Published:Updated:

`கொரோனா பதற்றமும் தவிர்க்க முடியாத விமானப் பயணங்களும்!’ - வாசகி பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

ஊருக்குப் போவது என்றாலே ஏற்படும் துள்ளலும் மகிழ்ச்சியும் மறைந்து அதற்கு மாறாக இந்தத் தடவை ஒரு பயமும் பரபரப்பும் இப்போதே என்னை ஒட்டிக்கொண்டு உள்ளது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!தனிப்பட்ட, தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அடுத்தவாரம், அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டியிருப்பதால், விமானப் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எப்போதும் போல் இல்லாமல் இந்தத் தடவை ஒரு படபடப்பு ஏற்கெனவே பற்றிக்கொண்டுவிட்டது. வழக்கமாக விமானப் பயணம் என்றாலே, அதிலும் ஊருக்குப் போவது என்றாலே ஏற்படும் துள்ளலும் மகிழ்ச்சியும் மறைந்து அதற்கு மாறாக இந்தத் தடவை ஒரு பயமும் பரபரப்பும் இப்போதே என்னைத் தொற்றிக்கொண்டுள்ளது. அதற்குக் காரணம், இன்று உலகம் முழுவதும் தலைவிரித்தாடும் COVID-19 கொரோனா வைரஸ். மெல்ல மெல்ல தனது ருத்ர தாண்டவத்தை உலகம் முழுவதிலும் பரவலாக ஆடத் தொடங்கியுள்ளது.

Representational Image
Representational Image

இதைப்பற்றியே இப்போது அனைவரும் பேசிக்கொண்டிருப்பதால் அதன் உக்கிரம் இன்னும் மக்கள் மத்தியில் அதிகமாகி பீதியைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில், எனது மகனையும் கூட அழைத்து செல்லலாமா வேண்டாமா என்ற விவாதத்தையும் தாண்டி முதலில் நான் செல்லலாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. எனவே, இதுபற்றி சமீபத்தில் நிறைய தேடிப் படித்தேன். என்னைப் போலவே, முக்கியமான, தவிர்க்க முடியாத காரணங்களுக்காக விமானப் பயணத்தை மேற்கொள்ள இருப்பவர்களுக்கும் இதே குழப்பம் இருக்கலாம் என்ற நோக்கத்துக்காக, இந்தக் கட்டுரையை எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

COVID-19 கொரோனா வைரஸ் பீதியால், விமானப் பயணத் திட்டங்களை ரத்து செய்யலாமா, ஒத்திவைத்துவிடலாமா என்ற குழப்பம், என்னைப்போல் இதே சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட அனைவருக்குமே இருக்கும். இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் எக்கச்சக்கமான கருத்துகள் மற்றும் விவாதங்களின் மோதல்கள் போய்க்கொண்டிருப்பதை ஒரு புறம் பார்க்கிறேன். அதேவேளை, விமான நிலையங்களில் வழமையாகக் காணப்படும் நீண்ட வரிசைகளும் கூட்டங்களும் பரபரப்பும் இல்லாமல், நிம்மதியாக, சுதந்திரமாகப் பறப்பதற்கு இது ஒரு தக்க தருணம்தான்!

Representational Image
Representational Image

சமீபத்தைய அறிக்கையின்படி, வணிக விமான போக்குவரத்து இந்த ஆண்டு 8.9% வீழ்ச்சியடையும், இது 1978-க்குப் பிறகான மிகப்பெரிய சரிவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 9/11 அமெரிக்க பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், 1991, 2001, மற்றும் ஹெச் 1 என் 1 காய்ச்சல் தொற்று நோய்களின்போதான காலகட்டங்களிலும் இவ்வாறான சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

விமான நிறுவனங்கள் சுமார் 113 பில்லியன் டாலர் வரை விற்பனையை இழக்கிறது என்றும் சில விமான நிறுவனங்கள் ஏற்கெனவே இருக்கும் விமானங்களைக் குறைத்து வருகின்றன என்றும் கூறப்படுகிறது. அதனால் என்னைப்போல நீங்களும், இந்த எதிர்வரும் நாள்களில் விமானத்தில் பயணிக்க இருப்பவராயின் நீங்கள் செல்லும் விமானத்தில் ஒரு வேளை நீங்கள் மட்டுமேகூட இருப்பதைக் காணலாம்.

கால்களை ஓர் இடமும் தலையை ஓர் இடமும் வைத்துப் படுப்பது, விமானத்தில் அங்குமிங்கும் சுதந்திரமாக நடப்பது, ஓடுவது, ஏன் சத்தமாக ஒரு தமிழ் பாட்டை பாடுவது, வேண்டிய திசையில், விரும்பிய பக்கம் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது போன்ற நமக்குள் ஒளிந்திருக்கும் சிறுபிள்ளைத்தனமான ஆசைகளை நிறைவேற்றக்கூட சந்தர்ப்பம் கிடைக்கலாம். ஆனால், உயிர் பயம் யாரை விட்டது. எனவே, நாம் என்ன செய்ய வேண்டும் எனச் சற்று நடைமுறை ரீதியல் சிந்திக்கலாம்.

Representational Image
Representational Image

COVID-19, சாதாரண காய்ச்சல் வைரஸைவிட கணிசமாக அளவு அதிக தொற்றுநோயாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இன்னும் எவ்வளவு தூரம் ஆபத்தானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அசல் SARS வைரஸோடு ஒப்பிடும்போது இதன் இறப்பு விகிதம் 1.5% முதல் 3.8% வரம்பில் உள்ளது. ஆனால், மேலும் இதுதொடர்பான இறப்பு விகிதங்களும், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களும் தொடர்ந்து வெளிவருவதால், புள்ளிவிபரங்கள் தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே இருக்கின்றன. SARS-CoV2 மற்றும் அதன் பரவல் பற்றி சரியாக, தெளிவாக அறிய இன்னும் நிறைய இருக்கிறது. இதுதொடர்பான ஆராய்ச்சிகள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டு வரும் நிலையில், எச்சரிக்கையாக இருப்பது சாலச் சிறந்தது.

எனவே இவ்வாறான ஒரு இக்கட்டான பதற்ற சூழ்நிலையில் பயணம் மேற்கொள்ள இருப்பவராயின், நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதைப் பார்க்கவும். நீங்களும் உங்கள் விமானமும் (transit) எங்கு செல்கிறது என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அதை நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) https://www.cdc.gov-யினூடாக கொரோனா வைரஸ் நோய் 2019/2020 பயண வலைதளத்துக்கான தகவல்களுடன் சரிபாருங்கள். சி.டி.சி வலைதளமானது நாடு வாரியாக COVID-19 ஆபத்து குறித்த புதுப்பித்த தகவல்களை கூடுமானவரை வழங்கிக்கொண்டே இருக்கிறது.

Representational Image
Representational Image

நீங்கள் பயணப்பட எத்தனிக்கும் நாடு அல்லது இடம், பயண எச்சரிக்கைகள் அல்லது கட்டுப்பாடுகள் லிஸ்டில் இருந்தால், உங்களுக்கான பதில் மிக எளிது. எடுத்துக்காட்டாக, சீனாவும் இரானும் "பரவலான (நடந்துகொண்டிருக்கும் / அபாய கட்டத்திலிருக்கும்) நோய் பரவுதல்" என்ற பிரிவில் அடங்கும். இதன் பொருள் என்னவென்றால், இந்த நாடுகளுக்குச் செல்வதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்கக் கூடாது. தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகியவை, "பரவலான/தொடர்ச்சியான பரவலைக் கொண்டவை" என்று பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் பொருள் இந்த நாடுகளுக்கான பயணத்தை ஒத்திவைப்பது நல்ல யோசனையாகும். நீங்கள் 65 வயதுக்கு மேற்பட்ட வயதானவராகவோ, நீண்டகால மருத்துவ நிலையில் (long term medical conditions) உள்ளவராகவோ இருந்தால், ஜப்பானைப் பற்றியும் ஒரு எச்சரிக்கை உள்ளது. நீங்கள் அடிக்கடி விமான பயணத்தை மேற்கொள்பவராகவோ, எதிர்வரும் காலகட்டங்களில் விமானப் பயணத்தை மேற்கொள்ள இருப்பவராகவோ, ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக விமானத்தில் பயணம் செய்ய ஏற்படலாம் என நினைப்பவராகவோ இருந்தால், இந்த வலைதளத்தை உங்கள் மொபைல் போனில் புக்மார்க் செய்துகொள்ளுங்கள்.

இரண்டாவது விஷயம் என்னவென்றால், நீங்கள் செல்ல வேண்டிய பயணம் ரத்து செய்யக்கூடியதா என்பதை இருமுறை சரிபாருங்கள். அதேபோல நீங்கள் செல்லும் இடத்திலிருந்து மீண்டும் திரும்பி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்றும் பாருங்கள். ஏனெனில், நீங்கள் செல்லும் இடத்திலிருந்து மீண்டும் திரும்பி வர இயலாதவாறு, உங்கள் ரிட்டன் விமான டிக்கெட்டோடு மாட்டிக்கொள்ளக்கூடிய அபாயம் இருக்கிறதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். எனது அடுத்த வார பயண நிமித்தம் போலவே உங்களுக்கும், நீங்கள் போகும் இடம்/நாடு பெரிய அளவுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லாத பட்சத்தில், நீங்கள் செல்ல வேண்டிய வேலை கண்டிப்பாக நீங்களே சென்று நிறைவேற்ற வேண்டும் எனும் பட்சத்திலும் இருந்தால் என்ன செய்யலாம்?

Representational Image
Representational Image

விமானப் பயணம் என்பது நிச்சயமாக நோய்த்தொற்றுக்கான சாத்தியத்தை அதிக அளவில் கொண்டதாகும். எனவே, இந்த COVID-19 நோய்த்தொற்றை முற்றிலுமாக தவிர்ப்பதற்கான ஒரே வழி, மக்கள் தொடும் எந்தவொரு பொருள்கள், மேற்பரப்புகளுடனான (surface) தொடர்பையும் முற்றிலுமாகத் தவிர்ப்பதுதான். இது நடைமுறையில் சாத்தியமில்லை. வாழ்க்கை என்பது எப்போதுமே ஆபத்துகள் நிறைந்ததுதான். எனவே, எந்தவொரு செயலிலும் அபாயங்கள் இருக்கும்தான்.

முதலில், விமானங்களில் மறுசுழற்சி செய்யப்படும் காற்று எவ்வளவு ஆபத்து? காற்று HEPA வடிப்பான்கள் வழியாகச் செல்கிறது. HEPA என்றால் ``உயர் செயல்திறன் கொண்ட துகள் காற்று வடிகட்டி (high efficiency particulate air)” என்பதைக் குறிக்கிறது. அது குறைந்தது 99.97% நுண்ணுயிரிகள், தூசி, மகரந்தம், 0.3 மைக்ரான் (µm) அளவுள்ள எந்தவொரு வான்வழி (airborne) துகள்களையும் வடிகட்டும் அளவுக்கு திறமையானது.

HEPA வடிப்பான் சரியாக வேலை செய்கிறது என்று வைத்துக் கொண்டால், விமானத்தில் நாம் இருக்கும் இருக்கைக்கு மேலே இருக்கும் air nozzle overhead பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. அதுமட்டுமன்றி, SARS-CoV2 இதுவரை காற்றில் மட்டுமே பயணிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவற்றுக்கு பறவைகளுக்குப் போன்று றெக்கைகள் இருப்பது இல்லை. வைரஸ்கள் மேலதிக சக்தியைப் பெற்றுக்கொள்ள ரெட் புல் குடிப்பதில்லை. அதற்குப் பதிலாக, இருமல், தும்மல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து வெளியேறும் சுவாச துளிகளில் அவை சுகமாக சவாரி செய்கின்றன. இந்தத் துளிகளால் இவ் வைரஸ்கள் அந்த நபரிடமிருந்து மூன்று முதல் ஆறு அடி வரை பயணிக்க முடியும் எனச் சொல்லப்படுகிறது.

Representational Image
Representational Image

இம்மாதிரியான காலகட்டங்களில் விமானங்களில் பயணப்படும் பொழுது, சக பயணிகளுக்கு இடையேயான நெருக்கம்தான் அதிக கிலியை ஏற்படுத்தும். இதுவரை எனக்குத் தெரிந்து, விமானத்தில், அதுவும் economy class-ல் பயணம் செய்யும்/செய்த எந்தப் பயணியும் ``ஆஹா, என்னைச் சுற்றி எவ்வளவு விசாலமான இடம் உள்ளது! கால் வைக்க எவ்வளவு legroom!” என சொன்னதாக சரித்திரமே இல்லை. மாறாக, வரவர விமானத்தின் கட்டணங்கள் அதிகரித்துக்கொண்டு போகும் அளவுக்கு விமான இருக்கைகளும் அதன் கால் வைக்கும் இடமும் சுருங்கிக் கொண்டே போகிறது. போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் 10 ஆண்டுகளில் காலையும் மடக்கி சப்பனம் கொட்டிக்கொண்டு பயணிக்க வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை! ஆகவே, சக பயணிகளிடமிருந்து மூன்று முதல் ஆறு அடி தூரத்தை பராமரிப்பதே விமானப் பயணங்களில், முக்கியமாக economy வகுப்புகளில் கடினமாக இருக்கும். எனவே, உங்களுக்கு அருகில் அமரும் நபர் வைரஸ் தொற்றுக்கு உட்பட்டிருப்பின் நிச்சயமாக அது உங்களுக்கும் பரவும் வாய்ப்பதிகம்.

அடுத்து, விமானத்தில் பல்வேறு மேற்பரப்புகள் (surfaces) உள்ளன. ஏற்கெனவே வைரஸால் மாசுபட்ட பொருள்களை, இடங்களை தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ்கள், ஏனைய காய்ச்சல் வைரஸ்கள் போன்ற சுவாச வைரஸ்கள் எம்மைப் பிடிக்க வாய்ப்புள்ளது. சீட் பெல்ட் கொக்கிகள் மற்றும் பேபி யோடா (Baby Yoda figurines) போன்றவை ஏற்கெனவே தொற்றுநோயால் பீடிக்கப்பட்டவரின் தொடுகை மூலம் வைரஸ் நமக்கும் பரவலாம். பொதுவாக ஒரு விமான கேபினில் உள்ள சில மேற்பரப்புகள் `உயர் தொடுதல்' (High touch) என்று கருதப்படும். அதாவது, வெவ்வேறு நபர்கள் அவற்றை அடிக்கடி தொடுகிறார்கள். Tray tables, இருக்கைகள், சீட் பெல்ட்கள், வீடியோ மானிட்டர்கள் மற்றும் உங்களுக்கு முன்னால் இருக்கையின் பின்புறத்தில் உள்ள கிரிப்ட் போன்ற பாக்கெட் ஆகியவை இதில் அடங்கும்.

Representational Image
Representational Image

அதனால்தான், நீங்கள் அவற்றைத் தொடுவதைக் கட்டுப்படுத்துவது, உங்கள் கைகளை அடிக்கடி நன்கு கழுவுதல், மற்றும் கழுவப்படாத கைகளால் உங்கள் முகத்தைத் தொடாதிருத்தல் ஆகியவை அவசியம். நான் இந்த வாரம் போகவிருப்பது 12 மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட/ குறைந்த விமானப் பயணத்தில், மூக்கை மூடும் கவசமணிந்து, முழு பயண நேரத்துக்கும் மூச்சை இழுத்துப் பிடிப்பதைவிட முக்கியமானது, நமது முகத்தைத் தொடாமலே இருப்பது! ஆனால், அது அவ்வளவு எளிதானது அல்ல. ஆகையால், உங்கள் கைகளை உங்கள் பைகளிலேயே (pockets) வைத்திருப்பது, மடிக்

கணினியில் தட்டச்சு செய்வது போன்றவற்றை முயற்சி செய்யலாம். அதையும் மீறி மூக்கு சொறிந்தாலோ, சாப்பிட்ட சிக்கன் துண்டொன்று பல்லிடுக்கில் புகுந்துகொண்டு அதை நோண்டி எடுக்க வேண்டுமென குறுகுறுத்தாலோ, ஒரு 30 செகண்டுகள் பொறுமை காத்து, hand sanitizers கொண்டு கைகளை நன்கு சுத்தப்படுத்திவிட்டு சொறிந்து கொள்ளுங்கள். ஆனால், கை சுத்திகரிப்பு பயன்படுத்தும்போது அதைச் சரியாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் கைகளின் அனைத்து பகுதிகளையும் மறைக்க போதுமான sanitizers பயன்படுத்துங்கள். பின் கைகளை ஒன்றாக மசாஜ் செய்யுங்கள். அவை வறண்டு போகும்வரை தேய்த்துக் கொண்டே இருங்கள். Extra tips-ஆக வலியைப் பொருட்படுத்தாமல் கொஞ்சம் அழுத்திக் கிள்ளிவிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு சொறியாமல் நிம்மதியாக அமர்ந்து, ஓடாத ஏதோ ஒரு அறுவை திரைப்படத்தை பார்க்கலாம், இல்லை கண்ணை மூடி ஒரு குட்டிக் கனவு காணலாம்.

கேபினில் உள்ள அனைத்தும் எவ்வாறு பராமரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன என்பதில் கவனம் செலுத்துங்கள். ஒரு வாடிக்கையாளராக (as a passenger), விமானப் பயணங்களின்போது பாதுகாப்பு மற்றும் கிருமிநாசினி நடைமுறைகள் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, புதிய கொரோனா வைரஸ் சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை பரப்புகளில் (surfaces) உயிர்வாழ முடியும். அதாவது, உங்களுடைய கேபினில் நீங்கள் பயணம் செய்வதற்கு முன்பாகப் பயணம் செய்த, ஒரு பயணியின் மூலமாகக் கடத்தப்பட்ட வைரஸ்கள்; நீங்கள் அந்த விமானத்தில் ஏறி அமரும்போது உங்களுக்குக் கடத்தப்படும் சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம். எனவே, நீங்கள் கேபினுக்குள் நுழையும் முன்னரே crew மெம்பர்களிடம் அந்த விமானத்தின் சுத்தப்படுத்தல் நடைமுறைப் பற்றிக் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

Representational Image
Representational Image

நீங்கள் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் அல்லது நுரையீரல் சுவாச நோய் போன்ற ஒரு நீண்டக்கால மருத்துவ நிலையைக் கொண்டிருந்தால் (long term illness), உங்கள் விமானப் பயணத்தை ரத்து செய்வதற்கான அனைத்து விதமான முயற்சிகளிலும் கட்டாயம் ஈடுபடுங்கள். ஏனெனில், நீங்கள் நோய்த்தொற்றுக்கு ஆளானால், மோசமான உடல்நலம் மட்டுமல்ல, உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படலாம். எனவே, இதுபோன்ற பயணங்களைக் கருத்தில் கொள்வதற்கு முன் கண்டிப்பாக உங்கள் மருத்துவருடன் கலந்து ஆலோசியுங்கள். நீங்கள் ஒரு சிறு குழந்தையை உடன் அழைத்துச் செல்ல வேண்டி இருந்தால், அந்தப் பயணம் அக்குழந்தைக்கு எவ்வளவு தூரம் அத்தியாவசியமானது என்பதை ஒன்றுக்கு பத்து தடவை யோசித்து முடிவெடுங்கள். தேவையில்லை எனில், குழந்தையை பொறுப்பான, நம்பிக்கையான, பாதுகாப்பான ஒரு இடத்தில் விட்டுச் செல்வது மிகவும் நன்று.

அப்படியும் உங்கள் விமானப் பயணத்தை ரத்து செய்வது அல்லது ஒத்திவைப்பது கடினம் என, நீங்களும் என்னைப் போன்ற ஒரு சூழ்நிலை கைதி ஆக்கப்பட்டுள்ளவராயின், relax. பதற்றப்பட்டு எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே, மேலே குறிப்பிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவை பொதுவாகவே, கொரோனா போன்ற உயிர் ஆபத்து விளைவிக்கக்கூடிய வைரஸ் பரவும்போது மட்டுமே எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்று அல்லாது எப்போதுமே விமானத்தில் பயணிக்கும்போது அவசியம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகளே.

என்னைப்போல நீங்களும், வரும் நாள்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக விமானப் பயணம் மேற்கொள்ள இருப்பவராயின், உங்கள் பயணம் இனிதாகவும் பாதுகாப்பானதாகவும் அமைய வாழ்த்துகள்.

- றின்னோஸா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு