Published:Updated:

பிழைக்க வைத்தது சென்னை; பேசுவது ஊர்ப்பெருமை... ஏன்? - ஓர் அலசல்! #MadrasDay2022

madras day ( madras day )

கூவமும் ஒரு காலத்துல நதியாகத்தான் இருந்துச்சு. மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க கழிவுகளும் அதிகரித்தன. விளைவு, கூவம் `காவா'வாகிப் போச்சு. அதுல, ஊர்ப்பெருமை பேசுறவங்க கழிவுகளும் இருக்குங்குறதை மனசாட்சியோட ஓரத்துலயாவது யோசிக்கணுமில்லையா?

பிழைக்க வைத்தது சென்னை; பேசுவது ஊர்ப்பெருமை... ஏன்? - ஓர் அலசல்! #MadrasDay2022

கூவமும் ஒரு காலத்துல நதியாகத்தான் இருந்துச்சு. மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க கழிவுகளும் அதிகரித்தன. விளைவு, கூவம் `காவா'வாகிப் போச்சு. அதுல, ஊர்ப்பெருமை பேசுறவங்க கழிவுகளும் இருக்குங்குறதை மனசாட்சியோட ஓரத்துலயாவது யோசிக்கணுமில்லையா?

Published:Updated:
madras day ( madras day )

சென்னை ஒருவகையில அமெரிக்கா மாதிரி... அமெரிக்காவில் பிழைக்க வராத நாட்டினரே இல்லைன்னு சொல்வாங்க. உலகத்துல இருக்கிற 195 நாடுகள்ல சுமார் 60-க்கும் மேற்பட்ட நாட்டினர் சென்னையில வேலை பார்க்கிறதா நம்பத்தகுந்த தகவல்கள் சொல்கின்றன. தவிர, இந்தியாவுக்குள்ள இருக்கிற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவங்க, தமிழ்நாட்டுல இருக்கிற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவங்கன்னு யோசிச்சு பார்க்கவே மலைப்பா இருக்கில்ல... ஆனா, வந்தாரையெல்லாம் வாழ வைக்க சென்னை மலைக்கிறதே இல்லீங்க. தினம் தினம் தன்னை நம்பி பேருந்து ஏறி, லாரி பிடிச்சு, ஏன் டிக்கெட் எடுக்க வழியில்லாம ரயில் வண்டி பாத்ரூம்ல ஒளிஞ்சுகிட்டு சென்னைக்கு வந்தவங்களகூட சென்னை கைவிட்டதில்ல. அவங்கவங்க அறிவுக்குத்தக்க, உழைப்புக்குத்தக்க, சென்னை எல்லாருக்கும் படி அளந்துகிட்டேதான் இருக்கு.

Chennnai central
Chennnai central

சென்னையில பிழைக்க வழி கிடைச்சு சொந்த ஊர்ல இருக்கிற பெத்தவங்களுக்கு பணம் அனுப்புற அளவுக்கு வாழ்க்கை மேல நம்பிக்கை வந்தவுடனே, `எப்ப லீவ் கிடைக்கும்; எப்போ ஊருக்கு போகலாம்னு இருக்கு', `ஊரா இது; எங்க பார்த்தாலும் ஜே ஜேனு ஒரே கூட்டம்', `எங்க ஊர்த்தண்ணி சும்மா பளிங்கு மாதிரி இருக்கும்; இந்த ஊர்லயும்தான் இருக்கே கூவம்னு, `சென்னை ஒரே குப்பை; எங்க ஊரு எவ்ளோ சுத்தமா இருக்கும் தெரியுமா?', `வீடு, தோட்டம்னு எங்க ஊரு பசுமையா இருக்கும்; சென்னை சரியான கான்கிரீட் காடு...' இப்படி அவரவர் அனுபவத்துக்கு ஏத்தபடி இந்த ஊர்ப்பெருமைகள் நீண்டுகிட்டே போகும். அவரவர் ஊர்; அவரவர் பெருமை... இதுல இரண்டாம் கருத்துக்கு இடமில்ல. என்றாலும், சாப்பிட்டுக்கொண்டிருக்கிற தட்டை எட்டி உதைக்கிற குழந்தைகளின் அறியாமையாகத்தான் இந்த விமர்சனங்களைப் பார்க்க வேண்டியிருக்கு.

பிழைப்பு தேடி மக்கள் சென்னைக்கு இடம் பெயர பெயர, சென்னையோட வயல்வெளிகளும் நீர்நிலைகளும் குடியிருப்புகளா மாறிடுச்சு. அரை நூற்றாண்டுக்கு முன்னாடி, சென்னைக்குப் பிழைக்க வந்தவங்ககிட்ட விசாரிச்சுப் பார்த்தீங்கன்னா இந்த உண்மை உங்களுக்கே புரியும். சென்னை கான்கிரீட் காடா மாறுனதுக்கும், சென்னையோட பசுமை காணாம போனதுக்கும், இங்க ஜே ஜேன்னு இருக்குற மக்கள் கூட்டத்துக்கும் யார் காரணம்னு இப்ப நமக்கெல்லாம் புரிஞ்சிருக்கும். கூவமும் ஒரு காலத்துல நதியாகத்தான் இருந்துச்சு. மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க கழிவுகளும் அதிகரித்தன. விளைவு... கூவம் இன்னிக்கி `காவா'வாகிப் போச்சு. இந்தக் காவாவுல, ஊர்ப் பெருமை பேசுறவங்க கழிவுகளும் இருக்குங்கிறதை மனசாட்சியோட ஓரத்துலயாவது யோசிக்கணுமில்லையா?

மக்கள் கூட்டம் (ரங்கநாதன் தெரு, சென்னை)
மக்கள் கூட்டம் (ரங்கநாதன் தெரு, சென்னை)
ஸ்ரீனிவாசலு

சொந்த ஊர்த்தெருவுல குப்பையைப் போடுறதுக்கு கூசினவங்களும், தெருவுல குப்பையைப் போட்டா பக்கத்து வீட்டுப் பெரியப்பா திட்டுவாரு, எதிர்த்த வீட்ல இருக்கிற தாய்மாமா திட்டுவாருன்னு பயந்தவங்களும், சென்னைக்கு குடியேறியவுடனே `என் வீட்டுக் குப்பை என் தெருவில்'னு ஏனோ மாறிப் போயிடுறாங்க. விதிவிலக்கானவங்க மன்னிக்கவும். இன்னொரு முறை சென்னை தெருக்களில் குப்பை கொட்டுற வங்களைப் பார்த்தா அவங்க எந்த ஊர்க்காரங்கன்னு விசாரிச்சுப் பாருங்க. அவங்க சென்னைக்காரரா இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை அவங்க உங்க ஊர்க்காரராகவும் இருக்கலாம்.

சென்னைக்காரர்னு சொல்லுறப்போ, அது தொடர்பான ஒரு விஷயத்தைக் கட்டாயம் பதிவு பண்ண வேண்டிய கடமை இருக்கு. ஒண்ணு, ரெண்டு தலைமுறைகளுக்கு முன்னால சென்னையில் செட்டிலானவங்களும், சென்னைக்குப் பிழைக்க வந்த இந்தத் தலைமுறையினரும் ஊர்ப்பெருமை பேசிக்கிட்டே இருக்க, சொந்த ஊர் இருந்தாலும் சென்னையில பிறந்து, வளர்ந்து, படிச்சவங்க `சென்னைட்டீஸ்' என்றே தங்களை அடையாளப் படுத்திக்கிறாங்க. சென்னையின் சொத்து இவங்க.

சென்னை தினம் 2022
சென்னை தினம் 2022

கடைசியாக ஒரு வார்த்தை, அவங்கவங்க ஊர்ப் பெருமையை பேசுறதுல இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அதே நேரம் சென்னையை விமர்சனம் செய்வதற்கு முன்னால சென்னை உங்க தட்டுல சோறு போட்ட இரண்டாவது அம்மாங்கிறதை கொஞ்சம் நினைவுப்படுத்திக்கோங்க...

சென்னை உங்களை வரவேற்கிறது!