கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

பசியைத் தெரிந்தவரே பசியைத் தீர்க்க முடியும்!

கஜேந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
கஜேந்திரன்

கஜேந்திரன், காவல்துறையில் இயங்கும் கண்ணியமிக்க இளைஞர்.

“பசி என்பது கொரோனா வைரஸைவிடக் கொடூர வியாதி. அது தரும் வேதனை அதிகம். பசியில்தான் ருசி தெரியும் என்பார்கள். அது நாக்கு உணரும் ருசி மட்டுமல்ல, வாழ்க்கையில் வெற்றியைத் தேடும் வேட்கை ருசியும்தான்.

படிக்கிற காலத்தில் ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் அல்லாடியிருக்கிறேன். பிளாட்பாரத்துல யாசகம் கேட்பவர்களோடு அமர்ந்து, சிலர் தரும் உணவை வாங்கி உண்டு, வளர்ந்தேன். இன்றைக்குக் காவல்துறையில் கை நிறைய சம்பாதிக்கிறேன். இப்போ எனக்கு மத்தவங்களுக்குக் கொடுக்கிற நேரம். அதனால், சக காவலர்களோடு சேர்ந்து, எளியவர்களின் பசியைப் போக்கிக்கிட்டு இருக்கிறேன்” என்று பரவசத்தோடு விவரிக்கிறார் கஜேந்திரன்.

கஜேந்திரன்
கஜேந்திரன்

கஜேந்திரன், காவல்துறையில் இயங்கும் கண்ணியமிக்க இளைஞர். மனம் முழுக்க மனிதாபிமானத்தைத் தேக்கி வைத்திருக்கும் அற்புதன். கரூர் நகர பிளாட்பாரங்களில் படுத்திருக்கும், இலக்கில்லாமல் அலையும் ஆதரவற்ற மனிதர்களின் பசியைப் போக்கும் தாயுமானவனாக இருக்கிறார் கஜேந்திரன். அவரது ப்ளாஷ்பேக் கதையைக் கேட்டால், ஒரு உருக்கமான படக் கதைக்கான கச்சாப் பொருள் கிடைக்கிறது. மனிதாபிமானம் இழையோடப் பேச்சைத் தொடங்கு கிறார் கஜேந்திரன்.

உணவு வழங்கும் சேவை
உணவு வழங்கும் சேவை

“எனக்குச் சொந்த ஊர் மன்னார்குடி. அப்பா கலைமணி, விவசாயக் கூலி. வாடகை வீட்டுலதான் குடியிருக்கிறோம். அப்பாவுக்கு சொற்ப வருமானம்தான். அதனால், பல நாள் சாப்பிட முடியாத சூழல். இருந்தாலும், சிறு வயதிலிருந்து படிப்பில் ஆர்வமா இருந்தேன். அதோடு, பாக்ஸிங் விளையாட்டிலும் பள்ளிக்காலத்திலிருந்து சாதிக்கத் தொடங்கினேன். சிறுவயது முதல், வருங்காலத்தில் போலீஸ் ஆவணுங்கிறதுதான் லட்சியமா இருந்துச்சு. ஆனால், வீட்டுச் சூழல்ல, கல்லூரி போய்ப் படிக்க முடியுமாங்கிற ஏக்கம் இருந்துச்சு. ஆனால், கடந்த 2015 ஆம் ஆண்டு, ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரியில், இலவசமா மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்க சீட் கிடைச்சுச்சு. எங்க பரம்பரையிலேயே நான்தான் முதல் டிகிரி படிக்கிற பையன்ங்கிறதால, அதுல சேர்ந்து படிச்சேன். ஹாஸ்டல்ல தங்கிப் படிக்க வசதியில்லாததால், அரசு மருத்துவமனையில் வேலை பார்த்த நண்பரோடு, அரசு மருத்துவமனையில் தங்கினேன். காலையில் பெரும்பாலும் சாப்பிட மாட்டேன். தினமும் காலையில் பசியோடுதான் இருப்பேன். காலை நாலரை மணியிலிருந்து ஏழு மணி வரைக்கும் நேரு ஸ்டேடியத்துல பயிற்சி எடுப்பேன். அதன்பிறகு கல்லூரி போயிட்டு, மதியம் வடபழனிக்கு வருவேன். அங்கே பிளாட் பாரங்களில் அமர்ந்து யாசகம் கேட்பவர்களுக்கு ஒரு அறக்கட்டளையைச் சேர்ந்தவங்க சாப்பாடு கொடுப்பாங்க. அவர்களோடு அமர்ந்து மதியச் சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவேன். அதோடு இரவுக்கும் சேர்த்து அங்கேயே பாத்திரத்தில் சாப்பாடு வாங்கிட்டுப் போயிருவேன். பலமுறை என் நிலைமையை நினைத்து, மனம் கலங்குவேன். ஆனால், ‘இதுவும் கடந்து போகும்’னு மனசைத் தேத்திக்குவேன். இந்தப் பசியும் வறுமையும்தான் நம்மை உந்தித்தள்ளும் வைராக்கியம்னு பாசிட்டிவா நினைச்சு, கஷ்டங்களை மறந்துரு வேன். இருந்தாலும், பலநாள் என்னைப் பசி திங்கும்.

பசியைத் தெரிந்தவரே பசியைத் தீர்க்க முடியும்!

மாலை மூன்று மணியிலிருந்து ஐந்து மணி வரை பாக்ஸிங் பயிற்சி எடுத்துக்குவேன். அதன்பிறகு, நடுஇரவு இரண்டு மணி வரைக்கும் ஓலா போன்ற கம்பெனிகளுக்கு டிரைவரா போவேன். இத்தனை கஷ்டத்துலயும், படிப்புலயும் கவனம் செலுத்தினேன். இதுக்கிடையில், பாக்ஸிங்கில் தேசிய அளவில் சாம்பியன்ஷிப் வாங்கினேன். பலநேரங்களில் என்னை மென்று தின்ற பசிதான், இந்த உச்சத்தைத் தந்ததுன்னு மகிழ்ந்துபோனேன். அதே ஜோர்ல, 2016 - 17ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர்ங்கிற அவார்டை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையால வாங்கினேன். பதக்கம் தவிர, ரூ. 50,000 ரொக்கப் பணத்தை என் கையில் தந்தாங்க. இந்தப் பணமும் பதவிசும் என்னைத் துரத்திய பசியால்தான் கிடைத்தது. அதனால், இந்தப் பணத்தைக் கொண்டு ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவோம்னு நினைச்சு, வடபழனியில் இருந்த வறியவர்களுக்கு மதிய உணவு வாங்கித் தந்தேன். 20 நாள்கள் சாப்பாடு வாங்கிக்கொடுக்க முடிந்தது. இந்த நிலையில், படிச்சுட்டிருக்கும் போதே, கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல, காவல்துறையில் வேலை கிடைச்சுச்சு. திருச்சியில ஒரு வருடம் பயிற்சி. பதினெட்டாயிரம் வரை சம்பளம் கொடுத்தாங்க. அதுல குறிப்பிட்ட தொகையில் திருச்சி வீதியில் அலையும் ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தேன்.

பசியைத் தெரிந்தவரே பசியைத் தீர்க்க முடியும்!

ஒருவருடம் முழுவதும் இப்படி ஒருநாள் தவறாமல், உணவு வழங்கும் சேவையைச் செய்தேன். அதன்பிறகு, கடந்த வருடம் அக்டோபர் மாதம் கரூர்ல போஸ்டிங் போட்டாங்க. இங்கேயும் நாலு மாதங்கள் தொடர்ந்து சொந்தக் காசுல தினமும் பலரின் பசியைப் போக்கிட்டு இருந்தேன். இந்த நிலையில், ஒருநாள் கையில் இருந்த காசுல ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிட்டுப் போய், 40 பேரோட பசியைப் போக்கினேன். பசியோடு தினமும் இருக்கும் மனிதர்கள் குறித்த கவலை, என்னை இம்சை செய்தது; தூங்கவிடாமல் செய்தது. அந்த வருத்தத்தை எனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவா போட்டேன். அதைப் படித்துவிட்டு, காவலர்கள் பலர் என்னோடு சேர்ந்து வறியவர்களின் பசியைப் போக்க முன்வந்தாங்க. டெல்லி பட்டாலியனில் பணிபுரியும் ஒருவர், கரூர் நகர காவல் நிலையத்துல பணியாற்றும் சுந்தரி மேடம், சி.பி.சி.ஐ.டியில் பணிபுரியும் ஆறுமுகம்னு 20 பேர் மாதாமாதம், தங்கள் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை இதற்காகத் தர முன்வந்தாங்க. ‘உதவும் கரங்கள்’னு ஒரு அமைப்பை உருவாக்கி, அதுமூலமா ஆதரவற்றவர்களின் பசியாற்றத் தொடங்கினோம். தினமும் குறைந்தபட்சம் 100 முதல், அதிகபட்சம் 200 பேர் வரை, எங்களால் பசியாறத் தொடங்கினார்கள். இதற்கிடையில், 2019ஆம் ஆண்டு லீவு போட்டுட்டுப் போய், கடைசி வருட செமஸ்டரையும் எழுதினேன். 95.6 சதவிகிதம் மார்க் வாங்கி, அண்ணா பல்கலைக்கழக அளவில் பத்தாவது ரேங்க் வந்தேன். ‘பரம்பரையில் முதல் பட்டதாரி, அதுவும் பொறியாளர்’னு நினைச்சப்ப, மனசின் மூலைமுடுக்கெல்லாம் தித்திப்பு பரவியது. அதுக்குக் காரணமா, என்னை இத்தனை வருடமும் துரத்திய பசியைத்தான் அப்போது அனிச்சையாக நினைத்துக்கொண்டேன்.

உணவு வழங்கும் சேவை
உணவு வழங்கும் சேவை

உயரதிகாரிகளிடம் அனுமதி வாங்கிட்டுதான், குறிப்பிட்ட நேரத்தில் இந்த சேவையைச் செய்து வருகிறோம். எங்க சேவையை, கரூர் மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் சார் பாராட்டியதோடு, தொடர்ந்து எங்களை ஊக்குவித்தார். இந்த நிலையில், கொரோனா வந்து, ஊரடங்கில் மக்கள் வீட்டுக்குள் முடங்க வேண்டிய சூழல். இதனால், நாங்க கூடுதலா பணம் ஒதுக்கி, 200 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட உணவு சம்பந்தப்பட்ட பொருள்களை வழங்கிகிட்டு வந்தோம். அதோடு, தினமும் குறைந்தது 100 ஆதரவற்றவர்களின் பசியைப் போக்கிட்டு வந்தோம். இந்த நிலையில் தான், பத்து தினங்களுக்கு முன்பு, ஊர்ல அம்மா, அப்பாவோடு இருந்த என் தங்கச்சி, ஒண்ணுமில்லாத காரணத்துக்காகத் தற்கொலை பண்ணிக்கிட்டா. எனக்குப் பேரிடியா இருந்தது. பசியைக் கடக்குறதே சாதனைன்னு இருந்த குடும்பம், இப்போ என் போலீஸ் வேலையால் கொஞ்சம் நிமிருதேன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தோம். இந்தச் சூழலில், என் தங்கையின் மரணம், மறுபடியும் என் குடும்ப சந்தோஷத்தைத் துண்டாடியது. லீவு போட்டுட்டு ஊருக்குப் போய், தங்கச்சியோட காரியத்தை முடிச்சுட்டு, பத்து நாள் கழிச்சு இன்னைக்குத்தான் கரூர் வந்தேன். இருந்தாலும், இன்னைக்கும் சாப்பாடு கொடுக்கத் தொடங்கிவிட்டேன். நம் கஷ்டத்தைப் போக்கிக்க, மற்றவர்களின் ஆறுதலைத் தேடுறது பலவீனம். நம் கஷ்டத்தை, மற்றவர்களின் கஷ்டத்தைத் தீர்க்கும் மனநிறைவு மூலம்தான் போக்க முயலணும். அதனால், காலம் முழுக்க பசிப்போக்கும் பணி தொடரும்” என்று முடிக்கிறார்.

அப்போது அவரது முகத்தில் படர்கிறது மகிழ்ச்சி!