Published:Updated:

மரணத்தின் நுழைவு வாயில்... சவப்பெட்டிக்குள் சில நிமிடங்கள்! #ViralPhoto

வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்காகத் தென்கொரியாவில் சடங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சவப்பெட்டி
சவப்பெட்டி
Vikatan

சவப்பெட்டிக்குள் மக்கள் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை ஏராளமானவர்கள் சவப்பெட்டிகளுக்குள் அமர்ந்திருந்த அந்தப் புகைப்படம் தென்கொரியாவில் எடுக்கப்பட்டது எனத் தெரியவந்தது. போட்டோ ஷூட்டுக்காக இதுபோன்ற புகைப்படத்தை எடுத்திருப்பார்கள் என நினைத்தவேளையில் நமக்குக் கிடைத்த தகவல் ஆச்சர்யமாக இருந்தது. தென்கொரியாவில் உள்ள ஹியோவோன் (HYOWON) என்ற மையம் மக்களுக்கு வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற செயல்பாடுகளைச் செய்து வருகிறது.

சவப்பெட்டி
சவப்பெட்டி

ஹியோவோன் நிறுவனம் தென்கொரியாவில் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளும் பணிகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனம்தான் தற்போது மக்களுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இந்தப் பணியைக் 2012-ம் ஆண்டு முதல் செய்து வருகிறது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் மூடப்பட்ட சவப்பெட்டிகளுக்குள் 10 நிமிடம் இருக்க அனுமதிக்கின்றனர். அந்த சூழலில் அவர்களின் மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அந்த மையத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர்கள் மற்றவர்களை மன்னிக்கவும் குடும்பத்தினருடன் இணைந்து வாழ பழகிக்கொள்வதாகக் கூறப்படுகிறது. ``இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் வாழ்க்கையைச் சிறந்தாக மாற்றிக்கொள்ள உதவுவதாகவும். இளைஞர்களுக்கு மனப்பக்குவத்தை கொடுப்பதாகவும்”அந்த மையத்தை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகிறார்.

இறுதிச்சடங்குகள்
இறுதிச்சடங்குகள்

இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் பேசுகையில், ``நீங்கள் மரணத்தின் அனுபவத்தை உணர்ந்துவிட்டீர்கள் என்றால் வாழ்க்கையைப் புதிய முறையில் அணுகுவீர்கள்” என்கிறார்.