Published:Updated:

`பால்யத்தின் வறுமையும் தோல்வியும்கூட சுகமானவையே!' - #Nostalgic பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Unsplash )

சைக்கிள் எனும் இரும்புக்குதிரையின் சகவாசத்தால் குரங்கு பெடலில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் எப்போது ஆறும்?

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காற்று போன்றே நினைவுகளும் எந்நேரமும் மனிதர்களைச் சுற்றி சுழன்றுகொண்டேதான் இருக்கின்றன.

மனிதன் என்பவனே அடர்ந்த நினைவுகளின் தொகுப்புதான்!

மறதி எனும் குணத்தையும் தாண்டி மனதில் ஆழமாகப் பதிந்துபோன பால்யத்தின் நினைவுகள்தான் மனிதனைச் செலுத்துகின்றன, வாழ்க்கை மீதான பிடிப்பை அதிகரிக்கச் செய்கின்றன!

மகிழ்வாக வாழ்ந்த பழங்கால நினைவுகளை அசைபோட்டுப் பார்த்தால் மெல்லிய சோகம் கவிழ்வதைத் தவிர்க்கவே முடியாது!

அதைவிடச் சிறந்த வாழ்க்கை தற்போது கிடைத்திருந்தால் கூட, பால்யத்தின் வறுமையும் தோல்வியும் சுகமானவையாகவே தோன்றும்!

Representational Image
Representational Image
Credits : Unsplash

ஒரு காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை மனிதனுக்கு ஏக்கமாகவே இருப்பதற்குக் காரணம் அதை தற்போது வாழமுடியாது என்பதே!

வாழ்வெனும் கவர்ச்சியை அதிகரிப்பதும், வசீகரமூட்டுவதும் மீண்டும் வாழ முடியாதா என ஏங்கச் செய்வதும் பரவசமூட்டுவதும் ஒரு மனிதனின் பால்ய நினைவுகளே!

அத்தகைய ஒரு நினைவுகளின் - பதிலற்ற கேள்விகளின் தொகுப்பு....

# சைக்கிள் பாரில் வைக்கப்பட்ட சிறு சீட்டில் அப்பாவுடன் அமர்ந்து செல்லும்போதெல்லாம் குதிரையில் பறப்பது போன்று ஏற்பட்ட உணர்வை இன்றுவரை ஏன் பதிலீடு செய்ய முடியவில்லை?

# ராணி காமிக்ஸின் இரும்புக் கை மாயாவியின் முகத்தைக் கடைசிவரை பார்க்க முடியாமலே இருந்ததற்கு இணையான சஸ்பென்ஸ் கதைகளெல்லாம் எங்கே போய் ஒளிந்துகொண்டன?

# கில்லி தாண்டு விளையாடும்போது ஓடிய ஓட்டத்தின் நினைவுகளுக்கு எப்போது மூச்சு வாங்கத் தொடங்கும்?

# நூலகங்களுக்கு காலந்தோறும் வாசமுண்டு. அதிலும் ஒவ்வொரு நூலகமும் ஒவ்வொரு நூலும் வெவ்வேறு வாசம் வீசும். பால்யத்தின் நூலக வாசங்கள் எல்லாம் எங்கு போய்ச் சிறைப்பட்டிருக்கும்?

# தேசிங்கு ராஜனுக்கு கல்யாணி குதிரை மேலிருந்த மோகத்தை விட, முதல் வாகனத்தின் மேலிருந்த மோகத்தின் நினைவு இன்றும் அலாதியாகவே இருப்பதேன்?

# பிசினஸ் விளையாட்டு விளையாடியபோது கிடைத்த பணத்தின் மிச்சங்கள் இருந்திருந்தால்கூட இன்று மல்டி மில்லியனராக பிரகாசித்திருக்க முடியுமென்பது உண்மையா?

# சைக்கிள் எனும் இரும்புக்குதிரையின் சகவாசத்தால் குரங்கு பெடலில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் எப்போது ஆறும்?

Representational Image
Representational Image

# தன் முதல் நாளிலிருந்தே கனவுகளையும் நினைவுகளையும் ஒன்றாகப் பிணைக்கத் தொடங்கிய தொலைக்காட்சியின் இறந்தகாலம் மட்டும் இனிமையாக இருப்பதேன்?

# ராஜேஷ்குமார் நாவலின் இறுதி அத்தியாயம் போலவே சம்பவங்கள் குவிந்து கிடக்கும் பால்யத்தின் நினைவுகளை ஆற்றுப்படுத்தும் மாற்று மருந்து ஏதேனும் இருக்குமா?

# எத்தனையோ தொழில்நுட்பங்கள் கற்ற பின்னும், இத்தனை ஆண்டுகள் ஆனபின்னும் உப்புக்காரப் பாட்டியின் சும்மாடு நுட்பம் மட்டும் அறியாமலே போனதெப்படி?

# செருப்பு தைக்கும் தாத்தாவின் தோல் பையிலிருந்து ஒவ்வொரு கருவியாக வெளி வரும்போது ஏற்பட்ட அலாதி வியப்பு தீர்வது எப்போது?

# எங்கு சென்றாலும் எனக்கென மடியில் நொறுக்குத் தீனியைக் கட்டிக் கொண்டு திரும்பும் அம்மிச்சியின் அன்புக்கு கைம்மாறாக இனி என்ன செய்வது?

# துறட்டிக்கோல் கொண்டு இழை பறித்துப் போட்டபோது ஆவலுடன் உண்ட ஆட்டுக்குட்டிகளின் குழந்தை முகங்களை இனி எப்போது பார்ப்பது?

# நாள்முழுதும் சலிப்பின்றி ஆடிய வேப்பமரத்து தூரியின் மயக்கும் ஆட்டத்தை ரோலர்கோஸ்டர்கள் எப்போது ஈடுகட்டும்?

# ரேடியோவில் மழலையர் பூங்கா கேட்டுக்கொண்டே அம்மா ஆட்டும் அரிசியைச் சுவைத்தது கன்னக் கதுப்புகளில் உறைந்து போய் நிற்பதேன்?

# மாட்டின் மீதமர்ந்து பயணம் செய்த திகிலையெல்லாம் மீண்டும் இனி எப்போது அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும்?

# மட்டம் அடிக்க வேண்டி பள்ளிக்கூடம் கூடும் நேரத்தில் வரும் மயக்கத்துக்கு மேலான மயக்கம் ஏதேனும் உலகத்தில் உள்ளதா?

Representational Image
Representational Image

# அப்பாவிடம் முட்டிக்கு கீழ் அடிவாங்கி முட்டிபோட்ட நினைவுகள்தான் இப்போதும் தலை குனியாமல் பார்த்துக் கொண்டு இருக்கின்றனவா?

# எதுகை மோனையுடன் இருப்பதே கவிதை என்று மறுபடியும் எப்போதாவது நம்பிக்கை வருமா?

# பால்யத்தின் ஜன்னலோர பேருந்து பயணங்களுக்கு இணையான இயற்கைக் காட்சிகள் இதுவரை ஏன் வரையப்படவே இல்லை?

# அப்பாவின் சைக்கிளை எதிர்நோக்கி பால்வாடி கதவோரம் அமர்ந்து ஆவலுடன் காத்திருக்கும் நாள்களின் பதற்றம் இனி எப்போது ஏற்படும்?

# தீபாவளிக்கு முந்தைய நாள் பெரும் ஆவலில் பெருக்கெடுத்த சுரப்பிகளெல்லாம் இப்போது எதற்காக வேலைநிறுத்தம் செய்கின்றன?

# ஐஸ் வண்டி வருகையில் டம்ளரை தூக்கிக்கொண்டு ஓடிய பால்யத்தின் ஆவல் இனி எப்போது வரும்?

# அப்பாவை இறுதியாகப் பார்த்த பத்தாம் வயது பிறந்தநாள் ஆரஞ்சு மிட்டாயின் தித்திக்கும் சுவை நாக்கின் அடியில் இன்னும் கசந்துகொண்டே இருப்பதேன்?

# ஓய்வே தேவையின்றி நாள் முழுக்க விளையாடுகையில் கசந்த தோல்விகள் இப்போது இனிப்பதேன்?

# மாமன் மகள்களின் சடங்குகளில் வம்படியாக ராஜா போல அமர்ந்த போதிருந்த நாற்காலிகள் எல்லாம் இப்போது எங்கு இருக்கும்?

# திகில் படம் பார்த்த அன்று மட்டும் வீட்டுக்கே வந்த பேய்கள் எல்லாம் இப்போது எங்கு போய் பதுங்கியிருக்கும்?

# அளவிலா வியப்பை அளித்த டென்ட் கொட்டாய்களின் தித்திக்கும் சினிமாக்கள் இனி எப்போது வரும்?

# இந்தியிலேயே முழுக்கப் பார்த்த மகாபாரதம் எப்படிப் புரிந்ததென்று யாராவது விளக்குவார்களா?

# ஷூ போட வேண்டியே விருப்பப்பட்டு சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மட்டும் அந்நியமாகவே தெரிவதேன்?

Representational Image
Representational Image

# இலந்தை வடையின் புளிப்பும் தேன் மிட்டாயின் இனிப்பும் இப்போது எதில் போய் உறைந்திருக்கும்?

# பத்தடிக்கு மேல் பட்டம் விட்டாலே ஹீரோ எனும் நாள்கள் எல்லாம் இப்போது வெளிவராமல் அடம்பிடிப்பதேன்?

# முரட்டுக் கிரிக்கெட்டுகள் எல்லாம் எப்போது மென்மையாகத் தொடங்கின?

# அனைத்துப் பாடங்களிலும் சிவப்புக் கோடு வாங்கியவன் மறுபடியும் ஹீரோவாக முடியுமா?

# பால்யத்தின் புகைப்படத்தில் படிந்திருக்கும் நிழலெல்லாம் நிஜமாக வாய்ப்புண்டா?

பால்யத்தின் அனுபவமும், தற்போதைய அறிவும் இணைந்த வாழ்க்கை வாழ்வது ரசனையுள்ள மனிதனின் உள்ளார்ந்த லட்சியமாக இருக்கலாம். ஆனால், பால்யமும் இன்றும் இவ்வாறு இணைவது நடைமுறையில் சாத்தியமே இல்லை.

எண்ணெயும் நீரும்போல இவ்விரண்டும் முரண்பட்டவை.. என்றுமே ஒட்டாதவை! ஆனாலும் இதில் ஆச்சர்யமூட்டும் நகைமுரண் என்னவெனில்,

புத்திசாலித்தனத்தைவிட வெகுளித்தனம் ரசிப்பூட்டுவதாக இருப்பதே!

கிடைத்ததை அனுபவிக்கவும்,

கிடைக்காததை ரசிக்கவும் கற்றுக்கொண்டால் துன்பம் இன்றி வாழலாம் என்கிறது பெளத்தம்.

பால்யத்தின் சுவை எவ்வாறு இருப்பினும் சற்றே ஏக்கம் கலந்த புன்னகையுடன் இப்போதும் தித்திக்கவே செய்கிறது!

வாழும்போது கசக்கும் சில அனுபவங்கள்

பின்னர் இனிப்பது வாழ்வை வசீகரமாக்கவே வைக்கின்றது! முதுநெல்லி போன்றதே வாழ்க்கையும்! முன்னே கசப்பும் பின்னே இனிப்பும்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு