Published:Updated:

சாலையோரக் கதைகள்: "என் நிலைமை என் பொண்ணுக்கு வரக் கூடாது!"- ரோட்டுக் கடை நடத்தும் மாலதி அக்கா

மாலதி அக்கா

"அக்கம் பக்கத்தில் உள்ளவங்களே கடை போட விடாம ரொம்ப டார்ச்சர் பண்ணினாங்க. இப்ப வரைக்கும் பண்ணிட்டுதான் இருக்காங்க. 'அது எப்படி ஒரு பொண்ணு முன்னேறலாம்' என்கிற எண்ணம் இங்க பலரிடம் இருக்கு!"

சாலையோரக் கதைகள்: "என் நிலைமை என் பொண்ணுக்கு வரக் கூடாது!"- ரோட்டுக் கடை நடத்தும் மாலதி அக்கா

"அக்கம் பக்கத்தில் உள்ளவங்களே கடை போட விடாம ரொம்ப டார்ச்சர் பண்ணினாங்க. இப்ப வரைக்கும் பண்ணிட்டுதான் இருக்காங்க. 'அது எப்படி ஒரு பொண்ணு முன்னேறலாம்' என்கிற எண்ணம் இங்க பலரிடம் இருக்கு!"

Published:Updated:
மாலதி அக்கா

பரபரப்பாக வாகனங்கள் சென்று வரும் பாடி மேம்பாலம் அருகில் பரபரப்பாய் தனது வாடிக்கையாளர்களுக்கு வெரைட்டியான முட்டைகளைச் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார் அந்த அக்கா. யார் அவர், என்ன விற்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவரது கடைக்குச் சென்றேன்.

சாலையோரத்தில் 'Egg corner' என்கிற பெயரில் வெரைட்டியான டிஷ்களை சமைத்துக்கொண்டிருந்தார். அவரிடம் ஒரு பிரட் ஆம்லெட் ஆர்டர் கொடுத்து அவரைப் பற்றிக் கேட்டதும் புன்னகைத்தவாறே பேசத் தொடங்கினார்.

மாலதி அக்கா
மாலதி அக்கா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

”என் பெயர் மாலதி. நான் ஹோம் நர்ஸாக வேலை பார்த்துட்டு இருந்தேன். எனக்கு 19 வயசுக்குள்ளேயே திருமணமாகி, விவாகரத்து ஆயிடுச்சு. எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. என் அம்மா, அப்பான்னு என் குடும்பத்தையும் நான் கவனிச்சிக்க வேண்டிய சூழல். அவங்களுக்காகவே தொடர்ந்து வேலைக்குப் போயிட்டிருந்தேன். கொரோனா சமயத்தில் எங்கேயும் போக வர முடியல. அந்தச் சமயம் வேலை இல்லாம ரொம்பவே கஷ்டப்பட்டேன்.

அப்பதான் கொரோனா புராஜெக்ட் மூலமா வீடு வீடாகப் போய் கொரோனா செக் பண்ற வேலை கிடைச்சது. அந்த வேலை முடியுற சமயம் அந்த புராஜெக்ட் மேனேஜர் ஜெகதீஸ் ஜெயக்குமார் அவர் கீழே வேலை பார்த்த எங்க 24 பேர்கிட்டேயும் எக் ஸ்டிக்கில் வெரைட்டியாக சமைக்கக் கற்றுக் கொடுக்கிறோம்னு சொன்னார். ஆனா, பெரிய அளவில் அந்த வேலையைக் கற்றுக்கொள்ள யாரும் ஆர்வம் காட்டல. எனக்கு சமையலில் ஆர்வம் அதிகம். அதனால நான் விரும்பிக் கத்துக்கிட்டேன்.

மாலதி அக்கா
மாலதி அக்கா

நான் இப்ப செய்கிறது எல்லாம் ஃபாரின் டிஷ். அந்த சாருடைய நண்பர்கள் சொல்லிக்கொடுத்த ரெசிப்பி. அவர் கத்துக்கிட்டு எங்களுக்கும் கத்துக் கொடுத்தார். சரி பிரட் ஆம்லெட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணி முதல் லாக்டௌனில்தான் இந்தக் கடையைப் போட்டேன்.

அக்கம் பக்கத்தில் உள்ளவங்களே கடை போட விடாம ரொம்ப டார்ச்சர் பண்ணினாங்க. இப்ப வரைக்குமே பண்ணிட்டுதான் இருக்காங்க. ஒரு பொண்ணு எப்படி முன்னேறலாம் என்கிற எண்ணம் இங்க பலரிடம் இருக்கு. பெண்களை இந்த மாதிரியெல்லாம் தொந்தரவு பண்ணாதீங்க... அவங்களைக் காட்சிப்பொருளா பார்க்காதீங்க! சாதிக்க ஆசைப்படுறவங்களுக்கு உதவ முடியலைன்னாலும் விட்டுடுங்க... நீங்க தொடர்ந்து டார்ச்சர் பண்ணிட்டே இருந்தீங்கன்னா அவங்க முடங்கிப் போய் உட்கார்ந்திடுவாங்க. அதனால அப்படியெல்லாம் பண்ணாதீங்க.

மாலதி அக்கா
மாலதி அக்கா

நான் நல்லா படிச்சிருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. நம்ம நிலைமை நம்ம பிள்ளைக்கு வந்திடக் கூடாது என்பதில் நான் ரொம்பவே கவனமா இருக்கேன். நான் அவளுக்கு கண்டிப்பா கொடுக்க வேண்டியது படிப்புதான். அதைக் கொடுக்கிறதுக்காக கடினமா உழைச்சிட்டிருக்கேன். ஒரு சிங்கிள் உமன் இந்தச் சமூகத்தில் தனியா அவங்க வாழ்வாதாரத்திற்காகப் போராடும்போது நிச்சயம் இந்தச் சமூகம் தவறாகத்தான் பேசும். நம்ம மனசுக்கு நாம உண்மையா இருந்தா போதும். ஊர்ல உள்ளவங்க என்ன பேசுவாங்கன்னெல்லாம் யோசிச்சு வாழ வேண்டியதில்லை.

சொந்தமாகவோ, வாடகைக்கோ கடை பிடிக்கிற அளவுக்கு இப்போதைக்கு என்னால சம்பாதிக்க முடியல. இப்ப என் பாப்பாவுடைய படிப்புக்காகச் சிலர் உதவி பண்ணியிருக்காங்க... எனக்கு சப்போர்ட் பண்றாங்க... அவங்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்!” என்றார்.

மாலதி அக்காவின் வாழ்வியலைத் தெரிந்துகொள்ள மறக்காமல் இந்த லிங்கை கிளிக் செய்யவும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism