`இளவரசி டயானாவின் ஃபேவரைட் உடை ரூ.3.24 கோடிக்கு ஏலம்!'- அப்படி என்ன ஸ்பெஷல்?
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, லண்டன் கெர்ரி டெய்லர் ஏலத்திற்காக, நீல நிற உடை தயாராக உள்ளது. டிசம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ள இந்த ஏலத்தின் ஆரம்ப விலை...

அன்பு, பணிவு, தைரியம் உள்ளிட்ட நற்பண்புகளால் உலக மக்களின் மனத்தை வென்ற இளவரசி டயானா உடுத்திய நீலநிற வெல்வெட் கவுன், விரைவில் ஏலத்திற்கு வரப்போகிறது. 1985-ம் ஆண்டு வெள்ளைமாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் ட்ரவோல்ட்டாவுடன் இணைந்து இந்த ஸ்பெஷல் கவுனை உடுத்தி, டயானா நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் டயானாவின் நற்செயல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அந்த வரிசையில், 'சாட்டர்டே நைட் ஃபீவர் (Saturday night fever) இசைக்கு நடனமாடி, பல ஹாலிவுட் பிரபலங்களை ஈர்த்தார் அவர்.

இவரின் இந்த பார்ட்டி நடனம், அமெரிக்காவைத் தாண்டி உலகெங்கிலும் பிரபலமானது. 'இந்த நிகழ்வு, ஃபேரிடேல் காட்சிபோல உள்ளது' என்று உற்சாகமாய் பகிர்ந்தார், டயானாவுடன் இணைந்து நடனமாடிய ட்ரவோல்ட்டா. அதற்கு முக்கியக் காரணம், அவர் அணிந்திருந்த 'இளவரசி' உடைதான்.
டயானாவின் மனத்திற்கு நெருக்கமான இந்த கவுனை முதல்முதலில் 1986-ம் ஆண்டு ஆஸ்திரியா பயணத்தின்போது அணிந்தார். பிறகு 1991-ம் ஆண்டு, ராயல் ஒபேரா மாளிகைக்குச் சென்றபோது அணிந்திருக்கிறார். 1997-ம் ஆண்டு, அவரின் சொந்த உருவப்படம் வரைவதற்காக டயானா தேர்ந்தெடுத்தது இந்த வெல்வெட் கவுனைத்தான்.

இப்படி நான்கு முக்கிய நிகழ்ச்சிகளில் உடுத்தியிருந்த இந்த அழகிய உடையை, டயானா இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன், நிதி திரட்டுவதற்காக அவரே ஏலத்திற்குக் கொடுத்திருக்கிறார்.
ஃப்ளோரிடாவைச் சேர்ந்த தொழிலதிபரான மவ்ரின் டங்கெல், இந்தக் கவுனை 92,72,900 ரூபாய்க்குப் பெற்றார். அதை மவ்ரின், 2011-ம் ஆண்டுவரை வைத்திருந்தார். பிறகு, 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் 2,22,57,149 ரூபாய்க்கு வாங்கினார்.

இதைத் தொடர்ந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் கெர்ரி டெய்லர் ஏலத்திற்காக, நீல வண்ண உடை தயாராக உள்ளது. டிசம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ள இந்த ஏலத்தின் ஆரம்ப விலை 3,24,28,732 ரூபாய்.