Published:Updated:

"பிறர் உதவில வளர்ந்தோம், இப்போ முடிஞ்சத செய்யறோம்!"- 50 பேருக்கு உணவளிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உணவு பொட்டலம் வழங்கும் அந்தோணிராஜ்
உணவு பொட்டலம் வழங்கும் அந்தோணிராஜ்

தூத்துக்குடியில் ஒரு மாற்றுத்திறனாளி தம்பதி தற்போதைய ஊரடங்கு நாள்களில் முதியவர்கள், ஆதரவற்றவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு தினமும் மதிய உணவு தயார்செய்து வழங்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆதரவற்றவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், தினக்கூலிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். இந்த நிலையில், ஆங்காங்கே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் உணவு சமைத்து கொடுப்பது, அத்தியாவசிய பொருள்கள் வழங்குவது என இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியினரான அந்தோணிராஜ், ரெஜினாள் ஆகிய இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தாலும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்களுக்கு தினமும் உணவு சமைச்து வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர்.
காய்கறி வெட்டும் அந்தோணிராஜ்
காய்கறி வெட்டும் அந்தோணிராஜ்

இதுகுறித்து அந்தோணிராஜிடம் பேசினோம், "எங்க வீட்ல அம்மா, மனைவி, மகன், நான் மொத்தம் நாலு பேரு. என்னோட மனைவி ரெஜினாள் சத்துணவு அமைப்பாளராக இருக்காங்க. எங்களோட பையன் சாமுவேல், ரெண்டாம் வகுப்பு படிக்கிறான். நான் தனியார் தொண்டு நிறுவனத்துல தற்காலிக பணியாளரா வேலை பார்த்துட்டு வர்றேன். நானும் என் மனைவியும் 9 வயசுல இருந்து கல்லூரி வரைக்கும் நாசரேத்துல உள்ள ஒரு விடுதியில தங்கி படிச்சோம். படிக்கும்போது இரண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோம்.

அப்போவே, 'நம்மளைப் போல கஷ்டப்படுற எல்லோருக்குமே உதவி பண்ணனும்'னு முடிவு பண்ணுணோம். நாங்க ரெண்டு பேரும் எல்லோருடைய உதவியிலதான் படிச்சு வளர்ந்தோம். கல்யாணம் ஆன புதுசுல, வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற வயசானவங்க, உடம்பு சரியில்லாதவங்களுக்கு எங்க வீட்டுல செய்யற உணவைக் கொடுத்தோம். 2010-ல மாற்றுத் திறனாளிகளுக்கு உதவணும்ங்குற நோக்கத்தோட தனியா டிரஸ்ட் ஆரம்பிக்கலான்னு நினைச்சேன். ஆனா, அதுக்குப் போதுமான பண வசதி இல்லாததுனால டிரஸ்ட் தொடங்குற எண்ணத்தைக் கைவிட்டுட்டேன்.

பார்சல் கட்டும் பணி
பார்சல் கட்டும் பணி

இதுவரைக்கும் நானும் என் மனைவியும் 'பண உதவி செய்யுங்க'னு யாருகிட்டயும் கேட்டது கிடையாது. நாங்க பண்ற சேவையை சமூக வலைதளங்கள்ல பாத்துட்டு சிலர் உதவி செய்யுறாங்க. நானும் என் மனைவியும் துணிப்பை தைப்போம். ஒரு பை தைச்சா 2 ரூபாய் கிடைக்கும். அதுல கிடைக்கிற காசைக் கொண்டும், எங்களுடைய வருமானத்துல ஒரு பகுதியைக் கொண்டும் உதவி செஞ்சுட்டு வர்றோம். ஒவ்வொரு வருஷமும் நாசரேத்துல மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி நடத்துவேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரிய நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யும் நிகழ்ச்சி நடத்தும்போது என்னுடைய தரப்பிலிருந்து 100 பேருக்காவது மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் கிடைக்க வழிசெய்வேன். எங்க ஊரு பக்கத்துல உள்ள திருச்செந்தூர், சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி போன்ற பகுதிகளில் வசிக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் தாலுகா ஆபிஸ், கலெக்டர் ஆபிஸ்களுக்கு போக வேண்டியது இருந்துச்சுன்னா, அவங்களோட வீட்டுக்கே நேரடியாப் போயி என்னோட ஆட்டோவுல அவங்களை அழைச்சிட்டு போயி, வேலை முடியுற வரைக்கும் அவங்க கூடவே இருந்து திரும்பவும் வீட்டுல கொண்டு போய் இறக்கிவிடுவேன்.

மகனுடன் பார்சல்கள் அடுக்கும் பணியில் ரெஜினாள்
மகனுடன் பார்சல்கள் அடுக்கும் பணியில் ரெஜினாள்

மாற்றுத்திறனாளி பெண்கள், சுயதொழில் கத்துக்கணும்னு என் மனைவி, இலவசமா தையல் பயிற்சி கொடுத்துட்டு இருக்காங்க. போன வருஷம், கொரோனா முதல் ஊரடங்கிலும் சரி, இப்போதும் சரி நானும் என் மனைவியும் வீட்டுல உணவு சமைச்சு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பிச்சை எடுப்பவர்கள், திருநங்கைகள், சாலையோரத்தில் வசிப்பவர்கள் என 50 பேருக்கு கொடுத்துட்டு வர்றோம். தக்காளி சாதம், சாம்பார் சாதம், லெமன் சாதம் என ஏதாவது ஒரு வெரைட்டி சாதத்துடன் ஒரு முட்டையும், வாரத்தில் ஒருநாள் சாதம், குழம்பு, கூட்டுடன் முட்டையும் வச்சு பார்சல் செய்து கொடுப்போம். வீட்டிலேயே கபசுர குடிநீர் தயாரிச்சு, நானே பக்கத்து கிராமங்களுக்கு போய் கொடுப்பேன்.

`கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளையும் ஊட்டச்சத்து உணவு!' - ஒரு குடும்பத்தின் உன்னத சேவை

'இது உனக்கு தேவை இல்லாத வேலை... கொரோனா வேற தீவிரமா பரவுது, ஏற்கெனவே உனக்கு உடல்நிலை சரியில்ல.. .ஒழுங்கா வீட்ல இரு'ன்னு என் மீதான அக்கறையில நிறைய பேரு அறிவுரையா சொல்லுவாங்க. அதையெல்லாம் நான் கண்டு கொள்வதில்லை. சாப்பாடு பார்சலைக் கொடுக்கும்போது அதை வாங்குறவங்களோட கண்களில் மிளிரும் சந்தோஷமே எங்களுக்குப் போதும்.

உணவு பார்சல் வழங்கும் அந்தோணிராஜ்
உணவு பார்சல் வழங்கும் அந்தோணிராஜ்

'இந்த சூழ்நிலையிலயும் உங்களுக்கு உதவணும்னு எண்ணம் இருக்கு. ஆனா ஒரு சிலர், வயித்துக்காக பிச்சை எடுத்தாலும் ஒத்த ரூவா கேட்டாக் கூட தர மாட்டாங்க'ன்னு திருநங்கை ஒருவர் நெகிழ்ந்து சொன்னாங்க. போன வாரம், நான் செய்யுற வேலையைப் பாத்துட்டு நண்பர் ஒருவர் பத்தாயிரம் அனுப்பினார். அந்தத் தொகையை வச்சு உண்மையிலேயே வறுமையில வாடுற பத்து பேர் குடும்பத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருள்களை வாங்கிக் கொடுத்தோம். எங்க உடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் எங்களால முடிஞ்ச உதவிகளை மத்தவங்களுக்குச் செஞ்சுக்கிட்டே இருப்போம்” என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு