Published:Updated:

`ஐஐடி பாம்பேயில் ஐஸ்வர்யா ராய் நடித்த தமிழ் நாடகம்!' - வாசகர் பகிர்வு #MyVikatan

எனக்கு பக்கென்று இருந்தது. மாடு பிடிக்காம பொங்கல் நல்லாருக்காது, சல்லிக்கட்டு ஏற்பாடு பண்ணுங்க என்று யாராவது சொல்லிவிடுவார்களோ என்று எனக்கு தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு, கலாசார அதிர்ச்சி (Cultural Shock) ஏற்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தியா போன்ற பல கலாச்சாரங்கள் உள்ள நாட்டில், சிறு நகரங்களிலிருந்து பெரு நகரங்களுக்குச் செல்லும்போதுகூட கலாசார அதிர்ச்சி ஏற்படும்.

ஐஐடி பாம்பே
ஐஐடி பாம்பே

மதுரை, காரைக்குடி போன்ற நகரங்களில் படித்துவிட்டு ஐஐடி பாம்பேவிற்கு படிக்கப் போனேன். ஐஐடி பாம்பேவின் வருடாந்தர கலாசார கொண்டாட்டம் Mood Indigo. இதில் கலந்துகொள்ள, மும்பையில் உள்ள பல கல்லூரிகளிலிருந்து மாணவ மாணவிகள் வருவார்கள். ஆய்வகத்திற்குப் போகிற வழியில் உள்ள Nescafe யில் (இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராடுகிற இடம்) காபி குடித்துவிட்டு செல்வது எனது வழக்கம். அங்கே, Mood Indigo-வில் கலந்துகொள்ள வந்த ஒரு பெண், காபி குடித்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்க, தூங்கி எழுந்து நேராக காபி குடிக்க வந்துவிட்டாரோ என்று தோன்றியது! எனக்கு இது ஒரு கலாசார அதிர்ச்சி. ஆனால், எப்படி உடை அணிய வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. அதில் மற்றவர்கள் விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை என்பதை அன்றைக்குக் கற்றுக்கொண்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விமரிசையாக நடக்கும் Mood Indigo அளவிற்கு இல்லையென்றாலும், தமிழர்களுக்கென்று ஒரு விழா நடத்தினால் நன்றாக இருக்குமே என்று சிந்தித்தோம். ஐஐடி பாம்பேயின் முதல் கலாசார அமைப்பு, 'தமிழ் மரபு மன்றம்'. அந்த அமைப்பு செயல்படாமலிருந்தது. அந்த அமைப்பில் தலைவர், செயலாளர் என்ற இரண்டு பதவிகள் இருந்தன. நண்பர்கள் என்னை செயலாளராக இருக்க கேட்டுக்கொண்டனர். தலைவராக ஒரு பேராசிரியர் இருக்க வேண்டும். இன்றைக்கு பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், மண்ணியல் தொழில்நுட்பம் மற்றும் கோள்களின் இயக்க மையத்தின் இயக்குநராகவும் இருக்கிற பேராசிரியர் அன்பழகன், அங்கே துணைப் பேராசிரியராக இருந்தார். அவரிடம் தலைவராக இருக்கக் கேட்டோம். மொழி மற்றும் இனப்பற்று உள்ள அவர், எங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

ஐஐடி பாம்பே அடிக்கல் நாட்டு விழா...
ஐஐடி பாம்பே அடிக்கல் நாட்டு விழா...

பொங்கல் விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டோம். அப்போது பேராசிரியர் அன்பழகன் சொன்னார், "சிலம்பாட்டம் இல்லாம பொங்கல் சிறப்பா இருக்காது!" எனக்கு பக்கென்று இருந்தது. மாடு பிடிக்காம பொங்கல் நல்லாருக்காது, சல்லிக்கட்டு ஏற்பாடு பண்ணுங்க என்று யாராவது சொல்லிவிடுவார்களோ என்று எனக்கு தலைசுற்ற ஆரம்பித்து விட்டது. நல்ல வேளையாக அப்படி யாரும் சொல்லவில்லை. பணம்தானே ஃபங்க்ஷனுக்கு முக்கியம்! நண்பர்கள் சிலர் வசூலுக்குக் கிளம்பினோம்.

நான், அமீரகத்தில் இருக்கும் கண்ணன், நார்வேயில் இருக்கும் பழனி ஆகியோர் வசூலுக்குப் போவோம். ஏற்கெனவே நடந்த தமிழ் மரபு மன்ற விழாக்களில், சாப்பாடு நன்றாக இல்லை என்று பலர் குறிப்பிட்டார்கள். ஐஐடி-க்கு வெளியில் இருந்து சமையல் செய்பவர்கள் வருகிறார்கள். உணவு நன்றாக இருக்கும். எனவே, தவறாமல் கலந்துகொள்ளுங்கள் என்று வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருந்தார் கண்ணன். மும்பையில் தமிழர்கள் செறிவாக வாழும் ஒரு பகுதி, மாதுங்கா. அங்கே ஒரு நல்ல சமையல்காரரை பழனி கண்டுபிடித்தார். அவர் வீட்டுக்குப் போனோம். ஒரு சாப்பாடு 125 ரூபாய் சொன்னார். சாப்பாட்டில் உள்ள உணவு பதார்த்தங்களையும் சொன்னார். தயிர்சாதத்திற்குப் பதிலாக, மோர் கொடுத்தீர்களானால் பால் மிச்சமாகும். கொஞ்சம் சாப்பாட்டின் விலையும் குறையும் என்று பேரத்தை ஆரம்பித்தார் கண்ணன். இப்படி பேரம் பேசுபவர்களை இதற்கு முன்பு அந்த சமையல்காரர் சந்தித்ததில்லை என்பதை அவர் முகபாவத்திலி ருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. கண்ணன் விட்ட இடத்திலிருந்து பழனி தொடங்கினார்.

எங்கள் வசூல் பற்றிய மீம்..
எங்கள் வசூல் பற்றிய மீம்..

ஒருவருக்கு 50 ரூபாய்தான் வசூல் செய்கிறோம். அதில்தான் மற்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஐஐடி-யில் சமைத்தால், அங்குள்ள குடும்பங்கள் உங்களை சமைக்க அழைப்பார்கள். இதன்மூலம் தொழில் பெருகும் என்று Business Plan ஐ விளக்கினார். இப்படியாக கண்ணனும் பழனியும் பேசியதில், ஒரு சாப்பாடு 60 ரூபாயில் வந்து நின்றது. மொத்த பேரத்தின்போதும் காபி குடித்துவிட்டு எழுந்து வந்தேன். வெளியே வந்த பிறகு, 'இவ்வளவு கெஞ்ச வேண்டுமா' என்று கண்ணனிடமும் பழனியிடமும் கேட்டேன். 'பொதுக்காரியத்திற்காக கௌரவம் பார்க்காமல் எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கிப் பேசலாம்' என்று ஒரு வாழ்க்கை பாடம் நடத்தினார்கள்.

அடுத்து, நிகழ்ச்சிகள் நடத்துவது பற்றி திட்டமிட ஆரம்பித்தோம். நாடகத்தில் நடிக்க பெண்கள் வேண்டும். எங்களுக்கு எந்த தமிழ்ப் பெண்ணையும் தெரியவில்லை. நாங்கள் கண்டறிந்தவர்களிடம் நாடகம் நடிக்கக் கேட்டபோது மறுத்துவிட்டார்கள். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், பெண் வேடங்களில் ஆண்கள் நடித்தார்கள். 2002-ம் ஆண்டிலும் ஐஐடி பாம்பேயில் இதே நிலை தான். என் நண்பர் ஒருவர் பெண்ணாக நடித்தார்.

ஐஐடி நண்பர்கள்
ஐஐடி நண்பர்கள்

மன்றச் செயலாளர் என்கிற முறையில் வரவேற்புரை ஆற்றுவது என் வேலையாக இருந்தது. "தமிழகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு எப்போதும் இரண்டாவது இடம்தான். கலைஞர் தலைவர், பேராசிரியர் அன்பழகன் பொதுச்செயலாளர். கலைஞர் முதல்வர் என்றால், பேராசிரியர் அன்பழகன் கல்வியமைச்சர். ஆனால், ஐஐடி பாம்பேயில் பேராசிரியர் அன்பழகனுக்கு முதலிடம் கொடுத்திருக்கிறோம்" என்று சொன்னபோது, அரங்கில் இருந்த 10 பேரும் கை தட்டினார்கள். ஒரு எளிய தமிழ்ப் பிள்ளையை ஊக்குவிப்பதற்காகக் கைதட்டுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், 'ஆளே இல்லாத ஹாலில் கதறுகிறானே' என்று பரிதாபத்தில் கை தட்டியிருக்கிறார்கள் என்று பின்னர் தெரிந்துகொண்டேன்.

விஜய் என்ற மாணவன், பல வாத்தியங்களின் ஒலியைத் தன் குரலில் கொண்டுவந்து எல்லோரையும் கவர்ந்திழுத்தான். தமிழ் மரபு மன்றம் என்ற காரணத்தால், தமிழின் சிறப்புகளை எங்களால் இயன்றளவு சொல்லிக்கொண்டிருந்தோம். தமிழின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி பேசியபோது, கவிதை நயத்துடன் திட்டிய காளமேகப் புலவர் பாடலை சுட்டிக்காட்டினேன். காளமேகப் புலவருக்கு முன் அமர்ந்து சாப்பிட்டவரின் குடுமி அவிழ்ந்து சாப்பாட்டில் விழுந்துவிட்டது. சோற்றில் விழுந்த தலை முடியை குடுமியாக முடிவதற்கு நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று முடிவுசெய்து, இடது கையால் முடியைத் தூக்கி பின்னால் போட்டிருக்கிறார். அப்போது, முடியில் ஒட்டியிருந்த சோறு காளமேகப் புலவர் மீது விழுந்துவிட்டது. கோபமான காளமேகப் புலவர் பாடிய பாடல்,

ஐஐடி பாம்பே
ஐஐடி பாம்பே

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்

பொருக்கு உலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக்

கோட்டானே நாயே குரங்கே உனை ஒருத்தி

போட்டாளே வேலையற்றுப் போய்.

இந்த பாடலைச் சொல்லிவிட்டு, இந்த நயம் இன்றைக்கும் தமிழில் இருக்கிறது என்று அந்தச் சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டினேன்.

எழுத்தாளர் ஜெயமோகன், திராவிட எழுத்துக்கள் இலக்கியம் ஆகாது என்று சொல்லியிருந்தார். அதற்கு கலைஞர் முரசொலியில், "வாலைச் சீண்டும் வானரம்" என்று கவிதை நடையில் பதிலளித்தார். அந்த கவிதை இதுதான்...

Karunanidhi
Karunanidhi

விலை போகாப் புத்தகங்கள்

ஏழெட்டு எழுதிவிட்டு விற்பனையாகாமல்

ஈயோட்டிக் கொண்டிருக்கும்

வெத்துவேட்டு விருதா எழுத்தாளர் சிலபேர்

– நூலை வெளியிடுபவர் ஜெயகாந்தன் என்றால் –

அந்த ஒளியினாலே உலகிற்குத் தெரியமாட்டோமா என்று

விழா ஏற்பாடு செய்து

விளம்பரம் தேடுகின்றார்

வாயை மூடிக்கொண்டு

அந்த வேலையைப் பார்க்காமல்

வம்புக்கு வருகின்றார் நம்மிடமே

தும்பறுந்த கன்றுகளாய்த் துள்ளிக் குதிக்கின்றார்

துடுக்குமிகக் கொண்டு அள்ளி இறைக்கின்றார் சகதியை

அண்ணா மீதும் என் மீதும்

அறிஞர் வ.ரா. மீதும் அன்பு நண்பர் தென்னரசு மீதும்

அறியமாட்டோமாம் இலக்கியம் நாங்கள் –

இந்த நரியைக் குளிப்பாட்டி

நடு வீட்டிலே வைத்தால் இப்படி

நாலும் சொல்லித்தான்

நடுக்காட்டுக்கு ஓடி அய்யோ வாலும் போச்சே என்று

வாய்விட்டு ஊளையிடும்

அக்ரகாரத்து அதிசய மனிதர் எனப்பட்டம் சூட்டி

அண்ணாவின் பாராட்டைப் பெற்ற வ.ராவுக்கு,

இலக்கியத் திறமை கிடையாதாம் இளிக்கிறது

பித்தளை பொன்னைப் பார்த்து

தென்னாட்டு பெர்னாட்ஷா என்று

பேராசிரியர் கல்கியே போற்றிப் புகழ்ந்த

காஞ்சித் தலைவன் எழுத்தில் இலக்கிய மணம் இல்லையாம்

– இவருக்குக் கற்பூர வாசனை தெரியாதது கற்பூரத்தின் குற்றமாம்

அ.ச.ஞாவும் அரும்பெரும் ஞானப் புலவர்களும்

அணிந்துரை வழங்கிய குறளோவியமும்,

சங்கத் தமிழும் தொல்காப்பியப் பூங்காவும் பூம்புகாரும்

வெறும் திராவிட எழுத்துக்களாம்

இந்தத் ‘ ‘தீராவிடம் ‘ ‘ சொல்லுகிறது –

தென்னரசின் ‘ ‘சேதுநாட்டுச் செல்லக்கிளி ‘ ‘

ஆனந்தவிகடனில் தொடராக வந்து

அனைவரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று

கருத்தைக் கவர்ந்ததைக்

கபோதிகள் அறியாரோ ?

வனவிலங்குச் சரணாலயம் காண வருவோர் எல்லாம்

வளைந்து நெளிந்த கொம்பு மான்களையும்

வலிமைமிகு யானைக்கூட்டத்தையும்

வட்டமிட்டு வட்டமிட்டுப் பார்ப்பது கண்டு

வானரம் ஒன்று வருத்தமும் பொறாமையும் கொண்டு

– யானையின் வாலைச் சீண்டி

அதில் தொங்கி வேடிக்கை காட்டியதாம்

வந்தவர்கள் தன்னையும் பார்ப்பார்களென்று

அந்தத் தந்திரம் செய்ததாம்

நல்லவேளை வாலைச்சீண்டியது

– யானையின் காலைச் சீண்டியிருந்தால்?

இந்தப் பாடல்களை மக்கள் மிகவும் ரசித்தார்கள். ஆனாலும், நாடகத்திற்கு பெண்கள் கிடைக்கவில்லை. அப்போது என் நண்பர் ஐஸ்வர்யா ராயை நம் நாடகத்தின் நாயகி ஆக்கிவிடலாம் என்றார். நகைச்சுவைக்காகச் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால், அதைச் செய்துகாட்டினார். ஐஸ்வர்யா ராய் நடித்த திரைப்படங்களிலிருந்து காட்சிகளை வெட்டி, அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் வசனங்களை எழுதி, நாராயண மூர்த்தி என்ற நண்பருக்கு பயிற்சி அளித்தார். ஐஸ்வர்யா ராய் நடித்த காட்சிகள் மேடையில் உள்ள திரையில் ஒளிபரப்பப்படும். அவர் பேசி முடித்தவுடன் நாராயணமூர்த்தி தன் வசனங்களைப் பேசுவார். எடிட்டிங்கும் நாராயணமூர்த்தியின் நடிப்பும் அற்புதமாக இருந்தது. ஒரு காட்சியில், நாயகனை அணைப்பதற்காக ஐஸ்வர்யா ராய் படிக்கட்டுகளில் இறங்கிவருவார். அந்தச் சமயத்தில், மேடையின் ஓரத்தில் இருந்து ஐஸ்வர்யா ராயை நோக்கி ஓடுவார் நாராயணமூர்த்தி. இந்தக் காட்சி மிக தத்ரூபமாக இருந்தது. இப்படித்தான் பெண்கள் இல்லாத குறையைக் கையாண்டோம். இதுதான் ஐஐடி.

ஐஐடி பாம்பே
ஐஐடி பாம்பே

பல பிரச்னைகளுக்கு ஐஐடி மாணவர்களிடம் தொழில்நுட்பத் தீர்வு இருக்கும். அதனால்தான் அமெரிக்க நாடாளுமன்றம், ஐஐடி மனித குலத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியது. வேறு எந்தக் கல்வி நிறுவனத்துக்கும், அமெரிக்க கல்வி நிறுவனங்கள் உட்பட, தரப்படாத அங்கீகாரம் இது. இந்த நேரத்தில், தொலைநோக்குப் பார்வையுடன் ஐஐடி -க்களை நிர்மானித்த பண்டித நேரு அவர்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.

-கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு