Published:Updated:

`ஆன்மாவும் இல்லை; மறு பிறவியும் இல்லை!’ - புத்தர் ஞானம் பெற்ற கயாவில் ஒரு பயணம் #MyVikatan

புத்தர்

பயணத்தின்போது நாம் தங்குமிடங்களிலோ, கடைகளிலோ, நம் வாகனத்தை நிறுத்தும் காவல்துறையினரிடமோ அல்லது வழி கேட்பதற்காக யாருடனாவதோ பேச வேண்டியிருந்தால் புன்னகையோடு, அவர்கள் கண்களைப் பார்த்து தன்னம்பிக்கையோடு பேச வேண்டும்.

`ஆன்மாவும் இல்லை; மறு பிறவியும் இல்லை!’ - புத்தர் ஞானம் பெற்ற கயாவில் ஒரு பயணம் #MyVikatan

பயணத்தின்போது நாம் தங்குமிடங்களிலோ, கடைகளிலோ, நம் வாகனத்தை நிறுத்தும் காவல்துறையினரிடமோ அல்லது வழி கேட்பதற்காக யாருடனாவதோ பேச வேண்டியிருந்தால் புன்னகையோடு, அவர்கள் கண்களைப் பார்த்து தன்னம்பிக்கையோடு பேச வேண்டும்.

Published:Updated:
புத்தர்

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மொஹல்சராய் என்ற ஊரில் இரவு தங்கினோம். காலை ஐந்தரை மணிக்கு எழுந்துவிட்டேன். உடனடியாக நடைப்பயிற்சி செய்யத் தொடங்கினேன். இது போன்ற நீண்ட பயணங்களில் உடல் நலம் பேணுவது மிகவும் முக்கியம். கார் அல்லது பேருந்தில் தொடர்ந்து 8 மணி நேரம், 9 மணி நேரம் உட்கார்ந்து பயணம் செய்தால் இடுப்பு வலியும், கழுத்து வலியும் ஏற்படும். இந்த வலிகள் வராமல் தடுப்பதற்கு உடற்பயிற்சி அவசியம்.

இமயமலைக்கு நடைப்பயணம் போவதற்கு முன்பு எந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்து உடலைத் தயார் செய்துகொண்டேனோ, அதே அளவுக்கு இந்தப் பயணத்துக்கு முன்பும் உடலை தயார் செய்துகொண்டேன். பயணத்தின்போதும் தினமும் காலையில் எழுந்து முக்கால் மணி நேரம் வேகமாக நடைப் பயிற்சி செய்தேன். கேசவன் அதே நேரத்தில் ஓட்டப் பயிற்சி செய்து முடித்து விடுவார். நடைப்பயிற்சியோடு நம்முடைய எல்லா மூட்டுகளையும் இலகுவாக்குவதற்கான பயிற்சியையும் (relaxing exercises), தசைநார்களை இழுப்பதற்கான (stretch exercises) பயிற்சியையும் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

கழுத்தை முன்பும், பின்பும் பத்துமுறை சாய்ப்பது, பக்கவாட்டில் இடது புறம் வலது புறமாக பத்து முறை சாய்ப்பது, இடது புறமும் வலது புறமும் ஐந்து, ஐந்து முறை முழுமையாக சுழற்றுவது. பின்பு இடுப்பில் கையை வைத்துக்கொண்டு முழுவதுமாக முன்னாலும், பின்னாலும் சாய்வது. மணிக்கட்டு, முழங்கை, தோள்பட்டை, கணுக்கால், முட்டி, இடுப்பு ஆகிய எல்லா மூட்டுகளையும் சுழற்றுவது. இந்த எல்லா உடற்பயிற்சிகளையும் மிக லேசாக காற்றில் மூங்கில் வளைவது போலச் செய்ய வேண்டும். அதிகாலையில் நடைப்பயிற்சி போகும்போது அந்த ஊர்களைப் பார்ப்பது ஒரு அழகு. பந்தர்கவட என்ற ஊரில் காலை நடைப்பயிற்சி செய்தோம். மிதமான குளிரில் நிறைய பெண்கள் நடைப்பயிற்சி செய்வதைக் காணமுடிந்தது. 6 மணிக்கு ஊர் பரபரப்பாக காணப்பட்டது.

செய்தித்தாள்களைப் பிரித்து வீடுகளுக்கு அனுப்பும் பணியைச் செய்பவர்கள், வேலைக்குச் செல்வதற்காக பேருந்துக்காக காத்திருப்பவர்கள், துப்புரவுப் பணி செய்பவர்கள், இவர்களெல்லாம் இயங்கிக் கொண்டிருந்தார்கள். மத்தியப் பிரதேசத்திலும், பீகாரிலும் நம் ஊர் போல தேநீர் கடைகள் இயங்குவதைப் பார்க்க முடியவில்லை. உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொஹல்சராயில் தேநீர் கடைகள் திறந்திருந்தன. சிறிய மண் கலயத்தில் சுவையான தேநீர் பரிமாறினார்கள்.

ஒரு குள்ளமான பெண்மணி பக்கத்து வீட்டுச் சுவருக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த செம்பருத்திப் பூவைப் பறிப்பதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். நான் பறித்துக் கொடுத்தவுடன் இரண்டு கைகளையும் கூப்பி நன்றி சொன்னார். நரைத்த தலைமுடியோடு பயணம் செய்வதில் ஒரு பலன் இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே, மூத்தவர்களுக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது.

புத்த கயா
புத்த கயா

நானும் என் மனைவி தங்கமும், இத்தாலியில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தோம். டிக்கெட் பரிசோதகர் எங்களுடைய பயணச்சீட்டை பரிசோதனை செய்தார். அது என்னுடைய சென்னை டிராவல் ஏஜென்ட் வாங்கிக் கொடுத்திருந்த டிக்கெட். அதை ரயில்நிலையத்தில் ஆக்டிவேட் செய்ய வேண்டுமாம். நாங்கள் செய்யவில்லை. பரிசோதகர் கொஞ்சம் பதற்றமானார். அவருக்கு ஆங்கிலமும் சரியாகப் புரியவில்லை. என்னுடைய வெள்ளைத் தலையைப் பார்த்து, அருகில் உட்கார்ந்திருந்தவர்கள் எனக்காக அவரிடம் பேசி (இத்தாலிய மொழியில் அவர்கள் அதைத்தான் பேசி இருக்க வேண்டும்) அந்தப் பிரச்னையை சரி செய்தார்கள்.‌ நாங்கள் சென்றடையும் ஸ்டேஷனில் இறங்கியவுடன் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்று எச்சரித்துவிட்டு பரிசோதகர் எங்களை விட்டுவிட்டார்.

பயணத்தின்போது நாம் தங்குமிடங்களிலோ, கடைகளிலோ, நம் வாகனத்தை நிறுத்தும் காவல்துறையினரிடமோ அல்லது வழி கேட்பதற்காக யாருடனாவதோ பேச வேண்டியிருந்தால் புன்னகையோடு, அவர்கள் கண்களைப் பார்த்து தன்னம்பிக்கையோடு பேச வேண்டும். புன்னகை தன்னம்பிக்கையின் அடையாளம். அதிகாரத்தோடு பேசுவது அல்லது தயக்கத்தோடு பேசுவது இரண்டுமே அச்சத்தின் வெளிப்பாடுகள். ஒரு புதிய மனிதனைப் பற்றிய கருத்து அவன் பேசுவதைவிட அவன் உடல் மொழியின் மூலமாகவே ஏற்படுகிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் காம்போலிங் என்ற ஊரில் தங்கினோம்.

சாலையோரக் கடையில் சுடச்சுட சிக்கன் ரோல் சாப்பிட்டோம். அங்கே இருந்தவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் பூட்டான் போகப் போவதைச் சொன்னவுடன் அவர் ``கார் ஒரிஜினல் ஆர்சி புத்தகம், ஒரிஜினல் ஓட்டுநர் உரிமம், மாசு சான்றிதழ் எல்லாம் இருக்கிறதா?'' என்று கேட்டார். நாங்கள் மாசு சான்றிதழ் வாங்கி இருக்கவில்லை. காலை முதல் வேலையாக ஊரிலேயே மாசு சான்றிதழ் வாங்கிக்கொண்டோம். அவருடன் பேசியிருக்கவில்லையென்றால் பூட்டான் எல்லையில் தடுக்கப்பட்டிருப்போம்! புதிய மனிதர்களோடு தயக்கமில்லாமல் உரையாடுவது அவசியம்.

புத்த கயா
புத்த கயா

வெளிநாட்டினர் எழுதும் பயணக் கட்டுரைகளிலும் பயணக் காணொலிகளும் அந்த ஊரின் மதுவை அருந்துவதைப் பற்றியக் குறிப்புகள் கண்டிப்பாக இருக்கும். மது அவர்கள் கலாசாரத்தின் பகுதி. என்னைப் பொறுத்தவரை, நீங்கள் மது அருந்துபவராக இருந்தால்கூட பயணத்தின்போது, அதுவும் குறிப்பாக நாமே காரை ஓட்டிக்கொண்டு போகும் நீண்ட பயணங்களின்போது, கண்டிப்பாக மது அருந்தக் கூடாது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு, செல்லும் வழியில் உள்ள காட்சிகளைக் கண்டு ரசிக்கவும், ஏதேனும் சிறிய தடங்கல் வந்தால் அதை சமாளிக்கவும் நீங்கள் விழிப்போடு இருப்பது அவசியம்.

மது அருந்தினால் சோர்வு ஏற்பட்டு விடும். மொஹல்சராயிலிருந்து 225 கிலோ மீட்டர் தூரத்தில் புத்த கயா இருக்கிறது. சாலைகள் மோசமாக இருப்பதால் இதைக் கடப்பதற்கு நான்கரை மணி நேரம் ஆகிவிட்டது. புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தை ஒட்டி அமைக்கப்பட்ட புத்தர் கோயில் உலகெங்கும் வாழும் பௌத்த மதத்தினருக்கு முக்கியமான புனிதத் தலம். உலகெங்கிலுமிருந்து யாத்திரிகர்கள் இங்கே வருகிறார்கள். ஆனால், இதற்குச் செல்லும் சாலை என்பது மிகக் குறுகலான சந்து மட்டுமே. நம்முடைய காரை தூரத்தில் நிறுத்திவிட்டு வாடகை ஆட்டோவில் செல்ல வேண்டும்.‌

இந்திய மண்ணில் பிறந்த மிகப்பெரிய அறிவாளி புத்தர்.‌ 2400 ஆண்டுகளுக்கு முன்பு பொருள் முதல்வாதக் கருத்துகளை முன் மொழிந்தவர். புத்தரின் போதனைகளில் கூறப்பட்டுள்ள மூன்று அடிப்படை உண்மைகள் இன்றைக்கும் விளங்கும் அடிப்படை அறிவியல் கருத்துகள். எனவேதான் புத்தரை அறிவியல் அறிஞராகப் பார்க்கிறோம். புத்தர் கூறிய மூன்று அடிப்படை உண்மைகள்:

புத்த கயா
புத்த கயா

1. எந்தப் பொருளையும் உருவாக்கவோ அழிக்கவோ முடியாது (Matter can be neither created nor destroyed) பொருள்களிலிருந்து சக்தி பிறக்கிறது பொருள் முதல்வாதக் கருத்தின் அடிப்படையை அப்பொழுதே மொழிந்தவர் புத்தர்.

2. மாற்றம் ஒன்றே மாறாதது (காரல் மார்க்சின் தத்துவத்தை அப்பொழுதே சொன்னவர் புத்தர்)

3. கர்மா அல்லது வினை, காரணம் மற்றும் விளைவின் உலகளாவிய சட்டம். ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு திட்டவட்டமான காரணம் இருக்கிறது (Cause and effect)

இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு இதுவே அடிப்படை.

மூடநம்பிக்கைகளிலும், மதச் சடங்குகளிலும் மூழ்கி அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு சமூகத்தில், மத அமைப்புகளை தனிமனிதனாக நின்று எதிர்த்தவர் புத்தர். ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பதற்காகவும், சிலரை அடிமைகளாக வைத்திருந்தது, தங்களுக்குப் பணியாற்ற வைப்பதற்காகவும் ஆன்மா, மறுபிறவி போன்ற கட்டுக் கதைகள் வைதீக இந்து மதவாதிகளால் பரப்பப்பட்டிருந்தன. ஆன்மா, மறுபிறவி இரண்டையும் புத்தர் நிராகரித்தார். மனிதன் செய்யக்கூடிய அனைத்தையும் இந்தப் பிறவியிலேயே செய்ய வேண்டும் என்று முன்மொழிந்தார். ஆன்மா என்பது இல்லை என கற்பித்தார். அந்த மகான் அமர்ந்து, ஞானம் பெற்ற இடத்தைப் பார்ப்பது உள்ளத்தை நெகிழ வைக்கும் உணர்வு. அவர் அமர்ந்து தியானம் செய்த போதிமரம் இப்பொழுது இல்லை. அதன் கிளைகளைக் கொண்டு அசோகர் வளர்த்த மரங்களில் ஒன்று இந்த இடத்தில் இருக்கிறது. இது நான்காம் தலைமுறை மரம்.

புத்த கயா
புத்த கயா

நூற்றுக்கணக்கான பௌத்தத் துறவிகள் அந்த மரத்தடியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடுகின்றனர். புத்தன் காலடிகள் பட்ட இடத்தில் நாம் நடந்து போவது விவரிக்கமுடியாத உணர்வு. அந்த போதி மரத்தின் கீழ் நடந்துகொண்டிருந்தபோது மரத்தின் பட்டை ஒன்று என் அருகில் விழுந்தது. அதை புனிதப் பொருளாக எடுத்து சட்டைப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டேன். நாம் வாழும் காலத்தில் மனித சமூகத்துக்கும், உலகத்துக்கும் நம்மால் ஆன நன்மையைச் செய்ய வேண்டும். உலகமே எதிர்த்தாலும் இந்தப் பயணத்தில் துணிந்து, தொடர்ந்து சொல்ல வேண்டும் என்பதாக, புத்தனின் போதனையைப் புரிந்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

- மருத்துவர் இரா.செந்தில் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தர்மபுரி தொகுதி)

கட்டுரையாளரின் முந்தைய பயணக் கட்டுரைகளைப் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

முதல் நாள் - https://www.vikatan.com/news/travel/travel-on-the-road-and-live-the-life

இரண்டாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/story-of-william-lambton-who-measured-india

மூன்றாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/william-henry-sleeman-suppressed-criminal-gangs-known-as-thuggee

நான்காம் நாள் - https://www.vikatan.com/lifestyle/travel/know-about-the-dhamek-stupa-at-sarnath-and-buddhas-preaching