Published:Updated:

கோகுலாஷ்டமி! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

மகன் வியந்து பார்க்க, அம்மாவும் அப்பாவும் அந்த எக்ஸெல் சூப்பரில் மாவு அரைக்க கிளம்பிவிட்டார்கள்.

``என்ன மாமி உங்க மருமக பொண்ணும் பையனும் வந்திருக்காங்க போல இருக்கு.''

``ஆமா வினி, குட்டீஸ் கூட வந்திருக்கு. ''

``அப்போ உங்களுக்கு வேலை சரியா இருக்குன்னு சொல்லுங்க; ''

``ஆமாம் வினி, இதோ!!! மாவு அரைக்கப் போறேன் நாளைக்கு கோகுலாஷ்டமி இல்ல குழந்தைகளும் வந்திருக்காங்க சீடை, முறுக்கு எல்லாம் பண்ணி ரொம்ப வருஷம் ஆச்சு.''

``ஆமாம் இவங்க எல்லாம் வர்றதே இல்லையே, பொண்ணு வரலையா? ''

``இல்லம்மா.. ''

தங்கம் என்று குரல் கேட்டவுடன்.... ``சரி, வினி அவர் கூப்பிடுறாரு நான் போய் அரிசி அரைக்க கிளம்புறேன்.''

Representational Image
Representational Image

வீட்டுக்குள் வந்தவுடன் மகனின் மகன் தவழ்ந்துகொண்டு வரும்போது ....! ``ஏங்க ! இன்னிக்கு குட்டி கிருஷ்ணா வந்துட்டான், வாங்க ! வாங்க ! ''

``அம்மா... இவன் பேரும் கிருஷ்ணன்தானே மறந்துட்டியா? ''

ஒரு சிரிப்புடன்.. ``இல்லப்பா...''

அந்தச் சமயம் ஜன்னல் கதவு திறந்திருப்பதால் ஜன்னல் திட்டில் இருந்த டம்ளர் விழுந்து உருண்டு வந்தது. உடனே, அம்மா அந்த டம்ளரை எடுத்து, ``விழுந்துட்டியா! வலிக்குதா'' என்று பேசத் தொடங்கினால் !!! பின் இருந்து ஒரு கை தங்கம் இப்ப தான் இவங்க எல்லாரும் இருக்காங்களே பேசுவதற்கு அப்புறம் என்ன?

மறுமொழியாக ஒரு சிரிப்பு!!! குழந்தையைத் தூக்கி ஒரு முத்தம் கொஞ்சி மகிழ்ந்துவிட்டு, ``தம்பி நானும் அப்பாவும் வெளியே போகிறோம் அந்த மச்சு மேல இருந்து சனல்கயிறு சாக்கு மூட்டையை எடுத்து வை.''

``அதுல என்னமா இருக்கு.''

``அது நீங்க யாரும் கூட இல்லை. அதான் நானும் அப்பா மட்டும் தானே நிறைய சாமான் எதுக்குன்னு கட்டி வச்சுட்டேன்.''

மகன் வியந்து பார்க்க, அம்மாவும் அப்பாவும் அந்த எக்ஸெல் சூப்பரில் மாவு அரைக்க கிளம்பிவிட்டார்கள். மாவு அரைத்து வீடு வரும்வரை வெறும் மௌனம் மட்டுமே சம்பாஷனையாக அவர்கள் இருவருக்கும் இருந்தது. வந்தவுடன் வீடு கலகலப்பாக இருக்கிறது. மருமகளின் நண்பர்கள் மகனின் நட்பு வட்டம் என இரவு முடிந்தது !!!

மறுநாள் காலை.. மருமகள்.. ``அம்மா இந்த வெல்ல சீடைக்கு பாகு எப்படி வைக்கிறது?'' ஒரு மறுமொழி சிரிப்புடன்..

``வெல்லத்தைப் பொடி பண்ணி இலுப்ப சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றிவிட்டு ஒரு கொதி வந்த உடனே அந்த டவராவை வச்சு மேல இருக்கிற மண்ணையும், கரும்புதுகள்லாம் எல்லாத்தையும் எடுக்கணும். அப்புறம், பத்து நிமிஷம் கொதிக்கவிட்டு கரண்டியில் எடுத்துப் பார்த்தால் கம்பி மாதிரி வரும் அப்போ பாகு ரெடி.''

மறுபக்கம் அப்பா மகனின், மகன் காலில் மாவை வைத்து வீடு முழுக்க கிருஷ்ணர் வந்துட்டான், டோய் நம்ம வீட்டு குட்டி கிருஷ்ணன் வந்துட்டான் டோய்னு, அந்த முதுமையை மறந்து குழந்தையாய் மாறி கிருஷ்ணனை வரவேற்கத் தயாரானார்.

Representational Image
Representational Image

வீடு கோகுலாஷ்டமிக்குத் தயார்! மாலை பூஜை முடிந்து அக்கம்பக்கம் வீட்டுக்குப் பலகாரம் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்தபின், ``அம்மா! அப்பா! நைட் பஸ்சுக்கு கிளம்புறோம், நில்லுங்க நமஸ்காரம் பண்றோம்.''

``அதுக்குள்ள லீவு முடிஞ்சுதா? சரி, சரி.. '' இரவு உணவு முடிந்த பின் ஒரு பையில் தங்கம் பலகாரங்களை வைத்து ஒரு கையில் குழந்தையுடன், ``இந்தக் குழந்தையைப் பத்திரமா பாத்துக்கோ என்ன....'' மகனுடன் சின்ன சம்பாஷணையோடு, ``மூணு பேரும் பத்திரமா போயிட்டு வாங்கப்பா, அடிக்கடி வாங்க'' என்று உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது வாசல் வெளியே ஒரு கார் ஒன்று வந்தது.

அனைவரும் காரில் ஏறிய சமயம் அம்மா..

``ஏண்டா தம்பி நான் வேணா அப்பாவை பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்பட்டா?''

``வேண்டாமா ..''

சில பல கண்ணீர் துளிகளுடன் பிரியாவிடைபெற்று கார் சென்றது..

விளக்குகள் அணைக்கப்பட்டு மீண்டும் வீட்டில் ஒரு மௌனம்.

மறுநாள் காலை..

``தங்கம் நான் போய் பேப்பர் வாங்கிட்டு வரேன்!''

தங்கம், கோகுலாஷ்டமி முடிந்து தேய்த்துவைத்த பாத்திரத்தை எடுத்து வைக்கும்பொழுது ஒரே பரபரப்பாக தேடுகிறாள், புலம்புகிறாள், எங்கெங்கேயோ வச்சுட்டேன். தங்கம் என்று ஒரு குரல்! வந்துட்டீங்களா அந்த தேன்குழல் அச்ச காணும் கொஞ்சம் பாருங்க! வீடு முழுக்கத் தேடி, இறுதியில் அந்த தேன்குழல் அச்சு மேலேயே அந்தத் தட்டு ஒட்டிக்கொண்டிருந்தது! தங்கம் அதை பார்த்துவிட்டு ``கம்முனாட்டி!!!, அச்சு மேல ஓட்டிட்டு இருக்க, இவ்வளவு தேடுறன் சத்தம் போடாம இருக்க.. ''

``தங்கம் நீ திரும்பவும் ஆரம்பிச்சிட்டியா...''

திரும்பவும் தங்கம் வீட்டில் ஒரு சோகம்! ஒரு சிரிப்பு! ஒரு அமைதி! ஒரு இருள். மீண்டும் ஒரு பண்டிகைக்கும் ஒரு வெளிச்சத்துக்கும் தங்கமும் அவள் கணவனும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

-சிரா (சிவராமன்)

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு