்து, "இங்க வா அத்தை" என்று அவள் கூப்பிட்டு முடிக்கும் மறுகணமே இவள் அவளது பிஞ்சுக் கைகளைப் பற்றி இருந்தாள்.

ஜானகி : "உன் பேரு அதிதிதானே என் பேரு தெரியுமா?"

அதிதி : ``தெரியும்... அத்த...''

ஜானகி : ``அத்த தாண்டி செல்லம்... என் பேரு ஜானு... ஜானு அத்த... சொல்லு ஜானு அத்த சொல்லு சொல்லு.''

அதிதி : ``ஜானுஉஉஉஉ அத்த.''

Representational Image
Representational Image

ஜானகி : "அடி தங்கம் சமத்து. வா நம்ம விளையாடலாமா?''

அதிதி : "ஓ, விளையாடலாம். உங்களுக்கு ஹைடு அண்ட் சீக் தெரியுமா நான் ஒன் டூ த்ரீ சொல்வேன் நீங்க போயி ஒளிஞ்சுட்டு அதிதினு கூப்பிடணும் அப்புறம் நான் உங்கள கண்டுபிடிப்பேன்."

அதிதியின் கூர்மையான கண்கள் பொய்பிம்பம் ஏதுமின்றி ஹைட் அண்ட் சீக் விளையாட அவளை அழைத்தது. `அத்த உங்களுக்கு காட்ச் பால் கூட விளையாடத்தெரியுமா' என்று பேசியபடியே நிமிடமும் மௌனம் இன்றி அதிதி ஜானகியின் நேரத்தை நிரப்பியிருந்தாள்.

இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தாய் மற்றும் தோழியர் கூறிய மணப்பெண் கூற்றுகள் அதிதியின் பேச்சில் கரைந்து போயிருந்தது. புதுப்பெண் இலக்கணங்களை அதிதி குழந்தை இலக்கியத்தால் வென்றிருந்தாள்.

தனக்கு சிறிது அந்நியமாக அழகர் வீடு இருக்கிறதோ என்ற பதற்றம் ஜானுவைவிட்டு மெல்ல நீங்கி இருந்தது. அதிதியின் பேச்சும் துடிப்பும் ஜானு இல்ல ஜானகியை சிறிது நேரத்தில் வெளிக்கொணர்ந்து அழகர் இல்லத்தில் அவளை சகஜமாய் பிணையச் செய்தது.

பெரியவர் உலகில்தான் புதிய உறவை ஏற்பதற்கோ சேர்ப்பதற்கோ நேரம் காலம் தேவைப்படுகிறது. குழந்தைகள் உலகில் புன்னகை சூடிய அன்புமொழி பேசும் அத்துணை மனிதர்களும் அழகான பொம்மைகள்தான்.

- நாக சரஸ்வதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு