Published:Updated:

வாழ்வின் போக்கை மாற்றி நம்மை நமக்கு உணர்த்திய கொரோனா... ஓர் பாசிட்டிவ் பார்வை!

வீட்டை விட்டு வெளியே வந்து நகரின் உள்ளே நுழையும்போதே கண்கள் ஆச்சர்யத்தில் விரிகின்றன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறுமை. பரபரப்புகளுக்கெல்லாம் நகரங்கள் ஓய்வு கொடுத்து முழுவதுமாக இரண்டு மாதங்கள் ஆகின்றன.

சடசடத்தபடி இருக்கும் வீதிகளில் இன்று வண்டிகள் மட்டுமல்ல... அவை போன தடங்கள்கூட இல்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு பறவைகளின் கீச்சொலிகள் செவிகளை எட்டுகின்றன. அணிந்திருக்கும் மாஸ்க்கை மீறி, மூச்சுக்குழாயை நிரப்புகிறது தூய்மையான காற்று. இயல்பான நேரங்களில் உணவுக்காக கையேந்தி ஏமாந்து போகும் மனிதர்களுக்கு ஆங்காங்கே உதவிக்கரங்கள் நீள்கின்றன. கொரோனா மனிதர்களின் வாழ்க்கையைத் துண்டாடியது ஒருபுறம் இருந்தாலும், நம் வாழ்க்கையில் நாம் தேட மறந்த, தொலைத்த சிலவற்றையெல்லாம் திரும்பக் கொடுத்திருக்கிறது.

எப்படியேனும் வாழ்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. சொந்த மண்ணின் மகிமையை உணர்த்தியிருக்கிறது. சுயநலத்தின் உருவாக இருந்தவர்களைக் கூட உதவிக்கரம் நீட்டவைத்திருக்கிறது. இவை எல்லாவற்றையும்விட, மனிதர்களைப் படிக்கும் அவகாசத்தைத் தந்திருக்கிறது. கொரோனா அழிவை நோக்கி இழுத்துச்செல்லும் அசுரன்தான். ஆனால், அது அளித்துள்ள படிப்பினை மனித இனத்தை, இன்னும் நூற்றாண்டு காலம் ஓடவைக்கும் வல்லமை பொருந்தியது. அப்படி என்ன சமூக மாற்றத்தை அளித்திருக்கிறது கொரோனா...

பதினைந்து வருடங்களுக்கு முன், அப்பா கொடுத்த 10 ரூபாயைக் கூட பார்த்துப் பார்த்து செலவு செய்திருப்போம். நண்பன் பேனாவில் இருந்து விழுந்த மையின் ஒரு துளியைக்கூட நம் பேனா முனையால் உறிய முயற்சி செய்திருப்போம். தீபாவளி, பொங்கல் நாள்களைத் தவிர, வேறு என்றும் புத்தாடை அணிந்ததில்லை. குடும்பத்துடன் நாம் சென்ற ஒரே இடம் கோயிலாகத்தான் இருந்திருக்கும். நம்முடைய கல்லூரிப் படிப்புக்காக அப்பா செலவுசெய்த மொத்த கட்டணமே 3000 ரூபாய்க்குள் இருந்திருக்கலாம். ஊர் கதைகளைப் பேசிக்கொண்டே அம்மா உருட்டிக்கொடுக்கும் ஒரு கைப்பிடி சோற்றில் அவ்வளவு ருசி இருந்தது. தனிமனித வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி என சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம், நாம் அறியாமலே நம்மை சொகுசு வாழ்க்கைக்கு அடிமைப்படுத்தியது. இந்த வாழ்க்கை முறையில், பொருள்களின் விலையைக் கேட்டுவிட்டு, அது வேண்டாம் என வைத்துவிட்டு வருபவர்கள் நாகரிமற்றவர்கள்; பார்க், பீச் என சுற்றாதவர்கள் வாழத்தெரியாதவர்கள்; சகல வசதிகளும் கொண்ட போன் வைத்திருந்தாலும் புதிய மாடல் வந்தவுடன் வாங்காதவர்கள் அப்டேட் இல்லாதவர்கள் என சமுதாயம் ஏளனப் பார்வையால் நமக்கு முத்திரை குத்திவிடும். ஆனால், வாழ்க்கை ஓட்டம் மாறினாலும் அது காட்டும் முட்கள் தேங்கியிருப்பது ஒரு வட்டத்தில்தானே என்பதை காலம் சொல்லாமல் உணர்த்தியிருக்கிறது. நம்மை, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவந்துள்ளது கொரோனா .

நிதி
நிதி

மனம் பணத்தின் மதிப்பை உணர ஆரம்பித்திருக்கிறது. ஐந்தாயிரம் ரூபாயை அழகு நிலையங்களிலும் ஆடம்பரமான மால்களிலும் அசால்ட்டாக செலவு செய்யும் பழக்கம் கொண்டவர்கள்கூட, இந்த இரண்டு மாதங்களில் பச்சைமிளகாய்க்குக்கூட விலை கேட்டுவிட்டுதான் பில் போடுகிறார்கள். ரேஷன் கடையில் மணிக்கணக்கில் காத்திருந்து பொருள் வாங்குவது அவமானம் அல்ல, நம் உரிமை என்ற எண்ணம் மீண்டும் துளிர்த்துள்ளது. ஒரு பொருளை வாங்கும் முன், அது அவசியம்தானா என்ற சிந்தனை எல்லோருடைய மனசுக்குள்ளும் வந்துபோகிறது. மனம் பணத்தின் மதிப்பை உணர ஆரம்பித்திருக்கிறது. இதற்கு, பொருளாதார வீழ்ச்சி எனப் பெயர் வைத்தாலும், இதுவே காலத்தின் மாற்றமாகும். பொருளாதார நிலை இதுவென்றால், வாழ்க்கை முறையில்கூட சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீட்டில் இருப்பவர்களை, `சாப்ட்டியா' என்ற வார்த்தைகள் கேட்டே பல வருடங்கள் ஆகியிருக்கும். பெரும்பாலான வீடுகளில் தாத்தா, பாட்டிகளே குழந்தைகளின் மேய்ப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள். நாம் அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்ததும் ஆசையாக நம்மைத் தேடி ஓடி வரும் குழந்தைகளைக் கொஞ்சக்கூட நேரமில்லாமல் போன் கால்களில் மூழ்கியிருந்திருப்போம். வீட்டில் எல்லோரும் சேர்ந்து அமர்ந்து பார்க்க என ஆயிரங்கள் செலவழித்து வாங்கிய டி.வி-யை துணி போட்டு மூடி வைத்துவிட்டு, ஆளுக்கொரு மொபைலை திரையரங்கு ஆக்கியிருப்போம். நம்முடைய காதலன்,காதலியை விடுத்து பைக் மீதும், போன் மீதும் தீராத காதல் கொண்டிருப்போம். தூக்கிப்போட்டு உடைத்தாலும் அவைதான் பதில் வார்த்தைகள் பேசுவதில்லை என்பதுகூட காரணமாக இருந்திருக்கலாம். இப்படி இயந்திரங்களாக ஓடிய நம்மை மீண்டும் கொரோனா ஊரடங்கு மனிதர்களாக்க முயற்சி செய்திருக்கிறது.

குடும்பம்
குடும்பம்

பெரும்பாலான குடும்பங்களில், இந்த இரண்டு மாதத்தில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வழக்கத்திற்கு வந்துள்ளார்கள். குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதைத் தெரிந்துகொண்டு உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சித்தப்பா, சித்தியைக்கூட தூரமாய் வைத்துப் பார்த்த நமக்கு, இப்போதுதான் ஊரில் இருக்கும் சொந்தங்களின் பெயரை நினைவு கூறவே நேரம் கிடைத்திருக்கிறது. ஆறுமாதத்திற்குள் தாய்ப்பாலை நிறுத்தி, பால்கட்டின் வலியை அனுபவித்ததைவிட அதிகமான குற்றஉணர்வில் இருந்த எத்தனையோ தாய்மார்கள் தன் பிள்ளைகளின் அரவணைப்பினால் குற்றஉணர்விலிருந்து மீண்டிருக்கிறார்கள். அம்மா அப்பாவிடம் கதை கேட்கும் குழந்தைகள் வீடியோ கேமிற்கும், கார்ட்டூன்களுக்கும் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். பரமபதமும், பல்லாங்குழியும் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது.

`எனக்கு நேரமாச்சு சீக்கிரம்' என்ற வார்த்தை, இப்போது எங்கும் ஒலிக்கவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்குள் பிறந்த குழந்தைகளுக்கு `கூட்டாஞ்சோறு’ என்ற நம்முடைய பாரம்பரியம் புதிதாக அறிமுகமாகியிருக்கிறது. யாருக்குத் தெரியும்... தன்னுடைய பெற்றோர்களுக்கு இப்படியும் ஒரு சந்தோஷமான முகம் இருப்பதைக்கூட குழந்தைகள் இப்போது உணர்ந்திருக்கலாம். ஜங்க் உணவுகளுக்கு பழகிய குழந்தைகள் அவற்றையெல்லாம் மறந்து 60 நாள்கள் ஆகின்றன. அவர்களின் நாக்கு, அம்மாக்கள் செய்யும் பஜ்ஜிக்கோ, வடைக்கோ இப்போது பழக்கப்பட்டிருக்கும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நினைத்த நேரத்தில் ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களுக்குக்கூட, உணவு ருசிக்கானது அல்ல... பசிக்கானது என்பது விளங்கியிருக்கும்.

`ஏதோ குரோனாவாமே...’ - கிராமங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஈர மனிதர்கள்!

இனி, ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிடும்போதெல்லாம் மனசுக்குள் ஒரு அபாய அலாரம் ஒலிக்கும். அந்த அலாரம் பதப்படுத்தப்பட்ட, கொழுப்புகள் நிறைந்த உணவுகளின் சுவைகளில் இருந்து நம்மை தூரமாக்கி வீட்டு உணவுகளுக்கும், தயிர் சாதத்திற்கும் பழக்கப்படுத்தும். தினமும் நாலு முறையாவது குடலுக்குள் டீ, காபியை ஊற்றிகொள்வோரின் பாடு கொஞ்சம் திண்டாட்டம்தான். இவை எல்லாவற்றையும்விட மனிதநேயம், கொண்டாடப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

பாய்ந்து பறந்து செல்லும் நமக்கு சிக்னல்கள்தான் தெரியுமே தவிர, சிக்னலின் அருகில் பசியுடன் அமர்ந்திருப்பவர்கள் தெரிந்ததில்லை. அப்படியே தெரிந்தாலும் பேன்ட் பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து, வண்டியை நிறுத்திவிட்டுச் சென்று உதவி செய்ய நேரம் இருந்ததில்லை. ஆனால் இப்போதைய தனிமை, பசியின் உச்சத்தை பல நேரங்களில் நமக்கு காட்டியிருக்கும். கையில் காசு இருந்தும்கூட, சாப்பாடு கிடைக்காமல் திணறியவர்கள் ஏராளம். பசி மரணங்கள் நம் கண்முன்னே நிகழ்ந்திருக்கலாம். பசியை உணர்ந்தவர்களை உதவிக்கரம் நீட்டுபவர்களாக கொரோனா மாற்றியிருக்கிறது. துப்புரவுப் பணியாளர்கள் தொடங்கி ரோட்டில் காய்கறிகள் விற்பவர்கள் வரை நமக்காக உழைப்பவர்கள் இப்போதுதான் அறிமுகம் ஆகியிருக்கிறார்கள். மரியாதை இல்லாமல் பல இடங்களில் வாழ்ந்துவந்த வெளிமாநிலத் தொழிலாளர்களின் நிலை புரிந்து கண்ணீர் சிந்தத் தொடங்கியிருக்கிறோம். கங்கை தொடங்கி உள்ளூர் வரை அனைத்திலும் இயற்கை மீண்டும் பசுமைக் கரங்களை நீட்டத்தொடங்கியுள்ளது. அலுத்துக்கொண்டு அலுவலகம் சென்றவர்கள்கூட, எப்போது மீண்டும் அலுவலகம் செல்வோம் என்ற மனநிலைக்கு வந்துள்ளார்கள்.

குடும்பம்
குடும்பம்

இவையெல்லாம் கொரோனா மூலம் காலம் நமக்கு வழங்கிய ஒரு படிப்பினைதான். நெடுஞ்சாலையில் சிக்கி உயிர்நீத்த குருவியின் கடைசி மிச்சம் வண்டித்தடங்களாகப் பதிந்திருப்பது போல. கொரோனா நிகழ்த்திய மரணங்களும், அதன் கோரத்தாண்டவமும் நம் மனத்தை விட்டு நீங்காது. எனினும், இப்போது நம் வாழ்வில் நிகழ்ந்திருக்கும் இந்த வாழ்வியல் மாற்றங்களை, கொரோனாவின் பாடமாக ஏற்று மகிழ்ச்சியாய்த் தொடர்வோம்.

மாற்றம் ஒன்றே மாறாதது..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு