Published:Updated:

ஆன்லைன் ஷாப்பிங்கில் விழாக்கால தள்ளுபடி: செய்வதும், செய்யக் கூடாததும்..! #CheckList

Online Shopping
Online Shopping

வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்துமுடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒருசில டெக்னிக்குகளைப் பின்பற்றுகின்றன.

பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் புதுப்புது துணி ரகங்களுக்கான விளம்பரங்கள் நிறைந்திருக்கின்றன. தள்ளுபடி விற்பனையும் மக்களை ஈர்த்தவண்ணமிருக்கிறது. `வியாபாரத்தில் நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை' என்று போட்டிப் போட்டுக்கொண்டு தள்ளுபடிகள் தருகின்றன ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள். வணிக வலைதள நிறுவனங்கள் மட்டுமன்றி உணவு விநியோக நிறுவனங்கள்கூட இயல்பைவிடக் கூடுதல் சலுகைகள் வழங்குகின்றன.

Amazon
Amazon

ஆன்லைன் ஷாப்பிங் வளர்ச்சி ஒருபுறம் இருக்க, ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கடந்த சில வருடங்களாக ஆன்லைன் விற்பனையில் அதிகளவில் குறைபாடுகள் இருப்பதாகத் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனைத் (Department of Consumer Affairs’ National Consumer Helpline (NCH)) தொடர்புகொண்டு பல்வேறு வாடிக்கையாளர்கள் அதிகளவில் புகார்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஃபிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் உட்பட பல்வேறு ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மீதும் புகார்கள் குவிந்துள்ளன.

ஆகஸ்ட் 2016-ம் ஆண்டு முதல், மார்ச் 2019 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 8,373 புகார்கள் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனில் பதிவாகியிருக்கின்றன.

வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்துமுடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒருசில டெக்னிக்குகளைப் பின்பற்றுகின்றன. இருந்த இடத்தில் இருந்தபடி `ஆர்டர்’ கொடுக்கும் வசதி, பில் தொகையை முன்கூட்டியோ அல்லது பொருளைப் பெறும்போதோ அளிக்கும் வசதி போன்றவை மூலம் வாடிக்கையாளர்களை வசீகரிக்கின்றன.

`லாஜிக்கல் சர்வே’ என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில், 38 சதவிகிதம் பேர் தாங்கள் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் போலியான பொருள்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அந்தப் போலியான பொருள்களின் பட்டியலில் வாசனைத் திரவியங்கள், காலணிகள் முன்னிலை வகிக்கின்றன. இப்படி சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் எப்படி ஆன்லைன் ஷாப்பிங் செய்வது?

தள்ளுபடி
தள்ளுபடி

ஆன்லைன் ரிவ்யூ படிக்க!

பொருள்களை வாங்கும்போது அனைவரும் செய்யும் பொதுவான விஷயம், அந்தப் பொருள்களுக்கான மதிப்பீடுகளை (ரிவ்யூ) பார்ப்பது. ஆனால், அதனுடன் விற்பனையாளர் மீதான மதிப்பீடுகளையும் பார்க்கவேண்டும். இன்று இணைய வர்த்தக நிறுவனங்கள், பொருள்களை வாங்குபவர்களிடம் தங்கள் அனுபவத்தை மதிப்பிட ரிவ்யூ செய்யுமாறு கூறுவதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளன.

டிக்கெட் புக்கிங்... பயணத்தைச் சுலபமாக்கிய ஆன்லைன் தளங்கள்!

இந்த ரிவ்யூக்கள் மூலம் அந்தப் பொருள்கள் மற்றும் அதன் விற்பனையாளர்களை மதிப்பிட முடியும். மேலும், இவ்வாறு உங்கள் அனுபவத்தை மதிப்பிடுவதன் மூலம் குறைகளை அந்த இணைய நிறுவனத்துக்குத் தெரியப்படுத்த முடியும். ஒரு குறிப்பிட்ட விற்பனையாளர் மீது அதிக எதிர்மறையான விமர்சனங்கள் எழும்போது, அதன் அடிப்படையில் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

ஒப்பீடு செய்யுங்கள்!

ஒரு பிரபலமான நிறுவனத்தின் பொருள்களை வாங்க நினைக்கும்போது, அந்த நிறுவனத்தின் இணையதளத்துக்குச் சென்று அதன் மாடல் எண், அம்சங்கள் மற்றும் பிறவிஷயங்களைத் தெரிந்துகொண்டு அந்த இணைய வர்த்தக நிறுவனத்தில் குறிப்பிட்டுள்ளவற்றுடன் ஒப்பிட வேண்டும். ஆனால், அந்தப் பொருள்களுக்குத் தற்போது தேவை அதிகம் இல்லையெனில், அதிக தள்ளுபடி வழங்குவதும் வழக்கமானதுதான். நீங்கள் ஒரு பொருளை ஏற்கெனவே வாங்கியிருந்து அதைப் பரிசோதிக்க விரும்பினால், `லோகோ’ சரியான இடத்தில் உள்ளதா என்பது போன்ற நுணுக்கமான விஷயங்களைச் சரிபார்க்கலாம். அப்பொருள் செல்போனாக இருக்கும்பட்சத்தில், ஐ.எம்.இ.ஐ. எண்ணைச் சரிபார்க்கலாம்.

தள்ளுபடி
தள்ளுபடி

போலி பிராண்டுகள் எச்சரிக்கை!

சமீபத்தில், புதிதாக வெளியான ஒரு பொருளை அதிக தள்ளுபடிக்குத் தருகிறார்கள் என்றால் அது போலியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். உதாரணமாக, `ஸ்போர்ட்ஸ் ஷூ’ போன்றவற்றில், அச்சுஅசலாக உண்மையானதைப் போலவே காட்சியளிக்கும் போலிகளை, சிறப்புத் தள்ளுபடியில் பாதி விலைக்குத் தருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம்.

பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 100 ரூபாய்க்குத் தருகிறோம் அல்லது 500 ரூபாய்க்குத் தருகிறோம் என்று அடிக்கடி மெயில் வரும். இது மாதிரியான தளங்களை ஒதுக்குவது நல்லது. இப்போதெல்லாம் பிராண்டு லோகோவில் சிறு மாற்றங்களை ஏற்படுத்தி, பிராண்டு பெயர்களில் எழுத்துப்பிழையை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். அதனால், நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார்ப்பதும் அவசியம். பெரும்பாலும் காஸ்மெட்டிக் பிராண்டுகள் மற்றும் கேட்ஜெட்களில் இதுமாதிரியான பித்தலாட்டங்கள் அதிகம் நடைபெறுகின்றன.

Online Shopping
Online Shopping

கேஷ் ஆன் டெலிவரி... ப்ளஸ் பாயின்ட்!

ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை எனத் தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்கத் தோன்றும். அந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியை, ஷாப்பிங் செய்யும் தளம் வழங்குகிறதா என கவனித்து வாங்கவும். அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிகமிகப் பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள். இல்லையென்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிற மாதிரி (Cash On Delivery) வைத்துக்கொள்ளுங்கள். ஆர்டர் செய்த பிறகு உங்களுக்கு வரும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை, பொருள் உங்கள் கைக்குக் கிடைக்கும் வரை பத்திரமாக வைத்திருக்கவும்.

Cash
Cash

ஆஃபர் அவசரங்கள் வேண்டாம்!

வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்து முடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒருசில டெக்னிக்கைப் பின்பற்றுகின்றன. அதாவது, `பொருளை வாங்க இரண்டு நிமிடங்களே அவகாசம் இருக்கிறது. அதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்குக் கிடைக்காது' என்று அவசரப்படுத்துவார்கள். இதுமாதிரியான ஷாப்பிங்கைத் தவிர்ப்பதுதான் நல்லது. அதேபோல, கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலமும், ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. குலுக்கல் முறையில் இலவசமாக உங்களுக்குப் போன் அல்லது கம்ப்யூட்டர் கிடைத்திருக்கிறது. அதற்கு உங்களுடைய விவரங்களை அனுப்ப வேண்டும் என்று மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ் வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளக் கூடாது.

ரிட்டர்ன் பாலிசி மோசடி!

பொருள்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலான தளங்கள் மோசடி செய்கின்றன. சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயே விதிமுறைகளைப் பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கியமான விதிமுறைகளை நம் கண்ணுக்குத் தெரியாதபடி போட்டிருப்பார்கள். அந்த விதிமுறையை நாம் கவனிக்கத் தவறிவிட்டு, பொருள்களை வாங்கிய பிறகு அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெரிவித்தால், `நாங்கள்தான் விதிமுறைகளை ஏற்கெனவே சொல்லியிருக்கிறோமே' என்பார்கள்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபாடு கொண்ட மனைவி! - பிறந்தநாளுக்கு கணவர் கொடுத்த`மாத்தியோசி' கிஃப்ட்

பெரும்பாலும் பொருள்களை ரிட்டர்ன் எடுத்துக்கொள்வதிலேயே இந்தப் பிரச்னை வரும். மேலும், உண்மையாக வாடிக்கையாளர்களின் மீது அக்கறைகொண்டிருக்கும் தளங்கள், டிவி வாங்கினால்கூட அதைக் கொண்டுவந்து தருவதற்கு எந்தக் கட்டணத்தையும் கேட்காது.  அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும். பொருளைக் கொண்டுவந்து தர அதிகக் கட்டணம் கேட்கும் இணையதளங்களை நம்பக்கூடாது. பொருள்களில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் உடனே அதைத் திருப்பி அனுப்பிப் பணத்தைத் திரும்பப் பெறலாம். ஆனால் இது, உங்களால் சேதப்படுத்தப்பட்ட பொருள்களுக்குப் பொருந்தாது.

மின்னணுப் பொருள்கள் போன்ற சிலவற்றுக்கு மட்டும் பொதுவாக திரும்பப்பெறும் காலவரம்பு 10 முதல் 15 நாள்கள் எனக் குறுகியதாக இருக்கும். இதில் 15 நாள்கள் என்பது சில தளங்களில் நீங்கள் பொருளைப் பதிவு செய்த நாளிலேயே துவங்கிவிடும், அது உங்களிடம் வந்து சேர்ந்த நாளில் இருந்து துவங்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மைண்டு கேம்!

100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பொருள், ஆன்லைனில் தள்ளுபடி போக 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு மைண்டு கேம் (Mind Game) என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு தள்ளுபடியை அறிவிக்கும்போது, விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக தங்களுக்குத் தேவையில்லாத புதிய பொருள்களையும் மக்கள் வாங்குவார்கள். அதன் பின்னர், எந்த ஒரு பொருளை வாங்க நினைத்தாலும், முதலில் அமேசான் அல்லது ஃபிளிப்கார்டில் விலையைப் பார்த்து விட்டுத்தான் வாங்குவார்கள். உண்மையில் ஆன்லைன் தளங்களில் பொருள்கள் வாங்குவதற்கு, நமக்குத் தெரியாமலேயே நாம் பழக்கப்படுகிறோம் என்பது ஷாக்கிங்கான விஷயம்.

Shopping
Shopping

தங்களது வாடிக்கையாளர்கள் வட்டத்தை அதிகரிக்கவே இந்த வகையான தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக அந்நிறுவனங்கள் செய்யும் செலவுதான் இதுபோன்ற தள்ளுபடி அறிவிப்புகள். இதை `Cash burn' என்கிறார்கள் வல்லுநர்கள். அதாவது ஒரு நிறுவனம் தன்னுடைய வளர்ச்சிக்காகச் செய்யும் செலவு. இதனுடன் வங்கிகளும் சேர்ந்து கொண்டு No Cost EMI போன்ற சலுகைகளை வழங்குகின்றன. பொதுவாக எந்த வங்கியும் வட்டி இல்லாமல் கடன் கொடுக்காது. அப்படி இருக்க No Cost EMI என்பது, அந்தப் பொருளின் விலையில் வங்கிக்கான கட்டணமும் மறைமுகமாகச் சேர்க்கப்பட்டிருக்கும் அல்லது அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, கமிஷன் தொகையை வங்கிகள் பெற்றுக்கொள்ளும்.

கேஷ்-பேக் மோசடி!

அமேசான், ஃபிளிப்கார்டில் வாங்கும்போது நம்மை ஈர்க்கும் மற்றொரு விஷயம் கேஷ் பேக் (cash back). 10 சதவிகிதம் என்று பெரிய எழுத்துகளில் குறிப்பிடப்பட்டிருக்கும், உள்ளே சென்று பார்த்தால், 10 சதவிகித கேஷ் பேக் (cash back)-ல் அதிகபட்சம் 1000 ரூபாய்தான் கிடைக்கும் என்று இருக்கும். 30,000 ரூபாய் செல்போன் வாங்கினால், வங்கிகளைப் பொறுத்து அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாய்தான் கேஷ் பேக் (cash back) கிடைக்கும்.

தள்ளுபடி
தள்ளுபடி

ஒரு சில நேரங்களில் 10,000 ரூபாய் வரை கூட கேஷ்பேக் (cash back) அறிவிப்புகள் வரும். ஆனால், அவை உடனடியாக வழங்கப்படாது. ஒவ்வொரு மாதமும் உங்கள் கார்டில் பாயின்ட் ஆக வரவு வைக்கப்பட்டு, பின்னர் அதைப் பணமாக மாற்றிக்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல, வீட்டில் ஒரு பொருள் இருந்தாலும், அதை மீண்டும் வாங்க வைப்பதுதான் காம்போ ஆஃபர் தள்ளுபடி. இதுவும் ஒரு வியாபார நுணுக்கம்தான். அதில் கிடைக்கும் பொருளின் தரம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

Vikatan

வாரன்டி இருக்கிறதா?

பல இணையதளங்கள், உற்பத்தியாளர் வாரன்டியுடன்தான் (Manufacturer Warranty) பொருளை விற்கின்றன. குறிப்பிட்ட ஒரு பொருள் சந்தை விலையைவிட மிகக் குறைவாக இருந்தால், உற்பத்தியாளர் வாரன்டி தராமல் மோசடி செய்துவிடுகின்றன சில நிறுவனங்கள். அப்படியே வாரன்டி தந்தாலும் அதற்கான பொறுப்பு அந்த ஆன்லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மைக் குழப்பி ஏமாற்றிவிடும். ஜாக்கிரதை!

அடுத்த கட்டுரைக்கு