Election bannerElection banner
Published:Updated:

ரெட்டை மாட்டு வண்டியும் சுவேகா மொபட்டும்... இதெல்லாம் நீங்க ஓட்டிருக்கீங்களா? #MyVikatan

Bullock cart
Bullock cart

உரையாடல் இவ்வாறு சென்று கொண்டிருக்க நான் வாங்கிய புதிய இரு சக்கர வாகனத்தையும் என்னுடைய பால்ய பருவத்தில் ஓட்டிய மாட்டு வண்டியையும் என் மனம் ஒப்பீடு செய்து கொண்டிருந்தது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அன்றுதான் புதிதாக என் மனைவிக்கென ஒரு சிறிய ரக இரு சக்கர வாகனத்தை வாங்கியிருந்தேன். வாகனம் ஒட்டி பல நாள்கள் ஆனதால், என் மனைவிக்கு அதை எப்படி கையாள வேண்டும் என்று விளக்கமளித்து கொண்டிருந்தேன். அதை கவனித்து கொண்டிருந்த என்னுடைய மகன்,

"அப்பா.... உங்களுக்கு மாட்டு வண்டி ஓட்ட தெரியுமா...." என்று கேட்டதும் எனக்கு என்னுடைய பள்ளிக்கால நினைவுகள் மனத்திரையில் ஓட தொடங்கின.

"தெரியும்பா.. ஏன் கேக்கிற ..." நான்.

"இல்ல எந்த வயசுல மாட்டு வண்டி ஓட்ட கத்துக்கிட்டீங்க..."

"நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது கத்துக்கிட்டேன்..."

"எத்தன வயசு இருக்கும் உங்களுக்கு..."

"ஒரு 12 இல்லேன்னா 13 வயசு இருக்கும்...."

"யாரு கத்து குடுத்தா..."

"ராமக்கட்டினு (அவருடைய உண்மையான பெயர் தெரியவில்லை) ஒரு தாத்தா இருந்தாரு... அவருதான் எப்பவும் நம்ம வீட்டுல இருந்த மாட்டு வண்டிய நான் சின்ன பையனா இருக்கும் போது ஓட்டுவாரு... அவரு கூட நானும் வண்டியில உக்காந்து போகும் போது கத்துக்கிட்டேன்."

Bullock cart
Bullock cart

"வண்டிய எப்படித் திருப்புவீங்க..."

"எந்தப் பக்கம் திருப்பனுமோ அந்தப் பக்கத்துல இருக்க மாட்டோட கழுத்துல கட்டி இருக்கிற கயித்த இழுத்து பிடிச்சா வண்டி அந்தப் பக்கம் திரும்பும்..."

"எப்படிப்பா பிரேக் போடுவீங்க..." என்னுடைய இளைய மகன்.

"மாட்டு வண்டிக்கு பிரேக்கலாம் கிடையாதுப்பா. நுகத்தடில கட்டியிருக்கிற ரெண்டு மாட்டோட கையித்தையும் இழுத்து பிடிச்சா மாடு நிக்கும், வண்டியும் நிக்கும். மாட்டு வண்டிய உடனடியலாம் நிறுத்த (Sudden Brake) முடியாது."

உரையாடல் இவ்வாறு சென்று கொண்டிருக்க நான், வாங்கிய புதிய இரு சக்கர வாகனத்தையும் என்னுடைய பால்ய பருவத்தில் ஓட்டிய மாட்டு வண்டியையும் என் மனம் ஒப்பீடு செய்து கொண்டிருந்தது.

மாடுகளை நுகத்தடியில் ஒருபுறம் நிறுத்தி நுகத்தடியை தூக்கினால் மாடுகள் தானாகவே கழுத்தை நுகத்தடிக்கு கீழே கொண்டுவரும். பின்பு அதனை கயிற்றுடன் இணைத்துவிட்டு மாட்டிற்கும் வண்டியின் கழுத்திற்கும் இடையில் நின்று கொண்டு ஒரு உந்து உந்தி வண்டியில் ஏறி இருபுறமும் கால்களை தொங்கவிட்டு கயிற்றை லேசாக இழுத்துவிட்டால் காளைகள் தானாகவே நகர, வண்டியும் நகர, அதுவொரு அலாதியான அனுபவம்! சிலர் மாடுகளை தட்டிவிட்டு வண்டி நகர ஆர்மபித்தவுடன் வண்டியின் வேகத்திற்கேற்ப நடந்தோ அல்லது ஓடியோ குதித்து வண்டியில் ஏறி அமர்வார்கள்.

Bullock cart
Bullock cart

மாட்டு வண்டியும் ஒரு சக்கர வாகனம்தான், நுகத்தடிதான் அதனுடைய கட்டுப்படுத்தும் (Handle Bar) பகுதி. இடது புறம் திருப்ப இன்றைய இரு சக்கர வாகனத்தில் இடது கைப்பிடியை இடது புறம் சிறிது திருப்புவோம். வலது புறம் திருப்ப வலது கைப்பிடியை உபயோகப்படுத்துவோம். மாட்டு வண்டியில் இடது புறமிருக்கும் மாட்டின் கயிற்றை இழுக்க மாடு நின்றுவிடும். வலது புற மாடு தொடர்ந்து நடக்க நுகத்தடி தானாகவே இடது புறம் திரும்பும். வண்டியும் இடது புறமாக திரும்பும்.

அன்றும் இன்றும் இயந்திரவியல் தத்துவம் (Philosophy of Mechanism) ஒன்றுதான். அதனை நடைமுறைப்படுத்தும் விதம்தான் வேறு.

மாட்டு வண்டியில் இன்று போல மேடு பள்ளங்களில் செல்கையில் அதன் தாக்கம் தெரியாமலிருக்க சுருள்கம்பி (shock absorber) வைத்து அதனை குறைப்பது எல்லாம் இருக்காது. மேடு பள்ளங்களில் கடக் முடக் என்று செல்கையில் வண்டியுடன் நமது உடலிலுள்ள அனைத்து தசைகளும் ஆடும்.

அநேகமாக கட்டை மாட்டு வண்டியை உபயோகப்படுத்திய, பயன்படுத்த தெரிந்த கடைசி தலைமுறை எண்பதுகளில் பிறந்த நாங்களாகதான் இருப்போம். எதோ ஒரு விதத்தில் அல்லது ஏதேனும் ஒரு தருணத்தில் மாட்டுவண்டியுடனான தொடர்பு நிச்சயம் இருந்திருக்கும். வீட்டிலோ அல்லது வெளியூர் செல்கையிலோ அல்லது குக்கிராமத்திலிருக்கும் உறவினர் வீட்டிற்குச் சென்ற தருணத்திலோ ஒருமுறையேனும் மாட்டு வண்டியின் பயண அனுபவம் பெரும்பாலான எண்பதுகளில் பிறந்த அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.

Bullock cart
Bullock cart

அதே போன்று மோட்டார் வாகனத்தை முதன் முதலில் உபயோக படுத்திய முதல் தலைமுறையும் நாங்களாகத்தான் இருப்போம். நான் இங்கே கூறுவது என்னுடைய கிராமம் சார்ந்த ஒப்பீடு. நகர் புறங்களில் மோட்டார் வாகன உபயோகம் இதற்கு முன்னரே தொடங்கி இருக்கலாம். ஆனால், அவர்கள் மாட்டு வண்டியை உபயோகப்படுத்தி இருப்பார்களா என்பது கேள்விக்குரிய விஷயம்.

ஏன் இதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன் என்றால் இரு சக்கர மோட்டார் வாகனங்கள் என்பது ஆடம்பரமான வசதியாக கருதப்பட்ட காலகட்டத்தில் அதை வீட்டில் வாங்கி உபயோகப்படுத்த அனுமதிப்பது, அதுவும் பால்ய வயதில் மிக பெரிய விஷயம்.

நானும் மாட்டு வண்டியையும் இரு சக்கர மோட்டார் வாகனத்தையும் ஒரே கால கட்டத்தில் கற்று கொண்டேன். என்னுடைய அப்பா முதன் முதலாக வாங்கிய இரு சக்கர வாகனம் சுவேகா (Suvega) எனப்படும் ஒரு பழைய (Second Hand Moped) மொபெட்தான். டீ நிறத்தில் இருக்கும். சீட்டின் கீழே எரிபொருள் நிரப்ப ஒரு குடுவை போன்ற அமைப்பும் நீண்ட கழுத்துமாக ஒரு சிறிய ஒட்டகம் போன்று இருக்கும். எங்களுடைய சிறிய வயதில் சீட்டில் அமர்ந்து ஹாண்டில் பாரை சற்று சிரமப்பட்டு முன்பக்கம் வெகுவாக வளைந்து ஓட்ட கற்றுக் கொண்டோம்.

Suvega bike
Suvega bike

கிராமத்தில் இருந்ததினால் உரிமம் (License) பற்றிய விழிப்புணர்வோ எந்த வயதில் உரிமம் எடுக்க முடியும் என்பது பற்றிய அறிவு அப்போது இருக்கவில்லை. சைக்கிள் ஒட்டியாயிற்று... அடுத்து இருசக்கர இயந்திர வாகனம் ஓட்ட வேண்டியதுதான். இன்றும் கிராமங்களில் 18 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் இதுபோல் இரு சக்கர வாகனத்தையோ அல்லது டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனத்தையோ கையாள கற்றுக் கொள்வதைப் பார்க்க முடியும். சட்டப்படி இது தவறுதான் என்றாலும் இது நடப்பதை தவிர்க்க முடியாது.
முக்கியமான விஷயம் மாட்டு வண்டி ஓட்டுவதற்கு உரிமமோ அல்லது வயது வரம்போ இல்லை.

அந்த காலகட்டத்தில் மாட்டு வண்டி உபயோகம் என்பது இன்றியமையாதது. பொருட்கள் ஏற்றி செல்ல நாங்கள் முற்றிலுமாக உபயோகப்படுத்தியது மாட்டு வண்டிதான். புஞ்சை நிலங்களிலிருந்து பயிரிடப்படும் சோளம், கம்பு மற்றும் துவரை போன்ற பயிர்களை அறுவடை காலங்களில் வீட்டிற்கு எடுத்துவரவும், நெற்களத்திலிருந்து அறுவடை முடிந்து நெல் அடித்து தூற்றிய பின் அந்த நெல் மூட்டைகளை வீட்டிற்கு கொண்டு செல்வதற்கும் மாட்டு வண்டி தேவைபட்டது.

இன்று போல அரிசியை கடையில் யாரும் வாங்கி உண்ண மாட்டார்கள், வீட்டிலேயே நெல்லை அவித்து காயவைத்து நெல் அரைக்கும் ஆலைக்கு கொண்டு சென்று நெல்லை அரைத்து அரிசியாக எடுத்து வந்து உபயோகப்படுத்துவோம். வீட்டிலிருந்து அரவை ஆலைக்கு நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல மாட்டு வண்டியே பெரும்பாலும் பயன்பட்டது.

Bullock cart
Bullock cart

அது போல பலமுறை நான் நெல் அரைப்பதற்கு மூட்டையை ஏற்றி கொண்டு ராமக்கட்டி தாத்தாவுடன் சென்றிருக்கிறேன். நானும் தனியாக சென்று அரைத்து வந்திருக்கிறேன். அரவை ஆலையில் நெல் அரைக்கும்போது அரிசி தனியாகவும் தவிடு தனியாகவும் வரும். தவிட்டை வர வர அள்ளி கோணி சாக்கிற்குள் கட்ட வேண்டும். அரைத்து முடித்ததும் உடலெங்கும் தவிடு படிந்திருக்கும். அதனை ஒரு துண்டால் தட்டி விட்டுவிட்டு வண்டியில் ஏற்றி விடுவோம்.

பின்பு அருகிலிருக்கும் ....யாச்சி (முற்பகுதியில் ஒரு சாதி பெயர் வரும் அதனால் அதனை கத்தரித்து விட்டேன்) டீ கடைக்குச் சென்று டீயும் போண்டாவும் சாப்பிட்டு விட்டு ஏதேனும் மிக்ஸர் அல்லது கார சேவு பொட்டலம் (எனக்கு மிகவும் பிடிக்கும் ஒரு பொட்டலம் 15 பைசா தான். டீ 25 பைசா) திரும்பி வீடு போகும்வரை வண்டியில் கொறிப்பதற்கு வாங்கிக் கொண்டு வண்டியை கட்டினால் வீடு செல்ல ஒரு அரை மணி நேரம் ஆகும்.

பிற்பாடு மாடுகளைப் பராமரிக்க இயலாமல் விற்ற பின்பு அந்த மாட்டு வண்டி மட்டும் கேட்பாரற்று பல வருடங்கள் எங்கள் வீட்டில் நின்று கொண்டிருந்தது. ஒருநாள் அதையும் ஐநூறு ரூபாய்க்கு விற்று விட, அதை வாங்கியவர் நுகத்தடியை பிடித்து வண்டியை இழுத்து சென்றது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. அன்று அதை பற்றிய இழப்போ மதிப்போ தெரியாமல் வெறித்து பார்த்து கொண்டிருந்தது நினைவிருக்கிறது.

இதனை எழுதும் போது அதனை நினைத்து ஒரு சொட்டு கண்ணீர் துளிர்க்கிறது. அதன் பிறகு அந்த வண்டி நிறுத்தப்பட்டிருந்த இடம் வெறுமையாகவே இருந்தது. அதனருகில் இருந்த வேப்பமரம் மிக பெரிதாக வளர்ந்து விட்டது. இன்று திரைப்படங்களில் மாட்டு வண்டியை பார்க்கையில் அதனை ஓட்ட வேண்டும் என்ற ஆசை வருகிறது. அன்று நான் மிகவும் வருத்தத்துடன் பயணித்த அந்த சுகானுபவம் இன்று கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

Bullock cart
Bullock cart

இப்போது நாங்கள் ஊருக்குச் செல்லும்போது எங்களுடைய காரை அந்த இடத்தில் நிறுத்துகிறோம். வாகனம் மாறிவிட்டது. ஆனால் மனம் மட்டும் மாறவில்லை. அந்த இடத்தை பார்க்கும் போது இன்றும் மனதில் மாட்டுவண்டி நின்று கொண்டிருப்பது போன்ற தோற்றம் தோற்றப் பிழையாக நிழலாடும்.

- அனந்தகுமார் முத்துசாமி

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு