Published:Updated:

"ரிக்‌ஷா சக்கரம்போல என்னோட வாழ்க்கையும் தேஞ்சே கிடக்கு!" - ரிக்‌ஷா தொழிலாளியின் கண்ணீர்க் கதை

ரிக்‌ஷாவுடன் தீனதயாளன் ( நா.ராஜமுருகன் )

நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத குளித்தலையில், 'ஒருநாளைக்கு ஒரு சவாரி' என்பதே குதிரைக்கொம்பான நிலையில், விடாக்கொண்டனாக இன்னமும் 'ரிக்‌ஷாவே கதி' என்று காலம் தள்ளிவரும் தீனதயாளனின் பாடு, பெரும்பாடு.

"ரிக்‌ஷா சக்கரம்போல என்னோட வாழ்க்கையும் தேஞ்சே கிடக்கு!" - ரிக்‌ஷா தொழிலாளியின் கண்ணீர்க் கதை

நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத குளித்தலையில், 'ஒருநாளைக்கு ஒரு சவாரி' என்பதே குதிரைக்கொம்பான நிலையில், விடாக்கொண்டனாக இன்னமும் 'ரிக்‌ஷாவே கதி' என்று காலம் தள்ளிவரும் தீனதயாளனின் பாடு, பெரும்பாடு.

Published:Updated:
ரிக்‌ஷாவுடன் தீனதயாளன் ( நா.ராஜமுருகன் )

கால்நடையாகப் பயணித்த மனித சமூகம், விமானம், ஜெட் விமானம், ராக்கெட் வரை முன்னேறிவிட்டது. மாட்டு வண்டி, சைக்கிள் என்று போக்குவரத்து செய்த நாம், இன்று ஓலா, ஊபர் என்று ஆன்லைன் புக்கிங் மூலம் ஆட்டோ, கார்களில் பயணிக்கத் தொடங்கிவிட்டோம். ஆனால், நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத குளித்தலையில், 'ஒருநாளைக்கு ஒரு சவாரி' என்பதே குதிரைக்கொம்பான நிலையில், விடாக்கொண்டனாக இன்னமும் 'ரிக்‌ஷாவே கதி' என்று காலம் தள்ளிவரும் தீனதயாளனின் பாடு, பெரும்பாடு.

ரிக்‌ஷாவுடன் தீனதயாளன்
ரிக்‌ஷாவுடன் தீனதயாளன்
நா.ராஜமுருகன்
50 வருடங்களாக இந்த ரிக்‌ஷா வருமானத்தை மட்டும் நம்பி வாழ்க்கையை நகர்த்திய தனக்கு, இந்த 'அரதப்பழசு' ரிக்‌ஷாவையும், பெருவாரியாகக் கொடுத்த உழைப்பு தின்ற கைகால்களையும் தவிர வேறொன்றும் மிச்சமில்லை என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காலவெள்ளம் அடித்துத் துவைத்து நிராகரித்த ஒன்றின் சோக சாட்சியாகக் குளித்தலைப் பேருந்துநிலையம் அருகே நிற்கும் ரிக்‌ஷாவில் வைத்து தீனதயாளனைச் சந்தித்தோம்.

"நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் இதே குளித்தலைதான். நல்லாருந்த குடும்பம் என்னோடது. சிறுவயதிலேயே குடும்பத்தை வறுமை கவ்வ ஆரம்பிச்சுட்டு. அதனால், சின்ன வயசிலேயே குளித்தலையில் இருந்த மாடுகளுக்குக் கயிறு விற்பனை செய்யும் மனோகர் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டாங்க. எங்கண்ணன் வீராசாமி ரிக்‌ஷா ஓட்டிக்கிட்டிருந்தார். அப்போ, குளித்தலையில் 30 ரிக்‌ஷாக்கள் இருந்துச்சு.

ரிக்‌ஷாவுடன் தீனதயாளன்
ரிக்‌ஷாவுடன் தீனதயாளன்
நா.ராஜமுருகன்

எந்நேரமும் 'கிராக்கி' கிடைக்கும். அதனால், எங்கண்ணன், 'கயிற்றுக் கடையில் வேலை பார்த்து என்ன சம்பாதிக்கப் போற? பேசாம ரிக்‌ஷா ஓட்ட வந்துரு'ன்னு சொல்லி, என்னை இந்தத் தொழிலுக்குள் இழுத்துவிட்டார். அப்போ, வாத்தியார் எம்.ஜி.ஆர் நடிச்ச ரிக்‌ஷாகாரன் படம் வந்து, சக்கைப்போடு போட்ட நேரம். நானும் குஷியாகி, ரிக்‌ஷா மேல உள்ள மயக்கத்துல இந்தத் தொழிலுக்கு வந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆரம்பத்துல மிதிக்கச் சிரமமா இருந்தாலும், பிறகு வாலிப மிடுக்குல இந்தத் தொழிலுக்கு நல்லா பழகிட்டேன். மேட்டுமருதூர், பெட்டவாய்த்தலை, குமாரமங்கலம், அய்யர்மலை, மாயனூர், முசிறின்னு சுத்துப்பட்டுல 20 கிலோமீட்டர் தூரத்துக்கு சவாரி போக ஆரம்பிச்சேன். ஆட்டோ, காரெல்லாம் அப்போ இங்கே இல்லை. அதனால், தினமும் 10 சவாரிகள் வரை கிடைக்கும். பெருசா வருமானம் கிடைக்காது. ஆனா, கால்ல மிதிச்சுப் போறதால, கஞ்சியோ, கூழோ சாப்பாடுன்னாலும் தேவாமிர்தமா இருக்கும். படுத்த அடுத்த நொடியே தூக்கம் வரும். முதல்ல கூலி ரிக்‌ஷா ஓட்டினேன். கட்டுப்படியாகல. அதனால், கடனவுடன வாங்கி இந்த ரிக்‌ஷாவை சொந்தமா வாங்கினேன்.

ரிக்‌ஷாவுடன் தீனதயாளன்
ரிக்‌ஷாவுடன் தீனதயாளன்
நா.ராஜமுருகன்

இந்த நிலையில் எனக்கும், பார்வதிக்கும் திருமணமாகி, ரெண்டு பெண்கள், ரெண்டு பையன்கள்னு பிள்ளைகள் பொறந்தாங்க. ரிக்‌ஷா வருமானம் பத்தலை. வேற வருமானத்துக்கும் வழிதெரியலை. 'விதி விட்டது வழி'ன்னு காலையில் 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தொடர்ந்து சவாரி புடுச்சு, ரிக்‌ஷா மிதிச்சேன். உடம்புல வலி பின்னியெடுக்கும். ராவெல்லாம் வலியாக தூக்கம் வராமப் பினாத்திக்கிட்டு இருப்பேன். என் மனைவி என்னோட கஷ்டத்தை நினைச்சுக் கண்ணீர் விடுவா. நான் தூங்கும்வரைக்கும் என்னோட காலைப் பிடிச்சு விடுவா. இப்படியே பொழப்பு ஓடுச்சு. ஆட்டோ புழக்கம் வந்தப்ப, எங்க பொழப்புல மண் விழுந்துச்சு.

டாக்ஸிகள் பெருகுனதுக்குப் பிறகு, கொஞ்சநஞ்சம் நடந்த பொழப்பும் நடுரோட்டுல காலை நீட்டிப் படுத்துக்கிச்சு. 'நீயும் ஆட்டோ ஒண்ணை வாங்கி ஓட்டேன்'னு சொன்னாங்க. அதுக்கு வசதிவாய்ப்பு இல்லை. வருமானத்துல மிச்சம் புடிச்சும், சக்திக்கு மீறி கடன் வாங்கியும் நாலு புள்ளைங்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன். கடந்த பத்து வருஷத்துக்கு முன்னாடி, 10 ரிக்‌ஷா இருந்துச்சு. ஆனா, சுத்தமா சவாரி இல்லை. அதுல, 7 பேர் ரிக்‌ஷாவை வித்துப்புட்டு, வேற தொழில் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, நானும், இன்னும் ரெண்டு பேரும் இந்தத் தொழிலை விடலை. ஆனா, தினமும் ரெண்டு கிராக்கிகள் புடிக்கவே உம்பாடு எம்பாடானது. ஆண் பிள்ளைகள் தனிக்குடித்தனம் போனாங்க.

ரிக்‌ஷாவுடன் தீனதயாளன்
ரிக்‌ஷாவுடன் தீனதயாளன்
நா.ராஜமுருகன்

அவங்க சம்பாதிக்கிறது அவங்கங்க குடும்பத்தை ஓட்டவே சரியாயிருந்துச்சு. அதனால், நானும், என் பொஞ்சாதியும் சாப்பிடவும், வீட்டுக்கு வாடகை ரூ. 3,000 தரவும் வேண்டி ரிக்‌ஷாவை மிதிக்க வேண்டியிருந்துச்சு. ஆனா, ரிக்‌ஷாவை மட்டும் நம்பாம, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பைனான்ஸ்ல பணம் வாங்கி, தட்டுவண்டி ஒண்ணையும் வாங்கினேன். அதுல, லோடு அடிக்க ஆரம்பிச்சேன். தினமும் 100, 200ன்னு கிடைச்சுச்சு. ரிக்‌ஷாவில் தினமும் ஒரு சவாரி கிடைக்கிறதே அரிதா இருக்கும். அப்பப்ப ரிக்‌ஷாவுக்கு டியூப், டயர் மாத்தணும். அதுக்கு ரூ. 580 வரை செலவாகும்.

தவிர, 3 வருஷத்துக்கு ஒருமுறை ரிக்‌ஷாவுக்கு புதுசா பாடி கட்டணும். அதுக்கு ரூ. 5,000 வரை செலவாகும். வம்பாடுபட்டாலும், ரிக்‌ஷா சக்கரம் போல என்னோட வாழ்க்கையும் தேஞ்சேதான் கிடக்கு. எனக்கு 66 வயசாயிட்டு. முன்ன மாதிரி இப்போ ரிக்‌ஷாவை டாம்பீகமா மிதிக்க முடியலை. வெயில் ஜாஸ்தியா இருக்கு. ஒருமுறை சவாரியைக் கொண்டு விட்டு வர்றதுக்குள்ள உடம்பெல்லாம் வேர்த்து, தெப்பமா நனைஞ்சுரும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். வயசாயிடுச்சில்ல? என் மனைவிக்கு பித்தப்பை ஆபரேஷன், கர்ப்பபை ஆபரேஷன்னு நடந்து, உடம்புக்கு முடியாம இருக்கா. அவளுக்கு வைத்திய செலவுக்கே என்னால சம்பாதிக்க முடியலை. ரேஷன் அரிசியை வச்சு கால் வயித்துக் கஞ்சிக்கு ஒப்பேத்திக்கிட்டு இருக்கோம். கடந்த ரெண்டு வருஷம் கொரோனா காலத்துல, பத்து ரூபாய்க்கு வருமானம் இல்லாம, வாடகை கொடுக்க முடியாம நாங்க திண்டாடிப்போனோம்.

ரிக்‌ஷாவுடன் தீனதயாளன்
ரிக்‌ஷாவுடன் தீனதயாளன்
நா.ராஜமுருகன்

இருந்தாலும், நம்ம குடும்பத்தை இத்தனை வருஷம் கரைசேர்த்த தொழிலுன்னு இதைவிட மனசில்லை. பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவமனைகளுக்குப் போறவங்க, அருகில் உள்ள சாந்திவனத்துக்குப் போறவங்கன்னு இன்னும் ஒண்ணு ரெண்டு ரிக்‌ஷா பிரியர்கள் எனக்கு கஸ்டமர்களா இருக்காங்க. உடம்பைக் கெடுத்துக்கிட்டவங்க இப்போ சைக்கிள், நடைப்பயிற்சின்னு வந்திருக்காங்க. என்னோட ரிக்‌ஷாவை நோக்கி வர்ற காலம், ரொம்ப தூரம் இல்லை சார். அவங்க இருக்கிற வரைக்கும், என் கால்ல மிதிக்குற அளவுக்குத் தெம்பு இருக்கிறவரைக்கும் ரிக்‌ஷா பெடலை நிறுத்தாம மிதிச்சுக்கிட்டே இருப்பேன்" என்றபடி, குளித்தலை நகரச் சாலையில் ரிக்‌ஷாவை ஓட்ட ஆரம்பிக்கிறார்.

அவர் குரலில் ஒலித்த அதே நம்பிக்கை, ரிக்‌ஷாவை மிதிப்பதிலும் வெளிப்பட்டது. காலம், விரைவில் உங்கள் துயர் துடைக்கட்டும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism