Published:Updated:

ஒரு நாளின் தொடக்கத்தில் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத 10 விஷயங்கள்! #MorningMotivation

‘குழந்தைகள், பிறக்கும்போதே நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் பிறப்பதில்லை’ என்பார்கள். அப்படித்தான் ஒரு நாள் உதயமாகும்போது, அது நல்ல நாளாகவோ கெட்ட நாளாகவோ தொடங்குவதில்லை.

“சீக்கிரமாக எழுந்துவிட வேண்டும், எழுந்ததும் தண்ணீர் அருந்த வேண்டும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என அதிகாலை நேரத்தில் செய்யவேண்டிய விஷயங்கள் இருக்கும் போது, “காபி குடிக்கக் கூடாது, ஸ்மார்ட்போனில் சமூக வலைதளங்களை ஆராயக் கூடாது, கெட்ட சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது” என, செய்யக் கூடாத விஷயங்களும் இருக்கின்றன.

மெல்போர்னில் தொடங்கி சிட்னி வரை மூலிகைத் தேநீர் கடை... இந்தியப் பெண் உப்மாவின் சாதனைப் பயணம்!

ஒரு நாளை, `குட்மார்னிங்’ என்ற வார்த்தையிலிருந்து ஆரம்பிப்பதற்குக் காரணமே, அந்த நாள் நல்ல நாளாக அமைய வேண்டும் என்பதற்குத்தான். நாம் கண்விழிக்கும் அந்த நொடியை அழகாய், ஆரோக்கியமாய் மாற்றிக்கொள்ள செய்யவேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள் இங்கே உங்களுக்காக...

1
New Day Sunrise

செய்யவேண்டியவை: தூக்கத்தை முறைப்படுத்துங்கள்!

தூங்கி எழுந்த பிறகு என்பதைவிட, தூங்கி எழுந்திருப்பதையே முறைப்படுத்த வேண்டியது அவசியம். `சூரியன் உதிப்பதற்கு முன்னரே எழுவதால், நம் உடல் தானாகவே உற்சாகமடைகிறது' என்பது அறிவியல்பூர்வமான உண்மை. காலையில் தாமதமாக எழுந்து மனச்சோர்வுக்கு உள்ளாவதைவிட, சரியான நேரத்துக்கு எழுந்திருப்பது உற்சாகத்துடன் அந்த நாளைத் தொடங்க உதவும். அலுவலகத்துக்கு செல்வதற்கு முன்பாக, உங்கள் வேலைகள், கடமைகளை முடிக்க எவ்வளவு நேரம் தேவை என்பதைக் கணக்கிட்டு, அதைவிட கொஞ்சம் கூடுதலான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள். பதற்றத்தைத் தவிர்ப்பதற்கு இதுவே சரியான வழி. பிடித்த, மிகவும் ஆர்வமுள்ள விஷயங்களை மட்டுமே இந்த நேரத்தில் செய்யலாம்.

2
Sleep

ரொமேன்ட்டிக்காக இருங்கள்!

திருமணமானவராக இருந்தால், காலை எழுந்திருக்கும்போதே ரொமான்ட்டிக்காக இருங்கள். உடலையும் மனத்தையும் அது சுறுசுறுப்பாக்கும். அன்பாக ஓர் அணைப்பு, ஆசையாக ஒரு முத்தம், `ஐ லவ் யூ டார்லிங்’ என்ற அன்புப் பேச்சு... என துணையுடன் அந்த நாளைத் தொடங்குங்கள். குழந்தைகளுக்கும் வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கும் நீங்கள் குட்மார்னிங் சொல்லும்போது, உங்களின் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ள வேண்டும். அப்படியொரு குட்மார்னிங்கை உற்சாகமாக அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால், குழந்தைகளைச் சிறிது நேரம் கொஞ்சுங்கள். அது தரும் புத்துணர்ச்சிக்கு ஈடு இணையே இல்லை.

3
Coffee

வேலைகளைப் பட்டியலிடுங்கள்!

காபி கோப்பையுடன் வராண்டாவிலோ அல்லது பால்கனியிலோ அமருங்கள். உங்களது ஃபேவரைட் நாளிதழ் இருக்கட்டும். நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள். நல்ல விஷயங்களை வாசியுங்கள். அதன் பிறகு, அன்றைய தினத்தில் செய்யப்போகும் விஷயங்களை அமைதியாக, ஆழமாகச் சிந்தியுங்கள். இந்த நேரத்தில், உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வது நலம். எவற்றை செய்வது என முடிவெடுத்தவுடன், கண்களை மூடி சில நிமிடங்கள் அதை அப்படியே மனதுக்குள் காட்சிப்படுத்திப் பாருங்கள். நாள் முழுவதும் நம்பிக்கையுடனும் புது உத்வேகத்துடனும் செயல்பட இது உதவும். அலுவலக வேலையோ அல்லது தனிப்பட்ட வேலைகளோ, பட்டியலிடுங்கள். அவற்றை அன்றே முடிக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

4
Exercise | Fitness

உடற்பயிற்சி அவசியம்!

சில்லென்ற காற்று, படபடக்கும் பறவைகளின் சத்தம் என அதிகாலையில் வீட்டுக்கு வெளியே கிடைக்கும் அனுபவம் அலாதியானது. அதனால், ஒவ்வொரு காலைப் பொழுதிலும் இயற்கையுடன் சில நிமிடங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இந்த நேரத்தை உடற்பயிற்சிக்கான நேரமாக ஆக்கிக்கொள்வது நல்லது. காலையில் செய்யும் உடற்பயிற்சி, அன்றைய நாள் முழுவதும் உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதுடன், இரவில் நல்ல தூக்கத்துக்கும் உதவும். மேலும், உங்கள் சருமத்தையும் முகத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். உடற்பயிற்சிக்கு நேரம் இல்லாதவர்கள், செடிகளுக்கு நீரூற்றி, அவற்றுடன் சில நிமிடங்கள் செலவிடலாம்.

5
Songs

இனிமையான பாடல்கள்!

காலையில் எழுந்தவுடன் மெல்லிய இசையைக் கேட்பது, காலை நேர பதற்றத்தைத் தடுக்கும்; வேலைகளைச் சீராகச் செய்ய உதவும். பிடித்த பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கேட்கும்போது, அந்த இனிமையான இசையும் வரிகளும் அன்றைய தினத்தின் இறுதிவரை இன்பத்தைத் தந்துகொண்டே இருக்கும். அதனால், உங்களுக்குப் பிடித்த பாடல்களை 10 நிமிடங்கள் கேளுங்கள்.

6
Sleep

செய்யக் கூடாதவை: அதிகாலைத் தூக்கம் அதிகம் வேண்டாம்!

காலையில் கட்டாயம் செய்யக்கூடாது என்பதற்கான முதல் விஷயமே, அதிக நேரம் தூங்கக்கூடாது என்பதுதான். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அலாரம் அடித்ததும், அதை ’ஸ்நூஸ் (Snooze)' செய்துவிட்டு, மறுபடியும் ஒரு குட்டித் தூக்கம் போடும் பழக்கம் இருக்கிறது. இப்படியே பத்து பத்து நிமிடங்களாக அலாரத்தை மாற்றி அமைத்துக்கொண்டே, அதிக நேரம் தூங்குவதால், அலுவலகத்துக்கு அடித்துப்பிடித்து ஓடவேண்டிய நிலையும் ஏற்படும். இப்படித் தூங்குவதால், அன்றைய நாளும் உற்சாகமாக நகராது, உங்களுக்கும் உற்சாகமாக இருக்காது என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

Vikatan

அதுமட்டுமில்லாமல், தூங்கும் நேரம் என்று ஒன்று இருப்பதுபோல, எழுந்திருக்கும் நேரம் என்றும் ஒன்று இருக்கிறது. காலையில் 5 மணி முதல் 7 மணிக்குள் படுக்கையிலிருந்து எழுந்தாக வேண்டும் என்பது உடலுக்கான நேரம் சொல்லும் நீதி. அதனால் அந்த நேரத்தில், கண்டிப்பாக எழுந்துவிடுவது, அன்றைய நாளை உற்சாகமாக்கும்.

7
Depression

ஆழ்ந்த யோசனைக்குள் மூழ்காதீர்கள்!

சிலர் அதிகாலையில் எழுந்துவிடுவார்கள். ஆனால், ஒரு கப் காபியுடன் சோபாவில் அமர்ந்துகொண்டு, ’சொந்தக் கதை, சோகக் கதை’ என கஷ்ட, நஷ்டங்கள் பற்றிய சிந்தனைக்குள் சிக்கிக்கொள்வார்கள். இது மாதிரியான விஷயங்கள், நம்மை அறியாமலேயே நடக்கும். காலையில் எழுந்ததும் கவலை நம்மை அரவணைக்கும் முன்னரே, நாம் அன்றைய நாளின் சந்தோஷங்களை நோக்கி நடைபோட ஆரம்பித்துவிட வேண்டும். `காலையில் எழுந்ததும் நாம் என்ன செய்கிறோமோ, அன்றைய நாள் முழுவதும் அப்படியேதான் நகரும்' என்பார்கள். சந்தோஷமாக ஒரு நாளை ஆரம்பிக்கும்போது சந்தோஷமாகவும், சோகமாக ஆரம்பிக்கும்போது சோகமாகவும்தான் நகரும். அதனால், எதிர்மறைச் சிந்தனைகளுக்கு அதிகாலையில் இடம் கொடுக்காமல் இருங்கள்.

8
Smartphone usage

ஸ்மார்ட்போனில் கண் விழிக்காதீர்கள்!

படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போது, பக்கத்தில் படுத்திருக்கும் குழந்தைகளின் முகத்திலோ அல்லது மனைவியின் முகத்திலோ அல்லது இயற்கைச் சூழல் சார்ந்த விஷயங்களைக் காண்பதோ என்றில்லாமல், கண் விழிப்பதே ஸ்மார்ட்போன் திரையில்தான் என்றாகிவிட்டது. இது, நமக்கு மட்டும் அல்ல நம்முடைய அன்றைய சிறப்பான நாளுக்கு நாம் செய்யும் தீங்கு. எப்போதுமே காலையில் அலுவலகம் கிளம்புவதற்கோ அல்லது அன்றாட வேலைகளைத் தொடங்குவதற்கோ ஏன் தாமதமாகிறது என யோசித்துப் பார்த்தால், நம் பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட்போன் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை உணர நேரும். இரவு படுக்கும்போது, ஸ்மார்ட்போனை படுக்கையிலோ அல்லது படுக்கைக்கு அருகிலோ வைக்காமல், வரவேற்பு அறையில் வைத்துப் பழகுவது நல்லது. இப்படிச் செய்வதால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அன்றைய நாளும் ஆரோக்கியமாக இருக்கும்.

9
Sleep

முடிவெடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்!

சிலர், எழுந்ததும் முந்தைய நாளில் பேசிவைத்திருந்த விஷயங்களுக்கான முடிவுகளை எடுக்க முனைவார்கள். அது சார்ந்த அழைப்புகளை ஏற்படுத்திக்கொள்வது, அது சார்ந்த அழைப்புகளுக்குப் பதில் அளிப்பது மாதிரியான விஷயங்களில் ஈடுபடுவார்கள். ஒரு நாளின் தொடக்கத்தில், ஏதாவது ஒரு செயலுக்கான முடிவை நோக்கி நகர்வது நல்லது கிடையாது. அதிகாலை நேரம் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காகத்தான். அவசர அவசரமான அழைப்புகளுக்கு பதில் கொடுத்து, அவசரகதியில் எடுக்கும் முடிவுகளுக்கு என்றைக்குமே ஆயுள் குறைவாகத்தான் இருக்கும்.

10
News | TV

நெகட்டிவ் செய்திகளைப் புறக்கணியுங்கள்!

இப்போதெல்லாம் நல்ல நல்ல செய்திகளைவிட கொலை, கொள்ளை, விபத்தினால் மரணம் என மனதைப் பதறவைக்கும் செய்திகளைத்தான் பெரும்பாலான செய்தி சேனல்கள் ஒளிபரப்புகின்றன. அதேபோலத்தான் செய்தித்தாள்களும். மனதைப் பதறடிக்கச் செய்வது மாதிரியான செய்திகள் ஒரு பக்கம் என்றால், வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் விலை உயர்வு, பெட்ரோல் விலை ஏற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என நேரடியாக மக்களைப் பாதிக்கும் செய்திகளையும் படிக்க நேர்கிறது. அதனால் காலையில் எழுந்ததும் நெகட்டிவ் செய்திகளை வாசிப்பதையும் பார்ப்பதையும் தவிருங்கள். சமூகப் பிரச்னைகள் குறித்து, சமூக வலைதளங்களில் விவாதம் செய்வதையும் அதிகாலை நேரங்களில் தவிர்ப்பது நல்லது. 

‘குழந்தைகள், பிறக்கும்போதே நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் பிறப்பதில்லை’ என்பார்கள். அப்படித்தான் ஒரு நாள் உதயமாகும்போதும், அது நல்ல நாளாகவோ கெட்ட நாளாகவோ தொடங்குவதில்லை. அதனால் இனி,  `யார் முகத்தில் முழித்தேனோ தெரியலை; இன்னைக்கு நாளே சரியில்லை’ என்று சொல்வதை நிறுத்திவிட்டு, அன்றைய தினத்தின் ஆரம்பத்தை அழகாக ஆரம்பியுங்கள். அப்போதுதான் உணர்வீர்கள்... `எல்லா நாள்களும் நல்ல நாள்கள்' என்பதை!

பின் செல்ல