சொந்தக்காரர் கேள்வியும் சிறுமியின் மைக்கேல் ஜாக்சன் நடனமும்! - Nostalgic பகிர்வு #MyVikatan

நம்மில் பலர், இந்த மாதிரியான ஒரு சில அபத்தமான கேள்விகளைக் கடக்காமல் நம் வாழ்க்கையில் பயணித்துக்கொண்டிருக்க மாட்டோம்!
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
`வேலை கிடைச்சுடுச்சா... என்ன வேலை, எவ்வளவு சம்பளம்? எப்ப கல்யாணம்? வீட்டுல ஏதாவது விசேஷம்? நீங்க என்ன ஆளு?எவ்வளவுக்கு வீடு வாங்கின? எவ்வளவு லோன் எடுத்த? என்ன கார் வச்சிருக்க?' நம்மில் பலர் இந்த மாதிரியான கேள்விகளைக் கடக்காமல் வாழ்க்கையில் பயணித்திருக்க மாட்டோம்.

இப்படிப்பட்ட கேள்விகளைக் கடக்கும்போது, சகித்துக் கொள்ளவே முடியாத கேள்விகளும் வருவதுண்டு. அது, குழந்தைகளைப் பார்த்து நம்மிடம் கேட்கப்படும் கேள்விகள். ஆண் குழந்தையா பெண் குழந்தையா? கறுப்பா சிவப்பா? கேள்விகளில் டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் குழந்தைகளிடம் கேட்கும் கேள்விகள்... நீ எத்தனாவது ரேங்க்? 10th மார்க் என்ன? 12th மார்க் என்ன? இப்படியே தொடரும்.
தமிழ்நாட்டில், ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் இரு குழந்தைகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என ஆய்வறிக்கை கூறுகிறது. தமிழ்நாடு, கடந்த 15 வருடங்களாகத் தற்கொலையில் முன்னிலை வகிக்கிறது. சூழ்நிலை, சந்தர்ப்பம் , அரசியல் எல்லாம் தற்கொலைக்கு ஊக்க காரணிகள் என ஒருபுறம் வைத்தாலும். சமுதாயத்தில் கேட்கப்படும் கேள்விகள் பெரும் காரணி! குழந்தைகளிடம், நம்மில் எத்தனை பேர் அவர்களுக்கான மொழியில் பேசுகிறோம்.

ஒரு குழந்தையுடன் உரையாடலை ஆரம்பிக்கும்போது, நீ எத்தனாவது படிக்கிற என்ற கேள்வியே பெரும் குற்றம் என்று என் தாத்தா சொல்வார். உனக்கு எந்த மரத்தின் இலை ரொம்பப் பிடிக்கும்? நீ உங்க அம்மாவிடம் கெஞ்சிக்கெஞ்சி கேட்டு அடிக்கடி சமைக்கச் சொல்ற சாப்பாடு என்ன? கட்டைவிரலை மையப்புள்ளியாக வைத்து, பென்சிலால் வட்டம் போடத் தெரியுமா? இப்படியான உரையாடல்களே குழந்தைகளின் செவிகளில் சென்றடைகின்றன.
என் தாத்தா, குழந்தைகளிடம் உரையாடலைத் தொடங்கும்போது, ஹலோ என்று கைகுலுக்குவார். குழந்தைகளின் கையை இறுகப் பற்றிக்கொண்டு, என் கையை விடுங்க... என் கையை விடுங்க என்று இவர் சொல்ல, நீங்கதான் என் கைய புடிச்சி ருக்கீங்க. நீங்க என் கையை விடுங்க என்று குழந்தை சொல்ல, இருவருக்குமான குழந்தைத்தனமான உரையாடல் இனிதே ஆரம்பம் ஆகும்.

எங்கள் ஊரில் உள்ள குழந்தைகளைப் பாகுபாடு இன்றி தன் நண்பர்களாக வைத்திருந்தார். இவரின் இறுதி ஊர்வலத்தில்கூட, இனிமை சேர்க்கும்விதமாய் குழந்தைகள் குவிந்திருந்தனர். என்னுடைய குழந்தைப் பருவத்தில் சாண்டா கிளாஸ் கதைகள் எனக்குத் தெரியாது. ஆனால், சாண்டா கிளாஸுடன் வாழ்ந்தேன் என்ற பெருமிதம் எனக்கு உண்டு. என்ன ஒண்ணு, என் பொண்ணுக்கு இந்த சாண்டா-வ காட்ட முடியவில்லையே என்ற வருத்தம்தான். அவகூட ஒருநாள் சாண்டாவா மாறலாம்! `அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா' என்ற பாடலின் வரி போல, நான் நம் குடும்பத்தின் பாரம்பர்யமாக அடுத்த தலைமுறைக்குக் கடத்த விரும்புவது, இந்த மாதிரியான விஷயங்களை மட்டுமே.
என் பள்ளிப் பருவம் இனிமையான தருணங்களை மட்டுமே உள்ளடக்கியதா என்றால் இல்லை. நானும் பத்தாவது பன்னிரண்டாவது எல்லாம் படித்திருக்கிறேன். சும்மா வைக்குமா இந்தச் சமூகம்? நான் பத்தாவது படித்துக்கொண்டிருக்கும்போது நரை கூடிக் கிழப்பருவம் எய்திய (பாரதியின் மொழியில் திட்டுவதுகூட சுகம்தான்) ஓர் உறவுக்காரர் இருந்தார். அவர் ஒருநாள் குறிப்பிட்ட மதிப்பெண்ணைச் சொல்லி, நீ அதை அடைந்தால் உனக்கு தங்கவளையல் என்றார்.

எனக்கு தங்கம், மதிப்பெண் இரண்டிலும் ஆர்வம் கம்மி. என்னைப் பார்க்கும் இடத்திலெல்லாம் இதையே சொல்லி வெறுப்பு ஏற்றுவார். திருமண வீடு, விருந்தினர் கூடும் இடம், அனைத்து பொது இடங்களிலும் பாரபட்சம் பார்க்காமல், 'நீ இந்த மதிப்பெண்ணை எடுத்தால் உனக்கு தங்கவளையல்' என்று கூறி, சபைதனில் தங்கவளையல் போட்டதற்கான அடையாளத்தைப் பெற்றுக்கொள்வார். அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சிலர் ( எனக்கு சம்பந்தமே இல்லாதவர்கள்) `தங்கவளையலை எப்படியாவது வாங்கிடு’ என்று அறிவுரை கூறிவிட்டுச் செல்வார்கள்.
என்னுடைய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வந்துவிட்டது. என் உறவுக்காரர் சொன்ன இலக்கையும் நான் அடைந்திருந்தேன். ஆனால், என் உறவுக்காரர் கூறிய மதிப்பெண் இலக்கும் வளையலும் என் நினைவில் இல்லை. தேர்வு முடிவுக்குப் பிறகு நான்கு நாள்கள் கழித்து, ஓர் அவசர வேலையாக என் உறவுக்காரர் என் வீட்டுக்கு வந்தார். அவரின் வருகையை முன்கூட்டியே ஜன்னல் வழியே அறிந்தேன். எங்கே ஒளிந்து கொள்ளலாம் என்ற இடம் தேடி குளியலறையைத் தேர்ந்தெடுத்தேன்.

என் அப்பா அம்மாவுடன் சுமார் 3 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். நான் மூன்று மணி நேரமும் குளியலறையில் செலவழித்தேன். எங்கள் வீட்டு குளியலறையில் பாட்டு பாடினால் வெளியில் கேட்கும் என்பதால், சத்தமில்லாமல் நடனமாடத் தொடங்கினேன். குளியலறையின் ஈரமான தரை சற்று வழுக்கும் விதமாக இருக்கும். அது, மைக்கேல் ஜாக்சன் மூன் வாக் நடனத்துக்கு ஏதுவானதாக இருக்கும். இந்த பாத்ரூம் தரையை மட்டும் நம்ம ஸ்கூல் ஸ்டேஜா மாத்திட்டா, நான்தான் அடுத்த மைக்கேல் ஜாக்சன் என்று ஸ்கூலே கொண்டாடும்.
`டேஞ்சரஸ்... வெளிய இருக்கிற ஆளு ரொம்ப டேஞ்சரஸ்’ என்று, அப்படியே மைண்டு வாய்ஸில் பாடி, காற்றில் கண்ணாடியத் தொடச்சு ஆடிக்கொண்டிருந்தேன். அப்படியே முழுசாக மைக்கேல் ஜாக்சனாக மாறிக்கொண்டே இருந்தேன். நடு நடுவில் வெளியில் என்ன பேசுகிறார்கள் என்று காதுகொடுப்பேன். அப்போது, என் மதிப்பெண் பற்றியும் பேச்சு வந்தது. உறவுக்கார ரிடமிருந்து மூச்சும் பேச்சும் மதிப்பெண் பற்றி வரவில்லை. வந்தவர் வெளியே செல்வதற்கான அறிகுறிகள் ஒன்றும் தென்படவில்லை.

நான், என் நடனத்தைத் தொடர ஆரம்பித்தேன். மைக்கேல் ஜாக்சனின் சுருள்முடி மட்டுமே என்னிடம் இல்லை என எண்ணினேன். 10 முடிகளை மட்டும் எடுத்து நீர் தொட்டு சுருட்ட ஆரம்பித்தேன். அது சுருண்டு வந்ததும், அடுத்த பத்து முடிகள், இப்படியே பத்து பத்தாக , பத்து பத்தாக , இப்படியே அடுத்த ஒன்றரை மணி நேரத்தைச் செலவழித்தேன். உறவுக்காரர் வெளியே சென்றதை அடுத்து, நான் வீட்டுக்குள் பிரவேசித்தேன். எதற்காகக் குளியல் அறையில் இருந்தேன் என்பதை வீட்டில் உள்ள அனைவரும் யூகித்திருந்தனர்.
`இன்று இரவு முழுவதும் அந்த உறவுக்காரர் நம் வீட்டிலேயே தங்கி இருந்தால் நீ என்ன செய்திருப்பாய்?' என்று என் அப்பா கேட்டார். அம்மா குறுக்கிட்டு, `வேற என்ன செஞ்சு இருப்பா, விடிய விடிய புன்னகை மன்னன் ரேவதி மாதிரி டான்ஸ் ஆடியிருப்பா. என்ன, அது மொட்டைமாடி. இது பாத்ரூம்!' (அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் தன் குழந்தை என்ன மாதிரி திருதாளி வேலை செய்கிறது என்று ) ( பி. கு : இயக்குநர் ராம் குரலில் படிக்கவும்).

`நம் உறவுக்காரர் இவ்வளவு நாள் உன்னை டார்ச்சர் செய்ததற்கு உன்னுடைய மதிப்பெண்ணை காமித்து தங்கவளையல் வாங்கிப் போட்டிருக்க வேண்டாமா?' என்று என் தங்கை கேட்டாள். `அப்படி நான் அவரிடம் வாங்கி போட்டிருந்தால், அது தங்க வளையல் இல்லை, அது கை விலங்கு'. நான் சொன்னதை அம்மாவும் அப்பாவும் சிறிய புன்னகையுடன் ஆமோதித்தனர். என் உறவுக்காரர் ஒருவேளை என்னை ஊக்குவிப்பதற்காகக்கூட சொல்லியிருக்கலாம்.
என் மதிப்பெண் வந்தபோது, அவர் கையில் பணத்தட்டுப்பாடுகூட வந்திருக்கலாம். ஆனால், சமூகத்தால் ஊடுருவப்பட்ட கேள்விகளை நாம் கேட்பது 15 வயது குழந்தையிடம் என்ற எண்ணம் சிறிதும் அற்றவராக இருப்பதே ஆகப் பெரிய வருத்தம்.

ஒருவேளை எனக்கு இதுபோல பல உறவுக்காரர்களும் அக்கம்பக்கத்தினரும் வாய்க்கப்பெற்று, அவர்களின் பேச்சை பெரிதாக நினைத்து வருந்தும் பெற்றோர்கள் கிடைக்கப்பெற்று, என்னுடைய மதிப்பெண் இவர்களின் கற்பனை எல்லையை தொடாதபோது, நான் அதே குளியலறையில் விளையாட்டாக சுருட்டும் முடிகளுக்குப் பதிலாக இப்போது என் கழுத்தை சுருக்கிக்கொள்கிறேன்.
(என் இறுக்கத்தை அம்மாகூட கண்டுபிடிக்கமுடியாத அந்த ஒரு நொடியில்) நம் சமூகத்தில் தெரிந்தோ தெரியாமலோ இந்த மாதிரி கேள்விகள் ஊடுருவி நிற்கின்றன. இனிமேலாவது, நாம் கேட்கும் கேள்வியில் குழந்தைகளின் வாழ்வு சுருங்கிவிடக்கூடாது என்பதில் கவனம்கொண்டு, நம் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அன்பின் வழி நிற்போம்!
Be less curious about people and more curious about ideas -Marie Curie
-மதுரா ரஞ்சனி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.