Published:Updated:

சாயங்கால சந்தோஷங்கள்! #MyVikatan

கைபேசிகளும், டிவி சேனல்களும், தொழில்நுட்பங்களும் வளர்ந்திருக்காத காலத்தில் எளிய மனிதர்களின் சாயங்காலங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை இன்றைய தலைமுறை நினைத்துப்பார்க்கக் கூட முடியாது.

Representational Image
Representational Image

வார நாள்களில் அலுவலகம் விட்டு வீடு திரும்பும் மாலைகள் மிகவும் சவாலானவை. நெரிசல்கள் நிறைந்த சாலைகளுக்குள் தேங்கி தேங்கி மிதமான வேகம்தொட்டு கிடைக்கும் இடைவெளியில் வாகனத்தை திணித்து வீடு வந்து சேர்வதற்குள் வெறுப்பே மிஞ்சி நிற்கும்.

நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் பேருந்துகளில் தொங்கி, மினி பஸ்களில் கூட்டத்தில் நசுங்கி வீட்டை அடையும் மாலைகள் ஒரு விதமான அயற்சியைக் கொடுக்கும். இன்றைய தலைமுறை இந்தச் சிக்கல்கலையெல்லாம் களைய கையாளும் யுக்திகள் பலவுண்டு. காதுகளில் மாட்டிய ஹெட்போன்களில் கசியும் மேற்கத்திய இசைக்குத் தகுந்தவாறும், கானா பாடல்களோடும் தூரங்களை இசையோடு கடந்துவிடுகிறார்கள். வார இறுதியில் பலர் ஷாப்பிங் மால்களிலும், சிலர் பப்களிலும் தங்களின் சாயங்காலத்தை சந்தோஷங்களால் நிரப்பிக்கொள்கிறார்கள்.

Representational Image
Representational Image

எளிய மனிதர்களின் சாயங்காலங்கள் என்பது இப்போது சீரியல்களுக்குள் புதைந்து போயிருந்தாலும் அந்த நரகத்திலிருந்து பிரித்து நிகழ்காலத்தின் நிமிடங்களில் நிறைக்கும் சிரிப்புகளோடும், சுமக்கும் சோகங்களோடும், நையாண்டி, பகடிகளோடு மறக்க முடியா ஒரு மாலையை அவர்களின் கைகளுக்குள் பரிசளிக்க சக மனிதர்களால் மட்டுமே முடிகிறது. கைபேசிகளும், டிவி சேனல்களும், தொழில்நுட்பங்களும் வளர்ந்திருக்காத காலத்தில் எளிய மனிதர்களின் சாயங்காலங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை இன்றைய தலைமுறை நினைத்துப்பார்க்க கூட முடியாது.

கட்டட தொழிலாளிகள், நகராட்சி ஊழியர்கள், தினக்கூலிகள், நெசவாளிகள், துணி வெளுப்பவர்கள், விவசாயிகள், சாயத்தொழிலாளிகள் என பல்வேறு வேலைகள் செய்யும் எளிய மக்களோடு கலந்திருந்த வாழ்வில் சாயங்கால சந்தோஷங்களுக்கு குறைவில்லாமல் இருந்தது அந்தக் காலம். கடந்த மாதத்தில் ஒருநாள் ஊருக்குப் போயிருந்தபோது நான்கு ரோடுகள் சந்திக்கும் சாலையில் திடீரென முளைத்தன ஒலிபெருக்கிகளும் பாட்டு சாதனங்களும். எளிய மக்களை சந்தோஷப்படுத்தி அவர்களின் சாயங்கால நேரத்தை தங்கள் ஒப்பனைகளால், உடல் அசைவுகளால், நடனங்களால், கிண்டல்களால் நீளும் இரவை மேலும் அழகானதாக மாற்றுகிறார்கள் `திருநங்கைகள்'.

Representational Image
Representational Image

வருடத்தில் சில நாள்கள் இப்படி ஊருக்குள் இருக்கும் ஒருசில திருநங்கைகள் ஒன்றுகூடி ஓர் இடத்தை தேர்வுசெய்து நான்கு ஐந்து நாள்களுக்குத் தொடர்ந்து நடனமாடுகிறார்கள், ஆட்டத்தின் முடிவில் கவிழ்க்கப்பட்ட குடையை கூட்டத்தை நோக்கி நீட்டுகிறார்கள். வந்து விழும் சில்லறைகளில் வாழ்வை நீட்டிக்கிறார்கள். கடைசி நாளில் தாலி பூஜையென ஒன்றை செய்து சுமங்கலிகளை வாழ்த்தி அவர்கள் தரும் அன்பளிப்பை மனதார ஏற்றுக்கொள்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வாரமும் ஓர் இடத்தை நோக்கிப்போய் அந்தப் பகுதியில் உள்ள மக்களை சந்தோஷப்படுத்துகிறார்கள். பகலெல்லாம் கறுப்பாய் போகும் அவர்களின் வாழ்க்கை இரவுகளில் மின்னொளியில் ஜொலிக்கிறது. ஆனால், அந்த வாழ்வு எப்போதும் வயிற்றுக்கும் வாயுக்குமான போராட்டமாகவே முடிகிறது. குழந்தைப் பருவத்திலிருந்து வெளிவந்திராத காலங்களில் எங்கள் சாயங்காலங்கள் பல்வேறு கொண்டாட்டங்களால் நிரம்பியிருந்தன.

ஊருக்குள் நல்லதங்காள் கதைகளையும், சின்னண்ணன் பெரியண்ணன் கதைகளையும் கூத்து காட்டுவார்கள். வருடமொருமுறை இந்தக் கூத்துக்கலைஞர்கள் ஊருக்குள் வந்துவிட்டாலே கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். ஒருவாரம் தங்கியிருந்து தினமும் மதியத்துக்கு மேல் ஒப்பனைகளைத் தொடங்கிவிடுவார்கள், எட்டிப்பார்க்கும் சிறுவர்களிடம் ஏட்டுக்கதை பேசியபடி ஒப்பனைகள் முடிந்து தெருமுனைக்கு வந்துவிட்டால் விடிய விடிய கூத்து நடக்கும், தொடக்கத்தில் நகைச்சுவையாக போகும் கூத்து, முடிவில் பெண்களை அழ வைத்துவிடும். நடந்த கதைகளை அப்படியே கண்முன்னே கொண்டுவருவார்கள்.

சமயங்களில் அவர்களைப்பார்த்து பயந்து பக்கத்தில் இருப்பவர்களைக் கட்டிக்கொண்ட தருணங்கள் இப்போது எட்ட நின்று ரசிக்கின்றன. எத்தனை சீரியல்களை வீட்டுக்குள் கொண்டுவந்தாலும், வீதிக்குள் நடந்த இந்தத் தெருக்கூத்துகளுக்கு ஈடாகாது. நிலாப்பிள்ளையார் என்னும் ஒரு விழா எல்லா தெருக்களிலும் நடக்கும். இப்போது பல காரணங்களால் அவை குறைந்துபோயிருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்துகொண்டிருக்கின்றன. எல்லோர் வீடுகளிலும் செய்த இரவு உணவை எடுத்துவந்து தெருவுக்கு நடுவில் மண்விளக்கில் ஒளி தரும் பிள்ளையாரின் முன் வைத்து சுத்தி நின்று கொப்பியடித்து பாடல்கள் பாடி முடிவில் எல்லோரும் அங்கேயே அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்டு நிலாவுக்கு எடுக்கப்படும் விழா, ஒரு சின்ன பெண்ணை பூசாரியாக்கி நடு ஜாமத்தில் குளிக்க வைத்து சாமியாய் அலங்கரித்து சுற்றி இருப்பவர்கள் பாட்டுப்பாடுவார்கள். அந்த பூசாரிப்பெண் குளிரில் நடுங்கும். பார்க்க பாவமாக இருந்தாலும் அது ஒரு ஐதிகமாய் தொடர்ந்து செய்வார்கள்.

Representational Image
Representational Image

ஒருவாரம் நடக்கும் இந்த நிகழ்வில் கடைசி நாளில் எல்லோர் வீட்டிலும் அரிசி மாவு, வெல்லம் மாவு இடித்து சாமிக்கு படைத்து விடிய விடிய கொப்பியடித்து தேர் ஒன்றைச் செய்து அதில் பிள்ளையாரை வைத்து ஆற்றில் கொண்டுபோய் விடுவார்கள். கடைசி நாளில் மைக் செட் கட்டி, கலர் காகிதங்கள் ஒட்டி, படு ஜரூராய் நடக்கும் நிகழ்வில் பெரும்பாலும் ஆண்கள் வெளி வேலைகளை பார்த்துக்கொள்வார்கள். பெரிய அண்ணன்கள் அக்காக்களை கவரும் விதங்களில் பல்வேறு சேட்டைகளை செய்தவண்ணம் இருப்பார்கள். ``ஹலோ மைக் டெஸ்டிங் ஒன்.. டூ.. திரி யக்கா செல்லம்மாக்கா இன்னுமா நீங்க வரல உங்களுக்காக தான் எல்லோரும் வெய்ட் பண்றோம். வந்து பாட்டு பாடி ஆரம்பிச்சிவிட்டுட்டு போக்கா" என்னும் குறும்புச் சொற்கள் இன்னும் காதுகளுக்குள் கேட்கிறது.

சுவர்களை ஆக்கிரமிக்கும் விளம்பரங்கள்... காலத்தால் கரைந்துபோகும் ஓவியங்கள்...! #MyVikatan

ஒருவழியாய் எல்லோரும் வந்து பாட்டு பாடி களைப்படைந்த பின் சிறுவர்களையும், ஆண்களையும் கொப்பியடிக்க வைத்துவிட்டு பெண்கள் சுண்டல் செய்யவும், டீ வைக்கவும் போய்விடுவார்கள். ஆண்கள் கொப்பியடிக்கும் சாக்கில் குனிந்து குனிந்து அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் தாம்பாழ தட்டுகளில் இருந்து தேங்காய்ப் பழங்களை ஆட்டையப்போடுவார்கள். விடியற்காலை 4 மணிக்கு மேல் தேரில் பிள்ளையாரை வைத்து இழுத்துக்கொண்டு போய் ஆற்றில் விட்டு வரும்போது விடிந்திருக்கும், முந்தைய நாள் நினைவுகளால் அடுத்த நாள் நகரத்தொடங்கும். ஊருக்கு நடுவிலிருக்கும் பெரிய மைதானத்தில் பொசுக்கென வந்து ஒரு கூட்டம் கூடாரம் போடும். பெரிய வட்டமொன்றைப் போட்டு தங்கள் எல்லையை தீர்மானித்து அதன் நடுவே ஒரு பெரிய மூங்கிலை நட்டு ஒரு டியூப் லைட்டையும் எரியவிடுவார்கள். வட்டத்தையொட்டிய ஓரத்தில் ஒரு கூடாரமிருக்கும். அதில் தங்களது உடமைகளை வைத்துக்கொண்டு பின் மாலைக்காக காத்திருக்கும் அந்த புதுக்கூட்டம். யார் என்னவென்று யோசித்துக்கொண்டிருக்கும் வேளைகளில் ``ஒரு வாரத்துக்கு சைக்கிளை விட்டு இறங்காமல் வலம் வரப்போகிறார்" என்று அறிவித்தபடி செல்வார்கள். கவனமீர்க்கும் அந்த அறிவிப்புகளில் மனம் நெகிழும் பெருசுகள் முதல் சிறுசுகள் வரை சாயங்காலங்களுக்காக காத்திருப்போம். மாலை ஆறு மணிக்குமேல் சேரத்தொடங்கும் கூட்டத்தை பாடல்களால் கட்டிப்போடுவார்கள். ஒருவர் சைக்கிளைவிட்டு இறங்காமல் அதை ஓட்டியபடியே பல்வேறு வித்தைகள் காட்டுவார்.

Representational Image
Representational Image

ஒரு சக்கரத்தில் ஓட்டுவது, இரண்டு கைகளிலும் ஆட்களை வைத்துக்கொண்டு, பெரிய அண்டாக்களை வாயில் கடித்துக்கொண்டு, இரண்டு சைக்கிள்களை பிடித்துக்கொண்டே சைக்கிளை விட்டு இறங்காமல் ஓட்டிக்கொண்டே இருப்பார். இரவும் பகலும் மழையும் வெயிலும் எதுவானாலும் சைக்கிளைவிட்டு இறங்கமாட்டார் என அறிவிப்பார்கள். அவர்கள் சொல்வது உண்மையா என்பதை சோதிக்க ஊரிலுள்ள இளவட்டங்கள் இரவுகளில் போய் பார்த்து வருவார்கள், சில நேரங்களில் ஓட்டிக்கொண்டிருப்பார், சில நேரங்களில் சைக்கிளின் மீதே படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறார் என சொல்வார்கள். வேடிக்கை பார்த்த இரவுகள் எங்களுக்கு பல கேள்விகளை எழுப்பும், சைக்கிளில் இருந்தபடியே அவர் எப்படி சாப்பிடுவார், பாத்ரூம் எப்படி போவார், எப்படி குளிப்பார் என்பது போன்ற பல கேள்விகள் இரவுகளைத் துளைக்கும். எல்லா கேள்விகளுக்கும் வறுமை என்ற பதிலை தாராளமாக நிரப்பிக்கொள்ளலாம். கடைசி நாளில் சைக்கிளில் இருந்தபடியே டியூப் லைட்டுகளை உடைப்பார் என்ற அறிவிப்பு ஆர்வத்தை எகிற வைக்கும்.

இரண்டு பக்கமும் பல மூங்கில்களைக் கட்டி டியூப் லைட்டுகளின் இரண்டு முனைகளையும் ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டு கட்டிவைத்துவிடுவார்கள், கூட்டம் சேர சேரத்தான் அவருக்கு ஒரு நம்பிக்கை வரும், கூட்டத்தை நோக்கி ஒரு டியூப் லைட்டை காட்டிவிட்டு முறுக்கு போல கடித்து திங்க தொடங்குவார், பிறகு எல்லோரும் கைதட்டி உற்சாகப்படுத்த வட்டமடித்துக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து வேகமாக வந்து நெஞ்சிலேயே, எரிந்துகொண்டிருக்கும் எல்லா லைட்டுகளையும் உடைப்பார். இப்போது பார்க்கும் எத்தனையோ சாகசங்களுக்கு முன்னால் இது சாதாரணமாக தெரிந்தாலும் அப்போது இது அத்தனை பெரிய விஷயம். கடைசி லைட்டை உடைத்துமுடித்து சைக்கிளில் இருந்தபடியே எல்லோரையும் கும்பிட்ட பிறகுதான் கால்களை கீழே வைப்பார். இந்த ஒரு வாரத்தில் அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப காசுகளில்தான் அடுத்த சில வாரங்களுக்கு அவர்களின் ஒட்டுமொத்த ஜீவன்களும் பசியாறும்.

சாயங்கால சந்தோஷங்கள்! #MyVikatan

தெருவில் திரைகட்டி சாமிப் படங்கள் போடும்போது சாக்குப்பைகள் போட்டு இடம்பிடிப்பது, திண்ணையில் அரட்டை கச்சேரிக்குள் மூக்கை நுழைப்பது, யார் வீட்டு சண்டையையாவது அத்தனை சுவாரஸ்யமாய் வேடிக்கை பார்ப்பதென சாயங்கால சந்தோஷங்கள் நிரம்பிய வாழ்க்கை இப்போது வாய்க்கவில்லை. வீடடைந்த சாயங்காலங்கள் நம்மை சீரியல்களுக்குள் தள்ளி விளம்பரப் பூட்டுகளைப் போட்டு இறுக்கிப்பூட்டி விடுகின்றன. மீண்டு வர நினைத்தாலும் வரமுடியாத பொழுதுகள் நம்மை களவாடிக்கிடப்பதில் இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிகப்பெரியதாகவே இருக்கின்றன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஒரு மாலையில், கைப்பேசியில் சார்ஜ் சுருங்கிவிட்ட நேரத்தில், பழைய வாழ்வில் நம்மோடு பயணித்த மனிதரை காணும்பொழுதில் இவற்றையெல்லாம் நினைத்துப்பார்ப்பதைத்தவிர வேறென்ன செய்துவிட முடியும்?

-தனபால்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/