Published:Updated:

`அச்சச்சோ பயந்துட்டோம்..!' - ஹாலோவீன் பரிதாபங்கள் #MyVikatan

பல இடங்களில் ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெற, அமெரிக்கத் தலைநகரான, வாஷிங்டனில் இருந்து நம் பயணத்தைத் தொடங்குவோம்.

Representational Image
Representational Image

மேற்கத்தியப் பழக்கமான ஹாலோவீன் இப்போது நம் நாட்டிலும் பரவி வருகிறது. "ஹாலோவீன் அமெரிக்காவில் எப்படிக் கொண்டாடப்படுகிறது?" என்பதை அறிந்துகொள்ள, வாசகர்களாகிய நாம் நம் விகடனோடு அமெரிக்கா பயணிப்போமா?

Representational Image
Representational Image

பல இடங்களில் ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெற, அமெரிக்கத் தலைநகரான, வாஷிங்டனில் இருந்து நம் பயணத்தைத் தொடங்குவோம். `ஆஹா!' என்று நாம் வாய் பிளக்கும் அளவுக்கும் சிறுவர் மட்டுமல்லாது பெரியவர்களும் விதவிதமாக உடை அணிந்து, "ஹாப்பி ஹாலோவீன்!" என்று வாழ்த்து தெரிவித்தனர். Cow boy, Giraffe, witch, clown ... எனப் பல வேடமிட்டு, அலுவலகத்தில் அவர்கள் பணியைச் செய்து கொண்டிருந்தனர். அட! வேலையும் கெட்டுவிடாமல், அதே நேரத்தில் கொண்டாட்டத்தையும் விட்டுவிடாமல் அவர்கள் கொண்டாடிய விதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பணிபுரிந்துகொண்டிருந்த அமெரிக்கர்களையும், அமெரிக்கா வாழ் இந்தியர்களையும் பார்த்தபடி, நாம் சாலையில் காரில் பயணிக்க, அகோர முகம் கொண்ட பொம்மைகளும், எலும்புக் கூடுகளும் ஆங்காங்கே தொங்கிக்கொண்டு நம்மை அச்சப்படுத்துகின்றன.

பூசணிக்காயை விதவிதமாக அலங்காரம் செய்து வைப்பது இவர்கள் பழக்கம் என்பதை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் உள்ள பூசணிக்காய் கூறுகிறது. வாவ்! என்று நம்மை ஆங்கிலத்தில் பிரமிக்க வைத்துவிட்டது. தொடர்ந்து நம் காதில் விழுந்த ஆங்கில வார்த்தைகள். ஆனால், இப்போது நம்மை வியப்பில் ஆழ்த்தியது அங்கு இருந்த சிறுவர் பட்டாளம். கூட்டம் கூட்டமாகச் சிறுவர் பட்டாளம். இன்னும் நம்மை மகிழ்வித்த விஷயம், அனைவரும் தமிழில் அளவளாவிக் கொண்டிருந்தனர். சென்னை, திருநெல்வேலி, மதுரை, ஈரோடு, திருச்சி... எனப் பல ஊர்ப் பெயரைக் கூறிக்கொண்டு அவர்கள் நம்மிடையே அறிமுகமாகின்றனர்.

Representational Image
Representational Image

குழந்தைகள் ஸ்பைடர்மேன், யுனிகார்ன், சூப்பர் ஹீரோ, லேடி பக், நிஞ்ஜா, சூனியக்காரி, பம்பில் பீ... எனப் பல பரிமாணங்களில் காட்சி அளித்தனர். அதுபோல் சில பெரியவர்களும்! “ஹாலோவீன் கொண்டாடுவதன் காரணம் என்னவோ?” என்று அறிந்துகொள்ளும் ஆவலுடன், நாம் பேச்சுக் கொடுத்தால், அவர்கள் அறிந்த கதையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். அக்டோபர் 31-ம் தேதி பேய்கள் உலகத்துக்குத் திரும்பி வருவதாக ஓர் நம்பிக்கை இருந்ததாகவும்... பேய்களை, அகோர முகம் கொண்ட பொம்மைகள் வைத்து அச்சுறுத்துவதற்கும், மனிதர்கள் பல விதத்தில் வேடமிட்டு பேய்களை மிரட்டுவதற்கும், விரட்டுவதற்கும் இந்தப் பழக்கம் வந்ததாக அவர்களுக்குத் தெரிந்த செய்தியை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

குழந்தைகள் வேகமாக ஒரு வீட்டின் கதவைத் தட்ட நம் கவனம் அங்கு திரும்புகிறது. வீட்டின் கதவை ஒருவர் சிரித்த முகமாக ஆர்வமாகத் திறக்கிறார். குழந்தைகள், "Trick or Treat" என்று கூறி குறும்புக்குத் தயாராக, பெரியவர்கள் குழந்தைகளுக்கு சாக்லேட், பரிசுப் பொருள்கள் கொடுத்து குழந்தைகளை மகிழ்விக்கின்றனர். அதன் பின்னும் சில குழந்தைகள் அவர்களை அச்சுறுத்தி விளையாடிவிட்டே கிளம்புகின்றனர்.

Representational Image
Representational Image

பெரியவர்களும் அஞ்சுவதுபோல் அஞ்சி, குழந்தைகளிடம் தோற்று, அவர்கள் மனதை வெல்கின்றனர். சிலபல நம்பிக்கைகளைக் காரணத்தை வைத்து அந்நாளில் தொடங்கப்பட்ட ஹாலோவீன், இன்று அனைவரும் பல வேடமிட்டு சாக்லேட் , பரிசுப் பொருள்கள் பகிர்ந்துகொள்ளும் கொண்டாட்டமாகப் பரவி வருகிறது.

- அகிலா கண்ணன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/