Published:Updated:

மொபைலில் யாருடன், எப்போது, எப்படி பேச வேண்டும்... மொபைல் நாகரிகம் அறிவோம்! #MobilePhoneEtiquette

போன் கால்
போன் கால்

ஒருவருக்கு போன் செய்யும்போதும், ஒருவரின் போனை அன்டென்ட் செய்யும்போதும் எப்படிப் பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் (Mobile phone etiquette) குறித்து, மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் விளக்குகிறார்.

லீவுக்கு ஊருக்கு வந்தவன், வீட்டில் இருப்பவர்களிடம் உருப்படியாய் ஒரு வார்த்தை பேசாமல், போன்லைனும் ஆன்லைனுமாய்க் கிடந்துவிட்டு, மீண்டும் ஊருக்குக் கிளம்புகையில், 'போயிட்டு போன் பண்றேன்' என்பான். அந்த அளவுக்கு மொபைல்கள் அனைவரின் உலகையும் ஆக்கிரமித்திருக்கின்றன.

ஒவ்வோர் ஆண்டும் லேட்டஸ்ட் மாடல் போனுக்கு அப்டேட் ஆகிக்கொண்டேயிருக்கிறோம். ஆனால், ஒருவருக்கு போன் செய்யும்போதும், ஒருவரின் போனை அட்டென்ட் செய்யும்போதும் எப்படிப் பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் பற்றி இங்கு பலரும் அறியவில்லை. மொபைல் போன் நாகரிகம் (Mobile phone etiquette) குறித்து, மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் விளக்குகிறார்.

யாருக்கு போன் செய்தாலும் முதலில், 'ஃப்ரீயா இருக்கீங்களா, இன்ன விஷயம் பேச வேண்டும், இவ்வளவு நேரம் பேச வேண்டும். முடியுமா?' எனக் கேட்டுவிடுவதுதான் நாகரிகம்.
சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்.
போன் கால்
போன் கால்

''ஒருவருக்கு கால் செய்யும்போது, முதலில் நம் பெயரைச் சொல்லி, எதிர்முனையில் இருப்பவர் சட்டென அறிந்துகொள்ளும் வகையில் நம் அறிமுகத்தையும், நாம் போன் செய்த நோக்கத்தையும் விளக்க வேண்டும். பிறகு, அவரது விவரத்தையும் உறுதிசெய்த பின்னர் பேச்சைத் தொடரலாம்.

உறவு, நட்பு, அஃபீஷியல், அறிமுகம் என யாருக்கு போன் செய்தாலும் முதலில், 'ஃப்ரீயா இருக்கீங்களா, இன்ன விஷயம் பேச வேண்டும், இவ்வளவு நேரம் பேச வேண்டும், முடியுமா?' எனக் கேட்டுவிடுவதுதான் நாகரிகம். உரிமையானவரோ, உங்களுக்குக் கீழ் பணிசெய்பவரோ... யாராக இருந்தாலும் இது அவசியம்.

ஒருவர், நீங்கள் ஒரு முக்கியமான செயலில் இருக்கும்போது போன் செய்து, நீண்டநேரம் பேசினார் எனில், அவரிடம் தன்மையுடன் உங்கள் நிலைமையை எடுத்துச்சொல்லி, பிறகு அழைப்பதாகக் கூறிவிடலாம். மாறாக, அவர் பேசுவதை வேண்டா வெறுப்பாகக் கேட்டுக்கொண்டிருக்கத் தேவையில்லை. இதனால் இருவருக்கும் நேர விரயமாவதோடு, அவரைப் பற்றிய மதிப்பு நமக்கு குறையத் தொடங்கலாம்.

நீண்ட நேரம் செல்போன் பார்ப்பவர்களைக் காக்குமா புளூ ஃபில்டர் கண்ணாடி?
போன் கால்
போன் கால்

ராங் கால், விளம்பர கால், இன்ஷூரன்ஸ் போடச் சொல்லி வரும் கால் என இவையெல்லாமே போன் கால்களின் அங்கம்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றை அடிக்கடி எதிர்கொள்ள நேர்ந்தால் கோபமோ, தயக்கமோ இல்லாமல் பேசி, அந்தக் காலுக்கு சுபம் போடவேண்டும்.

நாம் ஒருவரை போனில் அழைக்கிறோம், நாம் பேசும் பேச்சோ, டாபிக்கோ அவருக்கு விருப்பமாக இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்த பின்னரே அந்த உரையாடலைத் தொடர வேண்டும். அவரின் வார்த்தைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தால், 'நாட் இன்ட்ரஸ்டட்' என்று அர்த்தம். 'ஓகே, அப்புறம் பேசலாம்' என்று போனை துண்டித்துவிட வேண்டும். நீங்கள் பேசப் பேச அங்கிருந்தும் பதில் பேச்சு தடைபடாமல் வருகிறது என்றால், உரையாடலைத் தொடரலாம்.

போன் கால்
போன் கால்
Vikatan
பேச இயலாத சூழலில், அந்தக் காலை கட் செய்துவிடுவதே நல்லது.
சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்.

அட்டென்ட் செய்ய முடியாத சந்தர்ப்பத்தில் வரும் கால்களை சைலன்ட் மோடில் போட்டுவிட்டால், அழைப்பவருக்கு நாம் அவரை வேண்டுமென்றே தவிர்ப்பதாகவோ, இன்னும் வேறு எண்ணங்களோ தோன்றலாம். எனவே, பேச இயலாத சூழலில் அந்தக் காலை கட் செய்துவிடுவதே நல்லது. 'கட் செய்கிறார், ஏதோ வேலையில் இருக்கிறார்போல' என்று புரிந்துகொள்வார். அழைப்பவர் காத்திருக்கத் தேவையில்லை. அழைப்பு சென்றடைந்துவிட்டதை உறுதிசெய்யவும் அவருக்கு வாய்ப்பாக அமையும்.

"எந்த போன் காலும் அந்தரங்கமானதுதான்."- சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்.

போன் கால் செகண்டு லைனில் சென்றால், உடனடியாகத் துண்டிக்க வேண்டும். தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருக்கக் கூடாது. அது, எதிர்முனைக்காரரை எரிச்சலடையவைக்கும். அந்த எரிச்சல், உங்களுக்கு இடையிலான அடுத்த உரையாடலில் பிரதிபலிக்கும்.

பர்சனலான அவுட்டிங் நேரங்களில், வேலை தொடர்பான நீண்ட போன் உரையாடல்களைத் தவிர்க்க வேண்டும்.

ஒருவரிடம் போனில் பேசும்போது, ஒருவேளை அந்த உரையாடலை ரெக்கார்டு செய்யவேண்டியிருந்தால், அதை அதற்கான காரணத்துடன் அவருக்கு தெரிவித்துவிட்டே ரெக்கார்டு செய்ய வேண்டும். அஃபீஷியல், பர்சனல் என எந்த போன் உரையாடலுக்கும் இந்த நாகரிகம் அவசியம். எந்த போன் காலும் அந்தரங்கமானதுதான்.

கால் இடறுவது முதல் முகத்தில் தாக்குதல் வரை... செல்ஃபோன் காயங்கள் உஷார்!
போன் கால்
போன் கால்

சிலர், முதன்முறை ஒருவருக்கு கால் செய்கையில், முதலில் மெசேஜ் போடுவது வழக்கம். குறிப்பாக, உயிர்காக்கும் பணிசெய்யும் டாக்டர், போலீஸ், தீயணைப்பு வீரர்கள் போன்றவர்களை அழைக்கும்போது, அவர்கள் பணி நேரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, முதலில் மெசேஜ் போடவேண்டும். அவர்களுக்கு எவ்விதத்திலும் நமது போன் அழைப்புகள் இடையூறாகிவிடக்கூடாது என்பதில் கவனம் அவசியம். எனக்கு, ஒருவர் நள்ளிரவு 2 மணிக்கு கால் செய்து, 'எனக்கு தூக்கமே வரலை டாக்டர், என்ன செய்றது' எனக் கேட்டார். என் தூக்கம் கலைந்துபோனது.

போன் உரையாடலைத் தொடங்க ஹலோ, வணக்கம் போன்ற பொதுச்சொற்களே சிறந்தவை.
சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்.

போனை அட்டென்ட் செய்ததும், சிலர் தனது இஷ்டதெய்வப் பெயர்கள், 'தமிழ் வாழ்க' போன்ற வார்த்தைகளைச் சொல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது, அவர்களின் பர்சனல் என்றாலும், ஒருவர் என்ன மனநிலையில், என்ன செய்தியோடு அழைத்திருக்கிறார் என்பதை அறியாமல் இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்லி உரையாடலைத் தொடங்கும்போது, சில நேரங்களில் அது சங்கடமாகிவிடும். உதாரணமாக, எதிர்முனைக்காரர் ஒரு துக்கச்செய்தி சொல்ல அழைத்திருக்கும்போது, 'வாழ்க சிறப்புடன்' என்று அந்த உரையாடலை ஆரம்பிப்பது சங்கடத்தையே தரும். போன் உரையாடலைத் தொடங்க ஹலோ, வணக்கம் போன்ற பொதுச்சொற்களே சிறந்தவை.

மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.
மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.
குத்துப்பாடல்களை சிலர் ரிங்டோனாக செட் செய்து ஆபீஸ், பயணம் என்று எல்லா இடங்களிலும் அலறவிடும்போது, சுற்றியிருப்பவர்கள் எரிச்சலடைவார்கள்.
சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்.

காலர் டியூன், ரிங்டோன்களை சிலர் தங்கள் விருப்பத்தின் பேரில் செட் செய்திருப்பார்கள். அலுவலகம், வெளியிடங்கள் என்று எல்லா இடங்களிலும், எல்லோராலும் அது விரும்பப்படாது என்பதை மனதில் வைக்க வேண்டும். குறிப்பாக, குத்துப்பாடல்களை சிலர் ரிங்டோனாக செட் செய்து, ஆபீஸ், பயணம் என்று எல்லா இடங்களிலும் அலறவிடும்போது, சுற்றியிருப்பவர்கள் எரிச்சலடைவார்கள். மேலும், அந்தப் பாடலைக்கொண்டே அவர்கள் உங்கள் குணத்தை மதிப்பிடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல்களையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளும் மொபைல் அழைப்புகளில் நாகரிகம் பழகுவோம்!

அடுத்த கட்டுரைக்கு