Election bannerElection banner
Published:Updated:

இது மட்டும் போதும்... குறைந்த செலவில் வீட்டை அலங்கரிக்கலாம்!

Furniture and Decorations
Furniture and Decorations

வித்தியாச நிறங்களைத் தேர்ந்தெடுப்பது, தரமான ஃபர்னிச்சர்களை உபயோகிப்பது போன்ற சிறு மாற்றங்கள் செய்வதன்மூலம் குறைந்த செலவில் வீடு மற்றும் அலுவலகத்தை மெருகேற்றலாம்.

வீட்டின் அளவு சிறிதோ, பெரிதோ அலங்கரிக்கும் விதத்தில்தான் அதன் முழுமையான அழகு பிரதிபலிக்கும். வடிவமைப்பு நம் வாழ்வின் பெரிய பகுதி என்றே சொல்லலாம். வீடோ, அலுவலகமோ, ஓர் கட்டடத்தின் தோரணையை வைத்தே அவர்களின் வாழ்க்கை முறையையே மதிப்பிட முடியும். சில நேரங்களில், வீட்டில் வைக்கும் கண்ணாடி, ஓவியங்கள், பூந்தொட்டி, மின்விளக்கு போன்ற மிகச் சிறிய விஷயங்கள்கூட பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தும். இருக்கின்ற பொருள்களை வைத்தே வீட்டை அழகாகப் பராமரிக்க உதவும் வழிமுறைகளைப் பார்க்கலாம்..

நிலையான ஃபர்னிச்சர்:

Wooden furniture
Wooden furniture

வீட்டின் மையப்பகுதியான 'லிவிங் ஏரியாவை' அழகுபடுத்துவது சோபா, நாற்காலி, ஊஞ்சல் போன்ற ஃபர்னிச்சர்கள்தான். இந்தப் பொருள்களை வாங்குவதற்குமுன், வெளிப்புறத் தோற்றத்தைவிடத் தரம் பார்த்து வாங்குவதே சிறந்தது. மையப் பகுதியில் உபயோகிக்கப்படுவதால், அதன் பயன்பாடு அதிகமாகவே இருக்கும். எனவே, அவற்றின் அழகைவிட அதன் ஆயுள்காலம் நீண்டு இருக்குமா என்பதைச் சரிபார்த்து வாங்குவதே சிறந்தது. மரத்தினாலான ஃபர்னிச்சர் வகைகள் நீண்ட நாள் உழைக்கும் தன்மை கொண்டது.

அவற்றோடு சரியான 'குஷன்' வகைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். அடிக்கடி சோஃபா, நாற்காலி போன்றவற்றை மாற்ற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, குஷன்களை மட்டும் மாற்றி உபயோகிக்கலாம். இது, லிவிங் ரூமை அழகாக்குவதோடு அதிகப்படியான செலவுகளையும் கட்டுப்படுத்தும்.

பொக்கிஷப் பொருள்கள்:

Nostalgic Things
Nostalgic Things

புதுமைகளை விரும்பாதவர்கள் யாருமில்லை. தினம்தினம் ஏராளமான புதுமையான பொருள்கள் சந்தையில் அறிமுகம் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். தேர்வு செய்யவே குழம்பிப்போகும் அளவுக்கு ஏராளமான பகட்டான பொருள்கள் உள்ளன. அவற்றை வாங்கி நம் வீடுகளை அடைப்பதைவிட, நம்மிடம் இருக்கும் 'நாஸ்டால்ஜிக்' பழைய பொருள்களை வைத்தே வீட்டை அலங்கரிக்கலாம்.

வடிவமைப்புத் தொழிலில் இருப்பவர்கள்கூட ஒரு காலத்தில் மக்களால் புதுமை என்று கருதப்பட்ட பொருள்களைத்தான் மீண்டும் மெருகேற்றிக் கொண்டு வருகிறார்கள். நம் வீட்டிலிருக்கும் பொருள்களை வைத்து எளிமையான டிசைன்களை நம் விருப்பத்துக்கேற்ப உருவாக்கலாம். பொக்கிஷமாக நாம் நினைக்கும் பொருள்கள் பரணியில் தூங்குவதற்குப் பதிலாக வீட்டின் வித்தியாசத் தோற்றத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கிரியேட்டிவ் பணியிடம்:

Work Space
Work Space

மேசை, நாற்காலி, பேனா, புத்தகம், கணினி என்று பணியிடங்களுக்கென இருக்கும் 'டிரேட்மார்க்' சுற்றுச்சூழலை மாற்றியமைப்பதன்மூலம், முற்றிலும் புதுமையான தோற்றத்தைக் கொண்டு வரலாம். இது வீடு மற்றும் அலுவலகம் இரண்டுக்கும் பொருந்தும். அதுவும் இன்றைய காலகட்டத்தில், பணியிடங்களை வெவ்வேறு டிசைன்களில் வடிவமைக்கின்றனர். தனிப்பட்ட வகையில் ஊழியர்களுக்கு இடங்களை ஒதுக்கி, சரியான உற்பத்தியை அவர்களிடமிருந்து பெறுவதற்கு அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்துகொடுக்கத் தயாராக உள்ளனர் 'இந்தக் காலத்து' நிர்வாக அதிகாரிகள். ஒலியியல் ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட இடமாக மாறி வருகிறது இன்றைய அலுவலகங்கள். இது ஓர் வீட்டின் முகப்பையும் மாற்றியமைக்க உதவுகிறது.

நிறங்கள்:

Living Coral Color
Living Coral Color

நிறங்களுக்கும் நம் மனவோட்டத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. அதிலும் வீட்டின் வண்ணங்களைத் தேர்வு செய்வதற்குமுன் சமையலறைக்கு அடர்ந்த நிறம், படுக்கை அறைக்குக் குளுமை தரும் நிறங்கள் என நாம் சரி பார்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளம். மனச்சோர்வடையும் நேரங்களில், பிரைட் நிறங்கள் நிச்சயம் கைகொடுக்கும். பெரும்பாலான மக்கள், மனஅழுத்தம் ஏற்படும் நேரங்களில், அவர்கள் தேடிச் செல்லும் இடங்கள் 'கலர்ஃபுல்' வண்ணங்கள் நிறைந்த இடங்களாகத்தான் இருக்கிறது. 2019-ம் ஆண்டின் சிறந்த நிறமாக பான்டோன் நிறங்களின் 'Living Coral' நிறம்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற வித்தியாச நிறங்கள்தான் இனிவரும் காலங்களில் வீடுகளையும் அலுவலகங்களையும் நிரப்பப்போகிறது.

இந்தப் பொருள்களை வைத்தே அழகிய தோற்றம் தருவது, வித்தியாச நிறங்களைத் தேர்ந்தெடுப்பது, தரமான ஃபர்னிச்சர்களை உபயோகிப்பது போன்ற சிறு மாற்றங்கள் செய்வதன்மூலம் குறைந்த செலவில் வீடு மற்றும் அலுவலகத்தை மெருகேற்றலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு